என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

"நான் தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி!"

அ.முகமது சுலைமான்

"நான் தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி!"

எஸ்.என்.லட்சுமி... சிவாஜி, எம்.ஜி.ஆர். தொடங்கி இன்றைய விஜய், அஜீத் வரை எல் லோருக்கும் செல்ல பாட்டி.  லட்சுமி பாட்டியை சாலிகிராமத்தில் அவருடைய வீட்டில் சந்தித்தேன்.

''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''

''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''

''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''

(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...)  ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல ##~##நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப  போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

"நான் தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி!"

அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.

"நான் தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி!"

எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!'' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.

படங்கள்: அ.ரஞ்சித்