Election bannerElection banner
Published:Updated:

''புரட்சி ஒன்றே தீர்வு!"

கொதிக்கும் வரவர ராவ்

''புரட்சி ஒன்றே தீர்வு!"

''அரசியல் சாசனச் சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் வாழ்வதற்கான உரிமையை அளித்து உள்ளது. அதே அரசியலமைப்புச் சட்டம் மரண தண்டனை என்ற பெயரில் உயிர்களைப் பறிக்கச் சொல்வது முரணனானது'' என்று சொல்லும்   வரவரராவ் வார்த்தைகளில் தெறிக்கிறது நியாயம். புரட்சிகர கலை, இலக்கியத்துக்காகவும் மனித உரிமைகளுக் காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இவர் 1973-ல் தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 8 முறை சிறை சென்றிருக்கிறார். இவர் மீது தொடரப்பட்ட 40 வழக்குகள் இன்னமும் இவரைத் துரத்தியபடி உள்ளன. தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்தரங் கில் கலந்துகொள்ள சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.

''மரண தண்டனைக்கு எதிராக இவ்வளவு ஆதரவு இருக்கும் என நினைத்தீர்களா?''

##~##''ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஜீத்தன் மரான்டி உட்பட நான்கு கலைஞர்களுக்கு அம்மாநில அரசுகள் தூக்குத் தண் டனை விதித்தன. அதை எதிர்த்துப் போராடும் சமயத்தில்தான் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு எனத் தமிழகத்தில் இருந்து அதிர்ச்சி தகவல். பினாயக் சென் போன்றவர்களையே சிறையில் தள்ளியபோது அங்கே போராடுவதற்கான ஜனநாயகத் தன்மை இல்லை. ஆனால், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் மக்களை விழிப்படையச் செய்துள்ளன. தெலங்கானாவில் நிஜாம் ஆட்சியின்போது நிலச்சுவான்தார்களுக்கு எதிராகப் போராடிய 11 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தூக்குத் தண்டனைத் தீர்ப்பு அறிக்கையில் நிஜாம் கையெழுத்திடவில்லை. காரணம் குர்ஆன் மீது இருந்த பயம். ஆனால்,  இன்றைய இந்திய அரசோ மரணத் தண்டனையில் எந்த அளவுக்குப் பிற்போக்குத்தனத்துடன் நடந்துகொள்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்!''

''என்கவுன்டர்களுக்கு எதிரான குரல்கள் குறைவாகத்தானே இருக்கின்றன?''

''போலி மோதல் இறப்புகளுக்குப் பிறகு நம்மிடம் இருப்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கைமட்டுமே. ஒருவர் கொலைசெய்யப்பட்ட பின் எழுப்பும் குரல்கள் அர்த்தமற்றவை. ஆனால், மரண தண்டனை ஒழிப்புக்கான குரல்கள் அவ்வாறு இல்லை. கடைசி நிமிடம் வரை நாம் குரல் எழுப்ப முடியும். தடுக்கவும் முடியும்!''

மார்க்சிஸ்டுகள் மரண தண்டனை எதிர்ப்புக்கு முன் நிற்பதில்லையே?''

''மரண தண்டனை ஒழிப்பை ஆதரிக்காதவன் மார்க்சிஸ்டே இல்லை. பொதுவுடைமைவாதிகள் என்ற பெயரில் 'சட்டத்தின்படி நடப்போம்’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை!''

''கேரளம், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தோல்வி எதை உணர்த்துகிறது?''

''நாடாளுமன்ற அரசியலுக்குள் தன்னை இருத்திக்கொண்டதுதான். மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றார் மார்க்ஸ். ஆனால், இன்று இருப்பவர்கள் அதிகாரத்துக்கு அடிபணிந்துவிட்டார்கள். தேர்தல் அர சியலுக்குள் சென்றதே மார்க்ஸியத்தை யும் கம்யூனிஸத்தையும் கைவிட்டதற்கான காரணங்கள்!''

''புரட்சி ஒன்றே தீர்வு!"

'' 'காட்டு வேட்டை’ குறித்து..?''

''மக்கள் மீது அரசே நடத்தும் வன்முறை. ஜங்கல் மகால், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, விஜயவாடா என நீளும் காடுகள் வளமானவை. அந்த வளங்களைச் சுரண்ட மக்களைக் கொன்றொழிக்கிறது அரசு. இது ஒரு வடிவமைக்கப்பட்ட வன்முறை. கார்ப்பரேட் ஏகாதிபத்தியம் மேலே இருந்து கீழே அழுத்தும் வளர்ச்சியைக் கொண்டு இருக்கிறது. மாவோயிஸ்ட்களின் போராட்டமோ கீழே இருந்து மேலே எழும் வளர்ச்சியை முன் நிறுத்துகிறது. பழங்குடிகள் ஆயுதங்களை மட்டுமே நம்பி களத்தில் உள்ளனர். அதைத் தவிர்த்து அரசியல்ரீதியாக தங்களுக்கு என்று அவர்கள் ஒரு தத்துவக் கோட்பாட்டை உருவாக்க வேண்டும்!''

''உங்களின் போராட்ட வாழ்வைக் குடும்ப உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களா?''

''பாலகோபால், கண்ணபிரான் போன்ற சிலருடன் இணைந்து ஏ.பி.சி.எல்.சி. அமைப்பை ஏற்படுத்தினோம். அப்போது நான் வாரங்கல் லில் கல்லூரிப் பேராசிரியர். 1966-ல் 'சுருஜனா’ இதழைத் தொடங்கினேன். 1973-ல் தேசத் துரோக வழக்கில் கைதானேன். பிறகு என் மனைவி ஹேமலதா அதன் ஆசிரியரானார். அவர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். என் மூன்று மகள்கள் உட்பட தற்போது குடும்பமே போராட்டக் களத் தில். இது விரும்பி ஏற்றுக்கொண்டது. இன்றைய பிரச்னைகளுக்குப் புரட்சி ஒன்றே தீர்வு. குற்றம் அதிகாரம் செலுத்தும்போது, நிரபராதிகள் பாதிக்கப்படும்போது, அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய குற்றம். நாட்டில் பலர் குரல் அற்றுக்கிடக்கிறார்கள். அவர்களுக்குக் குரலாக இருக்கவே விரும்புகிறேன்!''

- ந.வினோத்குமார்
படம்: ஜெ.தான்யராஜு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு