என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

கலைஞர்களைக் கொண்டாடிய ஊர்!

கௌதம சித்தார்த்தன்

கலைஞர்களைக் கொண்டாடிய ஊர்!

கிராமத்துக் கலாசாரம், கலை மற்றும் அதன் தொன்மைகளைத் தன் எழுத்துக்கள் மூலம் உண்மை யும் உணர்ச்சியும் கலந்து பதிவு செய்பவர் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். 2009-ம் ஆண்டு சிறந்த சிறு பத்திரிகை என விகடன் அங்கீகரித்த 'உன்னதம்’ பத்திரிகையின் ஆசிரியர். இவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், ஆலத்தூர்பற்றிய நினைவுகளை இங்கே பதிவு செய்கிறார்.

''ஒரு காலத்துல ஆலத்தூர் கிராமம், விவசாயிகளின் ஊர். கரும்பு, வாழைதான் இங்க முக்கியமான பயிர். கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துல ஊரே செழிச்சுக் கிடக்கும். அப்பலாம் ஊருக்குள்ள மனுஷங்க மத்தியில் சந்தோஷம் நெறைஞ்சுகிடக்கும். ஏன்னா, அவங்களுக்குப் பிரச்னைன்னா என்னன்னே தெரியாது. எங்க மக்கள் பெரிய அளவுக்கு ஆசையோ எதிர்பார்ப்போ இல்லாம வாழ்வாங்க.

கலைஞர்களைக் கொண்டாடிய ஊர்!

##~##ஆனா, தீண்டாமைதான் இந்த ஊரின் பெருங் கொடுமை. என்னை எழுத்தாளனாக மாற்றினதே இந்த விஷயம்தான். காதல் திருமணம் செஞ்சுகிட்ட ஒரு இளம் பெண்ணை ஊரே சேர்ந்து ஒதுக்கிவெச்சது. ஆயிரம் கனவுகளோட ஊருக்குள் வந்தவளை ஆரத்தி எடுத்து வரவேற்காம, அசிங்கப்படுத்தி அனுப்பினா, அந்தப் பெண்ணோட மனசு என்ன பாடுபட்டு இருக்கும். அந்த உண்மைக் கதைதான் என் முதல் சிறுகதை 'மண்’!

கிராமியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டத்துக்குப் பெயர் பெற்றது எங்க ஊர். எங்க கிராமத்துல மட்டும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தாங்க. ஊர் திருவிழான்னாலும், வீட்டு விசேஷம்னாலும் இந்த ஆட்டக்காரங்களைக் கூப்பிட்டு ஊரே கொண்டாடும். எங்க ஊர்ல தொப்புளான்னு ஒரு கலைஞர் இருந்தார். தமிழகத்தின் மூலைமுடுக்கு எல்லாம் போய் மயிலாட்டக் கலையைப் பரப்பிய கலைஞர். காலப்போக்கில் சினிமாவின் தாக்கத்தில் இந்தக் கலைகள் அழிஞ்சுபோச்சு. தன் கண் முன்னாடி கலை அழிஞ்சுபோனதைப் பார்த்து, வெதும்பிக் கண்ணீர்விட்டு அழுதார் தொப்புளான். இதை மையமாவெச்சு 'தொப்புள் கொடி’ கதை எழுதினேன்.

எங்க வீட்டுக்கு ஒரு சலவைக்காரர் வருவார். ஊருக்கே அவர்தான் சலவைக்காரர். ஒவ்வொரு துணியிலும் ஒரு கிறுக்கு கிறுக்குவார். ஏதோ சீன எழுத்து மாதிரி இருக்கும். அதைச் சாதாரண கிறுக்கலா எடுத்துக்க முடியாது. அது அவங்களுக்கான குறியீடு. நூத்துக்கணக்குல இருக்குற துணிகள்ல ஒவ்வொரு துணியும் இன்னாரதுனு அந்தக் குறியீடு அவங்களுக்குச் சொல்லும். என்னைக் கேட்டா, அந்தக் குறியீடுகளை மொழியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்யணும்பேன்.

ஆலத்தூர் தொடக்கப் பள்ளியில்தான் படிச்சேன். படிப்பு மேல எனக்கு நிறைய ஈடுபாடு. ஆனா, குடும்பச் சூழ்நிலை காரணமா என்னை மூணாம் வகுப்புக்கு மேல படிக்க வேண்டாம்னு சொல்லி, பாடப் புத்தகங்களைக் கிழிச்சு வீசிட்டாங்க. கொஞ்ச நாள் எருமை மாடு மேய்ச்சேன். இதைக் கேள்விப்பட்ட என் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணசாமிதான் என் படிப்புச் செலவை ஏத்துக்கிட்டு, திரும்பவும் பள்ளிக்குக் கூட்டிட்டுப்போனார்.

கலைஞர்களைக் கொண்டாடிய ஊர்!

எனக்குப் பாடப் புத்தகங்களைவிட நூலகத்துல இருந்த புத்தகங்கள் மேல்தான் கொள்ளைப் பிரியம். பாடத்துல சொல்லாத பல விஷயங்களை அந்தப் புத்தகங்கள் எனக்குப் புரியவெச்சது. அன்னைக்கு அரசு நூலகம் கவுந்தபாடியில்தான் இருந்தது. அங்கே உறுப்பினராகி, தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளைப் படிச்சேன். அங்கேதான் எனக்கு இலக்கியமே பரிச்சயம் ஆனது.

எங்க ஊர்ல உப்புக்கரைப்பள்ளம்னு ஒரு நீரோடை இருக்கும். வருஷம் முழுக்கத் தண்ணீர் ஓடும். எங்க பொழுதுபோக்கே இந்த ஓடைதான். ஆனா, இன்னைக்கு அந்த ஓடை காய்ஞ்சு கிடக்கு. முன்ன மாதிரி இப்ப விவசாயமும் இல்லை. விவசாயக் கூலிகள் எல்லாம் பனியன் கம்பெனிக்குப் போயிட்டாங்க. நாட்டையே கெடுத்த மதுக் கடைகள் எங்க ஊரையும் விட்டுவைக்கலை. அமைதிப் பூங்காவா இருந்த கிராமத்துல இப்போ தினம் தினம் குடி கலாட்டாதான். நான் பார்த்த ஆலத்தூர் இப்ப இல்லை. சொல்லப் போனா, என் ஊரை நினைச்சா எனக்கு வருத்த மாதான் இருக்கு!''

  • கொங்கு மண்டலத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த வீரன் தன்னாசி கருப்பராயனை, இன்றும் அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபடுகிறார்கள். வரலாற்றில் பெரிய அளவு பதிவுசெய்யப்படாத இவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து, சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை கௌதம சித்தார்த்தன் எழுதிவருகிறார்!
     
  • கூத்துக் கலை அழிந்துவருவதைப் பற்றியும் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருவதைப் பற்றியும் இவர் எழுதிய சிறுகதை ‘பச்சைப் பறவை’. இந்தக் கதையைப் படித்த நடிகர் நாசர், அதைப் படமாக எடுக்க இவரை அணுகி கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாங்கி இருக்கிறாராம்!

- கி.ச.திலீபன்