Published:Updated:

தினம் ஒரு ஜூஸ்!

தினம் ஒரு ஜூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
தினம் ஒரு ஜூஸ்!

31 ரெசிப்பிகள் பலன்கள்

தினம் ஒரு ஜூஸ்!

கோடையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னை டீஹைட்ரேஷன். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, மோர், இளநீர்தான் நல்ல தீர்வு. வீட்டிலேயே ஃபிரெஷ் ஜூஸ் தயாரித்தும் அருந்தலாம். இது, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், உடனடி ஆற்றல் எனப் பல பலன்கள் தரும்.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் நாடுவது குளிர்பானங்கள்தான். கார்பனேட்டட் பானங்களில் சர்க்கரை, செயற்கை நிறமிகள், சுவையூட்டி, பதப்படுத்திகள் எனப் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வயிற்று உப்புசம், உடல்பருமன், சர்க்கரைநோய் முதல் புற்றுநோய் வரை பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு இந்த பானங்களை அருந்துவதும் ஒரு காரணம்.

தினம் ஒரு ஜூஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்பனேட்டட் குளிர்பானங்கள் மீது நாட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க ஃபிரெஷ் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கடைகளில் ஃபிரெஷ் ஜூஸ் அருந்துபவர்கள், சர்க்கரை இன்றி தயாரித்துத் தரும்படி கேட்கலாம். எப்போதும் ஒரேவகை பழச்சாறு அருந்துவதைவிட ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பழச்சாற்றை அருந்தலாம். பழச்சாறு அருந்துவதால் தேகம் பொலிவாகும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சம்மரை சமாளிக்க எளிய ஜூஸ் ரெசிப்பிளையும், அதற்கான பலன்களையும் அளிக்கின்றனர் டயட்டீஷியன்கள் குந்தளா ரவி, தில்ஷாத் பேகம்.

தினம் ஒரு ஜூஸ்!

ஆரஞ்சு - தேன் ஜூஸ்

தேவையானவை: கமலா ஆரஞ்சு - 2, தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் - தேவையான அளவு.

செய்முறை: கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை:  ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அன்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவு உள்ளன.

நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவு இருக்கின்றன.

மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும்.

தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸ் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும்.

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்

தேவையானவை: தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழம் - 50 கிராம், முலாம்பழம்  - பாதி, பப்பாளி - 50 கிராம், நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை திராட்சை - 25 கிராம், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).

செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், முலாம் பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்) உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்துவது மிகவும் நல்லது.

தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

அன்னாசி - புதினா ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது.

தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம்.

தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம்.

ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு.

ப்ரைம்ஸ்டோன் ஜுஸ்

தேவையானவை: மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும்.

இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம்.

சம்மர் ஸ்பெஷல் முலாம்  தர்பூசணி ஜூஸ்

தேவையானவை:
தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம் பழத் துண்டுகள் - தலா  ஒரு கப், ஐஸ் கட்டிகள், தேன் - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி, முலாம்பழம், தேன் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

உடலுக்குக் குளுமையைத் தரும். மலச்சிக்கல் நீங்க, ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட, உடலின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவும்.

பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, ஈ, கே, ஃபோலிக் அமிலம், ஃபோலேட், பீட்டாகரோட்டின் உள்ளன.

உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், வறண்ட சருமத்தைப் பொலிவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த ஜூஸை அருந்தலாம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பதால், வளர்சிதை மாற்றம் சீராக நடக்க உதவும். ரத்த அழுத்தம் சீராகவும், மன அழுத்தம் நீங்கவும், இதய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த ஜூஸை அடிக்கடி அருந்தலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைக்கோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன்,  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு  தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம்.

மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம்.

எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

அன்னாசி - எலுமிச்சை மிக்ஸ்டு ஜூஸ்


தேவையானவை: அன்னாசிப் பழத் துண்டுகள் - 4 (வட்டமாக வெட்டியது),  சிறிய எலுமிச்சைப் பழம் - 1, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசிப் பழத் துண்டுகளுடன், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் சி சத்து நிறைந்த ஜூஸ் இது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன.

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸைக் குடிக்கக் கூடாது. உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.

காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் -1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல், விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை தேவை இல்லை; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் இதில் நிறைய உள்ளன.

சருமம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது.

இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.

சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ்செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

அன்னாசி - வாழை ஜூஸ்

தேவையானவை: வாழைப்பழம் 1, அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி. 

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் இதில் அதிகம்.

கார்போஹைட்ரேட் இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும்.

தினமும் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், சருமம் இளமைப் பொலிவோடு இருக்கும்.

வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள்காமாலை, சிறுநீரகக் கல் உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது.

சிறுநீரகச் செயல்திறன் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தக் கூடாது.

ஏ.பி.சி ஜூஸ்


தேவையானவை: ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4 துண்டு, கேரட் - 1.

செய்முறை:
ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் பொடியாக வெட்டி, மிக்ஸியில் அடித்து ஜூஸாக்க வேண்டும். தேவைப்படுவோர், சிறிது புதினா இலைகளைச் சேர்க்கலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

காலை உணவோடு இந்த ஜூஸ் எடுத்துக்கொண்டால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

நீண்ட நேரம் கணினி முன் வேலைபார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சி, கண் சிவத்தல் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரற்ற ஹார்மோன்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கல்லீரலைச் சுத்தப்படுத்தி, ரத்தத்தைத் தூய்மையாக்கும். ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவிபுரியும். வயிற்றுப் புண் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

பல்ப்பி சாத்துக்குடி ஜூஸ்


தேவையானவை:
தோல், விதை நீக்கிய சாத்துக்குடி - 2, தண்ணீர், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை:
சாத்துக்குடிச் சுளைகளைப் பிரித்து, மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, ஒரு சுற்று சுற்றி, வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.தேவைப்பட்டால், ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.   

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் சி இதில் அதிகம். சர்க்கரை சேர்க்காத சாத்துக்குடி ஜூஸ் என்பதால், சர்க்கரை நோயாளிகளும் அளவோடு அருந்தலாம்.

பாஸ்பரஸ் போன்றவை சிறிதளவு இருக்கின்றன. தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், இதயம் சீராக இயங்கவும், உடலில் அமிலத்தன்மையைக் கட்டுக்குள்வைக்கவும் உதவும்.

இதில் பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சிகளை முடித்தவுடன், அரை மணி நேரம் கழித்து இந்த ஜூஸைப் பருகலாம்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை இன்றி, இந்த ஜூஸை அருந்தக் கூடாது.

டீடாக்ஸ் டிரிங்க்

தேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், வெள்ளரிக்காய் (பெரியது) - 1, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு, தேவைப்பட்டால் - சிறிதளவு தேன்.

செய்முறை: ஆப்பிள், வெள்ளரியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, செலரியை நன்கு சுத்தம்செய்து துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்க வேண்டும். வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரிசெய்யும்.

உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளதால், அடிக்கடி குடித்துவந்தால், தேகம் பொலிவு அடையும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை, ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயாளிகளுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும்.

இஞ்சி - பீட்ரூட் ஜூஸ்


தேவையானவை:
பீட்ரூட் - 2, இஞ்சி சிறு துண்டு, தேன் - தேவையான அளவு, தண்ணீர் - 150 மி.லி.

செய்முறை:
பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள் 

இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.

இஞ்சி சிறிதளவு சேர்ப்பதால், உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாவை அகற்றும். இஞ்சியில் இருக்கும் ‘ஜிஞ்சரால்’ சத்து, செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.

இஞ்சி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல்கொண்டது.

பீட்ரூட், இஞ்சியுடன் தேன் சேர்த்துக் குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்குவதோடு, உடலும் புதுப்பொலிவு பெறும்.

இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனானவர்களுக்கு ஏற்ற ஜூஸ். குழந்தைகளுக்கு, இஞ்சி குறைவாகச் சேர்த்துக் கொடுக்கலாம்.

வெள்ளரி -ஆரஞ்சு ஜூஸ்


தேவையானவை: ஆரஞ்சு - 4, நடுத்தர அளவு வெள்ளரி - 1, செலரி - சிறிதளவு, இஞ்சி - நறுக்கியது சிறிதளவு, பனங்கற்கண்டு அல்லது பனஞ்சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: ஆரஞ்சு மற்றும் வெள்ளரியைத் தோல் நீக்கி, செலரி, இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவைப்பட்டால், சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் `பெக்டின்’ என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். குமட்டலைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏற்ற ஜூஸ்.

உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால், சருமம் பொலிவு பெறும்.

4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை:
ஆப்பிள் - 2, பேரிக்காய் - 2, கேரட் (நடுத்தர சைஸ்) - 1, புதினா - சிறிதளவு, தேன், தண்ணீர் -  தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய், கேரட்டை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்த வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கலோரி நிறைந்தது. எனவே, இந்த ஜூஸை இரண்டு உணவுவேளைக்கு இடைப்பட்ட நேரத்தில் குடித்தால், அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்க முடியும்.

இதில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கும். எனவே, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது.

உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

அல்சைமர், பார்கின்சன் போன்றவற்றைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்!

தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,  புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.

செய்முறை:
எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், சிறுநீரக நோயாளிகள் உப்பை மட்டும் தவிர்க்கலாம்.

சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

தர்பூசணி  திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: தர்பூசணி - 300 கிராம், பன்னீர் திராட்சை - 50 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

திராட்சையில் ‘ரெஸ்வெரட்ரால்’ எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது, மலக்குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், கரோனரி இதய நோய்கள், அல்சைமர் போன்றவற்றைத் தடுக்கும்.

உடல் பருமனானவர்களும் தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு நல்லன.

தாமிரம், துத்தநாகம், இரும்பு நிறைந்துள்ளன. உடனடி ஆற்றல் தேவைப்படும் காலங்களில் இந்த மிக்ஸ்டு ஜூஸை அருந்துவது நல்லது.

ஆரஞ்சு ஜூஸ்


தேவையானவை:
ஆரஞ்சு - இரண்டு, தண்ணீர், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: ஆரஞ்சுப் பழங்களை சாறு எடுத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனோடு, ஐஸ் கட்டிகள், தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் போட்டுச் சுற்றினால் ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஹெஸ்பிரிடின் (Hesperetin), நாரின்ஜின் (Naringin) நாரிஜெனின் (Naringenin) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் புற்றுநோய் வருவதில் இருந்து காக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதில் உள்ள சத்துகள் பார்வைத்திறனை அதிகரிக்கும், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.

தயமின், பைரிடோக்ஸின், ஃபோலேட்ஸ் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும், தொற்று வியாதிகள் பரவாமல் பாதுகாக்கும்.

ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இதயத் துடிப்பையும் செம்மையாக வைத்திருப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
 
`பெக்டின்’ என்னும் சத்து ஆரஞ்சில் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல், குடலில் கட்டிகள் வராது.

அன்னாசி ஜூஸ்

தேவையானவை: 
அன்னாசிப் பழம் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி., ஐஸ் கட்டிகள், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:
அன்னாசியைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதில் ஐஸ் கட்டிகள், தண்ணீர் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

சிறிதளவு வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறனை அதிகரிக்கும்.

செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.

சிறுநீரகப் பிரச்னைகளைத் தடுக்கும்.

உடலில் நச்சுக்களை வெளியேற்றும்.

சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

நெல்லிக்காய் ஜுஸ்

தேவையானவை:
நெல்லிக்காய் - 3, துளசி, புதினா இலைகள் - நான்கு ஐந்து, இளநீர், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

செரிமானப் பிரச்னைகள் தடுக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால், புற்றுநோய், இதயப் பிரச்னைகள் வராது.

தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

கல்லீரலைச் சுத்தம் செய்யும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பையும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 150 கிராம், தண்ணீர் - 200 மி.லி., சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். தேவையான அளவு ஐஸ் சேர்த்து அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின் நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பு எரிக்கப்படும்.

மேலும், வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பயாட்டின், தலைமுடிகளை உறுதியாக்கும்.

நகங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சருமம் பளபளக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

லெமன் மின்ட் கூலர்

தேவையானவை: புதினா - 1 கொத்து, எலுமிச்சை -1, சர்க்கரை - 50 கிராம், தண்ணீர் -150 மி.லி, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை: புதினாவைச் சுத்தம் செய்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரைச் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை, வடிகட்டாமல் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருக வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

சர்க்கரை நோய், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

சரும செல்களைப் புத்துணர்ச்சி அடையச்செய்யும். தேகம் பொலிவாகும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். `ஆர்த்தரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுகளில் ஏற்படும் கீல்வாத நோய்களைத் தடுக்கும்.

தர்பூசணி - ஆரஞ்சு - கேரட் மிக்ஸ்டு ஜூஸ் 


தேவையானவை:
தர்பூசணி - ஒரு பெரிய துண்டு, ஆரஞ்சு -1, கேரட்- அரைத்துண்டு.

செய்முறை:
தர்பூசணி, ஆரஞ்சைத் தோல் விதை நீக்கி, கேரட்டைச் சிறுதுண்டாக வெட்டி, தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

எல்லா காலங்களிலும் அருந்த ஏற்ற ஜூஸ்.

உடல் இயக்கத்தைச் சீராக்கும். சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவும்.

நாள் முழுவதுக்கும் தேவையான புத்துணர்ச்சியைத் தரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பொட்டாசியம், பீட்டாகரோட்டின் இருக்கிறது. பார்வையைத் தெளிவாக்கும்.

உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், குடலைப் பாதுகாக்கும்.

அனைவரும் அருந்த ஏற்ற ஜூஸ்.

கிவி ஜூஸ்

தேவையானவை:
கிவிப் பழங்கள் - 2, தேன், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை:
கிவிப் பழத்தைச் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதளவு தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து  வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள் 

ஃபோலிக் அமிலம், தாமிரம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி, இ, கே நிறைந்துள்ளன.

ஒரு கப் கிவி ஜூஸில் ஒரு நாளைக்குத் தேவையான அளவைவிட வைட்டமின்-சி அதிகமாக இருக்கிறது. 

கிவி ஜூஸை சீரான இடைவெளியில் அருந்திவந்தால், எலும்புகள் உறுதிப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

ஓமேகா - 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதில் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.

இதய நோய்களில் இருந்து காக்கும், நரம்பு மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி இதை அருந்த வேண்டும்.

பீட்ரூட் ஜூஸ்

தேவையானவை: பீட்ரூட் - 4, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல்நீக்கி, சுத்தம்செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும். வடிகட்டாமல் பருகுவது இன்னும் நல்லது.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

நார்ச்சத்து, வைட்டமின்கள், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும், நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தைப் பலப்படுத்தும்.

ஃபோலிக் அமிலம் இதில் இருக்கிறது. பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அவசியம் ஃபோலிக் அமிலம் தேவை.

பீட்ரூட் ஜூஸில் இருந்து கிடைக்கும் ‘பீட்டைன்’ சத்து கல்லீரல் செயல்பாடுகளைச் சீராக்கும்.

பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆஸ்துமாவைத் தடுக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்.

தக்காளி ஜூஸ்

தேவையானவை: தக்காளி - 4, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். வடிகட்டாமல் ஒரு கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து அருந்த வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்துள்ளன.

`லைக்கோஃபீன்’ எனும் கரோட்டினாய்டு சத்து இதில் இருப்பதால், நுரையீரல், மார்பக, ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைத் தடுக்கும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்; எலும்புகளைப் பலப்படுத்தும்; சருமத்தைப் பாதுகாக்கும்.

பீட்டாகரோட்டின், லூட்டின் போன்ற பைட்டோநியூட்டியன்ட்ஸ் உள்ளதால், பார்வையைக் கூர்மையாக்கும்.

கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட் - 6, தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை: கேரட்டைக் கழுவி, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, சி, கே, வைட்டமின் பி8, ஃபோலேட் நிறைவாக உள்ளன.

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக, `லுக்கீமியா’ எனப்படும் ரத்தப்புற்றுநோயைத் தடுக்கும்.

மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. மறதிநோயான அல்சைமரைத் தடுக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

சப்போட்டா ஜூஸ்

தேவையானவை: சப்போட்டா - 6, பால் - அரை கப், தேன் - சிறிதளவு.

செய்முறை:
சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றி, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

அதிக அளவு கலோரி நிறைந்தது. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு ஏற்றது.

நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கும்.

குடலில் இருக்கும் மியூகோசாவைப் பாதுகாப்பதால் குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

வைட்டமின் சி, வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்திருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.

மாதுளை ஜூஸ்

தேவையானவை:
மாதுளை பெரிது - 1,  தேன் - சிறிதளவு.

செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு, தேன், சிறிது நீர்விட்டு அரைத்து வடிகட்டி அருந்தலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

உடல் எடையைக் குறைக்கும்.

செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தாமதப்படுத்தும். ஏற்கெனவே, உருவான புற்றுசெல்களை அழிக்கும்.

தொடர்ந்து இந்த ஜூஸைப் பருகிவந்தால்,  உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்தைப் பாதுகாக்கும்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகளில் மாதுளை பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் ஜூஸ்


தேவையானவை: ஆப்பிள் பெரிது - 1, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
ஆப்பிள் தோல், விதை நீக்கி, சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்துப் பருக வேண்டும். தேவை எனில் சிறிது ஐஸ்  சேர்த்துக்கொள்ளலாம்.

தினம் ஒரு ஜூஸ்!

பலன்கள்

உடனடி ஆற்றலைத் தரும். 

பாலிபீனால்ஸ், ஃப்ளேவனாய்டு முதலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதயத்துக்கு நல்லது.

ஆஸ்துமாவைத் தடுக்கும். நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களைத் தடுக்கும்.

வைட்டமின் சி நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் பாதிப்புகளைத் தடுக்கும்.

பழச்சாறு யாருக்கு ஏற்றது?


பழச்சாற்றைவிட பழங்கள்தான் எப்போதும் பெஸ்ட். எனினும், சிலருக்குப் பழங்கள் சாப்பிடப் பிடிப்பது இல்லை என்பதாலும், வெயில் காலங்களில் பலர் குளிர்பானங்களையே நாடுகிறார்கள் என்பதாலும்  கார்பனேட்டட் பானங்களைவிட பழச்சாறுகள் அருந்துவது நல்லது. 

குழந்தைகள், முதியவர்களுக்கு பழச்சாறு அருந்துவதால் உடனடி எனர்ஜி கிடைக்கும். `டீஹைட்ரேஷன்’ எனும் நீர் இழப்புப் பிரச்னையால் கோடை காலங்களில் பல முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள். பழச்சாறு அருந்தும்போது உடனடி ஆற்றல் கிடைக்கும்.

டீ, காபி தவிர்த்து, பழச்சாறு அருந்தலாம்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குப் பழச்சாறு ஏற்றது. ஏனெனில், உடனடி ஆற்றல் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகச் செயலிழப்பு  பிரச்னை இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் பழச்சாறு அருந்தலாம்.

எப்போது அருந்தலாம்?


ஒரு நாளைக்கு 200 - 300 மி.லி அளவுக்குப் பழச்சாறு அருந்தலாம்.

உணவுடன் சேர்த்து பழச்சாறு அருந்துவது தவறு. பலரும் உணவு உண்ட பிறகு பழச்சாறு குடிக்கிறார்கள். இது தவறான பழக்கம்.

பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உணவுடன் சேர்த்தால், சத்துக்கள் கிடைக்காது. மேலும், தவறான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு,  அஜீரணக் கோளாறு ஏற்படலாம்.

பழச்சாறை மட்டுமே ஏதாவது ஒரு வேளை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் சில காய்கறிகளுடன் ஜூஸ்கள் அருந்தலாம்.

அஜீரணக் கோளாறு, அல்சர், அலர்ஜி இருப்பவர்கள், வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த ஜூஸ்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்,

படங்கள்: எம்.உசேன், தே.தீட்ஷித்

தினம் ஒரு ஜூஸ்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.