என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மீன் சாப்பிடலையோ மீன்!

எஸ்.ராஜாசெல்லம்

சுற்றுலாத் தளங்களில் வேறு எங்கும் இல்லாத ஒரு விசேஷம் ஒகேனக்கலுக்கு உண்டு. அது மீன் சாப்பாடு! ஒகேனக்கல் பாறையில் கால் வைத்ததும் குளிக்கப் போவதற்கு முன் 'மீன் சாப்பாடு’ என ஆர்டர் கொடுத்துவிட்டால், கண் எதிரே ஆற்றில் மீன் பிடித்து மீன் குழம்பு, வறுவல், ரசம், சாப்பாடு என அடுத்த ஒரு மணி நேரத்தில் உயிர் மீனின் சூடு குறையாமல் சமைத்துப் பரிமாறுகிறார்கள் அங்குள்ள  பெண்கள்!

மீன் சாப்பிடலையோ மீன்!

##~##சுற்றுலாத் துறையால் கட்டித் தரப்பட்டுள்ள சமையல் கூடம், கிழிந்த பரிசலால் அமைத்த தற்காலிகப் பந்தல்கள், பாறை இடுக்குகள், மரத்தடி என திரும்பிய திசை எல்லாம் மசாலா அரைக்க உரல்கள் உருள்வதும், விறகு அடுப்பு எரிவதும், மீன் பொரிவதும், குழம்பு கொதிப்பதும், ரசம் மணப்பதுமாகக் கண்கொள்ளாக் காட்சிகள். இப்படி சமைத்துத் தர ஒகேனக்கலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். ஒகேனக்கல், ராணிப்பேட்டை மற்றும் ஊட்டமலை ஆகிய ஊர்களைச் சேர்ந்த இவர்களை வாழ்வில் நிமிரவைத்ததே இந்த சமையல் தொழில்தான்.    ''ஆரம்பத்துல பொழைப்புக்காக ஆத்துல முந்தானை விரிச்சு மீன் பிடிச்சு, அதை மரத்தடில பொரிச்சு விப்போம். சின்னச் சின்ன மீனுன்னாலும் ருசி ரொம்ப நல்லா இருக்கும். 10 வருஷம் முன்னாடி இங்க நல்ல சாப்பாடு கிடைக்காதுங்க. ஆறிப்போன புரோட்டாவும் தண்ணி மாதிரி சால்னாவும்தான் கிடைக்கும். பெரிய ஹோட்டலுக்குப் போனா காசு கட்டுப் படி ஆகாது. அப்பலாம் எங்ககிட்ட மீன் வாங்கிச் சாப்பிடுறவங்க, 'அக்கா மீன் இம்புட்டு ருசியா இருக்கு. கையோடு சோறாக்கிக் கொடுத்தா சந்தோஷமா சாப்பிடுவோமில்ல’னு கேட்டாங்க. லட்சுமி அக்கானு ஒருத்தர்தான் முதன்முதல்ல தரைப் பாலத்தை ஒட்டி இருக்குற பாறை மேல மீன் சமையல் கடை போட்டாங்க. ஒரு வருஷத்துல கடை வளர்ந்திருச்சு. நாங்கலாம் அந்த அக்காகிட்டதான் வேலை பார்த்தோம். நாலு வருஷம் முன்னாடி உடம்புக்கு முடியாம அந்த அக்கா ஊரைவிட்டுப் போயிடுச்சு. அந்த அக்கா கத்துக் கொடுத்த மசாலா கைமணம்தான் இப்ப ஒகேனக்கல் முச்சூடும் கமகமக்குது!'' என்கிறார் ரங்கமணி.

ஒகேனக்கலுக்கு அடிக்கடி வந்து செல்லும்  சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தச் சமையல் பெண்களின் செல்போன் எண்கள் பரிச்சயம். ஊரில் இருந்து கிளம்பும்போதே 'இத்தனை பேர்  இத்தனை மணிக்கு வருவோம்’ என்று போனில் ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள்.

மீன் சாப்பிடலையோ மீன்!

ஒகேனக்கல் வந்து பரிசல் பயணம், ஆயில் மசாஜ், அருவிக் குளியல் முடித்து, கபகபக்கும் பசியோடு அமர்ந்தால், அக்காக்களின் கைமணத் தில் ஆவி பறக்கின்றன ஆர்டர் செய்த அயிட்டங்கள்.

வாடகை வீடுகளில் வசித்த இவர்கள் இன்று சொந்த வீடு கட்டி இருக்கிறார்கள். வருடத்தில் ஏழு மாதங்கள்தான் சீஸன். மெயின் சீஸனில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு மற்ற நாட்களைச் சமாளிக்கிறார்கள்.

மீனைப் பக்குவமாக மசாலாவில் புரட்டியபடி இருந்த ஈஸ்வரி, ''இது கர்நாடகாவுல மழை சீஸன். இங்க ஒரு பொட்டு மழை இல்லாட்டிக்கூட அங்கு பெய்யுற மழையால இங்க வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனால, சீஸன் கொஞ்சம் டல்லா இருக்குதுங்க. நானும் காலையில இருந்து ஒகேனக்கல் முச்சூடும் சுத்தி ஆர்டர் பிடிக்கிறேன். 10 கிலோ மீன்கூட ஆர்டர் தேறலை. இருந்தாலும் பரவாயில்லை. சாயங்காலத்துக்குள்ள எப்படியும் 300 வருமானம் தேத்திடுவேன்!'' என்கிறார் நம்பிக்கையாக!

  • கோவை காந்திபுரம் பார்க் சிக்னல் அருகே சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ‘சன்டே மார்க்கெட்’ என்ற பெயரில் சந்தை கூடுகிறது. முழுக்க முழுக்க ஜவுளி விஷயங்கள்தான் கிடைக்கும். `100&க்கு நான்கு சட்டைகள், ` 50&க்கு சுடிதார் மெட்டீரியல், பில்லோ கவர், பீரோ கவர் என்று எல்லாமே மலிவாக கிடைக்கும். இங்கே இன்னொரு ஸ்பெஷாலிட்டி, இந்தச் சந்தைக்கு சற்றுத் தள்ளி கிழிந்த துணிகளைத் தைக்க மெஷின்களோடு ஒரு டீம் காத்திருக்கும்!
     
  • ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களைச் சுற்றுலாப் பயணி--களே பேரம் பேசி இவர்களிடம் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்துவிட்டால், ஐந்து அல்லது ஆறு நபர்களுக்கு சாப்பாடு, மீன் வறுவல், மீன் குழம்பு, ரசம், மோர் என சமைத்துத் தர ` 350 முதல் ` 450 வரை கட்டணம்! 

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்