Published:Updated:

இது கோஹ்லியின் காலம்!

இது கோஹ்லியின் காலம்!
பிரீமியம் ஸ்டோரி
இது கோஹ்லியின் காலம்!

சார்லஸ்

இது கோஹ்லியின் காலம்!

சார்லஸ்

Published:Updated:
இது கோஹ்லியின் காலம்!
பிரீமியம் ஸ்டோரி
இது கோஹ்லியின் காலம்!

`காத்திரு... காத்திரு... காத்திரு... தாக்கு!' இதுதான் கோபக்கார இளைஞன் கோஹ்லியின் ஃபார்முலா. டி20 உலகக் கோப்பை போட்டியில் புலியைப்போல வேட்டையாடிய கோஹ்லியை ஆயுசுக்கும் மறக்க மாட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். பாகிஸ்தான் ப்ளேயர்களுக்கு பத்து நாட்களுக்காவது தூக்கம் தொலைந்திருக்கும். 

`கொந்தளிக்கும் டீன்ஏஜ் பையனைப்போல மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர், எந்நேரமும் ஆங்ரி பேர்டைப்போல கொதிப்பவர்...’ இப்படி எல்லாம் பெயர் எடுத்திருந்தாலும் களத்தில் இறங்கிவிட்டால் பேட்டிங் சித்தராகி நிதானம் காட்டுவதில், ராகுல் டிராவிட்டுக்கே ரெண்டு இன்ச் சீனியர் கோஹ்லி!

பந்தையே பார்க்காமல் மைதானத்தின் நாலாபக்கங்களும் பேட்டைச் சுழற்றுவது, லெக்சைடில் ஆடத் தெரியாமல் ஆன்சைடில் மட்டுமே ஆடுவது, ஆட்டத்தின் போக்கையே புரிந்துகொள்ளாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி விக்கெட்டை இழப்பது... என எந்தத் தவறையும் செய்யாமல், கிரிக்கெட்டை இவ்வளவு நேர்த்தியாக ஆடும் ஒரே பேட்ஸ்மேன் இன்றைய தேதிக்கு உலக அளவில் கோஹ்லி மட்டும்தான்.

கொஞ்சம் ஷேவாக், கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் சச்சின், கொஞ்சம் அசாருதீன் என எல்லாம் கலந்த காக்டெய்ல், கோஹ்லி. ஆனால், இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத, ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் வித்தகராக இருக்கிறார்.

இது கோஹ்லியின் காலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு இரண்டு ரன்களாக எடுக்க அவர் ஓடுவதைப் பார்த்த எல்லோருக்குமே மூச்சுவாங்கியது. ‘நான் மிகவும் டயர்டாக இருக்கும்போது அதிகமாக ஓட வேண்டும் என்று நினைப்பவன். அதற்குத்தான் ஜிம்மில் அதிக நேரம் பயிற்சிகள் செய்கிறேன். அதனால் ஓடுவது எனக்குப் பிரச்னையே இல்லை’ என்று, ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிம்பிளாகச் சொன்னார் கோஹ்லி.

2006-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஆடியது டெல்லி. 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தள்ளாடியபோது, 40 ரன்களில் நாட்அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் இருந்தது 18 வயதான கோஹ்லி. அடுத்த நாள் டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என்பது மட்டும்தான் கோஹ்லியின் கேம் பிளானாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்த நாள் விடிகாலை விராட் கோஹ்லியின் அப்பா இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. அணியின் பயிற்சியாளர் சேத்தன் சௌஹானுக்கு மட்டும் அப்பா இறந்த தகவலைச் சொல்கிறார் கோஹ்லி. `உடனடியாக வீட்டுக்குப் போகும்படி கோஹ்லியிடம் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைகிறேன்.கோஹ்லியின் அண்ணனிடம் இருந்து போன் வருகிறது. ‘கோஹ்லி பேட்டிங் செய்யும் மனநிலையில்தான் இருக்கிறான். அவனை விளையாடவிடுங்கள்’ என்றார். நான் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. அன்று கோஹ்லி 90 ரன்கள் அடித்தார். அவர் அடித்த ஒவ்வொரு ஃபோருக்கும் சிக்ஸருக்கும் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா எனத் தெரியவில்லை. என்ன தடை வந்தாலும் கோஹ்லி வெற்றிக்காகப் போரிடுபவன். அந்தப் போர் குணத்தைத்தான் நான் அன்று பார்த்தேன்’ என்கிறார் சேத்தன் சௌஹான்.

சரியாக  10 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உலகமே கொண்டாடும், ரன் குவிக்கும் எந்திரனாக உயர்ந்து நிற்கிறார் கோஹ்லி.

‘மெச்சூரிட்டியே இல்லைங்க, பக்குவம் ரொம்பக் குறைவு, இதுல லவ் ஃபெயிலியர் வேற’ என விமர்சனங்களின் வழிதான் கோஹ்லியின் வரலாறு  எழுதப்படுகிறது.  ஆனால், கோஹ்லியின் கவனம் தன் மேல் எறியப்படும் அந்தச் சொற்களில் இல்லை, பந்துகளில்தான் இருக்கிறது. அதனால்தான் அவர் இந்திய அணியின் ஆபத்பாந்தவனாக உயர்ந்து நிற்கிறார்.

ஒவ்வொரு நாளும் மேட்ச் தொடங்குவதற்கு முன்னர் தனக்கான பெர்சனல் கோல் என்ன என்பதைத் தீர்மானிப்பார் கோஹ்லி. அன்றைய நாளின் முடிவில் அவர் நிர்ணயித்து வைத்திருந்த இலக்கை அடையவில்லை என்றால், அடுத்த நாளில் அதையும் சேர்த்து முடித்து சரிக்கட்டுவதுதான் கோஹ்லியின் சக்சஸ் சீக்ரெட்.

2013-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம். கேப்டனாக பெங்களூரு அணிக்குத் தலைமை ஏற்று ஆடினார் கோஹ்லி. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலை. கடைசி ஓவரின் கடைசிப் பந்து, பேட்ஸ்மேன் தூக்கி அடிக்க கோஹ்லி கேட்ச் பிடித்துவிட்டார். `வெற்றிபெற்றுவிட்டோம்' என நினைத்து துள்ளிக்குதித்தார். அவர் அம்பயரைக் கவனிக்கவே இல்லை. அது நோ பால் என உணராமலேயே கத்திக்கொண்டிருந்தார். அப்படி வெற்றி உறுதியாவதற்கு முன்பாகவே துள்ளிக்குதித்த அதே கோஹ்லி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், 50 ரன்கள் அடித்தபோதும் பேட்டை உயர்த்தாமல் வெற்றிக்காகக் காத்திருந்தார்.

கோஹ்லி எந்த அளவுக்குப் பக்குவப்பட்டி ருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. அவர் காலத்திடம் இருந்து கற்றுக்கொள்கிறார்; தன்னை மாற்றிக்கொள்கிறார்;  தான் நேசிக்கிற ஒன்றுக்காக தன்னையே அர்ப்பணிக்கிறார். தோல்விகளில் இருந்து மீள்கிற வித்தை அவருக்குக் கைவரத்தொடங்கிவிட்டது.

‘கிரிக்கெட் பேட் என்பது, எனக்கு  பொம்மை கிடையாது; என்னுடைய ஆயுதம். அதுதான் என்னை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது; எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. அந்த ஆயுதத்தை எப்போதும் என் கையில் வைத்திருப்பேன். அதை யாரும் என்னிடம் இருந்து அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது!’

இது கோஹ்லியின் காலம்!

• விராட் கோஹ்லியின் செல்லப் பெயர் ‘சீக்கூ’.

•   ‘கோஹ்லியின் பேட்டிங் ஸ்டைல் நான் ஆடுவதுபோலவே இருக்கிறது’ என்று அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸால் பாராட்டப்பட்டவர்.

•   2011-ம் ஆண்டு உலகக் கோப்பைதான் கோஹ்லிக்கு முதல் உலகக் கோப்பை. அதில் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார் கோஹ்லி.

•   கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்தவர்.

•   ஒரு நாள் கிரிக்கெட்டில் 52 பந்துகளில் சதம் அடித்து, குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என ஷேவாக்கின் சாதனையை முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார் கோஹ்லி!