Published:Updated:

இவங்களுக்கு வயதே ஆகாது!

இவங்களுக்கு வயதே ஆகாது!
பிரீமியம் ஸ்டோரி
இவங்களுக்கு வயதே ஆகாது!

கார்க்கிபவா

இவங்களுக்கு வயதே ஆகாது!

கார்க்கிபவா

Published:Updated:
இவங்களுக்கு வயதே ஆகாது!
பிரீமியம் ஸ்டோரி
இவங்களுக்கு வயதே ஆகாது!

30 வயதுகூட நிறைவடையாதவர்கள் எல்லாம் `முடியல பாஸ்..!’ எனப் பேசிக்கொண்டிருக்க, 70-களிலும் எக்ஸ்ட்ரார்டினரியான சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் சில லெஜெண்டுகள்... 

இளையராஜா

கடந்த 40 ஆண்டுகளாக தமிழர் களின் மனநிலையை, தன்வசப்படுத்தி வருகிறார் இளையராஜா.

இவங்களுக்கு வயதே ஆகாது!

நம் ஒவ்வொருவரின் காதலிலும் கண்ணீரிலும் புன்னகையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பண்ணைப்புரத்து ராஜாவுக்கு, வயது 72. இவரின் 5,000 பாடல்களைக் கேட்பதற்குள் நமக்கு வயதாகிவிடலாம். இதோ, பாலிவுட்டின் அடுத்த ஜெனரேஷன் ஹீரோ அர்ஜுன் கபூரின் படம் வெளியாகவிருக்கிறது. இசை, நம்ம ராஜாதான். 1,000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இன்றும் காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவில் ராஜாவைப் பார்க்கலாம். இதயத்தில் பிரச்னை என, சமீபத்தில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, `கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்’ என டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். ஆனால், வெளியே வந்த அவரின் கார் விரைந்ததோ ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு. அந்த உழைப்புக்கும் ஆத்மார்த்த இசைக்கும்
ஏது வயது?

கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவங்களுக்கு வயதே ஆகாது!

ஒவ்வொரு பிறந்தநாளிலும் தாத்தா கருணாநிதியைச் சந்தித்து ஆசிபெறுவார் உதயநிதி ஸ்டாலின். சென்ற ஆண்டு அவரைச் சந்திக்கச் சென்றபோது, `போன வருஷம் ஏன் வரலைப்பா?' என்றார் கருணாநிதி. தான் வந்ததாக உதயநிதி சொல்ல, `வரவில்லை' என அழுத்தமாகச் சொன்னார். அந்த வருடம் நண்பர்களுடன் மலேசியா சென்றது, பிறகுதான் உதயநிதிக்கே நினைவுவந்தது. அந்த அபார நினைவாற்றல்தான், இந்த 92 வயது இளைஞரின் சீக்ரெட் ஸ்டாமினா. தினமும் ஐந்து மணி நேரத் தூக்கம்தான். உதயசூரியனுக்கே குட்மார்னிங் சொல்லும் அதிகாலை சுறுசுறுப்பு. ஒவ்வொரு தேர்தலின்போதும் உடன்பிறப்புகளின் முன்னர் இருக்கும் மிகப் பெரிய சவால் ஒன்றுதான்... அவர்கள் தலைவரைவிட அதிகமாக உழைக்க வேண்டும். ஆனால், இதுவரையில் வெற்றி கருணாநிதிக்கே. 77 வருட பொது வாழ்க்கையில், சட்டமன்றத் தேர்தலில் இதுவரை தோல்வியே காணாத இந்த இளைஞர்தான் இன்றைய இந்தியாவின் மூத்த முதலமைச்சர் வேட்பாளர்!

லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, லதா மங்கேஷ்கருக்கு 18 வயது. அப்போது தேசியகீதம் பாடிய அதே தெளிவான குரலில், சென்ற வாரம் `வந்தே மாதரம்’ பாடி ஃபேஸ்புக்கில் அப்லோடியிருக்கிறார். இடையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள், இந்த இன்னிசை எக்ஸ்பிரஸ் பாடாத ஊர் இல்லை. இந்த 87 வயது ஸ்டாருக்கு, கிரிக்கெட் என்றால் உயிர். இவருக்காக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நிரந்தர ஸீட் உண்டு. எப்போது வேண்டுமானாலும் மேட்ச் பார்க்கலாம். லண்டன் போகவில்லை என்றாலும், இந்திய மேட்ச்சுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவாராம். `சென்ற வாரம் பங்களாதேஷுடனான மேட்ச்சில் கடைசி ஓவரில் ஜெயிக்கவைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு, லதாஜியிடம் இருந்து போன் போயிருக்கலாம்’ என்கிறார் லதா ரசிகர் ஒருவர். மனதுக்குப் பிடித்ததைச் செய்பவர்களுக்கு வயது என்பது வெறும் எண்தானே!

இவங்களுக்கு வயதே ஆகாது!

லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேவுக்கு வயது 83. உலகிலேயே அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். இப்போதும் உலகம் முழுவதும் குயில்போல பறந்து பாடிவருகிறார். இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நியூசிலாந்தில் ஒரு மேடையில் ஆஷா பாடிக்கொண்டிருந்தார். தனது சுயசரிதையை எழுதி முடித்துவிட்டு ஆஷா இப்படிச் சொன்னார் `ஒருவர் வாழ்க்கையில் நடந்ததை, இந்த உலகம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அப்படித் தெரியும் என்றால், எழுதுபவர்கள் நடந்த உண்மையையா எழுதப் போகிறார்கள்? நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பதைப் பார்ப்போம் என அதை ஓரமாக வைத்துவிட்டேன்’. 83 வயதுக்குப் பின்னர் நடப்பதுதான் தனக்கு முக்கியம் என ஆஷா ஓடிக்கொண்டிருக்கிறார். இல்லை... இல்லை... பாடிக்கொண்டிருக்கிறார்.

பர்காஷ் சிங் பாதல்

இவங்களுக்கு வயதே ஆகாது!

கடந்த முறை முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதியின் வயது 87. இப்போது பஞ்சாப் முதலமைச்சராக இருக்கும் ஷிரோமணி அகாலிதள தலைவர் பர்காஷ் சிங் பாதலின் வயது 88. இந்தியாவிலேயே வயதில் மூத்த முதலமைச்சர் இப்போது இவர்தான். `அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இவரே முதலமைச்சர் வேட்பாளர்’ என அறிவித்திருக்கிறார்கள்.  பஞ்சாப் மக்கள் இவரை அன்போடு அழைக்கும் பெயர் `பாதல் சாப்’. `சங்கத் தர்ஷன்’ என்ற திட்டத்தின்படி வாரம் ஒரு கிராமத்துக்குச் சென்று, விவசாயிகளைச் சந்திக்கிறார். ஆறு தலைமுறைகளின் கனவுகளை நனவாக்க உழைத்துவரும் பாதலை, `இந்தியாவின் நெல்சன் மண்டேலா’ எனப் புகழ்கிறார்கள்.

அமிதாப் பச்சன்

இவங்களுக்கு வயதே ஆகாது!

இளசுகளின் ஏரியா ட்விட்டர். ஆனால், பறப்பதோ 73 வயது அமிதாப் பச்சனின் கொடி. ட்விட்டரில் இவரை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை இரண்டு கோடிக்கும் அதிகம். ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 50,000 ட்வீட் போட்டுள்ளார். சண்டேக்களில்கூட சார் செம பிஸி. சர்ப்ரைஸாக லோக்கல் ட்ரெய்னில் மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார். குழந்தைகளுடன் ஒரு நாள் முழுவதும் விளையாடுகிறார். இந்தியா கிரிக்கெட் ஆடினால், தோனியைவிட எனர்ஜியாகத் தெறிக்கிறார். ஸ்வச் பாரத்தோ, ஐஸ் பக்கெட் சேலஞ்சோ... முதலில் கைதூக்கிவிடுகிறார். பத்ம பூஷண், பத்ம விபூஷண்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டு, தெருவில் இறங்கிக் குதூகலப்படுகிறார். படங்களில் இப்போதும் ஹீரோவாக நடிக்கும் இவர், 200 கோடி கலெக்‌ஷன் அள்ளுகிறார். இன்னும் மூன்று ஆண்டுகளில் பாலிவுட்டில் அரை சதம் அடிக்கப்போகும் அமிதாப், இந்தியாவின் லெஜெண்ட் அல்ல, சற்றே உயரமான செல்லக் குழந்தை!

ரத்தன் டாடா

இவங்களுக்கு வயதே ஆகாது!

`கல்யாணம் வரைக்கும் சென்று, நின்றுபோன நான்கு காதல் தோல்விகள் எனக்கு உண்டு’ என ஒருமுறை சொன்னார் ரத்தன் டாடா.இவருடைய பரந்துவிரிந்த வியாபார எல்லையைப் பற்றிக் கேட்பதைவிட, `ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?’ என்றுதான் பெரும்பாலானோர் கேட்க நினைத்தார்கள். அமெரிக்காவில் படித்துவிட்டுத் திரும்பியவருக்கு, டாடா நிறுவனத்தில் முதல் ஆறு ஆண்டுகளுக்கு பெரிய பதவி எதுவும்  கொடுக்கப்படவில்லை. அடிமட்டத் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகினார். தனக்கென எந்த விசேஷச் சலுகைகளையும் அவர் எதிர்பார்க்கவில்லை. பேஸ்மென்ட்டை சரிக்கட்டிய பிறகே தனது பில்டிங்கைக் கட்ட ஆரம்பித்தார். இவரது தலைமையில் கடந்த 50 வருடங்களில் டாடா நிறுவனம் கண்ட வளர்ச்சியை ட்ரெண்டியாகச் சொன்னால் `வைரல் வளர்ச்சி’. டாடாவின் வரலாறு, தனி மனித வரலாறு அல்ல... அது இந்தியத் தொழில்புரட்சியின் வரலாறு. இப்போதும் புதுப்புது ஸ்டார்ட்அப்களைக் கண்டறிந்து, அதில் முதலீடு செய்து, இளம் திறமைசாலிகளை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார் இந்த 78 வயது இளசு.