Published:Updated:

என் வீடே என் பள்ளி!

என் வீடே என் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
என் வீடே என் பள்ளி!

சார்லஸ், படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து

என் வீடே என் பள்ளி!

சார்லஸ், படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து

Published:Updated:
என் வீடே என் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
என் வீடே என் பள்ளி!

‘குழந்தைகளிடம் கற்பதில் உள்ள ஆர்வத்தை நாம் அழித்துவருகிறோம். 100 மார்க் கிடைக்கும், கோல்டு ஸ்டார் கிடைக்கும், ஏ-கிரேடு கிடைக்கும் என, குழந்தைகளை அற்ப விஷயங்களுக்காகக் கட்டாயப்படுத்துகிறோம். குறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்கும் குழந்தைக்கு வேறு பாடத்தில் ஆர்வம் குறைந்திருந்தால், ஏதோ குற்றவாளிபோல தண்டனைகள் அளிக்கிறோம். குழந்தைகளை நம்புங்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால்தான் உங்களுக்கு குழந்தைகள் மீது நம்பிக்கை இருக்காது' - `ஹோம் ஸ்கூலிங்கின் தந்தை’ என அழைக்கப்படும் ஜான் ஹோல்ட்டின் வார்த்தைகள் இவை.

ப்ரீ-கேஜி ஸீட் வாங்கவே இரண்டு லட்சம் ரூபாய், அதற்கு முதல் நாளே இரவு முழுவதும் க்யூவில் நிற்க வேண்டும், எல்.கேஜி-யிலேயே மாதாமாதம் டேர்ம் பரீட்சை, ரெவ்யூ மீட்டிங், குழந்தைகளால் செய்ய முடியாது எனத் தெரிந்தே தரப்படும் வீட்டுப்பாடங்கள்... என, இன்றைய தனியார் கல்விமுறை எவ்வளவு குரூரமாக மாறியிருக்கிறது என்பதை இப்படி ஒரு கட்டுரையில் படித்துதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. ஒரு தனியார் பள்ளியில் இருந்து வெளியே வரும் குழந்தைகளில் எத்தனை பேர் முகத்தில் சிரிப்போடும் மனதில் மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள்?

`இந்த ரன்னிங் ரேஸில் நாங்கள் எங்கள் குழந்தைகளை ஓடவிடுவது இல்லை. எங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடி நாங்களே கற்றுக்கொடுக்கிறோம். அவர்களின் எதிர்காலத்துக்கு நாங்களே பொறுப்பு' என இன்றைய தலைமுறை பெற்றோர்கள் சிலரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றமே, இந்தியாவிலும் `ஹோம் ஸ்கூலிங் கல்விமுறை’ பெரிய அளவில் பரவ ஆரம்பித்திருப்பதன் அடையாளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் வீடே என் பள்ளி!

உன்னை ஓர் அறையில் எட்டு மணி நேரம் அடைச்சுவெச்சு, உனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, நான் ஏதாவது சொல்லித்தருவேன். அதை நீ படிக்கணும். சில சமயம்
A, B, C, D-கூட எட்டு மணி நேரம் சொல்லிக்கொடுப்பேன்.

நீ அமைதியா உட்கார்ந்து படிக்கணும். முடியுமா?’ - ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன், தன்னிடம் இப்படிக் கேட்டதாகச் சொல்கிறார் கிர்த்திகா தரன். பெங்களூரில் வசித்துவரும் இவர், தன் மகனை ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்க வைத்து இன்று வெற்றிகரமாக கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் தாய்.

``ஆறாம் வகுப்பில் `ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்று அவன் சொன்னவுடன் வேறு என்ன வழிகள் இருக்கின்றன எனத் தேடி அலைந்தோம். மாற்றுப்பள்ளிகளில் சேர்த்துப் பார்த்தோம். அங்கேயும் சரிவரவில்லை. சலித்துப்போய் கடைசியாக நின்ற இடம்தான் ஹோம் ஸ்கூலிங். அப்போது முதல் என் மகனுக்கு வீடுதான் பள்ளி. 14 வயது ஆனவுடன் IGCSE முறையில் பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத அவனைத் தயார்ப்படுத்தினேன்.

`யாராவது பத்தாம் வகுப்பில் ஹோம் ஸ்கூலிங் செய்வார்களா? பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்கிடுங்க' என்று அறிவுரை சொன்னவர்கள் பலர். ஆனால், மகன் `எக்காரணம் கொண்டும் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தான். 14 வயதில் அசாத்திய உறுதி அது. ஓர் அம்மாவாக அவனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவன் விருப்பம் என்னவோ அதன்படியே படிக்கவைத்தேன்.

என் வீடே என் பள்ளி!

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாங்கும் இன்டர்நேஷனல் பள்ளிகள், IGCSE சிலபஸில்தான் பாடம் நடத்துகின்றன. எங்களுக்குத் தேர்வு செலவு 30 ஆயிரம் மட்டுமே. லண்டனில் இருந்து சான்றிதழ் வந்துவிடும். சாதாரண தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் சான்றிதழில் பெரிய வித்தியாசம் கிடையாது. சரியாக 16 வயதில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது முழு ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் (இரட்டை டிகிரி) இன்ஜினீயரிங் படிக்கிறான்.

இந்தியாவில் ஹோம் ஸ்கூலிங் என்றால், பலரும் பயமுறுத்துவார்கள். `எதிர்காலம் கேள்விக்குறி’ என்பார்கள். அப்படி எதுவுமே இல்லை. மிகச் சரியாகத் திட்டமிட்டால் பள்ளியில் ஒரு வருடம் சொல்லிக்கொடுப்பதை, நான்கு மாதங்களில் முடித்துவிட முடியும். அவ்வளவுதான் இருக்கிறது நம் பாடத் திட்டத்தில்’’ என்கிறார் கிர்த்திகா.

என் வீடே என் பள்ளி!

11 வயதான லிடியன் நாதஸ்வரம், ஒரு மழலை இசைமேதை. எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வெளிவந்த `புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்துக்கு இசையமைத்த வர்ஷனின் மகன்தான் லிடியன். இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே டிரம்ஸ் வாசித்து அசத்தியவன், அடுத்தடுத்து பியானோ, ஃப்ளூட் என அத்தனை இசைக்கருவிகளையும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். இப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். கன்சர்வேட்டரியில் ரஷ்யன் பியானோ இசை படித்துவரும் லிடியன் நாதஸ்வரம், கண்களை மூடிக்கொண்டு பியானோ வாசிப்பதிலும் கில்லாடி.

‘`முதல்ல எனக்கு பெண் குழந்தை. அவளுக்கு பாடுறதுல ரொம்ப ஆர்வம். அடுத்த குழந்தைதான் லிடியன். ஒருநாள் வீட்டில் இருந்த ஸ்பூன், குச்சிகளை வைத்து வெறும் தரையில் டிரம்ஸ் வாசித்ததை மகள்தான் பார்த்து எங்களுக்குச் சொன்னாள். நானும் பார்த்து அசந்துவிட்டேன். அதன் பிறகு டிரம்ஸ் வாங்கி நானே பேஸிக் சொல்லிக்கொடுத்தேன். அவனிடம் அதிக ஆர்வம் இருப்பதை உணர்ந்தோம். பிறகு, பியானோ வாசிக்க ஆரம்பித்தான்.

மகள், பாடுவதோடு இசை கம்போஸிங்கும் செய்ய ஆரம்பித்தாள். இப்போது திருக்குறளை குழந்தைகள் அனைவருக்கும் கொண்டுசெல்லும் வகையில் அவளே பாடி, இசையும் அமைத்து வருகிறாள். இரண்டு குழந்தைகளுக்குமே இசை ஆர்வம் இருப்பதால் அவர்கள் இருவரையும் பள்ளிக்கு இப்போது அனுப்புவது இல்லை. ஹோம் ஸ்கூலிங்தான். தினமும் மாலையில் டீச்சர் வீட்டுக்கே வந்து இரண்டு மணி நேரம் அடிப்படை கணிதம், அறிவியல் ஆகியவற்றைச் சொல்லித்தருகிறார். இன்ஜினீயரிங், மெடிசின் என நாம் என்ன படிக்க வைத்தாலும் கடைசியில் குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த துறைக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள். அதற்கு இப்போதே அவர்களுக்குப் பிடித்த துறையில் ஈடுபடுத்தலாமே?” என்கிறார் வர்ஷன்.

என் வீடே என் பள்ளி!

‘`குழந்தைகள் எவ்ளோ ஆர்வமா கத்துக்கணுமோ அதே அளவுக்கு டீச்சர்களும் ரொம்ப ஆர்வமா சொல்லித்தரணும். இப்போதைய ஸ்கூல்ஸ்ல வீட்டுக்கு வந்துதான் குழந்தைகள் நிறைய விஷயங்களைப் படிக்கிறாங்க. கிட்டத்தட்ட பெற்றோர் தான் டீச்சர் ரோலே ப்ளே பண்ண வேண்டியிருக்கு. ஸ்கூலுக்கு வர்ற எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கணும்னு டீச்சர்ஸ் எதிர்பார்க்கி றாங்க. `மல்ட்டிபிள் இன்டெலி ஜென்ஸ்'னு ஒரு தியரி இருக்கு. ஒருத்தருக்கு பேச்சுத் திறமை இருக்கும். இன்னொருத்தருக்கு எழுத்துத் திறமை இருக்கும். வேற ஒருத்தருக்கு விஷுவலா யோசிக்கிற திறமை இருக்கும். எல்லா திறமையும் எல்லாருக்கும் இருக்காது. என் பையன் ஹரிகிட்ட, நிறைய யோசிக்கிற திறமையும், வித்தியாசமான சிந்தனைகளும் இருந்தது. ஆனால், தினமும் ஸ்கூலுக்குப் போயிட்டு வரும்போது ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருப்பான். `ஸ்கூல்ல என்னடா நடக்குது?'னு கேட்டா, சரியா பதில் சொல்ல மாட்டான். ஒவ்வொரு நாளும் இந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகிட்டே போச்சு. அப்போதுதான் `ஸ்கூல் இவனுக்கு சரிவராது'னு தோணுச்சு. ஹோம் ஸ்கூலிங் ஆரம்பிச்சோம்.

வீட்ல ரொம்ப ஜாலியா நிறைய விஷயங்கள் கத்துக்கிறான். நிறையப் படிக்கிறான். புதுப்புது விஷயங்களை யோசிச்சு சயின்டிஃபிக்கா பண்றான். இந்த கிளாஸ், அந்த கிளாஸ்னு இல்லை. என்னல்லாம் படிக்க முடியுமோ படிச்சிட்டு இருக்கான். எப்போ படிக்கணும்னு தோணுதோ அவனே புத்தகத்தை எடுத்துவெச்சுப் படிக்க ஆரம்பிச்சிடுவான்.

14 வயசு ஆனதும் நேரடியா 10-ம் வகுப்பு பரீட்சை எழுதலாம். இது இல்லாம வெளியில நிறைய ஒலிம்பியாட் காம்பெடிட்டிவ் எக்ஸாம்ஸ் நடக்குது. அதுல எழுதும் போது நம்ம குழந்தைகள் படிப்புல எந்த லெவல்ல இருக்காங்கனு தெரிஞ்சிக்க முடியுது. அதனால் எந்த வகையிலும் ஸ்கூலை மிஸ் பண்ற ஃபீல் அவனுக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை” என்கிறார் பிரபா சத்ய நாராயணன்.
‘`பின்நவீனத்துவத்தால் கட்டமைக்கப்பட்டதுதான் ஹோம் ஸ்கூலிங். இருக்கும் எல்லா அமைப்புகளுமே தவறு என்கிற சிந்தனைதான் இந்த குளோபலைசேஷன் நமக்கு கொடுத்திருக்கும் பரிசு. வகுப்பறையில் ஜனநாயகம் இல்லை, கேள்வி கேட்கும் உரிமை குழந்தைகளுக்கு இல்லை என்றால் அதை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் துன்புறுத்தப்படுவது தனியார் பள்ளிகளில்தான். அதை மாற்ற வேண்டும்.

என் வீடே என் பள்ளி!

வீட்டில் அம்மாவோ, அப்பாவோ எந்நேரமும் இருந்தால் மட்டுமே ஹோம் ஸ்கூலிங் சாத்தியம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றே ஆகவேண்டிய நிலையில் கோடிக்கணக்கானப் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளைகளைப் படிப்பதற்காக மட்டும் அவர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. தாங்கள் வேலைக்குச் சென்றுவரும் நேரத்தில் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஓர் இடம் வேண்டும். எனவே, இந்தியா போன்ற நாடுகளுக்கு ஹோம் ஸ்கூலிங் என்பதை அனைவருக்குமானதாகப் பரிந்துரைக்க முடியாது'' என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

என் வீடே என் பள்ளி!

மேலும், ஒரு பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் படிக்கும்போது, சமூகத்தின் வெவ்வேறு பிரிவில் இருந்து வரும் சக நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். கூட்டுக் கலவையான நட்பு வட்டம் உருவாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், விட்டுக்கொடுக்கவும், வேற்றுமைகளை ஏற்கவும் வாய்ப்பு உருவாகும். இதுதான் குழந்தைகளை சமூக மனிதர்களாக மாற்றும். ஹோம் ஸ்கூலிங் என்பது சமூக நடப்பில் இருந்து துண்டித்துக்கொண்டு வாழப் பழக்குகிறது. இது, ஹோம் ஸ்கூலிங்கின் மறுபக்கம். எனினும், நடைமுறையில் உள்ள தனியார் கல்வியின் நெருக்கடிதான் பெற்றோர்களை இத்தகைய மாற்றுகளைத் தேடி ஓடவைக்கிறது.

இது GEN Z தலைமுறை. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய குழந்தைகளுக்கு கல்விமுறை புதிதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ‘நான் சொல்வதைக் கேள்?’ என்கிற இப்போதைய கல்விமுறை, இந்தத் தலைமுறையிடம் டிஸ்லைக்தான் வாங்கும்!

சிலபஸ் என்ன?

`நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங்' என்பதுதான் இந்தியாவில் அதிகம் பேர் படிக்கும் ஓப்பன் ஸ்கூலிங் முறை. இங்கே 10-ம் வகுப்பு தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 15. 12-ம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு இல்லை. விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றவாறு தேர்வுகள் எழுதலாம். சிலபஸ் என்பது, கிட்டத்தட்ட சி.பி.எஸ்.சி-க்கு இணையான கடினமான பாடத்திட்டம்தான். சிறப்புக் குழந்தைகள்தான் பெரும்பாலும் இந்தப் பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள்.

www.nios.ac.in என்ற இந்த லிங்க்கில் பாடத்திட்டம், அட்மிஷன், தேர்வு அட்டவணை, கட்டணம் குறித்த அனைத்து விவரங்களும் இருக்கின்றன.

என் வீடே என் பள்ளி!

ஹோம் ஸ்கூலிங் செய்பவர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பது சர்வதேசப் பள்ளி மாணவர்கள் எழுதும் International General Certificate of Secondary Education (IGCSE) பாடத் திட்டம். இது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிகளுக்கான சர்வதேசப் பாடத்திட்டம். இதில் 72 விருப்பப் பாடங்களுக்கு மேல் இருக்கின்றன. ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் போதும்.

www.cie.org.uk என்ற இணையதளத்தில் இந்தப் பாடத்திட்டம் குறித்த எல்லா விவரங்களும் இருக்கின்றன. இங்கு மே மாதம் தேர்வு, ஆகஸ்ட் மாதம் ரிசல்ட். இதில் கட்டணம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், இப்போதைய சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி பள்ளிக் கட்டணத்தைவிட குறைவே. IGCSE முறையில் தேர்வு முறையும் கேள்விகளும் வித்தியாசமாக இருக்கும் என்பதால் சரியான பயிற்சி அவசியம்!