Published:Updated:

வெள்ளை ரோஜாக்கள்... கறுப்பு உடைகள்... ஹார்விக்குப் பின்பான ஹாலிவுட் மாறியிருக்கிறதா? #MeToo #TimesUp

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெள்ளை ரோஜாக்கள்... கறுப்பு உடைகள்... ஹார்விக்குப் பின்பான ஹாலிவுட் மாறியிருக்கிறதா? #MeToo #TimesUp
வெள்ளை ரோஜாக்கள்... கறுப்பு உடைகள்... ஹார்விக்குப் பின்பான ஹாலிவுட் மாறியிருக்கிறதா? #MeToo #TimesUp

வெள்ளை ரோஜாக்கள்... கறுப்பு உடைகள்... ஹார்விக்குப் பின்பான ஹாலிவுட் மாறியிருக்கிறதா? #MeToo #TimesUp

ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் ஹார்வி வின்ஸ்டன் மீதான பாலியல் வன்முறைப் புகார்களுக்குப் பிறகான தாக்கம், ஹாலிவுட்டில் வெளிப்படையாகவே தெரிகிறது. பணியிடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் ஆண் பெண் பாகுபாடுகளுக்கு எதிரான தொடர் பணிக்காக Times Up என்கிற இணையதளத்தினை ஹாலிவுட்டைச் சேர்ந்த 300 பெண்கள் இணைந்து உருவாக்கினர். கோல்டன் குளோப்ஸ் விருதுகள், கிராமி, பாஃப்டா, ப்ரிட் விருது விழா வரை பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குரல்கள் கறுப்பு உடையிலும் வெள்ளை ரோஜாக்களிலும் தெளிவாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…

கோல்டன் குளோப்ஸ்: 

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 75-வது கோல்டன் குளோப்ஸ், வருடத்தின் தொடக்கத்தையே பாலியல் வன்புணர்வு சார்ந்த உரையாடல்களோடு தொடங்கியது. படங்கள் மற்றும் தொடர்களுக்கு விருது வழங்கும் அந்த வண்ணமயமான விருது விழா, கறுப்பு வண்ணமானது. ஏஞ்சலினா ஜோலி, 'ஹாரி பாட்டர்' புகழ், எம்மா வாட்சன் எனக் கிட்டத்தட்ட அனைவருமே கறுப்பு உடையில் வந்திருந்தார்கள். பாலியல் சீண்டல்களுக்கு எதிரான தங்கள் குரலை மேடையில் அழுத்தமாகப் பதிவுசெய்தனர். “ஒவ்வொரு வருடமும் நாம் சொல்லும் கதைகளுக்காக நாம் கொண்டாடப்பட்டோம். ஆனால், இந்த வருடம் நாமே அந்தக் கதைகள் ஆனோம் (MeToo). இது, என்டெர்டெயின்மென்ட் துறையை மட்டுமே இலக்காகக்கொண்டதல்ல. இனம், புவியியல் அமைப்பு, கலாசாரம், மதம், அரசியல் என்று அனைத்தையும் கடந்தது. இந்த இரவில், என் அம்மாவைப்போல, குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக, தனக்கு நடந்த சித்ரவதைகளை பொறுத்துக்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய பெயர்களை நாம் ஒருபோதும் அறியமாட்டோம்” என்று உணர்ச்சிப் பொங்க பேசினார் ஓப்ரா வின்ஃப்ரே. மேலும், ‘ரிசி டைலர்’ வழக்கினைப் பற்றியும் குறிப்பிட்டார். விருது விழாவின் தொகுப்பாளர் செத் மேயரும் அவரது பங்குக்கு ஹார்வி வின்ஸ்ட்டன், ட்ரம்ப் போன்றவர்களை வறுத்தெடுத்தார். பெண்களை மையப்படுத்திய சீரியல்களுக்கு அதிக விருதுகள் தரப்பட்டாலும், பெரும்பாலான விருதுகளை வாங்கியது ஆண்கள்தாம். விழாவில் கலந்துகொண்ட நடிகைகளிடம், மீ டூ பற்றியும் நடிகர்களிடம் அவர்களுடைய விடுமுறைக் கொண்டாட்டங்களைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது விமர்சனத்தை உண்டாக்கியது. 

கிராமி விருது:

கிராமி விருது என்கிற இசை விருதுகள் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. கோல்டன் குளோப்ஸ் போன்றே பலரும் கறுப்பு உடையிலும், அமைதியைக் குறிக்கும் விதமாக வெள்ளை ரோஜாக்களுடனும் வந்திருந்தார்கள். ஆனால், மேடை ஏறிய சிலரின் முகம் சுளிக்கவைக்கும் கிண்டல்களும், பேச்சுக்களும் அது எந்தக் காரணத்துக்காக ‘ஒற்றுமையாக’ எழுந்து நின்றதோ, அதன் அடிப்படையையே குலைத்துவிட்டது. குறிப்பாக, மேடையில் இசைக்கப்பட்ட சில பாடல்களின் வரிகளும், சில பாடகர்கள் அணிந்திருந்த உடைகளும் 'மீ டூ' நோக்கத்தைக் குலைத்து, பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்றது. 

பாஃப்டா (BAFTA): 

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த British Academy of Film and Television Arts (BAFTA) விருது நிகழ்ச்சியும் கறுப்பு நிறத்தால் நிறைந்தது. ஜெனிஃபர் லாரன்ஸ், ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலரும் கறுப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தனர். இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டன் மட்டும் ஆலிவ் நிறத்திலான உடையில், இடுப்பில் ஒரு கறுப்பு பெல்ட்டுடன் வந்திருந்தார். அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக அரசியல் நிலைப்பாடு எடுக்கக் கூடாது என்பதால் அப்படி வந்தார் எனச் சொல்லப்பட்டது. இந்த விருது விழாவிலேயே, 'சிஸ்டர்ஸ் அண்டு கட்' என்கிற அமைப்பைச் சேர்ந்த பெண்கள் ‘TimesUp' என்கிற வாசகம் அடங்கிய டீ சர்ட்டுகளை அணிந்து, ”சகோதரிகள் அனைவரும் இணைந்துவிட்டோம்; இனி எங்களைத் தோற்கடிக்க முடியாது” என்கிற கோஷங்களை எழுப்ப, அது பாதுகாவலர்களால் கலைக்கப்பட்டது. பாஃப்டா விருது விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற செய்தியுடன், 1.4 மில்லியன் டாலரை, 'டைம்ஸ் அப்' பிரசாரத்துக்கு நன்கொடை அளிப்பதாகச் சமூக வலைதளத்தில் அறிவித்தார், எம்மா வாட்சன்.

ப்ரிட்: 

ப்ரிட் எனப்படும் பாப் இசை விருது நிகழ்வு, கடந்த புதன்கிழமை (21.02.18) நடைபெற்றது. பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்முறைக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாகவும், ப்ரிட் விருது விழாவுக்கு வெள்ளை ரோஜாக்களுடன் வந்திருந்தனர். சிலர் கறுப்பு நிற உடையுடனும் வந்திருந்தனர். வெள்ளை ரோஜாக்களை எடுத்துவராதவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர். ‘விழா தொடங்கியபோது நாம் அனைவரும் ரெட் கார்ப்பெட் முழுவதும் வெள்ளை ரோஜாக்களைக் கையில் ஏந்தி, டைம்ஸ் அப் பிரசாரத்துக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், விழா முடிந்த பிறகு குட்டைப் பாவாடைகளை படம் பிடிக்க கேமிராக்கள் லோ ஆங்கிள் வைக்கப்பட்டிருக்கின்றன. டைம்ஸ் அப் பிரசாரத்துக்கான நேரம் முடிந்துவிட்டது' என்று பிரபல மாடல், ஹாலி வில்லபி இன்ஸ்டாகிராமில் சீறியிருந்தார். 

விருது விழாக்களில் கறுப்பு உடை அணிவதாலோ, வெள்ளை ரோஜாக்களை வைத்திருப்பதாலோ பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. இதற்குப் பெரிய அளவிலான செயல்பாடுகள் தேவை என்பதையே இந்த நிகழ்வுகள் சொல்கின்றன. நான்கு விழாக்களிலும் பாலியல் பாகுபாடு, சீண்டல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஹார்வி என்கிற ஒற்றை மனிதரை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் வேலையை ஹாலிவுட் உலகம் செய்துவருகிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது. எண்ணற்ற ஹார்விக்களைப் பற்றி முன்னரே ஹாலிவுட் உலகம் அறிந்திருந்தது. அதனைப் பூசி மெழுகும் வேலையைச் செய்ய முற்படுகிறது என்றே தோன்றுகிறது. ஹாலிவுட் உலகம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், சமூகம், ஹாலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கம் என்று இதனை இரண்டு விதங்களில் உணர்ந்து செயல்பட்டால் சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு