Published:Updated:

அம்முக்களின் பொம்முக்கள்!

எஸ்.ஷக்தி, வி.கே.ரமேஷ்

அம்முக்களின் பொம்முக்கள்!

எஸ்.ஷக்தி, வி.கே.ரமேஷ்

Published:Updated:
அம்முக்களின் பொம்முக்கள்!

'என் அம்முக் குட்டி, பொம்முக் குட்டி’ என்று பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது அழகு. ஆனால், அந்தக் குழந்தைகள் 'ஏ அம்மூட்டி, ஏ பொம்மூட்டி’ என்று தங்கள் பொம்மைக் குழந்தைகளைக் கொஞ்சுவது அதனினும் அழகு! அந்த பொம்முக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டுத்தான் இந்த அம்மு, மம்மு சாப்பிடும். பொம்முவை 'ஜோ ஜோ’ தட்டிக் கொடுத்தால்தான் அம்முக்களுக்குத் தூக்கம் வரும். அப்படிச் சில அம்மு பாப்பாக்களை ஜாலியாகச் சந்தித்தோம்.

##~##கோவை பி.என்.புதூரில் இருக்கும் முகில் பாப்பாவின் ஆல் டைம் ஃபேவரைட் மங்கி பொம்மை. மங்கிக்கு வீட்டில் வைத்த பெயர் 'மிங்கி’. ஆனால், முகிலுக்கு மட்டும் அது 'ங்க்கி’தான்! சாருக்கு எப்பவும் மிங்கி தன் அருகிலேயே இருக்க வேண்டும். இல்லை என்றால் தாதாயிஸத்தை ஆரம்பித்து, வீட்டை இரண்டாக்கிவிடுவாராம். குறிப்பாக, தூங்கும்போது மிங்கி அருகில் இல்லையென்றால், அன்றைக்கு அவர்கள் வீட்டில் மட்டுமல்ல... பக்கத்து வீட்டில்கூட யாரும் தூங்க முடியாது. மிங்கிக்கு முகில் பிஸ்கட் ஊட்டுவது, சோப்பு போட்டுவிடுவது எல்லாம் நல்ல விஷயம். ஆனால், முகில் உச்சா போய்விட்டு அதில் மிங்கியை எடுத்துத் தேயோ தேய் என்று தேய்ப்பது மட்டும்... கண்டிக்கப்பட வேண்டிய குற்றம்!

மருதமலை ரோட்டில் இருக்கும் அஸ்மிதாவின் திக் ஃப்ரெண்ட்ஸ் இருவர். ஒருவர் 'கில்லி’ விஜய் அங்கிள். அடுத்து, டெடிபியர் 'ரியா’. ப்ளே ஸ்கூலுக்குக் கிளம்பும்போது, தன்னுடைய படுக்கை யில் ரியாவைத் தூங்கவைத்துவிட்டு அஸ்மிதா சென்றால், நண்பகல் 12 மணிக்கு அவள் வந்துதான் ரியாவை எழுப்புவாள். இடையில யாராவது ரியாவைத் தூக்கி எங்கேயாவது வைத்துவிட்டால் அவ்வளவுதான்... அஸ்மிதாவின் அட்டாக் அதிரடி யாக இருக்கும். சில நாட்களுக்கு முன் தீபாவளி பர்சேஸிங் சென்றபோது ரியாவையும் தூக்கிச் சென்றாள் அஸ்மி. அங்கு தனக்கு எடுத்ததுபோல ரியாவுக்கும் ஃப்ராக் வேண்டும் என்று இவள் அடம்பிடித்த அழகை மொத்தக் கடையும் மெய்ம்மறந்து பார்த்து ரசித்து இருக்கிறது!

அம்முக்களின் பொம்முக்கள்!

சேலம் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த கவிஸ்ரீயின் செல்லக்குட்டி மிக்கி மவுஸ். இந்தப் பொம்மைக்கு கவி கீ கொடுத்தால், 'ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடும். ஒருமுறை வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் மிக்கியை ரிப்பேர் ஆக்கிவிட்டார். கவியை இடுப்பிலும், மிக்கியைக் கையிலும் தூக்கிக்கொண்டு சர்வீஸ் சென்டருக்குப் போனார் அம்மா உமா. 'நாளைக்கு ரெடி பண்ணித் தர்றேன்’னு சொன்ன கடைக்காரர், கவி கொடுத்த கதறல் எஃபெக்டில், அரை மணி நேரத்தில் மிக்கியை ஓ.கே. செய்து கையில் கொடுத்துவிட்டராம்!

சேலம் டால்மியாவைச் சேர்ந்த கவின்பூபதியின் ஒரே சாய்ஸ் தோதோ. அவனை ஒரு தடவை தூக்கி முத்தம் கொடுத்தால், தோதோவுக்கும் நீங்கள் முத்தம் கொடுத்தாக வேண்டும். இல்லையெனில், தொடையில் சுருக் என்று கிள்ளு வாங்க வேண்டி இருக்கும். ஒரு நாள், இவன் தூங்கிக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டு ஸ்ரேயா தோதோவைத் தூக்கிக்கொண்டு போய்விட்டாளாம். இவன் விழித்து, தோதோவைக் கேட்டு அழ, ஸ்ரேயாவுக்கு திருப்பிக் கொடுக்க மனசே இல்லை. புது நாய் பொம்மையை வாங்கி வந்து, பூபதியிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதைக் கொண்டுபோய் ஸ்ரேயாவிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய தோதோவை வாங்கி இடுப்பில்வைத்து இவன் நடந்ததைப் பார்த்து, இரண்டு குடும்பமும் சிரித்து மகிழ்ந்து இருக்கிறார்கள்!

அம்முக்களின் பொம்முக்கள்!

- படங்கள்: க.தனசேகரன், கே.ஆர்.வெங்கடேஷ்வரன்