என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மாதா பிதா தெய்வம்!

கே.கே.மகேஷ்

மாதா பிதா தெய்வம்!

தாய்-தந்தையைக் கடவுளாகக் கருதி, அவர்கள் வாழ்ந்த வீட்டையே கோயிலாக மாற்றியிருக்கிறார் உசிலம்பட்டியைச் சேர்ந்த கிர்ரா பாலு. அவருடைய வீட்டுக்குள் நுழையும்போதே கற்பூரம், விபூதி, மாலை என ஆன்மிக மணம் கமழ்கிறது. வரவேற்பறையில் அவரது தாய் கனகரத்தினம்மாளும் தந்தை துரைசாமியும் ஐம்பொன் சிலையாகக் காட்சி தருகிறார்கள். அடுத்த அறையை மியூஸியம் என்று சொல்வதுதான் சரி. அவரது அப்பா பயன்படுத்திய குடை, மூக்குக் கண்ணாடி, அவர் படித்த பழைய புத்தகங்கள், மர்பி ரேடியோ, பழைய டி.வி., வாட்ச், ஷேவிங் செட், காலணிகள், பேட்டரி லைட், வேட்டி, சட்டைகள் என்று மிகப் பெரிய கலெக்ஷனையே வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் அம்மாவின் கல்யாணப்புடவை, அவர் சீதனமாகக் கொண்டுவந்த வெங்கலப்பாத்திரங்கள், குத்துவிளக்கு என்று நீள்கிறது பட் டியல்.

##~##'குழந்தைங்க பெரியவங்க ஆனதும், பெத்தவங்க குழந்தையாகிவிடுவாங்க சார். அதைப் புரிஞ்சுக்காம, 'சும்மா தொணதொணங்காதே’ என்று அவங்களைத் திட்டுறோம். சிலர் வீட்டைவிட்டே அனுப்பிடுறாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா-அம்மாதான் கடவுள். அவங்களைச் சந்தோஷமா வெச்சிருந்தாலே, நமக்குத் தேவையானது கிடைக்கும். எங்க தாத்தா கட்டுன வீடு இது. அப்பா - அம்மா கல்யாணம் நடந்தது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த வீடுதான். அம்மா 1986-லும், அப்பா 1993-லும் இறந்தாங்க. ஆனாலும் அவங்க இந்த வீட்டுலேயே குடியிருக்கிற மாதிரி எனக்குத் தோணிச்சு. தொடர்ந்து அவங்களை நல்லபடியாப் பார்த்துக்கணும்னு தீர்மானிச்சேன். என் மனைவி தவறி, குழந்தை ஃபாரினில் செட்டில் ஆனாலும் தனி ஆளா இந்த வீட்டுல இருக்கேன். அப்பா கடைசியாப் பார்த்தப்ப எப்படி இருந்துச்சோ அப்படியே வீட்டை மெயின்டெய்ன் பண்ணுறேன். எந்தப் பொருளையும் இடம் மாற்றலை. அம்மா-அப்பாவுக்கு ஐம்பொன் சிலை செஞ்சேன். 25 வருஷமா காலையில் நாலு மணிக்கே எழுந்து பூ, பழம் வெச்சு அவங்களுக்குப் பூஜை பண்ணுறேன். அப்பா அம்மா பேர்ல இப்பவும் கல்வி, திருமண உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்!'' நெகிழ்கிறார் பாலு.

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்