Published:Updated:

தேர்வு நேரத்தில் மாணவர்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? - மருத்துவ ஆலோசனை #ExamTipsForStudents

தேர்வு நேரத்தில் மாணவர்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? - மருத்துவ ஆலோசனை #ExamTipsForStudents
தேர்வு நேரத்தில் மாணவர்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? - மருத்துவ ஆலோசனை #ExamTipsForStudents

`தேர்வுக் காலம் நெருங்கிவிட்டது’, `அடுத்த சில வாரங்களுக்குத் தீவிரமாகப் படித்தால்தான் நல்ல மதிப்பெண் எடுத்து, பெரிய அளவில் சாதிக்க முடியும்’, `இது போட்டிகள் நிறைந்த உலகம், கடுமையான உழைப்பைக் கொடுத்தால்தான் வெற்றிபெற முடியும்’... இப்படி தேர்வு சார்ந்து அறிவுரைகளும் அனுமானங்களும் மாணவ / மாணவிகளின் (மாணவர்களின்) செவித்திரைகளில் எதிரொலிக்கும் நாள்கள் இவை. ’மாணவர்களோடு சேர்த்து பெற்றோர்களுக்கும் தேர்வு நேரம்’ என்று தலைப்புச் செய்தி போடும் அளவுக்குக் கல்வி சார்ந்த அழுத்தங்கள் அதிகரித்துவிட்டன.


தேர்வு நேரத்தில் எதைப் பற்றியும் நினைக்காமல் புத்தகத்தையே தியானப் பொருளாக எண்ணி வெற்றியடைய முயற்சி செய்துகொண்டிருக்கும் மாணவர்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறைகொள்ள வாய்ப்பில்லை. தேர்வுகளோடு சேர்த்து, மாணவர்களின் உடல்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம். ஒரு வருடம் படிப்புக்காகக் கொடுத்த உழைப்பு, கடைசி நேரத்தில் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு உணவுமுறையும் வாழ்க்கை முறையும் எப்படி இருக்க வேண்டும்... மாணவர்களின் நலனில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு அவசியமானது? அலசுவோம்!

உணவுத் தேர்வு முக்கியம்!

ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு உறக்கம், பதற்றமில்லா அணுகுமுறை… தேர்வு நேரத்தில் உடல் பாதிப்பின்றி பயணம் செய்ய, இந்த மூன்றும் போதும்! இவற்றை முறைப்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த உழைப்பையும் ஒரே நேரத்தில் கொடுப்பதற்கு, ஒன்று அல்லது இரண்டு நாள்களில் தேர்வுகள் முடிந்துவிடப்போவதில்லை. வாரக்கணக்கில் தேர்வுகள் சார்ந்து மாணவர்கள் பயணிக்கவேண்டிய அட்டவணை, ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் முக்கியத்துவம் அளித்தாகவேண்டிய சூழல்... அடுத்ததாகக் காத்திருக்கும் ’நீட்’ தேர்வுக்காகவும் உங்கள் ஆரோக்கியத்தை சேமித்துக்கொள்ள வேண்டும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணம் சிறப்பாக அமையும். நாம் உட்கொள்ளும் உணவுகள், உடல் மட்டுமல்லாமல் மனநிலையையும் வடிவமைப்பவை. எனவே, தேர்வு நேரத்தில் உணவுகளையும் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாகிறது. 

வேனிற்காலத்துக்கு வேண்டும் நீர்!

தேர்வுகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், வெப்பம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்வு நேரத்தில் பின்பற்றவேண்டிய உணவு முறையை, வேனிற் காலத்துக்கு ஏற்றதாக அமைத்துக்கொள்வது சிறப்பு. போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சி இல்லாமல் பாதுகாக்கவேண்டியது முக்கியம். இரவெல்லாம் கண்விழித்துப் படித்து, தண்ணீரையும் தேவையான அளவுக்குக் குடிக்காமல், நாவும் உதடும் வறண்டு காணப்படும் மாணவர்களைப் பெருமளவில் பார்க்கலாம். போதுமான அளவு தண்ணீர் பருகாததால், அவர்களுக்குத் தலைவலி வரவும் வாய்ப்பிருக்கிறது. செயற்கை பானங்களுக்குப் பதிலாக மோரும் இளநீரும் பருக ஊக்கப்படுத்துங்கள். மோர், உடலில் நீர்த்துவத்தை தக்கவைக்கும்; அதோடு, குடல் பகுதியில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகரிக்கச் செய்து, செரிமானப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். இளநீரில் உள்ள இயற்கையான அமினோ அமிலங்களும் தாதுக்களும் உடலுக்கு நலம் தரக்கூடியவை. உடலை குளிர்ச்சியுடன்வைத்திருக்க உதவுபவை.
 


அசைவம் வேண்டாமே!

தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதிக அளவிலான அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், வெப்ப காலம் என்பதால், வயிற்றுப்போக்கும் உண்டாகலாம். குறிப்பாக சாலையோரக் கடைகளில் கிடைக்கும் அசைவ உணவுகளை மாணவர்களுக்கு வாங்கித்தர வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுகளை மாணவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அந்த உணவுகளால், ஃபுட் பாய்சனிங் (Food poisoning) ஏற்படுவதற்கு நிறையச் சாத்தியங்கள் இருக்கின்றன. தலைபாரம், சளி, இருமல் போன்றவையும் ஏற்படலாம். 

இயற்கை பானங்கள் இதம்!

’டீ, காபியை குறிப்பிட்ட இடைவெளியில் அருந்தினால் உற்சாகமாகப் படிப்பார்கள்’ என்று அளவுக்கு மீறி அவற்றை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை முதலில் சிறிது உற்சாகத்தைக் கொடுத்துவிட்டு, விரைவில் அயற்சியை ஏற்படுத்தும். காலையும் மாலையும் இஞ்சி/ஏலம் கலந்த டீ கொடுக்கலாம். ’உயரமாக வளர, முழு கவனத்துடன் படிக்க...’ என விளம்பரப்படுத்தப்படும் சர்க்கரை அதிகமாகக் கலந்த உற்சாகப் பானங்களை தவிர்க்கலாம். பழச்சாறுகளை அவ்வப்போது பருகக் கொடுக்கலாம். உடலுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும் இயற்கையான பழச்சாறுகளுக்கு ஈடு இணை வேறு கிடையாது. சிறிதளவு பனங்கற்கண்டு அல்லது உப்புச் சேர்த்த எலுமிச்சைச் சாறு உடல் சோர்வைப் போக்கும்.

பழங்கள், பயறு வகைகள் பலம் தரும்!

பரீட்சை நேரத்தில் மாணவர்கள் சிப்ஸ்களை கொறிப்பதற்கு பதிலாக, மிளகுத்தூள் தூவிய ஃபுரூட்-சாலட்களை உட்கொள்ளலாம். ஆப்பிள், திராட்சை, மாதுளை, உலர்ந்த திராட்சை, அன்னாசி, பப்பாளி போன்ற பழத்துண்டுகளைச் சாப்பிடலாம். மனதை உற்சாகமாக்கக்கூடிய ’செரடோனின்’ (Serotonin) ஹார்மோனைச் சுரக்கச் செய்யும் நாட்டு ரக வாழைப்பழங்களைச் சாப்பிடலாம். உடனடியாக ஆற்றலைத் தரக்கூடியது வாழைப்பழம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நட்ஸ் வகைகளை நொறுக்குத்தீனியாக உட்கொள்ளலாம். `அவற்றிலிருக்கும் வைட்டமின் இ, அறிவுக்கூர்மையை அதிகரிக்க உதவும்’ என்கின்றன ஆய்வுகள். புரதங்கள் நிறைந்த முளைகட்டிய தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவையும் தேர்வு நேரங்களில் அவசியமான நொறுக்குத்தீனிகள். எள்ளுருண்டை, கடலைமிட்டாய் எனர்ஜி தரும் இயற்கையின் கொடைகள். எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரங்களுக்குச் சில மாதங்கள் கட்டாய ஓய்வு அளித்துவிடலாம். 

காலை உணவு கட்டாயம் தேவை!

தேர்வுக் காலம் முழுக்க எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. செரிப்பதற்குக் கடினமான பரோட்டா, துரித உணவுகள் வேண்டாம். காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தேர்வுக்குச் செல்வது கூடாது. நாள் முழுக்க ஆற்றலைக் கொடுக்கும் காலை உணவு, மாணவர்கள் படித்தவற்றை முழுமையாக விடைத்தாளில் வெளிப்படுத்தவும் உதவும்; தேர்வு நேரத்தில் சோர்வடையாமல் செயல்படவைக்கும். சுவையான காய்கள் நிறைந்த சூப் வகைகளை அருந்தலாம். பருப்பு சேர்ந்த கீரை உணவுகள், புரதங்களோடு சேர்த்து நுண்ணூட்டங்களையும் உடலுக்கு வழங்கும். 

உறக்கம் அவசியம்!

என்றாவது உறக்கம் பாதிக்கப்படுவதில் தவறில்லை. ஆனால், தேர்வுக் காலம் முழுக்க தூக்கம் தொலைத்தால், தேர்வுகளில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியாது. தூக்கம் சரியாக இல்லாதபோது, தலைபாரம், சோர்வு, மனப்பதற்றம் போன்றவை அதிகரிக்கும். இரவின் இருளில் குறைந்தது ஏழு மணி நேரம் உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து படிப்பது சிறப்பு. இருந்தாலும், கடந்த ஒரு வருடமாக இரவுகளில் படித்துப் பழகியவர்கள் திடீரென பழக்கத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தேர்வுக்கு முந்தைய நாள் தூக்கத்தை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டுப் படிப்பதும் நல்லதல்ல. 

காலையும் மாலையும் ஐந்து நிமிடங்கள் மட்டும் செலவு செய்து, ’பிராணாயாமம்’ எனும் மூச்சுப்பயிற்சியை செய்து பாருங்கள். மூளைக்கு அதிக பிராணவாயு கிடைத்து சுறுசுறுப்பு உண்டாகும். கற்றவற்றை வெளிப்படுத்த தெளிவான மனநிலை கிடைக்கும். தேர்வு சார்ந்த பயம் மற்றும் பதற்றம் காணாமல் போகும். ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் மாணவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வது நல்லது. மனதுக்குப் பிடித்த இசையை ரசிப்பது, பெற்றோர்களுடன் கலந்துரையாடுவது எனச் சிறிது நேரம் செலவழிப்பதில் தவறில்லை. 

பள்ளியில் படித்து உணர்ந்தவற்றை திறமையாக வெளிப்படுத்தும் களமாக இருந்த தேர்வுகள், இன்று மனஅழுத்தத்தை அதிகரித்து ’தேர்வு சார்ந்த மனநோயை’ உண்டாக்கும் தளமாக மாறிவிட்டன. பெற்றோர்கள் மற்றும் அன்பர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் மாணவர்களை உற்சாகப்படுத்தக்கூடிய டானிக்குகள். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் உணவு சார்ந்த அக்கறைகளை எடுத்துக்கூறுவது பெற்றோர்களின் கடமை! மேற்சொன்ன விஷயங்களை தேர்வுக் காலம் மட்டுமல்லாமல், வருடம் முழுக்க காலச்சூழலுக்கு ஏற்ப பின்பற்றினால், உடல் ஆரோக்கியம் மேம்படும்; அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம். 

மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உதவும் வழிமுறைகளைப் பற்றி இன்னும் விரிவாகப் படிக்க...  

01.03.2018 அன்று வெளியாகும் 'சுட்டி விகடன்' இதழைப் பார்க்கவும்.