என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

கட்டிப்பிடித்து கடிக்கும் கரடி!

தேனி டாக்டரின் காட்டு அனுபவங்கள்

டாக்டர் ராஜ்குமார்... தேனியைச் சேர்ந்த சர்க்கரை நோய்  ஸ்பெஷலிஸ்ட். இன்னொரு பக்கம் இந்தியக் காடுகளில் வலம் வந்து, விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் இயற்கை ஆர்வலர். 'வனம்’ என்கிற அமைப்பின் மூலம் காடுகள்பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்திவருகிறார்.

கட்டிப்பிடித்து கடிக்கும் கரடி!

##~##''என்னைக் கேட்டா, உட்கார்ந்து மனசை ஆழ்நிலைக்குக் கொண்டுபோறது மட்டும் தியானம் இல்லை. பறவைகளின் சத்தங்களைக் கேட்டுக்கிட்டே காடுகளில் நடந்துபோறதும் தியானம்தான். எனக்குக் காடுகள் மேல ஆர்வம் வந்ததுக்கு ஹெச்.எஃப். ஹிளக்கானின் புத்தகங்கள்தான் காரணம். அவரை 'ஃபாதர் ஆஃப் இண்டியன் ஃபாரஸ்ட்’னு சொல்வாங்க. காடுகள் ஒரு தனி உலகம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முள்காடு, இலையுதிர்க் காடு, பசுமை மாறாக் காடுனு மூணு வகையான காடுகள் இருக்கு. முதன்முதலா காட்டுக்குள் போனப்ப, செந்நாயைப் பார்த்தேன். அது மான்களைக் கும்பலா அட்டாக் பண்ணும். புலியே செந்நாயைப் பார்த்தால் விலகிப் போயிடும். யானைக்கு எதிரே நிக்கிற வரைக்கும் பிரச்னை இல்லை. அதுக்குப் பார்வை கம்மி, வாசனை நுகர்வு அதிகம். அதோட பக்கவாட்டில் நின்னா தான் துரத்த ஆரம்பிக்கும். கரடிக்கும் கண் பார்வை கம்மி. காதும் கேட்காது. வாசனையை நுகர்ந்துதான் எதிரியைக் கண்டுபிடிக்கும். நம்மைப் பார்த்ததும் கட்டிப் பிடிச்சுக் கடிச்சு வைக்கும். இந்தியாவிலேயே வெள்ளி மான், கழுதைப் புலி இரண்டும் மைசூர் காடுகளில்தான் இருக்கு. இது நம் நாட்டுக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம். அதே மாதிரி பிணம் தின்னிக் கழுகுகள் முதுமலை, ஓசூர் போன்ற மலைப் பகுதிகளில்அதிகம். நம்ம விவசாயிகள் 'ஓவிரா’ங் கிற மாத்திரையை மாடு களுக்கு பெயின் கில்லராக் கொடுப்பாங்க. இந்த மாத்திரை யைச் சாப்பிட்ட மாடுகளைப் பிணம் தின்னிக் கழுகுகள் சாப்பிட்டால் இறந்து போயிடும். இந்த மாத்திரையை அரசாங்கம் தடை செய்யணும்.  

மலைமூங்கான் என்கிற பறவை ஹெலிகாப்டர் பறக்கிற மாதிரி சத்தம் போட்டுட்டே பறக்கும். அடுத்ததாக, மான்களைப் பொறுத்தவரை சாம்பல், புள்ளி, கேளையாடு, சறுகுமான்னு நான்கு வகைகள் இருக்கு. இவை தமிழ்நாட்டிலேயே தேனி மாவட் டத்தில்தான் அதிகம். குரங்குகளிலும் ஊர், அனுமன், கருமந்தி, சிங்கவால் குரங்குனு நாலு வகை இருக்கு. இவற்றில் சிங்கவால் குரங்குகளைச் சர்வே எடுத்த போது, உலகில் மொத்தமே 2,500-தான் இருக்குனு கண்டுபிடிச்சாங்க. இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் 400 குரங்குகள் இருக்கு.

கட்டிப்பிடித்து கடிக்கும் கரடி!

அடுத்ததாக, புனுகுப் பூனை. இந்த வகை பூனை காபி தோட்டத்தில்தான் இருக்கும். சாதாரண காபிக் கொட்டை 20 ரூபாய்னா,புனுகு பூனை சாப்பிட்டு எச்சமா போட்ட காபிக் கொட்டை 2 ஆயிரம் ரூபாய் போகும். ஏன்னா, இருப்பதிலேயே நல்ல காபி பழத்தைத்தான் புனுகுப் பூனை சாப்பிடும்.

இப்படி காட்டுக்குள் ஒவ்வொரு விஷயமும் சுவாரஸ்யம்தான். அணில் வகைகளில் மலபார், சாம்பல் நிறம், பறக்கும் அணில்னு மூணு வகை இருக்கு. இதில் பறக்கும் அணில் சாயங்காலம்தான் வெளியே வரும். அதைப் பார்ப்பது ரொம்ப அரிதான விஷயம்.

இப்படிக் காடுகளைப்பத்தின தகவல்களைப் பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் சொல்றோம். காடுகளைப்பற்றிய குறும்படங்கள், அதைப் பாதுகாக்கும் வழிமுறைகள், முதலுதவினு எல்லா விஷயங்களையும் சொல்லித் தர்றோம். எவ்வளவுதான் வாழ்க்கை மாறினாலும் காடு, மழை கடந்து போய் முதலை, ஊர்வன, பறப்பனபற்றி ஆராய்ந்து தெரிஞ்சுக் கிற மாதிரி சந்தோஷமான விஷயம் எதுவும் இல்லை!''

நிம்மதியாகச் சிரிக்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

  • நெல்லையில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சுரேஷ்தான் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்பாந்தவன். 
     
  • 20 கி.மீ. தூரத்துக்குள் இரு சக்கர வாகனங்கள் எங்கே பஞ்சர் ஆனாலும் இவரைத்தான் தேடுவார்கள். மொபைல் போனில் கூப்பிட்டதும் தனது மூன்று சக்கர வாகனத்தில் அந்த இடத்துக்கே வந்து, சரிசெய்து கொடுத்துவிடுகிறார் சுரேஷ்!
     

- சண்.சரவணக்குமார்