Published:Updated:

பரிணாம வளர்ச்சியா, பரிதாப வீழ்ச்சியா... அறிவியல் படும் பாடு! #NationalScienceDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரிணாம வளர்ச்சியா, பரிதாப வீழ்ச்சியா... அறிவியல் படும் பாடு! #NationalScienceDay
பரிணாம வளர்ச்சியா, பரிதாப வீழ்ச்சியா... அறிவியல் படும் பாடு! #NationalScienceDay

பரிணாம வளர்ச்சியா, பரிதாப வீழ்ச்சியா... அறிவியல் படும் பாடு! #NationalScienceDay

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நான் தெளிவாகப் பேசுகிறேன். உடைத்துப் பேசுகிறேன். பயமின்றிப் பேசுகிறேன். அவர்கள் என்னை அதற்காக வெறுக்கிறார்கள். நான் உண்மையைப் பேசுகிறேன் என்பதற்கு அவர்களின் வெறுப்பே சாட்சி!" - சாக்ரடீஸ் 

டீடீடீடீடீடீடீடீடீ...

சென்ற வாரம் இந்த ஒலியைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. ஏர்செல் மொபைல்களுக்கு கால் செய்த அனைவரும் இதைக் கேட்டு வெறுத்துப் போயிருப்பார்கள். ஆங்கிலத்தில் 'Black Out', 'Wash Out' என்பதுபோல ஓர் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது சோகம். முக்கியமான பணிகளில் மாட்டி, இன்று வீட்டிற்கு வர நேரமாகும் எனத் தகவல் தர, வீட்டில் இருக்கும் ஒரேயொரு மொபைலைத் தொடர்புகொள்ள நினைத்தபோது டீடீடீ... ஒலிதான் ஒலித்தது. பலர் வெறுத்துப்போய், டவர் வந்தவுடன் ஏர்டெல்லுக்கு மாறுவதாய் கற்பூரம் அடித்து சத்தியம் எல்லாம் செய்தனர்.

"என்னத்த டெக்னாலஜியோ, என்ன சயின்ஸோ!" என்று ஆரம்பித்த அறிவியல் ரீதியான வசைகள், "பாவம், நிதியில்லையாம்!" என்ற பரிதாபப் பொருளாதாரப் பேச்சுகளில் போய் முடிந்தது. உடனே ஏர்செல்லுக்கு ஆதரவாக, "என்ன இருந்தாலும், நம்மூர்க்காரன்!" என்பது போல சமூக வலைதளங்களில் பதிவுகளும், மீம்ஸ்களும் தெறித்தன. "எல்லாம் அந்த ஜியோ நெட்வொர்க்காரன் பண்ணது" என்று அரசியலும் பேசினார்கள். அதைப்பற்றிப் பேசி அலுத்துப் போகவும், பிரபல நடிகையின் இறப்புச் செய்தி வரவும் சரியாக இருந்தது. முதல் நாள், அவரின் நினைவலைகள் குறித்தும், அவரின் நடிப்பைக் குறித்தும் சிலாகித்தவர்கள், அடுத்த நாள் அடித்தனர் பல்டி. இறந்தவர் உடலில் 'ஆல்கஹால்' இருப்பதாகச் செய்திகள் வர, "இதுக்குத்தாம்பா பொண்ணுங்க சரக்கடிக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று கலாசாரக் காவலர்களாக ஆகிப்போயினர். ஏதோ, குடியால் ஆண்கள் இறக்காதது போலவும், பெண் என்றால் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் இறக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருப்பது போலவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ, அபத்தமோ நியாயமோ, இன்றைய காலகட்டத்தில், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளை பரிமாற, ஒரு குரலை, ஒரு மேடையைக் கொடுத்திருப்பது தொழில்நுட்பம்தான். இது செய்த ஒரே நல்ல காரியம், ஒருவரின் அசல் நிறத்தை, அவரின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதுதான். "உன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் சொல்லு, நீ எப்படிப்பட்டவனென்று தெரிஞ்சுக்கலாம்" என்று புது பொன்மொழி ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்ப டவரில் நின்றுகொண்டு, தொலைநோக்குப் பார்வை பார்த்தது போதும் என இறங்கி, அறிவியல் மேடையில் ஏறினால் அங்கே களைகட்டுகிறது இதைவிட ஒரு பெரிய திருவிழா!  

"டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் ரீதியாகத் தவறானது. நிரூபிக்கப்படாத ஒன்று. அதை கல்விப் பாடத்திலிருந்து நீக்க வேண்டும். மாற்றம் கொண்டுவர வேண்டும். மனிதன் எப்போதும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு, மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் குறிப்பிடவில்லை, யாரும் அப்படியொரு நிகழ்வைப் பார்த்ததாகக் கூறவில்லை" - அமைச்சர் சத்யபால் சிங்க்

“ப்ரோ! இங்க நாம அறிவியலுக்காகப் போராடிட்டு இருக்கும்போதே அங்கே எங்க கல்லூரியில பகவத் கீதையில நிறைய அறிவியல் விஷயங்கள் இருக்குனு செமினார் ஒண்ணு நடந்துட்டு இருக்கு. இதான் இன்னைக்கு நம்ம நாட்டோட நிலைமை” - சென்னை 'March For Science' பேரணியில் பேசிய சென்னை ஐஐடி மாணவர் அர்ஜுன்.

“மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.”- நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா

"மிருகங்களில், பசு மாடுகள் மட்டுமே, கார்பன்டைஆக்ஸைடை எடுத்துக்கொண்டு,  உயிர்க்காற்றான ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன."  

"நியூட்டனுக்கு முன்பாகவே, புவி ஈர்ப்பு விசைக் குறித்து கண்டறிந்தவர் நம் இரண்டாம் பிரம்மகுப்தர்!" - ராஜஸ்தான் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவானி

"அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் நாம்."

"விமானம் கண்டுபிடிக்கப்படும் முன்பாகவே, புஷ்பக விமானங்கள் வைத்து இங்கே பறந்துள்ளனர். அது மாட்டுச் சாண எரிவாயுவால் இயங்கக் கூடியது."

இன்னும் இன்னும் பின்னே போனால், மேலும் பல கருத்துகளை நம்மால் இங்கே தொகுக்க முடியும். அனைத்தும் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் மனிதர் உதிர்த்த முத்துக்கள் அல்லது ஓர் அரசு அமைப்பின் ஒட்டுமொத்தக் கருத்து. அறிவியல் ஆதாரமற்ற விஷயங்களை உண்மைக் கருத்தாக முன்னிறுத்த, பொய்யான முலாம் பூசி பொதுவில் வைப்பதுதான் தற்போது ஒரு மிகப்பெரிய ட்ரெண்டாக இருக்கிறது. அதை உண்மை என்று எண்ணிப் பெருமைப்பட்டுகொள்ளும் கூட்டமும் இருப்பதுதான் சோகமான விஷயம். ஆனால், நம்மிடமும் பிரச்னை இருக்கிறது. அறிவியல் போன்ற ஒரு துறையில் ஒரு பெரிய பொறுப்பில் உட்கார எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறதா என்பது விவாதத்திற்கான கேள்வியே.

ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனிதருக்கு உணவு கொடுக்க மறுத்து, அவரையே கொன்ற கதைகள் இங்கே இருக்கும்போது, அவர்களுக்குக் கல்வி, அறிவியல் எனக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை நாம் எப்போது கொடுக்க போகிறோம் என்ற கேள்வி எழாமல் இல்லை. சமூக நீதி புரியாமல் சிக்கித்தவிக்கும் மனிதர்கள்தானே நாம்? மற்ற இனம், சாதியைக்கூட விட்டு விடுங்கள். நம் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்காவது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா? அதிகபட்சமாக ஏதாவது ஒரு டிகிரி. பதின்பருவம் தாண்டிய சில மாதங்களிலேயே திருமணம். அதன் பிறகு சொந்தமாக ஒரு கனவுகூட  காண முடியாத வாழ்க்கை. கணவன் வீட்டில் அனுமதித்தால், மேற்கொண்டு படிக்கலாம், வேலைக்கும் போகலாம். எல்லாருக்கும் அப்படி இல்லை என்றாலும், பலருக்கு இப்படித்தானே வாழ்க்கை அமைகிறது? விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஒரு பெண் குழந்தை குதித்தால், எத்தனை பெற்றோர்கள் அவளைத் தூக்கி ஏணியில் ஏற்றுவார்கள்? விடை தெரியாது.

அது சரி. இன்று தேசிய அறிவியல் தினம். பொதுவாக, ஓர் ஆளுமையின் நினைவாகத்தான் தினங்கள் அறிவிக்கப்படும். ஆனால், ஒருவரின் கண்டுபிடிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் தினம் இதுவாகத்தான் இருக்கும். ராமன் எஃபெக்ட் (Raman Effect) என்று பெயர்பெற்ற... அட அந்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே! அது முக்கியமில்லை. மேலே கூறியவற்றை இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு