நா.இள அறவாழி
''பழங்கால நாணயங்கள் பாதுகாக்க ப்பட வேண்டிய அரிய பொக்கிஷங்கள். ஆனால் சிலர் அதை உருக்கி தங்க நகைகள் செய்து கொள்வது கேட்கவே சங்கடமான விஷயம்!'' வருத்தம் தொனிக்கிறது டி. என் கோபிராமனின் வார்த்தைகளில். புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஒரு நாணய சேகரிப்பாளர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான நாணயங்கள், பழங்கால ரூபாய் நோட்டுகள், அஞ்சல்தலைகள், கலைப்பொருட்கள் என்று ஒரு மினி மியூசியத்தையே தன் வீட்டில் வைத்துள்ளார்.
''புதுச்சேரியோட நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூர் தான் நான் பிறந்த ஊர். என்னோட 15 வது வயசிலே ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பிச்சேன். திருமணம், குழந்தைகள்னு இல்லற வாழ்க்கை ஆரம்பிச்சபிறகு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட முடியலை. அப்புறம் 40 வயசுக்கு மேல ரிலாக்ஸா பழையபடி சேகரிப்புப் பணிகளைத் தொடங்கினேன். பிரெஞ்சு அரசு புதுவையில் வெளியிட்ட நாணயங்கள்தான் முதலில் சேகரித்தது. 1947ல் இருந்து 2011 வரையுள்ள நாணயங்களைச் சேகரித்து வெச்சிருக்கேன். ஒருசில ஆண்டுகள் இல்லை. ஆனால் கண்டிப்பா அதையும் சேகரிச்சுடுவேன்.

இந்தியாவின் பல பகுதிகளில் நாணயங்களுக்கு ரூபாய், பைசா, வராகன், பணம், டப்பு, அரை டப்பு, கால் டப்பு என்று பல பெயர்கள் இருந்திருக்கு. ஒருகாலத்தில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சோழிகளுக்கும் அதன் அளவுக்கு ஏற்ப மதிப்பு இருந்திருக்கு. முகமது அலி ஜின்னா, ஹோசிமின், நிக்சன், சதாம் உசேன்னு பல உலகத் தலைவர்கள் முகம் பதித்த நோட்டுகளைச் சேகரித்திருக்கிறேன். ரஷ்யா தான் உலகளவில் பெரிய கரன்சி நோட்டு வெளியிட்டு இருக்கு. சீனாதான் மிகச்சிறிய கரன்சி நோட்டுகளை வெளியிட்டு இருக்கு. முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் 1998 இல் விநாயகர் படம் பதித்த கரன்சி புழக்கத்தில் இருந்துள்ளது. எல்லா நாட்டின் கரன்சியும் இருப்பதால் வேற எதாவது சேகரிக்கணும்னு நினைச்சப்பதான் இந்திய நோட்டுகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். 11111 22222 33333 வரிசை கொண்ட நோட்டுகள், மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது கையெழுத்து போட்ட நோட்டுகள், தப்பாக அச்சடிக்கடிப்பட்ட நோட்டுகள், * சின்னம் உள்ள நோட்டுகள்னு விதவிதமாச் சேகரிச்சு வச்சிருக்கேன். முஸ்லிம் மன்னர்கள் பயன்படுத்திய போர்வாள், 1850 களில் பயன்படுத்தப்பட்ட காபி கொட்டை அரவை மிஷின், பழங்கால உண்டியல், பல வருடங்களுக்குப் பின்னர் கல்லாக மாறிய முட்டை மற்றும் நத்தை பாசில்கள், பழங்கால ஓலைச்சுவடிகள்னு பழங்காலப் பொருட்களையும் சேர்த்து வெச்சிருக்கேன்'' என்கிறார் இந்த பழமைப்பித்தர்.
- ‘வரலாற்றில் தமிழ் எழுத்து நாணயங்கள்’, ‘பிரெஞ்சு இந்திய நாணயங்கள்’ என்று முக்கியமான ஆய்வுக்-கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- தொண்டை மண்டல நாணவியல் கழகத்தின் தலைவராக உள்ளார். புதுச்சேரியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள சேகரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்!
படங்கள்: எஸ்.தேவராஜன்