என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

''நரபலியில் இருந்து தப்பினேன்!''

பேராசிரியர் பெரியார்தாசன்

''நரபலியில் இருந்து தப்பினேன்!''

''அப்ப பாலாறு ஓடிக்கிட்டு இருந்த காலம். அதுமேல பாலம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. எத்தனை முறை தூண்களை எழுப்பினாலும் வெள்ளம் வந்து அடிச்சிட் டுப் போயிடும். இதனால் பாலம் கட்றது தடைபட்டுக் கிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல, 'ஊர்ல 12 வயசுக் குள்ளாற இருக்குற அழகான தலைச்சன்பிள்ளை களை நரபலி கொடுத்தா தூண் நின்னுரும்’னு வதந்தி பரவுச்சு பாருங்க. அழகான பிள்ளைங்களை எல்லாம் வேற ஊருக்கு அனுப்பிவெச்சிட்டாங்க. நான் அழகா இல்ல. இருந்தும் என்னையும் எங்க அம்மா வெளியூருக்கு அனுப்பிவெச்சிட்டாங்க!'' - எளிமையும் எள்ளலுமாகப் பேசத் தொடங்குகிறார் பேராசிரியர் பெரியார்தாசன் என்கிற அப்துல்லா. ஆற்காடு குறித்த நினைவுகள் என்றதும் அருவியாக வந்துவிழுகின்றன வார்த்தைகள்.

##~##''எங்க ஊருன்ன உடனே மனசுல நிக்கிறது பாலாறுதான். பால் கறக்கும்போது பால் சொம்புல நிறைஞ்சு நுரை பொங்கி வழியுமே அப்படி நீர் பெருகி ஓடின ஆறு இது. இன்னைக்கு 'பாலாறு பாழாறு/ பரம்பரையா மணல் ஆறு/ தலைகீழா நின்னாலும்/ கழுத்தளவு தண்ணி ஏறாது’னு சொல்லிப் புலம்புற அளவுக்குக் காய்ந்த பாலாறு, தொடரும் மணல் கொள்ளைனு ஆகிப்போச்சு. அப்படியே ஆத்தை ஒட்டி நடந்தால், டெல்லிகேட்ங்கிற இடம் வரும். சின்ன கோட்டை மாதிரி இருக்குற அதில் இருந்து, வேலூர் கோட்டைக்குப் போறதுக்குச் சுரங்கம் இருக்குனு சொல்வாங்க. அந்தக் காலத்துல எங்க ஊர் பிள்ளைங்க வீட்ல கோச்சுக்கிட்டுப் போயிட்டாங்கனா, பெத்தவங்க முதல்ல தேடுற இடம் அதுதான்.

விழாக்களின்போது மாடு, ஆடுகளை  வெட்டி விருந்து படைக்கும் வைபவம் நடக்கும். ஒரு சமயம் வள்ளலார் அமைப் புல இருந்து நாலு பேர் வந்தாங்க. அருட் பாக்களைப் பாடிப் பாடி மக்கள் மனசுல இடம் பிடிச்சாங்க. அவங்க வந்த பிற்பாடு மாடு, ஆடுவெட்டுவது கொஞ்சம்

கொஞ்சமா குறைஞ்சது. அதே காலகட்டத் துல திராவிடர் கழகமும் வந்தது. ஆற்காடு இளவழகன், குடியாத்தம் சுவாமிநாதன்னு பலர் வந்து பெரியாரியக் கருத்துகளைப் பிரசாரம் பண்ணுவாங்க. 'தோழர்’ என்று அழைக்கிற பழக்கம் எங்க ஊர்க்காரங் களுக்கு வந்தது இப்படித்தான். அடுப்படி யில இருந்த பெண்களை வெளியில வர வெச்சு 'பெண் கல்வி’ என்கிற விஷயத்தை திராவிடர் கழகங்கள் முன்வைத்தன. அப்போது அரக்கோணம் பக்கத்தில் இருந்து மங்கலம்கிழார்னு ஒருத்தர் வருவார். பல பிரச்னைகளால் பள்ளி இடைநிறுத்தம் செஞ்சவங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார்.

''நரபலியில் இருந்து தப்பினேன்!''

எங்கள் ஊர் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி. அதனால் உருதுவும் தெரியும். அங்க காதலிச்சுக் கல்யாணம் பண்றது அபூர்வம். மாறாக, இஸ்லாமியர்களிடத்தில் நேரடியாகவே பொண்ணு கேட்டு, பொண்ணு கொடுத்துக் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஒரே குடும்பத்துல மாமியார் இந்துவாகவும் மருமகள் முஸ்லிமாகவும் இருக்குறதை அங்க பார்க்கலாம்.

'மக்கன்பேடா’னு ஒரு இனிப்பு வகையைச் செய்வாங்க பாருங்க. ஆஹா! பாலாடையில செய்யப்படுற அதை அடிச்சுக்கிறதுக்கு இன்னைக்கு வரைக்கும் வேற ஒண்ணும் வரலை. அதே மாதிரி சின்னச் சின்ன கறித் துண்டுகளை அரிசி மாவுல போட்டு போண்டா மாதிரி செய்ற 'ஆற்காடு கவாப்’ தனி சுவைதான். அப்புறம், பிரியாணின்னா அது 'ஆற்காடு பிரியாணி’ தான். பாத்திரத்துக்குக் கீழே அடுப்பின் வெப்பம் கணகணக்க... பாத்திரத்துக்கு மேலேயும் தம் போடுவாங்க. அதுதான் அந்த பிரியாணியில விசேஷம்.

''நரபலியில் இருந்து தப்பினேன்!''

இஸ்லாமியர்களின் கந்தூரி விழா, காமராஜர் வந்து சென்ற ரத்னகிரி முருகன் கோயில், ரோட்ல எவனாவது படிச்சுக்கிட்டே நடந்து போனான்னா, 'சரியான ஆற்காட்டானா இருப்பான் போல’ங்கிற பேச்சுவழக்குனு எங்க ஊருக்குச் சிறப்பு சேர்க்கிற விஷயங்கள் நிறைய இருக்கு. இந்து, முஸ்லிம், திராவிடர் கழகம்னு பலவிதமான மக்கள் வசிச்சாலும், எந்த விதமான சச்சரவுகளும் வந்தது இல்லை. பெரியாரியம், பௌத்தம், இதோ... இப்ப இஸ்லாம்னு நான் இன்னைக்கு என்னவா இருக்கேனோ அதுக்கான அடிப்படை என் ஊரில் இருந்திருக்கு... அதை நினைச்சா சந்தோஷமாவும் இருக்கு!''

 • இயற்பெயர்: சேஷாச்சலம். பெரியார் கருத்துகள் மீது கொண்ட ஆர்வத்தினால் பெரியார்தாசன் என்று பெயர் மாற்றிக்கொண்டார்!
   
 • ஆற்காட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள காங்கேயநல்லூரில் திமிறி முருகன் கோயில் இருக்கிறது. பல வருடங்களாக மலை முருகன் கோயில் என்றுதான் அழைத்துவந்தார்கள். பிற்பாடு ‘குமரகிரி’ என்று பெயர்வைத்தவர் கிருபானந்த வாரியார்!
   
 • ‘மேகசந்தேசம்’ நூலை மொழிபெயர்த்த கவிஞர் ஜமத்-கனி, ‘ஆற்காடு சகோதரர்கள்’ என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சியின் தலைவராக இருந்த ராமசாமி முதலியார், எலிச-பெத் ராணிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் லட்சுமண முதலியார், சோதிட அறிஞர் சீதாராமையர் போன்றவர்கள் வாழ்ந்த ஊர், ஆற்காடு!
   
 • பச்சையப்பன் கல்லூரியில் உளவியல் படித்து முடித்து, அதே கல்லூரியில் பேராசிரியராக 38 ஆண்டுகள் பணி-யாற்றி இருக்கிறார். இயக்குநர் வஸந்த், கவிஞர்கள் வைரமுத்து, நா.முத்துக்-குமார், கபிலன் போன்றோர் இவரின் மாணவர்கள்!
  பெரியார் வளவன், சுரதா என இரண்டு மகன்கள். மேடம் கியூரி, திருக்குறள் என்று இரண்டு பேத்திகள்!
   
 • ‘Logic in a nut shell’ என்பது இவர் எழுதிய முதல் நூல். திருக்குறளின் காமத்துப்பாலுக்கு இவர் எழுதிய ‘மலரினும் மெல்லிது’ எனும் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை சுமார் 110 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ‘ஆயிஷா ரலி அவர்களின் அறிவிப்புகள் & ஓர் ஆய்வு’, ‘இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?’ ஆகியவை இவர் தற்போது எழுதி வரும் நூல்கள்!

- ந.வினோத்குமார்
படங்கள்: எம்.உசேன், ச.வெங்கடேசன்