என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

காரை சூழ்ந்துகொண்ட சிங்கங்கள்!

மதன்

##~##

பெங்களூருக்கு அருகில் 'பானர்கெட்டா’ என்ற இடத்தில் புதிதாக 'லயன் சஃபாரி’ ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது என்று பத்திரிகைச் செய்தி ஒன்றை அண்மையில் படித்தபோது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது!

 சரி! சிங்கத்தை அதன் குகையிலேயே பார்த்து விடுவோம் என்று முடிவுகட்டி, பெங்களூர் நண்பர் ஒருவருடன் காரில் பானர்கெட்டா கிளம்பினோம். பெங்களூரில் இருந்து பானர்கெட்டா சுமார் 30 நிமிட டிரைவ். கிளம்பிய 15 நிமிடங்களுக்குள் சந்தடி மிகுந்த நகரம் முடிந்து 'கிராமத்து அத்தியாயம்’ ஆரம்பித்தது. ஆங்காங்கே 'பானர்கெட்டா’ என்று அம்புக்குறிகளோடு கோணலான திசைகாட்டிகள், தூரத்தில் சின்னச் சின்ன மலைகளோடு பசேலென்று காடு.

காட்டுக்கு 'வாசலில்’ போலீஸ் அவுட் போஸ்ட் மாதிரி ஒரு கட்டடம். 'இதான் சார் ஆபீஸ்!’ என்று வண்டியை நிறுத்தினார் டிரைவர். ஆபீஸுக்குப் பின்னால் உள்ள குட்டி 'ஜூ’ ஒன்றில் 'கீச் கீச்’சென்று கத்திக்கொண்டு இருந்த கரடிக் குட்டி ஒன்றுக்கு ஃபீடிங் பாட்டில் மூலம் பால் கொடுப்பதில் மும்முரமாக இருந்த காட்டிலாகா அதிகாரி டி.எஸ். மல்லிகார்ஜுனை யாவைச் சந்தித்தோம்.

காரை சூழ்ந்துகொண்ட சிங்கங்கள்!

''தேசியப் பூங்கா முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கு வேன் வசதி உண்டு. இன்று அது பிரேக்டௌன். ஆகவே, உங்கள் காரிலேயே போய்ப் பாருங்கள்!'' என்ற மல்லிகார்ஜுனையா, ஒருவரிடம் ரோம் நாட்டு மன்னரைப்போல் ''சிங்கங்களை ரிலீஸ் பண்ணியாகிவிட்டதா?'' என்று கேட்டார். ''எல்லாம் வெளியேதான் சார் இருக்கின்றன!'' என்று பதில் வந்தது. கூட வந்த நண்பர் பரிதாபமாக, ''துணைக்கு யாரையாவது அனுப்புங்களேன்'' என்றார். உதவியாளரிடம் ''வீர கௌடாவை இவர்களுடன் அனுப்புங்கள்'' என்றார் அதிகாரி.

'வீர கௌடா’ என்ற பெயரைக் கேட்டதும் கொஞ்சம் தைரியம் வந்தது. நான் கற்பனை செய்துகொண்டது கராத்தே மணியைப்போல உடற்கட்டோடு கூடிய ஒருவரை. ஆனால், வந்து நின்றவரோ, சோனியாகத் தூக்கக் கலக்கத்துடன் ஒருவர்! 'சரிதான், இவருக்கு ஏதாவது ஆபத்து வந்தால்கூட, நாம்தான் காப்பாற்ற வேண்டும் போலிருக்கிறது’ என்ற எண்ணத்துடன் காரில் ஏறி அமர்ந்தோம்.

கார் கிளம்பிய சில நிமிடங்களில் நல்ல காடு. ''இங்கிருந்து காட்டுக்குள் நாலு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டும்'' என்றார் வீர கௌடா. குறுகலான மண் ரோடு ஒன்றில் மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி ஏறி இறங்கிச் சென்ற கார் கிளப்பிய புழுதி மூட்டத்தில் சிங்கம் வந்திருந்தால் கூடத் தெரிந்திருக்காது!

திடீரென்று கண்களுக்கு முன்னால் 'கிரேட் எஸ்கேப்’ படத்தில் வரும் சிறைச் சாலை மாதிரி உயரமான கம்பி வேலி. வெளியே 'லயன் என்க்ளோஷர்’ என்று ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் போர்டு. அது வரை தளர்ச்சியாக இருந்த வீர கௌடா சுறுசுறுப்படைந்தார். கீழே இறங்கி அங்கே இருந்த கேட் கீப்பரிடம் டிக்கெட்டுகளைக் கொடுத்து கன்னடத்தில் பேசினார். திரும்பி வந்து வண்டிக்குள் ஏறி அமர்ந்து, ''சார்... கண்ணாடிகளைத் தூக்கிவிடுங்கள்!'' என்று கட்டளையிட்டார். ஓர் அங்குல இடைவெளிகூட விடாமல் தூக்கிவிட்டோம்!

'லயன் என்க்ளோஷ’ரின் வெளிக் கதவு கிரீச் சிட்டுத் திறந்தது. காரே இல்லாமல் சிங்கங்களைச் சந்தித்த ஆண்ட்ரகிள்ஸ், ஸாம்ஸன், டார்ஜான், ஜாய் ஆடம்ஸன் - இவர்களை மனதுக்குள் ஒரு முறை தொழுதுவிட்டு உள்ளே நுழைந்தோம். வெளி கேட் மூடப்பட்டது. உள்ளே இன்னொரு கேட் திறக்கப்பட்டது. சிங்கராஜாவின் சமஸ் தானத்துக்குள் 'டயரெடுத்து’ வைத்தோம்!

காரை சூழ்ந்துகொண்ட சிங்கங்கள்!

''இந்த இடத்தில் சிங்கங்களுக்கு மட்டும் மொத்தம் 80 ஏக்கர் உண்டு. இப்போதைக்கு சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் சிங்கங்கள் உலவுகின்றன'' என்றார் வீர கௌடா. கொஞ்சம் சின்ன சஃபாரிதான்!

திடீரென்று ''அதோ..!'' என்றார் நண்பர்.

டிரைவர் 'டக்’கென்று காரை நிறுத்த, மரத்துக்குப் பின்னால் இருந்து பிடரி குலுங்கக் கம்பீரமாக வெளியே வந்த ஒரு சிங்கம் பாதையைக் கடந்து சென்று இன்னொரு மர நிழலில் அமர்ந்து கண்களைக் குறுக்கிக்கொண்டு காருக்குள் அமர்ந்திருக்கும் எங்களைச் சாவதானமாகக் கவனித்தது.

''அந்தப் பக்கம் பாருங்கள் சார்!'' என்றார் டிரைவர். அங்கே சிங்க ராஜாவைத் தொடர்ந்து ஐந்து ராணிகள் வாலைச் சுழற்றிக்கொண்டு ஒரு குரூப்பாகப் பாதையைக் கடந்தன. அவற்றைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண் சிங்கங்கள்!

11 மணி வெயில். காரின் கண்ணாடிகள் எல்லாம் தூக்கிவிடப்பட்டு இருந்ததால், வியர்த்துக் கொட்டியது. ''அட! கண்ணாடியைக் கொஞ்சம் இறக்கிவிட்டுக்குங்க சார். சிங்கம் கிட்ட வந்தால் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்!'' என்றார் வீர கௌடா.

ஓரக் கண்ணால் சிங்கங்களைப் பார்த்தவாறே கண்ணாடியை அரை அங்குலம் இறக்கினோம்!

''சிங்கம் கிட்ட வந்த பிறகு கண்ணாடியைத் தூக்க முடியாமல் 'ஸ்டக்-அப்’ ஆகிவிட்டால்?'' என்று முணுமுணுத்தார் நண்பர்.

வெளியே குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற பெண் சிங்கங்களையே கவனித்தவாறு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது ஆண் சிங்கம். ஒரே ஒரு முறை கீழே படுத்துப் புரண்டது. பெரிதாகக் கொட்டாவிவிட்டது.

சாதாரணமாகவே கொஞ்சம் சோம்பேறியான ஆண் சிங்கம், தினம் 20 மணி நேரம் தூங்கிக் கொண்டும் படுத்துப் புரண்டுகொண்டும் நேரத்தைக் கழிக்கும். ஆபீஸுக்கு, அதாவது வேட்டையாடப் போவது, எப்போதும் மனைவி தான். ஆனால், இரையை மட்டும் அப்படியே கணவனிடம் கொண்டுவந்து தர வேண்டும். ஆண் சிங்கம் ஒரு வெட்டு வெட்டிய பிறகு, மீதி இருப்பதுதான் மனைவிக்கும் குட்டிகளுக்கும்!

மிக அருகில் வந்த ஒரு பெண் சிங்கம் காரோடு ஒரு முறை உடலைத் தேய்த்துக்கொண்டது. கார் சூடாக இருந்ததோ என்னவோ - உடனே நகர்ந்தது.

திடீரென்று 'தடங்... தடக்’ என்று பின்னால் ஏதோ சத்தம்!

கார் குலுங்கிக் கொஞ்சம் அழுந்தியது. நண்பர் வாய் குழற ''இதோ...'' என்று குரல் எழுப்பினார். திரும்பினால், தட்டுத் தடுமாறி கார் டிக்கிக்கு மேல் வழுக்கிச் சமாளித்து ஏறி உட்கார்ந்த சிங்கம் ஒன்று, கண்ணாடி வழியே உள்ளே பார்த்தது. ஹோட்டலுக்குச் சென்று உட்காருவதற்கு முன் பார்சல் கட்டும் இடத்துக்குச் சென்று சூடாக என்ன இருக்கிறது என்று நோட்டம் விட்டுவிட்டு வருவோமே, அதேபோல ஒரு பார்வை!

என்ன நினைத்ததோ, வயிறு குலுங்கக் கீழே லாகவமாகக் குதித்து, மற்ற 'சக்களத்தி’களின் மத்தியில் செல்ல, ஆண் சிங்கம் திரும்பி எங்களை முறைத்துவிட்டு சிவாஜி போல் ஒரு முறை கர்ஜித்தது!

கொஞ்ச தூரத்தில் குட்டிகளோடு அமர்ந்து இருந்த தாய் சிங்கத்தின் நெற்றியில் ஒரு சின்னக் காயம். 'காதல் விளையாட்டு’ முடிந்தவுடன் மனைவியின் நெற்றியை ஆண் சிங்கம் செல்லமாக ஒரு முறை கடிக்கும் என்று 'எல்ஸா புகழ்’ ஆடம்ஸன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது!

காரைக் கொஞ்சம் ரிவர்ஸில் எடுத்து நிழலில் நிறுத்தி, சிங்கங்களை சில ஸ்கெட்சுகள் போட்டுக்கொண்டவுடன் வண்டியைக் கிளப்பினோம். ''இறங்கிப் போய் ஆட்டோகிராஃப் வாங்கிவந்து விடுங்களேன்!'' என்று ஐடியா கொடுத்த நண்பர் என் முறைப்புக்கு உள்ளானார்.

வெளியே வந்தவுடன் எதிரில் ஜீப் ஒன்றில் வந்த மல்லிகார்ஜுனையா வண்டியை நிறுத்தி இறங்கினார். காட்டுக்கு வந்த பிறகு முதல் முறையாக காரில் இருந்து கீழே இறங்கி, ஒரு மர நிழலில் அவரோடு அமர்ந்தோம்.

''போன அக்டோபரில்தான் லயன் சஃபாரியைப் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்தோம். இப்போது 21 சிங்கங்கள் இருக்கின்றன. மூன்று மாதமே ஆன 8 சிங்கக் குட்டிகளும் உண்டு. ஆசிய சிங்கம் தெற்கே இனப்பெருக்கம் செய்ய முடியாது என்று பலர் நம்பிக்கொண்டு இருந்தார்கள். இன்று அது பொய்த்துவிட்டது!'' என்ற அவர், ''இதற்கான எல்லாப் பெருமையும் கர்நாடக அரசின் ஓய்வுபெற்ற காட்டிலாகா அதிகாரி ஓய்.எம்.எல்.சர்மாவைத்தான் சாரும். இந்தத் தேசியப் பூங்காவின் 'தந்தை’ அவர்தான்'' என்றார்.

ஆண் சிங்கங்களுக்குள் சண்டைகள் சர்வ சாதாரணம். இதுபற்றிக் கேட்டதற்கு ''உண்மை! அதனால்தான் தினம் சிங்கங்களை ஒவ்வொரு குடும்பமாக வெளியே விடுகிறோம். இன்னொரு குடும்பம் காட்டுக்குப் பின்னால் கூண்டுக்குள் இருக்கிறது. இருந்தாலும் அண்மையில் ஒரு சண்டையில் அம்மாவையே பிள்ளை கொன்று விட்டது!'' என்றார் மல்லிகார்ஜுனையா.

எஸ்.பி.ஸி.ஏ. ஆட்சேபித்ததன் காரணமாக சிங்கத்துக்கு வேட்டையாட வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை. இப்போதைக்கு அதற்கு டின்னர் 'ரும் சர்வீஸ்’தான்!

இதற்குள் ஒருவர் ஓடி வந்து அவரிடம் ''முதலை அகப்பட்டுவிட்டது!'' என்று பரபரப்புடன் கூறினார்.

அருகில் இருந்த நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியே வந்து, பாதையைக் கடந்து ஏதோ புதர்களுக்கு மத்தியில் போய் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டுவிட்ட முதலை அது!

மல்லிகார்ஜுனையாவிடம் விடைபெற்றுக் கொண்டு கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது, நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் அநாதையாக இருந்த அந்த முதலைக்கு குடம் நிறையத் தண்ணீரால் 'அபிஷேகம்’ செய்து கொண்டு இருந்தார்!