Published:Updated:

"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு!' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச்

"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு!' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச்
"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு!' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச்

பெரியார், அன்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் என்னை வழி நடத்தும். இவர்களின் கொள்கைகளுக்கு நானொரு தத்துப் பிள்ளை. 2004-ல் தொடங்கப்பட்ட 'லட்சிய திமுக'வுக்குக் கடந்த 14 ஆண்டுகள் வனவாசம். இனி என் பாதை தனி. பயணம் தனி'' என உணர்ச்சிவசப்பட்டவராய் பேசினார் டி.ராஜேந்தர்.

'வீட்டில் செய்தியாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்றதும், 'மகனின் (சிம்பு இரு தினங்களுக்கு முன்புதான் தமிழனுக்கொரு பிரச்னை என்றால் அரசியலுக்கு வருவேன் என்றார்) அரசியல் என்ட்ரி' என ஏதாவது இருக்குமா என எதிர்பார்த்தனர் செய்தியாளர்கள். ஆனால், இது 'அப்பாவின் 'ரீஎன்ட்ரி' (அதாவது புது உத்வேகத்துடனாம்!) குறித்த பிரஸ் மீட் என்பது டி.ஆர் ஸ்பாட்டுக்கு வந்ததும் தெரிந்துவிட்டது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுக்குப் பூக்கள் தூவி விட்டு மைக் முன் வந்தவரின் பேச்சில் அவரது வழக்கமான அடுக்கு மொழி தாண்டி ஆதங்கமும் ஆவேசமுமே தூக்கலாக இருந்தது.

காரணம்? பேச்சைக் கேளுங்க, தெரிஞ்சுக்கலாம்..

''தமிழக அரசியல் களத்துல இன்னைக்கு எம்.ஜி.ஆர் இல்லை. அவரது கொள்கைகளைத் தாங்கிப்பிடித்த ஜெயலலிதா இல்லை. கலைஞர் உடல்ரீதியா பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கார். இன்னைக்கு சிலர் அவர்கிட்ட போய் ஆசி வாங்கிட்டு கட்சி ஆரம்பிக்கிறாங்க. ஆனா, தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்துவந்த இக்கட்டான சூழ்நிலையில கலைஞரைத் தேடிப்போனவன் நான். பிரசாரப் பீரங்கியா திமுகவுக்காக நான் முழங்கிய மேடைகள் நிறைய. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில கலைஞர் கைது செய்யப்பட்டபோதெல்லாம் தர்ணா நடத்தினேன். இதெல்லாம் வரலாறு.

பிறகு திமுகவிலிருந்து வெளியேறினேன். கலைஞர் அவர் வார்த்தையிலேயே சொல்லியிருப்பார், 'ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்துல இருந்து விலகினேன்'னு. பிறகும் அந்த வரலாறு நிகழ்ந்தது. வைகோ பிரிஞ்சப்போ, கலைஞர் என்னைக் கூப்பிட்டார். என்னோட 'தாயக மறுமலர்ச்சிக் கழக'த்தைக் கலைச்சிட்டு தாய்க் கழகம் திரும்புனேன். ஆனா, அதுக்குப் பிறகு என்னெல்லாம் நடந்தது... பட்ட பாட்டுல பலவற்றைச் சொல்லமுடியாது. கடைசியில மூணு ரூபாய் உறுப்பினர் கார்டைப் புதுப்பிக்கலைனு சொல்லி கட்சியில இருந்து நீக்கினாங்க. அன்னைக்கு உதிச்சது 'லட்சிய தி.மு.க.'

ஆனாலும், மறுபடியும் கூப்பிட்டார் கலைஞர். 'சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவராக்கி அழகு பார்த்தார். கலைஞரோட தாய் உள்ளம் அது. கடைசியா 2014 தேர்தலுக்கு முன்னாடி கூப்பிட்டார். 'தம்பி டி,ராஜேந்தர் மீண்டும் கழகத்தில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்'னு கைப்பட எழுதி, அந்தக் கடிதத்தையே எனக்குக் கொடுத்து அனுப்பினார். கலைஞருக்கு நான் அவரோட இருக்கணும்கிறது விருப்பம். இடையில புகுந்து தடுத்தது யார், யாரையும் நான் குத்தம் சொல்லலை. ஒரு சிலருக்குக் காரணமே இல்லாம ஒருத்தரைப் பிடிக்கும்; ஒரு சிலரைப் பிடிக்காது. இது அவரவர் பிராப்தம். என்னைப் பொறுத்தவரை கலைஞர் ஒரு சகாப்தம். அவரோட பல களங்கள்ல பணியாற்றியதையே நான் பெருமையா நினைக்கிறேன். அவர்தான் என்னோட குரு. ஒரு தடவை அவரை எதிர்த்துப் போட்டியிடச் சொன்னாங்க ஜெயலலிதா. அந்த வீட்டுல சாப்பிட்டு வளர்ந்தவன்னு சொல்லி மறுத்துட்டேன். அந்த திமுகதான் என் வீட்டைப் பிறகு இடிச்சது. பாரதத்துல துரோணாச்சாரியாக்கு சிஷ்யன் அர்ச்சுனன். ஆனா, துரோணரோட புள்ள அஸ்வத்தமா, அர்ச்சுனனை ஏத்துக்கலை. என் வாழ்க்கையிலயும் அஸ்வத்தமாவை படைச்சாயான்னு அந்த பிரம்மாவத்தான் கேக்கணும்!

இப்பத்தான் எம்.ஜி.ஆர் அனுபவிச்சதை என்னால உணர முடியுது. அவரும் திமுகவில் இருக்கணும்னுதா நினைச்சார். ஆனா தூக்கியெறியப்பட்டார். அதே நிலைமைதான் எனக்கும். கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்டிருக்கேன்.

பாஜக-வுல கூப்பிட்டாங்க. ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குறேன்னு கூப்பிட்டாங்க. எங்கேயும் போகாம நல்ல வேளையா லட்சிய திமுகவையும் கலைக்காம இருந்தேன். அது என்னோட தொலைநோக்குப் பார்வை. 

என் பார்வையில இன்றைய திமுக ஸ்டாலின் திமுக. ஆரம்பகால திமுகவுக்காகப் பாடுபட்டவனுக்கெல்லாம் இன்னைக்கு அங்கே இடமில்லை. வந்தவனைத் தூக்கி வெச்சுக் கொண்டாடுறாங்க. அதனால, இனி சட்டசபையோ பாராளுமன்றமோ தேர்தல்னு வந்துட்டா திமுகவை எதிர்த்து 'லட்சிய திமுக' களத்துல நிற்கும். கட்சியைத் தூசு தட்டிட்டேன். பெரியார், அண்ணாவோட, இனி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரெண்டுபேரும் கூட என் கட்சிப் பெயர் பலகையில நிரந்தரமா இருப்பாங்க. இந்த நாலுபேரும் காட்டிய பாதையில என் புதுப் பயணம் புது உத்வேகத்துடன் தொடங்கியிருக்கு'' என்றவரிடம், 'வருங்காலத்தில் சிம்பு லட்சிய திமுக-வுக்குத் தலைமை தாங்க வாய்ப்புள்ளதா?' என்றோம்.

டி.ஆர் இப்படிச் சொன்னார், "அரசியலுக்கு வந்து நான் படற பாடே சொல்லி மாளலை. அதனால, கேள்வியில இருக்கு வம்பு. சிம்புக்குச் சீவாதீங்க கொம்பு''.