என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

என்னை வாழவைத்த மலை!

யா.நபீசா

'ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சொந்தபந்தங்களுக்குப் பிறகு, அவரவர்கள் சொந்த ஊர் முக்கிய இடத்தைப் பிடிக்கும். ஆனால், நான் பிறந்த ஊரும் ரத்த உறவுகளும் என்னைக் கைவிட்டபோதும் எனக்கு வாழ்வு அளித்தது திருவண்ணாமலைதான்!'' - நெகிழ்ந்து சொல்லும்போதே செல்வராஜின் கண்களில் புறப்பட்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டோடுகிறது.

என்னை வாழவைத்த மலை!

##~##''சொந்த  ஊரு மதுரை. வீட்டில் செல்வச் செழிப்புக்கு எந்த  குறையும் இல்லை.   எம்.எஸ்.சி. முடிச்சுட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துல வேலை பார்த்தேன். மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா போய்க்கிட்டிருந்த வாழ்க்கை. 1986-ம் வருஷம் ஒரு பஸ் விபத்துல என்னோட மனைவியும் குழந்தைகளும் இறந்துட்டாங்க. நானும் கோமாவுல விழுந்து ஆறு மாசம் மருத்துவமனையே கதியாக் கிடந்தேன். அம்மா மட்டும்தான் மருத்துவமனையில் இருந்து பார்த்தாங்க. என்னைக் கவனிச்சுக்கறதுக்காக அண்ணன் முறை உள்ள ஒருவருக்கு பவர்- ஆஃப் அட்டர்னி எழுதிவெச்சிருந்த அம்மாவும் நான் குணம் ஆகறதுக்குள்ள இறந்துட்டாங்க. 'இதுக்கு மேல இவர் பொழைக்க மாட்டாரு, அப்படியே உயிரோட இருந்தாலும் பைத்தியமாத்தான் இருப் பாரு’னு ஹாஸ்பிடலில் சொல்லிட்டாங்களாம்.  

எதிர்பாராத விதமா என்னோட உடல்நிலை தேறி சகஜ நிலைக்கு வந்துட்டேன். ஆனா, ஆறு வருஷத் துல என்னோட வீடு, நிலம்னு எல்லாத்து மேலயும் கடன் வாங்கி வெச்சுட்டு, பேங்க்  பேலன்ஸையும் காலி பண்ணிட்டு அண்ணனும்  இறந்துட்டாரு. குணமாகியும் பிணம் ஆன மாதிரியான நிலைமை. மாசம் 40ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருந்தவன் திடீர்னு நடுத் தெருவுக்கு வந்துட்டேன். எந்த  வேலைக்கும் போக முடியாம என்ன பண்றதுனு தெரியாம கலங்கி நின்னேன். சரியா மருந்து மாத்திரைகள் சாப்பிடாம அடிபட்ட உடம்பு ஆட்டம் காணத் தொடங்கிடுச்சு. சென்னை, பாண்டிச்சேரினு ஹோட்டல் ஹோட்டலா சர்வர் வேலை பார்த்தேன். போதாக் குறைக்கு, ஆபரேஷன் செஞ்ச கால்ல ஸ்டீல் ப்ளேட் வெச்சிருந்த இடத்துல மறுபடியும் அடிபட்டு நடக்கவே முடியாத சூழ்நிலை. சர்வர் வேலையும் போச்சு. வாழ வழி தெரியாம மனம் போன போக்குல திரிஞ்சேன். ரயில்ல டிக்கெட்கூட எடுக்காம திண்டிவனம் வந்து சேர்ந்தேன். அங்கே ஒரு சாமியார் என் கதை யைக் கேட்டுட்டு, ஒரு காவி வேட்டியும் துண்டும் கொடுத்து 'திருவண்ணாமலைக்குப் போ’னு அருள்வாக்கு மாதிரி சொன்னார்.

நானும் திருவண்ணாமலை வந்து கிரிவலப் பாதையில் கொஞ்ச நாள் பிச்சை எடுத்துட்டு இருந்தேன். எனக்கு இங்கிலீஷ் சரளமாப் பேச வரும் என்பதால் வெளிநாட்டுக்காரங்ககிட்ட சகஜமா பேசுவேன். என்னோட காலில் அடிபட்டு ரொம்ப மோசமான நிலைமையில் இருந்த நிலைமையில், என்னைப் பார்த்த இஸ்ரேல் பெண்மணி டேவ்கன்யா என்னை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிப் போய் வைத்தியம் பார்த்தாங்க. ரெண்டு மாசத்துல மோசமா இருந்த என்னோட கால் முழுமையா குணமாச்சு. டெரா-னு ஆஸ்திரேலியப் பெண்மணி ஒருத்தர் 'என்னோட வீட்ல ஒரு ரூம் காலியா இருக்கு, வேணும்னா அங்க வந்து தங்கிக்கங்க’னு சொன்னாங்க. டேவ்கன்யா அவங்க நண்பர் நடத்துற இயற்கைப் பண்ணையில் என்னை  வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. மூணுவேளை  சாப்பாட்டு  போட்டு, இருக்க  இடமும்  தர்றாங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் இஸ்ரேலுக்கே என்னை அழைச்சுட்டுப்  போறேன்னு சொல்லியிருக்காங்க'' என்று சொல்லும்போது செல்வராஜ் கண்களில் தன்னம்பிக்கை தீபம்!