Election bannerElection banner
Published:Updated:

நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா, மாட்டீங்களா?’ - ஒரு தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா, மாட்டீங்களா?’ - ஒரு தன்னம்பிக்கைக் கதை #MotivationStory
நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா, மாட்டீங்களா?’ - ஒரு தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா, மாட்டீங்களா?’ - ஒரு தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

`ன் மேல் நம்பிக்கையில்லாதவர்களை எனக்குப் பிடிக்கும். அதுதான் என்னைக் கடினமாக உழைக்கவைத்து, அவர்கள் நினைப்பது தவறு என்பதை நிரூபிக்கச் செய்யும்’ - முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் டீரெக் ஜீட்டர் (Derek Jeter) உதிர்த்த பொன்மொழி இது. பல நேரங்களில், பல மனிதர்கள் `நீ இதுக்கு லாயக்கில்லை’, `நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே’, `உன்னால இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது’... என்றெல்லாம் தலையில் குட்டப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு சுருங்கிப் போகிறவர்களும் உண்டு; `தங்களால் முடியும்’ என்று அதிலேயே இறங்கி நிரூபித்துக் காண்பிப்பவர்களும் உண்டு. தங்களை நிரூபிப்பவர்கள் சாதனையாளர்களாகிறார்கள். அப்படி சாதித்துக் காட்டிய ஒரு சாதனையாளரின் கதை இது.

1950-ம் ஆண்டு எகிப்தில் பிறந்தவர் இப்ராஹிம் எல்ஃபிகி (Ibrahim Elfiky). அப்போது அவருக்கு 28 வயது. திருமணமாகியிருந்தது. ஹோட்டல்கள் தொடர்பான படிப்பில் ஒரு பட்டமும் வாங்கியிருந்தார். ஆனால், உள்ளூரில் பெரிய அளவில் முன்னேறுவதற்கு வழியிருப்பதாகத் தோன்றவில்லை. வேறு நாட்டுக்குச் சென்றால் கொஞ்சம் சம்பாதிக்கலாம், மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. 1978-ம் ஆண்டு மனைவியுடன் கனடாவுக்குச் சென்றார்.

(PC http://ibrahimelfiky.com) 

கனடாவில் அவர் சந்தித்த நண்பர்கள், உறவினர்கள், மனிதர்கள் எல்லோருமே அவருக்குச் சொன்ன வாசகம் இதுதான்... ``பேசாம திரும்ப உங்க ஊருக்கே போயிடுங்க. இப்போ இங்கே வேலை கிடைக்கிறது கஷ்டம்...’’ ஆனால், நம்பிக்கையை விட்டுவிடவில்லை இப்ராஹிம். ஒருநாள் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைப் பார்த்தார். ஒரு ஹோட்டல் நிர்வாகம் `வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று விளம்பரம் செய்திருந்தது. அந்த முகவரியை எழுதிக்கொண்டு, அந்த ஹோட்டல் வைத்திருந்த இன்டர்வியூவுக்குப் போனார்.

அந்த ஹோட்டல் மேனேஜர்தான் அவரை இன்டர்வியூ செய்தார். இப்ராஹிம் எகிப்திலிருந்து வந்திருக்கிறார், அங்கே வாங்கிய பட்டம் ஒன்று இருப்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு உதட்டைப் பிதுக்கி இப்படிச் சொன்னார். ``கனடாவுல உங்களுக்கு ஹோட்டல் இண்டஸ்ட்ரி சரிப்பட்டு வராது... வேற வேலை தேடுங்க...’’ மற்றவர்களாக இருந்தால் இதைக் கேட்டு நொறுங்கிப் போய்விடுவார்கள். இப்ராஹிம் மன உறுதியுள்ளவர். ஹோட்டலைவிட்டு வெளியே வந்ததும் அவருக்கு இருந்த ஒரே எண்ணம், `இந்தத் துறையில் சாதித்துக் காட்டி, இந்த மேனேஜரின் மூக்கை உடைக்க வேண்டும்’ என்பதுதான்.

கனடாவில் அவரும் அவர் மனைவியும் வாழ்க்கையை ஓட்ட மாதத்துக்கு 1,000 டாலர்களாவது தேவைப்பட்டன. இரண்டு நாள்கள் அலைந்து, திரிந்தார். ஒரு வேலை கிடைத்தது அதுவும் ஹோட்டலில்... தட்டுகள், பாத்திரங்களைக் கழுவும் வேலை. அங்கே வேலை பார்க்கும்போதே இப்ராஹிமுக்கு ஒன்று புரிந்தது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், அவர் படித்திருக்கும் படிப்புப் போதாது. மேலும் படிக்க வேண்டும்... மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரவு, பகலாக வேலை பார்த்தார், படித்தார். சரியாக எட்டே வருடங்கள்... கனடாவில் இரண்டு பட்டப் படிப்புகளை முடித்தார். வாழ்க்கை அவருக்குப் புதிய கதவுகளைத் திறக்க ஆரம்பித்தது. கனடாவின், மான்ட்ரியல் (Montreal) நகரத்திலிருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஜெனரல் மேனேஜர் வேலை கிடைத்தது. ஆனால், இந்த உயரம் இப்ராஹிமுக்குப் போதும் என்று தோன்றவில்லை. `இன்னும்... உயர வேண்டும். என்னை ஹோட்டல் துறைக்கு லாயக்கில்லை என்று சொன்ன மேனேஜருக்கு நான் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும்’ என்கிற எண்ணம் மேலோங்கியிருந்தது.

மனிதவளத்துறையில் ஆர்வம் காட்டினார் இப்ராஹிம். பல்வேறு துறைகளில் 23 டிப்ளமோ பட்டங்களை வாங்கினார். சைக்காலஜி, மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ், ஹ்யூமன் டெவலப்மென்ட் மூன்று துறைகளிலும் மூன்று உயர்ந்த பதவிகளை வகித்தார். மெட்டா பிசிக்ஸில் டாக்டர் பட்டம் வாங்கினார். உலக அளவில் மனிதவளத்துறையில் மிக முக்கியமான ஓர் இடம் அவருக்குக் கிடைத்தது. பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்பெடுத்தார். அவர் பேச்சைக் கேட்க, ரசிக்க வட அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருந்தார்கள். புத்தகங்கள் எழுதினார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இப்ராஹிம் பேசிய வீடியோ, ஆடியோ டேப்கள் பல்லாயிரக்கணக்கில் விற்றன.

ஒருநாள் இப்ராஹிமுக்கு ஒரு ஹோட்டலிலிருந்து அழைப்பு ஒன்று வந்திருந்தது. `என்னுடன் ஒரு நாள் டின்னர் சாப்பிட வர முடியுமா?’ என்று கேட்டிருந்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல, இப்ராஹிமுக்கு வேலை இல்லை என்று சொல்லி நிராகரித்த அதே ஹோட்டல் மேனேஜர். இப்ராஹிம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் டின்னருக்கும் போனார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மேனேஜர் கேட்டார்... ``இப்ராஹிம் நீங்க எப்படி இவ்வளவு பெரிய சாதனையாளரானீங்க?’’

``உங்களாலதான்.’’

``என்னாலயா?’’

``ஆமா. நீங்க மட்டும் அன்னிக்கி `ஹோட்டல் இண்டஸ்ட்ரிக்கு நீ லாயக்கில்லை’னு என்னைச் சொல்லலைன்னா நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கவே மாட்டேன்.’’

(PC http://ibrahimelfiky.com) 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு