ஏர்செல் நம்பர் வைத்திருக்கிறீர்களா? எந்த நெட்வொர்க்குக்கு எப்படி மாறலாம்? #StepByStepGuide

ஏர்செல் நம்பர் வைத்திருக்கிறீர்களா? எந்த நெட்வொர்க்குக்கு எப்படி மாறலாம்? #StepByStepGuide
ஏர்செல் பிரச்னை தொடர்கிறது. ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவன தென்னிந்திய சிஇஓ சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். 'செல்போன் கோபுரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் மீண்டும் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் தகவல் குறுஞ்செய்தி வழி அனுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் எல்லாம் சரியாகும் என ஏர்செல் தெரிவித்திருந்த நிலையில் புதிய தகவல் பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஏர்செல்லில் இருந்து எப்படி இன்னொரு நெட்வொர்க் மாறலாம் என்பதுகூட பலருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஏர்செல் ஏஜென்ட்களும் இதற்காக உதவவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஏர்செல் நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு எப்படி மாறலாம் என்பதை முதலில் பார்க்கலாம்.
ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க் போர்ட் செய்ய UPC (Unique Porting Code ) கோட் தேவை. இதைப் பெறுவதற்கு ‘PORT xxxxxxxxxx’ (இதில் xxxxxxxxxx என்பது உங்கள் 10 இலக்க மொபைல் எண்) என டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
ஏர்செல்லிலிருந்து உங்களுக்கு 8 இலக்க Unique Porting Code அனுப்பப்படும். ஒருவேளை அந்த மெஸேஜ் வரவில்லையென்றால் ஒரு நாள் வரை காத்திருக்கவும். பின், ஏர்செல் கஸ்டமர் கேரைத்தான் அழைக்க வேண்டும். 8 இலக்க எண் கிடைக்கப்பெற்றவர்கள் அந்த எண்ணுடன் தாங்கள் விரும்பும் நெட்வொர்க்கின் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
புதிய நெட்வொர்க்கிடம் Unique Porting Code மற்றும் புகைப்படம், முகவரிச் சான்று மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்துவிட்டு அவர்களது சிம் கார்டு ஒன்றை வழங்குவார்கள். அதை போர்ட் புராசஸ் முடிந்தபிறகே உங்கள் மொபைலில் இன்செர்ட் செய்ய வேண்டும்.
இந்த Unique Porting Code-க்கு 15 நாள்களே வேலிடிட்டி. அதற்குள்ளாக வேறு நெட்வொர்க்குக்கு மாறிவிட வேண்டும். புது நெட்வொர்க்குக்கு மாற 4-5 நாள்கள் ஆகும். இப்போது ஏர்செல்லிலிருந்து நிறைய பேர் போர்ட் செய்யும் வாய்ப்பு இருப்பதால், இன்னும் தாமதமாகும் வாய்ப்பு உண்டு. உங்கள் ஏர்செல் சிம்மில் சிக்னல் கிடைப்பது நின்றுவிட்டால் புது சிம்மைப் பயன்படுத்தத் தொடங்கலாம். சிம் போட்டவுடன் முதலில் அழைக்க வேண்டிய எண்ணை புது நெட்வொர்க் சொல்லும். அந்த எண்ணுக்கு அழைத்தால் போர்ட்டிங் முழுமையாக முடிந்தது என்று அர்த்தம்.
இது ப்ரீபெய்ட் எண்ணுக்கு மட்டுமே. போஸ்ட்பெய்ட் எண்ணுக்குக் கடைசியாகக் கட்டிய பில்லின் நகல் தேவைப்படும். ஒருவேளை கடைசி பில் கட்டியபிறகும் பேலன்ஸ் தொகை இருந்தால் அதையும் கட்டிய பிறகே Unique Porting Code கிடைக்கும்.
எந்த நெட்வொர்க்குக்கு மாறலாம்?:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ, வோடோஃபோன் ஆகியவை இப்போது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏர்செல் பிரச்னையால் மற்ற நெட்வொர்க்குகளிலும் கடந்த சில நாள்களாக பிரச்னை இருக்கிறது. இதை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்தப் பிரச்னைக்கு முன்னர்வரை இந்த 4 நெட்வொர்க்குகளும் சிக்னல் விஷயத்தில் அதிகம் பிரச்னை இல்லாமல் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.
விலையைப் பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகியவை ஏறத்தாழ ஒரே விலையை ப்ளான்கள் தருகின்றன. பி.எஸ்.என்.எல் கொஞ்சம் குறைவான விலையில் சேவைகளை வழங்கி வருகிறது.