
விழிப்புடன் இருப்போம்!

தேர்தலின் முன்னோட்டமாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. வாக்காளர்களாகிய நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய தருணம் இது!
‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை’ என்று சட்டமன்றத்தில் ஆணவமாக அறிவித்தது அ.தி.மு.க. இப்போது, `மதுவிலக்கு, படிப்படியாகக் கொண்டுவரப்படும்’ என்கிறார் அதே ஜெயலலிதா. இலவச டி.வி., இரண்டு ஏக்கர் நிலம் போன்ற திட்டங்களை முந்தைய தேர்தல்களில் அறிவித்த தி.மு.க., இந்த முறை தனது தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பதைத் தவிர்த்து, இலவசங்களுக்கு விடை கொடுத்துவிட்டது. மதுவிலக்குக்கு, தனிச் சட்டம் கொண்டுவருவோம் என்கிறது. `ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரும்’ என தே.மு.தி.க தேர்தல் அறிக்கையில் சொல்கிறார் விஜயகாந்த். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை எனத் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது பா.ம.க.
தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கட்சிகள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் என்றபோதிலும், தேர்தல் அறிக்கைதான் அவர்களின் அதிகாரபூர்வ உறுதிமொழிப் பத்திரம். ஒரு கட்சி, தான் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்ற நிர்பந்தங்கள் இன்று அதிகம். அதே நேரம் தாங்கள் தரும் உறுதிமொழிகளில் அவர்கள் எந்த அளவுக்கு சமூகக் கரிசனத்துடன் இருக்கிறார்கள் என்பதும் முக்கியம். அன்றாட அறிக்கைகளில் ஆணவக் கொலைகளைக் கண்டித்துவிட்டு, தேர்தல் அறிக்கைகளில் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்கிறார்கள் என்றால், அவர்கள் பெரும்பான்மை சாதிகளின் வாக்குகளைக் குறிவைக்கிறார்கள் என்று அர்த்தம். இப்படி தாதுமணல் கொள்ளையில் இருந்து, புதிய முதலீடுகளுக்கான அறிவிப்புகள் வரையிலும் ஒவ்வொரு கட்சியும் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே, வாய்வழி வாக்குறுதிகளை இரண்டாம்பட்சமாகவும், தேர்தல் அறிக்கைகளை முதன்மையாகவும் கருத வேண்டும்.
நம் தொகுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதும் மிக மிக முக்கியம். அறிக்கையில் `கனிமவளக் கொள்ளையை ஒழிப்போம்’ என்று இருக்கலாம். ஆனால், நம் வேட்பாளர்தான் அதற்கான இடைத்தரகராக இருப்பார். `தனியார் கல்வியை ஒழிப்போம்’ என அறிக்கை சொல்லலாம். நமது வேட்பாளர் தனியார் பள்ளிக் கல்லூரிகளை நடத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். எனவே தேர்தல் அறிக்கையுடன் சேர்த்து, அதை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் யார் என்பதும் ஒரு வாக்காளனாக நமக்கு முக்கியம்.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. குற்றப் பின்னணி இல்லாத, சாராய வியாபாரம் செய்யாத, இயற்கை வளங்களைச் சூறையாடாத, சாதி அரசியல் செய்யாத, திறமையாளர்களை, நேர்மையாளர்களை, தூய்மையாளர்களை அடையாளம் காண்போம்; கூர்ந்து கவனிப்போம்; சீர்தூக்கிப் பரிசீலிப்போம்; ஒப்பிட்டு எடை போடுவோம். வரும் வாரங்கள் மிக முக்கியமானவை. ஒரு தேர்வுக்குத் தயாராகத் தரப்படும் அவகாசம் இது. விழிப்புடன் இருப்போம்.
ஆம், தீர்ப்பு நாள் வருகிறது!