Published:Updated:

யானையை எங்க வேணாலும் பார்க்கலாம்... ஆனா, இங்க மட்டும்தான்...! கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 14 #coorg

யானையை எங்க வேணாலும் பார்க்கலாம்... ஆனா, இங்க மட்டும்தான்...! கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 14 #coorg
யானையை எங்க வேணாலும் பார்க்கலாம்... ஆனா, இங்க மட்டும்தான்...! கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 14 #coorg

யானையை எங்க வேணாலும் பார்க்கலாம்... ஆனா, இங்க மட்டும்தான்...! கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 14 #coorg

‘உலகிலேயே பார்க்கப் பார்க்க அலுக்காத அதிசயங்கள் இரண்டு உண்டு’ என்று எதிலேயோ படித்திருக்கிறேன். ஒன்று - குழந்தை; மற்றொன்று - யானை. நிஜம்தான். பிடித்த அழகி, பிடித்த உணவு, பிடித்த வாகனம் என்று எத்தனை விஷயங்களைக் கண் முன் நிறுத்தினாலும், குழந்தையின் சிரிப்பு, இளையராஜா இசைபோல நம்மை அறியாமல் மனசை இலகுவாக்கும். விஷயத்துக்கு வருகிறேன். யானைகளும் அப்படித்தான். யானைகளைப் பக்கத்தில் பார்ப்பது இருக்கட்டும்; ஒருமுறை நீங்கள் யானைமீது, அதுவும் காட்டுக்குள் சவாரி செய்து பார்த்தீர்கள் என்றால்... காட்டையே கைக்குள் அடக்கியதுபோன்ற ஓர் உணர்வு கிடைக்கலாம். கும்கி யானைகளை ஆசை தீரப் பக்கத்திலேயே வைத்துப் பார்த்து... அவ்வளவு ஏன்.. குளிப்பாட்டியே விடும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் கூர்க் (Coorg) வர வேண்டும். 

ஊட்டி மாதிரி ஏதோ ஒரு டீ அல்லது காபி எஸ்டேட் என்றுதான் கூர்க்கை எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால், கூர்க்கில் அதைத் தாண்டி அனுபவிக்க எக்கச்சக்க விஷயங்கள் உண்டு. ஒரு சுற்றுலாத் தலத்துக்கு முக்கியமான விஷயங்கள் என்னென்ன? போட்டிங், ட்ரெக்கிங், ஷாப்பிங், சைட் சீயிங், அருவிக் குளியல், த்ரில்லிங்... இது எல்லாவற்றுக்குமே கூர்க் கேரன்ட்டி தருகிறது. தமிழில் குடகுமலை.

கார் ஸ்டீரியோவில் ‘குடகுமலைக் காற்றில் வரும் பாட்டு’ என்று இளையராஜாவை இசைக்கவிட்டு சென்னையில் இருந்து பயணத்தைத் தொடங்கினேன். மைசூர் வந்ததே தெரியவில்லை. கோவையில் இருந்து கூர்க் வருபவர்கள் சத்தியமங்கலம், திம்பம் வழியாக மைசூரைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த ரூட், அருமையான த்ரில்லிங் பயணத்தைத் தரும். அதனால் இளையராஜாவுக்கு வேலையிருக்காது. சென்னை டு மைசூர் வரை வழக்கமான டோல், ஹைவேஸ், சிக்னல் பயணங்கள்தான். மைசூரில் நல்ல ஹோட்டலில் தங்கிவிட்டு, மறுநாள் கூர்க் என்பதுதான் திட்டம்.

மைசூரில் இருந்து கூர்க் - 125 கி.மீ. காரில் வராதவர்களுக்கு அரசுப் பேருந்துகள் ஆப்ஷன் உண்டு. தமிழ்நாடு போல் டிக்கெட் விலை கையைக் குதறவில்லை. 100 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை டிக்கெட். டாக்ஸி ஆப்ஷனும் உண்டு. சும்மா விசாரித்துப் பார்த்தேன். 1,200-ல் இருந்து ரூபாய் 1,500 வரை நியாயமாகவே கேட்டார்கள். கர்நாடகா என்றாலே ஸ்பீடு பிரேக்கர்கள்தான். அடிக்கணக்கில் ஸ்பீடு பிரேக்கர்கள், சிக்னல்கள் இருந்தன. அவசரக் குடுக்கைகளுக்கு கர்நாடகப் பயணம் செட் ஆகாது. ஆனால், மைசூரில் விபத்துகள் குறைவாக நடப்பதற்கு இவைதான் காரணம். 

அப்பாடா! மலைப்பாதை தொடங்கியது. நல்லவேளையாக - இங்கே ஸ்பீடு பிரேக்கர்கள் இல்லை. ரொம்பவும் வளைவுகள் இல்லை; ரொம்பவும் ஏற்றங்கள் இல்லை. திடீரென காபி வாசம் காற்றில் கலந்தடிக்க ஆரம்பித்தது. கூர்க் வந்துவிட்டது. கூகுளில் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று டைப் செய்தால், கூர்க்தான் வருகிறது. ஆனால், லேசான வெயில் அடித்தது. ‘வேலை செஞ்சா வியர்க்கும்’ என்று யாரும் இங்கே டபாய்க்க முடியாது. அதாவது, கூர்க்கில் வியர்க்கவே இல்லை. 

நீங்கள் கூர்க்கில் வலதுகாலை எடுத்து வைக்கும்போது, மடிக்கேரிதான் உங்களை வரவேற்கும். இதுதான் கூர்க்கின் தலைநகரம். கர்நாடக மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாலையின் ஆரம்ப நகரமான மடிக்கேரி, ஆல் டைம் காபி வாசத்துடன் எப்போதும் நாசியை நிறைத்துக்கொண்டே இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில், அரேபிய நாட்டுக்கு மெக்கா புனிதப் பயணத்துக்குச் சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்து காபி விதைகளை வாங்கிவந்து கர்நாடக மாநிலம் முழுவதும் நட்டு வளர்த்தார்களாம். அதன்பிறகுதான் கூர்க்கில் காபி பதனிடுதல் முக்கியத் தொழில் ஆனதாம். அதற்காகச் சுற்றிலும் மலை, ஜில் கிளைமேட் இருக்கும் எல்லா கிராமங்களிலும் காபி பதனிட முடியாது. இதற்கு சில கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலைப்பகுதிகளில் மட்டும்தான் காபி எஸ்டேட்டுகளை உருவாக்க முடியும். ஊட்டி, கொடைக்கானலை நினைத்துப் பார்த்தேன். டீக் கடைகளில், காபி குடிக்க வேண்டுமானால் கிடைக்கும். ஊட்டி, டீ எஸ்டேட்டுகளுக்குத்தான் பிரபலம்.

டெம்பரேச்சர் செக் செய்து பார்த்தேன். 20 டிகிரி என்றது. ஆனால், வெயில் தெரியவே இல்லை. இங்கே 5.30 மணிக்கெல்லாம் சூரியன் மறையத் தொடங்கி இருட்டாகி விடுகிறது. மடிக்கேரியில் தங்குவதற்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்தன. காட்டேஜ், ஹோட்டல் ரூம்கள், ஹோம் ஸ்டே, ட்ரீ ஹட் என்று வெரைட்டியாக வழிமறிக்கிறார்கள். காபி எஸ்டேட் மலையடிவாரத்தில் ஒரு நல்ல காட்டேஜைத் தேர்ந்தெடுத்துத் தங்கினேன். மலிவாகவும் இருந்தது. காலை உணவுக்கும் சேர்த்தே ரூ.1,500 பில் போட்டார்கள். மலைக்கும் காட்டுக்கும் நடுவே இருந்தாலும், விலங்குகள் பயம் இல்லை என்று உறுதிமொழி தந்தார்கள். ஆனால், ரூம் வாசலில் அதிகாலை வெரைட்டியாக பறவைகள் கண்காட்சி நடத்திக்கொண்டிருந்தன. 

காலையில் அருவிக்குளியல் போட்டால் நன்றாக இருக்கும். அருவி பற்றி விசாரித்தபோது, அபே அருவி பற்றிச் சொன்னார்கள். பிரிட்டிஷ் காலத்தில் மடிக்கேரியின் கேப்டனாக இருந்தவரின் மகள் ஜெஸ்ஸி. அவரின் நினைவாக முதலில் இதற்கு ஜெஸ்ஸி அருவி என்றுதான் பெயர் சூட்டினார்களாம். நாளடைவில் அபே என்று ஆக்கிவிட்டார்கள். அபேவுக்கு சீஸனெல்லாம் பெரிதாக இல்லை. ‘தடால் தடால்’ எனப் பொத்துக்கொண்டு விழுகிறது அருவி. அபே அருவிக்குச் செல்வது அட்வென்ச்சர் ட்ரிப்போலவே இருந்தது. சில பல ஏலக்காய் எஸ்டேட்களைக் கடந்து... தொங்கு பாலத்தைத் தாண்டி... செங்குத்தான மலைத் திருப்பங்களில் ஊர்ந்து... இப்படித்தான் அபே அருவியை அடைய வேண்டியிருக்கிறது. குளியல் போடலாம் என்று நினைத்து ஆர்வமாகக் கிளம்பினேன். குளிக்கத் தடை என்றார்கள். அட்டைப் பூச்சிகளின் தொந்தரவால் குளிக்கத் தடை விதித்திருந்தார்கள். சிலர் தொங்கு பாலத்திலிருந்தே அபே அருவி தெரிவது மாதிரி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

குளிப்பதற்கு என்றால், இருப்பு அருவி என்றோர் இடம் சொன்னார்கள். ஆனால், தூரம் அதிகமாக இருந்தது. மடிக்கேரியிலிருந்து 83 கி.மீ. ஒரு வழியாகக் கிளம்பினேன். கார் இல்லாதவர்களுக்கு ஜீப் ட்ரெக்கிங் ஆப்ஷன் உண்டு. போகும் வழியில் மந்தல்பட்டி எனும் இடத்தில் ட்ரெக்கிங் பண்ணலாம். 

இருப்பு அருவியைப் பார்த்ததும் இருப்பு கொள்ளவில்லை. பாறைகளின் இடுக்கிலிருந்து வரும் நீரில், சும்மா கால் நனைத்தாலே ஜிவ்வென இருக்கிறது. ஆனால், இங்கேயும் அட்டைப் பூச்சிகள் தொந்தரவு இருப்பதாகச் சொன்னார்கள். மூங்கில் பாலம் இங்கேயும் இருந்தது. தடைகளை உடைத்து சிலர் ஈர உடம்போடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘அட்டை கடிச்சா நல்லதுதான்... தைரியமா வாங்க’ என்று அரைகுறைத் தமிழில் தைரியம் சொன்னார்கள்.

மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி டூர் அடிக்கும்போது, மொழிப் பிரச்னைதான் விழிப் பிதுங்க வைக்கும். இன்னும் சில இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் கொரியன் படம் பார்ப்பதுபோல், தேமேவென முழிக்க வேண்டியிருக்கும். சுற்றுலாத் தலம் என்பதாலோ என்னவோ, கூர்க் மாவட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தமிழ் அருவியாய் வருகிறது. நான் கிளம்பிய நேரம், சில புத்த பெண் பிட்சுகள் அருவிக்குப் பக்கத்தில் வந்து தவம் செய்வது மாதிரி ஏதோ பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்கள்கூட தமிழ் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. பாகமண்டலாவில் இருக்கும் தலைக்காவிரிக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்ததாகச் சொன்னார்கள்.

கர்நாடகா என்றாலே பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்குப் பிறகு காவிரிதான் நினைவுக்கு வரும். கூர்க் என்றால், காபி எஸ்டேட்டுகளுக்குப் பிறகு தலைக்காவிரி. அதாவது, காவிரியின் தல. ஆம்! காவிரி ஆற்றின் ‘ஆரம்பம்’ இதுதான். அதனால்தான் இதற்கு ‘தல காவிரி’ என்று பெயர். பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள். குடகு மலையில் பெயர் பெற்ற ஆன்மிகச் சுற்றுலாத் தலம் தலைக்காவிரி. 3,700 அடி உயரத்தில் மலைத் தொடர்களுக்கு நடுவே ஓர் ஆலயம் அமைந்திருக்கிறது. அகஸ்தீஸ்வரர் ஆலயம். இங்குதான் அகஸ்திய முனிவர் தவம் செய்தாராம். தலைக்காவிரியில் 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்பதை நினைவில் கொள்க. தங்குவதற்கு இடமும் கிடையாது.

அதற்கு முன்பாக நீச்சல் குளம்போல், தேங்கிக் கிடக்கும் இடம்தான் காவிரியின் ஆரம்பம். குளியல் தொட்டிபோல் இருக்கும் இதிலிருந்தா இம்மாம் பெரிய காவிரி உருவாகிறது என்று வியப்பாக இருந்தது. எந்நேரமும் புனித பூஜைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர், குளத்தில் காசுகளை வீசி எறிந்துகொண்டிருந்தார்கள். காசு எறிந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாம். 

பக்கத்திலிருக்கும் மலைக்கு சிலர் ட்ரெக்கிங் போனார்கள். நானும் கஷ்டப்பட்டு ஏறினேன். சுற்றிப் பார்க்க வெரைட்டியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை; வாங்கித் திங்க கடைகள் இல்லை; கொண்டாட்டங்கள் இல்லை. ஆனாலும், ம.நீ.ம. தலைவர் கமல் அவசர அவசரமாக பரமக்குடி டூரை முடித்ததுபோல், சட்டு புட்டென கிளம்பி வர முடியவில்லை. பச்சைப் பசேல் மலைகளை வைத்துக் கடவுள் கன்னாபின்னாவெனக் கையெழுத்துப்போட்டதுபோல் மனம் மயக்கியது பள்ளத்தாக்கு. பனி படர்ந்திருந்த அந்த ஏரியாவில் செல்ஃபி எடுத்து D.P வைத்தால், ‘போட்டோஷாப்தானே’ என்று கிண்டல் பண்ணுவார்கள் குரூப் மெம்பர்கள். பொறுமையாக ரசித்துவிட்டுத்தான் கீழறிங்கினேன்.

தலைக்காவிரி செல்லும் வழியில்தான் பாகமண்டலம் இருக்கிறது. காவிரி, கனிகா, ஜோதி என்று மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம். இதை திருவேணி சங்கமம் என்கிறார்கள். காசி மாதிரி இங்கே தலை முழுகிக்கொண்டிருந்தார்கள். காலும் நனைக்கலாம். 

ஆன்மிக அன்பர்களுக்கு மற்றும் ஓர் இடம் - தங்கக்கோவில். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும் இந்தத் தங்கக் கோயிலை, ‘குட்டி திபெத்’ என்கிறார்கள். 1960-களில் அமைக்கப்பட்ட இது, இந்தியாவின் இரண்டாவது பெரிய திபெத்தியன் செட்டில்மென்ட்டாம். திபெத்துக்குள்ளேயே வந்துவிட்டதுபோல் இருந்தது. எங்கு திரும்பினாலும் புத்த பிட்சுகள் வழிந்து நிரம்பிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்திலேயே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது தங்கக் கோயில். ‘பின் ட்ராப் சைலன்ஸ்’ என்பதெல்லாம் இதற்கு மொக்கையான உதாரணமாக இருக்கலாம். உலகின் மொத்த அமைதியையும் ஓரிடத்தில் கொட்டிவைத்தாற்போல், அப்படி ஓர் அமைதி இருக்கிறது கோயிலுக்குள். அது அப்படியே மனதுக்கும் பரவுகிறது. போதி மர தவத்துக்குப் பிறகு, நேரடியாக புத்தர் இங்கு வந்திருப்பார்போல. அன்பு வழியும் கண்களுடன் சிலையாக அமர்ந்து கருணையைப் போதிக்கிறார். இங்கு ஒலிக்க வேண்டிய ஒரே நாமம் - ‘புத்தம் சரணம் கச்சாமி!’ திபெத்திய மக்களின் கைவினைப்பொருள் விற்பனைக் கூடம் ஒன்றும் வைத்திருந்தார்கள். கலைப் பொருள்கள் சிலவற்றை பார்சல் வாங்கியபோது, புத்த பிட்ச்சுகள் இன்னும் கருணை வழிய வழியனுப்பி வைத்தார்கள்.

செல்லும் வழியில், கூர்க்கின் அரசர்களில் ஒருவரான வீர ராஜேந்திராவின் கல்லறை பார்த்தேன். கட்டடக் கலையே விநோதமாக இருந்தது. மடிக்கேரி வந்தபோது, 5.30 ஆகி இருட்டிவிட்டது. சுடச்சுட டிபனைத் தட்டில் வைத்த அடுத்த மைக்ரோ செகண்டில், சூடான உணவு ஜில்லிட்டுப் போன குளிர் அது. இரவு தங்கல், அதை விட ஜில்!

மறுநாள் பயணம் ரெடியானது. சில வியூ பாயின்ட்கள் சொன்னார்கள். ராஜா சீட் என்றொரு இடம். கைகளை விரித்தெல்லாம் வைத்திருக்க முடியவில்லை. க்ளவுஸ் வேண்டியிருக்கிறது. காலையில் செம சில்லென இருந்தது காலநிலை. மலையின் விளிம்பில் நம்மை நிற்க வைத்தார்கள். அங்கிருந்து பார்த்தால், குடகு மலையின் பள்ளத்தாக்கு பனோரமா மோடில் விரிகிறது. ஒரு காலத்தில் கூர்க் மகாராஜா இந்த இடத்தில் அமர்ந்து, ரிலாக்ஸ் செய்வாராம். அதனால் இதற்கு ‘ராஜா சீட்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள். சூரிய உதயம், அஸ்தமனம் - இரண்டையும் ராஜா சீட்டில் நின்று பார்த்து ரசிக்கலாம்.

மடிக்கேரியில் இருந்து பிரிந்து சென்ற சாலையில் காரை விட்டேன். ‘நார்னியா’ படத்தில் வருவதுபோல், எக்கச்சக்க மரங்கள், தாவரங்கள் பேசிக்கொண்டே வழிகாட்டின. பனிக்கட்டி மட்டும்தான் இல்லை. சடாலெனப் பிரிந்து சென்ற ஒரு சாலையில் போனபோது, திடீரென ஆர்ப்பரிப்புச் சத்தம் காதைப் பிளந்தது. காவிரி நதியின் ஓட்டம் அது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி என்றார்கள். சாதுவாக இருக்கும் ஹீரோ, சில பல அடிகளுக்குப் பிறகு வெகுண்டெழுவதுபோல், சின்னக் குளத்தில் சாதுவாகக் கிளம்பும் காவிரி நீர் இங்கு தனது டிரான்ஸ்ஃபார்மேஷனை நடத்திக்கொண்டிருந்தது. நம் ஊருக்குத் தனியாக வரத்தான் அடம்பிடிக்கும் காவிரி. ஆனால், கால் வைத்தால் நம்மைக் கூடவே கூட்டிப்போகும் அளவு துள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் 7-ம் தேதி நடக்கவிருக்கிறது என்று விகடன்.காமில் ஃப்ளாஷ் நியூஸ் வந்திருந்தது.

இந்தக் காட்டாற்றைச் சுற்றியுள்ள காடுதான் ‘துபாரே காடு’. படகுச் சவாரி இருந்தது. காவிரியின் அந்தக் கரையில்தான் துபாரே எனும் யானைகளுக்கான கேம்ப் நடக்கப்படும் இடம். ‘கர்நாடகாவில்தான் காவிரியைக் கடக்க ஓடம் வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒட்டகமும், லாரிகளும் போதும்’ என்று எப்போதோ ஒரு கவிதை படித்தது நினைவுக்கு வந்தது. படகில் ஏறி அக்கரைக்குப் போகும்போது, யானைகள் தும்பிக்கை நீட்டி உங்களை வரவேற்கக் காத்திருக்கும். இங்கே சுமார் 150 யானைகளுக்கு மேல் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், எல்லா நேரங்களிலும் யானைகளைப் பார்க்க முடியாது. டைமிங் உண்டு. காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் அனுமதி. 

யானைக் குளியல் பார்க்கப் பார்க்கச் சலிக்கவே இல்லை. குழந்தைகள்போல் சில யானைகள், ‘பொதுக்’கென ஆழம் இல்லாத காவிரி நீரில் வாகாக விழுந்து, ‘தையத்தக்கா தையத்தக்கா’ என காவிரியில் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தன. சில யானைகள் சுள்ளென்ற வெயிலுக்கு, ‘படுத்தே விட்டானய்யா’ ரேஞ்சுக்கு தண்ணீரில் உறங்கவே ஆரம்பித்து விட்டன. இன்னும் ஒரு குட்டி யானை, கனடா நாட்டுப் பிரதமரின் மகன்போல் ரொம்ப சேட்டையாக இருக்க வேண்டும். சந்தோஷத்தில் காவிரியை குட்டித் தும்பிக்கையில் 'மடேர் மடேர்' என அடித்து அதகளம் பண்ணிக்கொண்டிருந்தது. சிறுமி குளிப்பாட்டுகையில், பாசமாகத் தும்பிக்கையில் நீரடித்து விளையாடியது கவிதை போல் இருந்தது.

இந்த நேரத்தில் நீங்களும் இந்த என்ஜாய்மென்ட்டில் பங்கு கொள்ளலாம். ஆம்! யானைகளைக் குளிப்பாட்ட உங்களுக்கு வாய்ப்புத் தரப்படுகிறது. சிமென்ட் சுவரில் மெருகுத்தாளை வைத்து தரதரவெனத் தேய்ப்பதுபோல், யானைகளின் தடித்த தோலில் பிரஷ் கொண்டு தேய்த்து, ஒரு வித த்ரில்லிங்கோடு யானைகளைக் குளிப்பாட்டி லயிக்க முடிவதில் யானைகளுக்கும் சுகம்; நமக்கும் இதம். அப்புறம் லஞ்ச் டைம். அதாவது, யானைகளுக்கு! பார்வையாளர்களும் பங்கேற்கலாம். யானைகளுக்குத் தீனி போட்டு மகிழலாம். இது தவிர, யானைச் சவாரியும் இருந்தது. காட்டுக்குள் யானைமேல் அமர்ந்து போவது, செம த்ரில்லிங்கான விஷயம். (இப்போது இதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.)

துபாரேவுக்குள் தாமதமாக என்ட்ரி கொடுப்பவர்கள், இந்தக் காட்டுக்குள் வனத்துறையினரால் பராமரிக்கப்படும் காட்டேஜில் தங்கி, அடுத்த நாள் இந்த என்ஜாய்மென்ட்டில் பங்கு பெறலாம். ஒரு நாளைக்கு 1,000 ரூபாயில் இருந்து அறைகள் கிடைக்கின்றன. உணவு காம்ப்ளிமென்ட்ரி. ஆற்றின் கரையில் ஒரு தனியார் ஹோட்டலும் இருந்தது. 

இங்கே காவிரி நிசர்கதமா என்றோர் இடம் உண்டு. இங்குதான் ராஃப்டிங் எனப்படும் படகுச்சவாரி பிரசித்தம். தென்னிந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் ராஃப்ட் பயணம் இருக்கிறது. ‘தனி ஒருவன்’ படத்தில் வருவதுபோல், கும்பலாக ராஃப்டிங் பயணம் போனது ஒரு குரூப். ஹெல்மெட், ஜாக்கெட் என்று பாதுகாப்பு உபகரணங்களோடும், இரண்டு கைடுகளோடும்தான் பயணம் செய்ய வேண்டும். பாறைகள் நிறைந்த, தண்ணீர் சீரற்று ஓடுகின்ற இந்தக் காட்டாற்றில் இது வெறும் பயணமாக இல்லை; சாகசமாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கெல்லாம் அனுமதி இல்லை என்றார்கள். மழை நேரங்களில் இது இன்னும் சாகசமாக இருக்குமாம்.

ராஃப்ட் பயணத்தின்போது ஏற்பட்ட ஈரத்தோடேயே காரேறினேன். மறுபடியும் மடிக்கேரி. கடைசி நாள் என்பதாலோ என்னவோ, மாலை நேரத்தில் மடிக்கேரி இன்னும் ரம்மியமாய் இருந்தது. வீடு திரும்ப மனசே இல்லை. கொஞ்சூண்டு காபித் தூள் பாக்கெட்டுகள், மலையில் விளைந்த தானியங்கள், கலைப் பொருள்கள் - இவற்றோடு கூர்க் நினைவுகளையும் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு... சென்னைக்கு விடு ஜூட்!

 .

அடுத்த கட்டுரைக்கு