Published:Updated:

காலா பேசும் `கறுப்பு' அரசியலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? #Kaala

காலா பேசும் `கறுப்பு' அரசியலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? #Kaala
காலா பேசும் `கறுப்பு' அரசியலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? #Kaala

காலா பேசும் `கறுப்பு' அரசியலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? #Kaala

கறுப்பு - அசிங்கம்.

கறுப்பு - அருவருப்பு.

கறுப்பு - அபசகுனம்.

கறுப்பு- வெறுப்பு.

கறுப்பு - அழுக்கு.

கறுப்பு- அடக்குமுறையின் அடையாளம்.

கறுப்பு- கீழ்மையின் நிறம்.

கறுப்பு - ஒடுக்கப்படும் மக்களின் நிறம்.

கறுப்பு - எதிர்ப்பின் சின்னம்.

கறுப்பு - புரட்சியின் வண்ணம். 

கறுப்பு - எழுச்சியின் எண்ணம்.

கறுப்பு - திராவிடத்தின் நிறம்.

கறுப்பு - காலா

"காலான்னா கறுப்பு... காலன்...கரிகாலன். சண்ட போட்டு காக்குறவன்..." 

1.17 நிமிட காலா டீசர் இந்தியா முழுக்க கறுப்பு நிறத்தைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அந்த ஒரு நிமிட டீசர் பேசியிருக்கும் கறுப்பு அரசியலைக் கட்டவிழ்த்துப் பல கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. இதுவும் அப்படியான கட்டவிழ்க்கப்பட்ட கதைகளில் ஒன்றுதான். ஆனால், ரஜினியின் கறுப்புச் சட்டையைப் பற்றியோ, 'தூய்மை இந்தியாவின்' காவியைப் பற்றியோ அல்ல நாம் பார்க்கப் போவது. அந்த டீசரின் இறுதியில் 6 நொடிகள் ரஜினி பேசும் வசனத்தின்போது, அதன் பின்னணியில் தெரியும் ஒரு புகைப்படம். கறுப்பு நிறைந்த அந்த ஃப்ரேமில், வெள்ளைச் சிரிப்பை உதிர்த்தபடி இருக்கும் அந்தக் கறுப்பு பெண். அவள்மீது திணிக்கப்பட்ட கறுப்பு வெறுப்பு அரசியல். அவள் வெகுண்டெழுந்து வீரியமாய் கறுப்பை மேம்படுத்திய கதை. கறுப்பின் விடுதலையோடு அவள் பேசிய பச்சையின் சுதந்திரக் கதை. 

"இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்கப் பார்த்ததில்லைல்ல...பார்ப்பீங்க..." என்று டீசரின் இறுதியில் ரஜினி பேசும் அந்த வசனத்தின் போது, அவரின் பின்னணியில்  'வங்காரி மாத்தாய்' யின் புகைப்படம் இருக்கும். 

உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிராகப் பெரும் ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் துளிர்விட்டு, 2004-ல் உலகில் நோபல் பரிசு வென்ற முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் பெற்ற வங்காரி மாத்தாய் தான் கடந்து வந்த பாதை குறித்து இப்படிச் சொன்னார்... 

"என் தோல் யானையைப்போல் கருத்தது. தடிமனானது. அவர்கள் என்னை எந்தளவிற்கு அசிங்கப்படுத்தினார்களோ, காயப்படுத்தினார்களோ அதைவிட மிக அதிகமாக நான் உறுதியாகியிருக்கிறேன். எனக்குத் தெரியும் நான் செய்வது சரி. அவர்கள் செய்வது தவறு." 

ஆம்...தோலின் நிறம் அவர்களுக்கு வெள்ளையாக இருந்ததால், கறுப்புத் தோல் கொண்டவர்களைத் தாங்கள் ஆளும் அடிமைகளாக, தாங்கள் தூக்கி எறியும் குப்பைகளாக, தாங்கள் காறி உமிழும் எச்சிலாக அவர்கள் நினைத்தார்கள். அந்த எச்சில் விழுந்த நிலத்திலிருந்து, குப்பையிலிருந்த விதையிலிருந்து செடியாய், மரமாய் வளர்ந்தார் வங்காரி மாத்தாய். 

1940-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி கென்யாவின் நெய்ரி மாநிலத்திலிருக்கும் இஹிதே எனும் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்தார் வங்காரி மாத்தாய். 'கிகுயூ' எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 1964-ல் பள்ளிப்படிப்பை முடித்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னெடியின் ஸ்காலர்ஷிப் கிடைக்க, அமெரிக்காவில் அறிவியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அறிவியலில் மேற்படிப்பையும் அங்கேயே முடித்தார். பின்னர், 1971-ல் ஜெர்மனிக்குச் சென்று பிஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் வென்றார். அன்றைய நாளில் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பெண் வங்காரி மாத்தாய் மட்டுமே. 

வெளிநாடுகளில் தனக்குக் கிடைத்த பல வேலைகளையும் துறந்துவிட்டு, மீண்டும் தன் நாட்டிற்கே திரும்பியவர் 'க்ரீன் பெல்ட் மூவ்மென்ட்' (Green Belt Movement) எனும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கைச் செழிப்பில் ஊறியிருந்த ஆப்பிரிக்க நாட்டின் வளங்களைப் பல வல்லரசு நாடுகளும் ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டிருந்தன. அதை எதிர்த்துப் போராடியபடியே, இருக்கும் வளங்களைக் காக்கவும், மரங்களைப் புதிதாக நட்டு வளர்க்கவும் ஒரு பக்கம் போராடிக்கொண்டேயிருந்தார். 

இதுவரை தோராயமாக 5 கோடி மரங்களை நட்டு வளர்த்துள்ளது க்ரீன் பெல்ட் மூவ்மென்ட் அமைப்பு. கென்யாவின் உயிராதாரமாக இருக்கக்கூடிய Mt. கென்யா (Mt. Kenya Forest), அபிர்டேர் (Aberdare), மாவ் (Mau), செராங்கனி (Cherangani) , Mt. எல்கான் (Mt. Elgon) போன்ற காடுகளைக் காப்பாற்றி, அழிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மரங்களை நட்டு அதன் பசுமை பரப்பை அதிகப்படுத்தியுள்ளது. மரங்கள் நடுவதும் அதை வளர்ப்பதும் உலகில் பலரும் செய்யும் விஷயம்தானே என்று வங்காரியை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது. காரணம், கறுப்பின மக்களின் விடுதலையிலும், பழங்குடிப் பெண்களின் முன்னேற்றத்திலும் வங்காரியின் பங்கு மிக முக்கியமானது.

மரம் நடுவது என்பது அவர் போராட்டத்தின் ஒரு குறியீடு. காட்டைக் காப்பாற்ற பழங்குடிகளைக் காடுகளை விட்டு விரட்டுவது ஒன்றே வழி என முனைந்து செயல்படும் பல அரசுகளுக்கு மத்தியில், பூர்வகுடிகளால் மட்டுமே காடுகளைப் பாதுகாக்க முடியும் என்று நிரூபணம் செய்து காட்டியவர். வறுமையில் உழன்று கிடந்த பழங்குடிகளுக்கான உணவையும், வருவாயையும் இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தார். பழங்குடிகளின் வறுமையையும், காடுகளின் பாதுகாப்பையும் ஒரு புள்ளியில் கொண்டுவந்து இணைத்து இரண்டிற்குமான ஓர் தீர்வை எட்டினார்.

"வறுமைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று - இன்று தனக்கான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இயற்கையை அவர்கள் கெடுக்கிறார்கள். இரண்டு - இன்றைய உணவிற்காக அவர்கள் அப்படிச் செய்வது அவர்களுக்கான அடுத்தநாள் உணவைக் கிடைக்காமல் போகச் செய்கிறது. அவர்கள் பசியைத் தீர்த்தால் போதும். ஆனால், பெரும்பாலும் வறுமையிலிருப்பவர்கள்தான் இயற்கையை அழிப்பதாகச் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அதிகாரவர்க்கத்தினரும், அரசாங்கங்களும்தான் பெருமளவு இயற்கையைச் சுரண்டுகிறார்கள். சீரழிக்கிறார்கள்." 

தன் வாழ்வின் இறுதிவரை தன் இன மக்களுக்காகவும், தான் சார்ந்த மண்ணின் நலத்திற்காகவும் தொடர்ந்து போராடிவந்த வங்காரி மாத்தாய் 2011-ம் ஆண்டு புற்றுநோயால் (Ovarian Cancer) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

ஒரு நிமிட டீசரில் சில நொடிகள் வரும் ஒரு புகைப்படத்திற்கு இத்தனை அர்த்தப்படுத்துதலைத் தர வேண்டுமா? கறுப்பு அரசியலை முன்வைத்துப் பேசப்படும் படத்தில் வங்காரி மாத்தாயின் புகைப்படம் வைக்கப்பட்டது உண்மையில் குறீயிடாக இல்லாமல் அது மிகவும் இயல்பான, யதேச்சையான நிகழ்வாகக்கூட இருந்திருக்கலாமே? அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரத்தான் வேண்டுமா? என்ற கேள்விகளும், கிண்டல்களும் எழலாம்தான். ஆனால், இது ஒரு வாய்ப்பு. உலகின் ஆகச் சிறந்த போராளிகளில் ஒருவரான வங்காரி மாத்தாயை அறிமுகப்படுத்திக்கொள்ள காலா டீசர் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. 

பிப்ரவரி 16ம் தேதி "ப்ளாக் பேந்தர்" படம் வெளியானது. உலகின் பல முக்கிய நாடுகளில் அந்தப் படத்திற்கு எதிரான மிகக் கடுமையான விமர்சனங்கள் ஃபேஸ்புக்கில் பரவியது. அந்தப் படம் குறித்துப் பல வெள்ளையர்கள் இனவெறியின் வெளிப்பாடாக கருத்துகளைப் பகிர்ந்தார்கள். 

உச்சமாக, ட்விட்டரில் ஒரு பதிவு வைரலானது. அதில் ஒரு பெண் தலையில் ரத்தம் ஒழுக நின்றுகொண்டிருப்பார். "நான் ப்ளாக் பேந்தர் படம் பார்க்க வந்தேன். ஆனால், நான் ஒரு வெள்ளையர் என்பதால், ஒரு கறுப்பினப் பையன் பாட்டிலால் என் முகத்தில் அடித்துவிட்டான்" என்று இருந்தது. அதற்கு ஒரு பக்கம் கறுப்பின மக்களுக்கு எதிரான கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால், சில மணி நேரங்களிலேயே அது 2009-ல் எடுக்கப்பட்ட போட்டோ. Flickr.com-ல் இருந்து எடுக்கப்பட்டது என்பதை ஆதாரத்தோடு வெளியிட்டார்கள் நெட்டிசன்கள். 

அதேபோல், செர்பியாவில் நடந்த ஒரு கலவரம் குறித்துச் சொல்ல 2013-ல் ஒரு மாடல் அழகி முகத்தில் ரத்தக் காயங்கள் போன்று மேக்-அப் செய்து ஒரு போட்டோ போட்டிருந்தார். அதையும், சமீபத்தில் சிலர் வெளியிட்டு அந்தப் பெண் கறுப்பர்களால் தாக்கப்பட்டார் என்று பதிவிட்டார்கள். பின்னர், அதுவும் பொய் என்று நிரூபணமானது. இதுபோன்ற பொய்யான பதிவுகளை இடும் கணக்குகளை ட்விட்டர் நிறுவனமே நீக்கியது. 

காலம் மாறிவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகம். இங்கு எந்த வேற்றுமைகளும் இல்லை எனப் பொய்யாக ஒரு கூட்டம் நம்பவைத்துக்கொண்டேயிருக்கிறது. அதை ஒரு பெரும் சமூகம் நம்பிக்கொண்டேயிருக்கிறது. கறுப்பின மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, தங்களை நாயகர்களாக வைத்து ஹாலிவுட்டில் 'ப்ளாக் பேந்தர்' (Black Panther) என்று ஒரு படத்தை எடுக்கிறார்கள். அதை சகித்துக்கொள்ள முடியாத வெள்ளைத் தோல் கொண்டவர்கள் இனவெறி தூற்றுதல்களை அந்தப் படத்தின் மீது மிகச் சாதாரணமாக எய்வார்கள் என்றால், கறுப்பு மீதான வெறுப்பை உமிழ்வார்கள் என்றால், ஹாலிவுட்டின் எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கும் சிறிதளவு குறையாமல் இருந்த அந்தப் படத்தை வெறுப்பார்கள் என்றால்... காலாவின் ஒரு நொடி கறுப்பு அரசியல் குறித்தும் இங்கு ஆழமாக, சத்தமாக, உறுதியாகப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. 


 

அடுத்த கட்டுரைக்கு