Published:Updated:

தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack

மு.பிரதீப் கிருஷ்ணா
தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack
தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack

ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேசத்தின் கிரிக்கெட் எதிர்காலத்தையே புரட்டிவிட்டது. அதை கிரிக்கெட் உலகமும், இந்திய அரசியலும் மீள முடியா சிக்கலுக்கு ஆளாக்கிவிட்டன.

சரியாக 9 ஆண்டுகளுக்கு முன் - மார்ச் 3,2009... இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம்செய்த பேருந்து மீது லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. பல அணிகள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தன. ஏ.கே.47 குண்டுச் சத்தங்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது. 2011 உலகக் கோப்பையை  நடத்தும் உரிமம் பறிபோனது. ஐ.சி.சி தொடர்களை நடத்துவதற்கான பரிசீலனையில்கூட பங்கேற்க முடியாத சூழல். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வெறியோடு வளர்ந்த பாகிஸ்தானியர்களால், தங்கள் மண்ணில் ஒரு போட்டியில்கூட விளையாட முடியாத சூழல். ஷார்ஜா, அபுதாபி, துபாய் போன்ற நகரங்களிலேயே விளையாடிக்கொண்டிருந்தனர். அசார் அலி சொன்ன அந்த வார்த்தைகளுக்கு, பாகிஸ்தான் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு, அந்த அணி வீரர்களின் ஆர்ப்பரிப்புக்கு அதுதான் காரணம். 

பாதுகாப்புப் பிரச்னையைக் காரணம் காட்டி அனைத்து அணிகளும் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டன. பாகிஸ்தான் சூப்பர் லீக் என்பதில் பெயரளவுதான் பாகிஸ்தான். அதுவும் துபாய், ஷார்ஜா நகரங்களில்தான் நடந்துவருகிறது. கடந்த சீசனின் இறுதிப் போட்டி லாகூரில் நடந்தபோது கொண்டாடித் தீர்த்தார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். அவர்களுக்கும் கிரிக்கெட் மதம்தான். ஆனால், அதைப் பார்க்கத்தான் அவர்களால் முடியவில்லை. இந்த 9 ஆண்டுகளில் அவர்கள் மண்ணில் நடந்தது வெறும் 3 ஒருநாள் போட்டிகளும், 6 டி-20 போட்டிகளும் மட்டுமே. தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். பிற நாடுகள் தங்கள் வீரர்களை அப்படிப்பட்ட இடங்களுக்கு அனுப்ப நிச்சயம் தயக்கம் காட்டும்தான். ஆனால், கிரிக்கெட் உலகம் இதை ரொம்பவுமே தவறான பாதையில் கையாண்டுகொண்டிருக்கிறது.

வம்பர் 13, 2015...பிரான்ஸ் நாட்டிலுள்ள 'ஸ்டேட் டி பிரான்ஸ்' (Stade de France) கால்பந்து மைதானத்தில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் விளையாடிக்கொண்டிருந்தன. போட்டி நடந்துகொண்டிருக்கும்போது மைதானத்தின் வெளியே 3 மனித வெடிகுண்டுகள் வெடித்ததில் 4 பேர் இறந்தனர். அடுத்த ஜூன் மாதம் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான 'யூரோ கோப்பை' பிரான்ஸில் நடக்கவிருந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதற்றம் கூடியது. தொடர் நடக்குமா, அனைத்து அணிகளும் பங்கேற்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. 24 அணிகளில் ஒரு அணிகூடப் பின்வாங்கவில்லை. அமைதியாக, வெற்றிகரமாக தொடர் நடந்து முடிந்தது. 

ஏப்ரல் 11, 2017... ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில், பொருஸியா டார்ட்மண்ட் (Borussia Dortmund), மொனாகோ (Monaco) அணிகளுக்கிடையே சாம்பியன்ஸ் லீக் போட்டி நடக்கவிருந்தது. அந்தப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்த டார்ட்மண்ட் அணியின் பேருந்தின்மீது கையெறிகுண்டுகள் வீசப்பட்டன. அந்த அணியின் வீரர் மார்க் பாட்ரா (Marc Batra) கை உடைந்து விளையாட முடியாத சூழல். பாதுகாப்பில் சிக்கல் இருந்ததுதான். ஆனால், அந்தப் போட்டி கைவிடப்படவில்லை. மறுநாளே நடந்தது. அந்த மைதானத்தில் நடக்கவிருந்த அந்த சீசனின் 'புண்டஸ்லிகா' போட்டிகள் அனைத்தும் தடையின்றி நடந்து முடிந்தன. 

இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். கேடலோனியா பிரச்னை உச்சக்கட்டத்தை அடைந்தபோதும், ஸ்பெய்னின் மற்ற பகுதியைச் சேர்ந்த அணிகள் அங்கு விளையாடின. இப்போது உச்சக்கட்ட தீவிரவாதத்தைக் கையில் எடுத்திருக்கும் துருக்கி மண்ணில்தான் பெசிக்டாஸ் (Besiktas) அணியை வரும் 14-ம் தேதி எதிர்கொள்ளச் செல்கிறது பேயர்ன் மூனிச் (Bayern Munich) அணி. ஜிகா வைரஸ் தீவிரமாகத் தாக்கியிருந்த பிரேசில் நகரில் ஒலிம்பிக் தொடர்... வீரர்களின் உடல் நிலை பாதிக்கலாம். பல நாடுகள் யோசித்தன. ஆனாலும், யாரும் பின்வாங்கவில்லை. ஒலிம்பிக் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லா இடங்களிலும், தீவிரவாதம், நோய், உள்நாட்டுப் போர், கிளர்ச்சி என எத்தனையோ வகையான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், விளையாட்டை விளையாட்டாய் மட்டும் பார்ப்பவர்கள் அதைப் பெரிய காரணமாய்ச் சொல்வதில்லை. விளையாட்டை மதிக்கிறார்கள். 

கிரிக்கெட் முதலிலிருந்தே நேரெதிர். 2002-ம் ஆண்டே பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து. 2003 உலகக்கோப்பையின்போது பாதுகாப்பு காரணங்களைக் காரணம் சொல்லி, ஜிம்பாப்வே செல்ல மறுத்தது அதே இங்கிலாந்து. அப்போது நியூசிலாந்தும், கென்யா செல்ல மறுத்து 'வாக் அவுட்' கொடுத்தது. லீக் போட்டியில் கென்யாவுக்கு எதிராக வாக் அவுட் கொடுத்த நியூசிலாந்து, அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதால் 'சூப்பர் 6' சுற்றின்போது ஜிம்பாப்வேயில் விளையாடியது. இதை எப்படி எடுத்துக்கொள்வது...?

`மற்ற நாடுகளில் அவ்வப்போதுதான் இப்படி நிகழ்கின்றன. ஆனால், பாகிஸ்தானில் அடிக்கடி நிகழ்கிறது’ என்பதுதான் அனைவரின் பதிலும். அப்படியெனில் 2009-ம் ஆண்டுக்கு முன் அந்த நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்ததில்லையா? அப்போதெல்லாம் பாதுகாப்பு பிரச்னையாகத் தெரியவில்லையா? ஒரு முறை கிரிக்கெட் வீரர்கள் முன்பு தாக்குதல் நடந்ததால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உகந்த நாடில்லாமல் போய்விட்டதா? இங்கு இந்தியாவின் பங்கைப் பற்றி நாம் முக்கியமாக அலச வேண்டியிருக்கிறது.

அந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடப்பதற்கு 97 நாள்கள் முன்பு... மும்பை தாஜ் ஹோட்டலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த, மொத்த தேசமும் அதிர்ந்தது. தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக பாகிஸ்தான் மீது சாடியது இந்தியா. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழல் பாதித்த நிலையில், இலங்கை அணியினர் மீது நடந்த தாக்குதல் இந்தியா குற்றம் சுமத்துவதற்கான ஆயுதமாக மாறிப்போனது. பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்ற முடிவெடுத்தது. ஆம், இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்னைக்கு, இந்தியா தந்த தண்டனை 'கிரிக்கெட் தடை!'

தான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் உதவிசெய்யும் இந்திய அரசுக்குக் கைம்மாறு செய்ய, இதற்கு ஒப்புக்கொண்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ). ‛சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அதிகாரி பி.சி.சி.ஐ’ எடுத்த முடிவுக்குத் தலையாட்டின கிளை வாரியங்கள். பாகிஸ்தானில் 'நோ கிரிக்கெட்', ஐ.பி.எல் தொடரில் 'நோ பாகிஸ்தான்' என அடுத்தடுத்த பல அடிகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு. மற்ற அணிகள்கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவதை முற்றிலும் தவிர்த்தது இந்தியா. பாதுகாப்பு மட்டும்தான் காரணமா...?

ப்ரல் 6,2008... இலங்கையின் வெலிவெரியா நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது மனித வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் மாரத்தான் வீரர் கே.ஏ.கருணரத்னேவும் ஒருவர். ஈழப்போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த சமயம் அது. ஆனால், 3 மாதம் கழித்து இலங்கையில் தரையிறங்கியது இந்திய அணி. 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. பாதுகாப்பைப் பற்றி அப்போது எந்த அச்சமும் ஏற்படவில்லையோ...?

சவுரவ் கங்குலி எழுதி கடந்த வாரம் வெளியாகியிருக்கும் 'A Century Is Not Enough' புத்தகத்தில், 'பாகிஸ்தானைவிட இலங்கையில்தான் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இலங்கையில் பதற்றநிலை நிலவியபோதெல்லாம் இந்தியா அவர்களோடு விளையாடிக்கொண்டேதான் இருந்தது. அதே புத்தகத்தில், லாகூரிலுள்ள கவால்மண்டி (Gawalmandi) வீதியில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கொல்கத்தா நண்பர்களுடன் கெபாப் சாப்பிடச் சென்றதையும்... அவரைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள், ஒருநாள் தொடர் வெற்றிக்காக அவரைப் பாராட்டியதையும்... மோட்டார் சைக்கிளில் அவரைத் துரத்தி வந்து ஒரு ரசிகன் வாழ்த்திவிட்டுப் போனதையும் 'நெகிழ்ச்சி'யுடன் குறிப்பிடுகிறார் கங்குலி. ஆம், இந்தியாவும் கிரிக்கெட் உலகமும் பாதுகாப்பற்றதாகக் கருதும் நாட்டைப் பற்றி முன்னாள் இந்திய கேப்டன் சொல்லியவை. அவரேதான் இலங்கையில் எப்போதும் இருக்கும் பதற்ற நிலையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அந்த 2009 தீவிராவாதத் தாக்குதலுக்கு முன்பு 8 முதல் 8.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையவில்லை. அதிகரிக்கவே செய்துள்ளது. அமெரிக்கவுடனான அரசியல் பிரச்னைக்குப் பிறகு சுற்றுலாத்துறை பல சட்டதிட்டங்களை மாற்றியதால், 2013-ம் ஆண்டிலிருந்து பயணிகளின் வருகை குறைந்தது. ஆனால், தீவிரவாதம் அவர்களின் வருகையையும் குறைக்கவில்லை. அவர்களை எதுவும் செய்யவும் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் பிரச்னை...!

பி.சி.சி.ஐ உதவியோடு இந்தியா செய்துகொண்டிருக்கும் இந்த மோசமான அரசியல் தொடர்ந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் மட்டுமல்ல, கிரிக்கெட்டே விரைவில் பாதாளம் காணும். ட்ரம்ப் செய்யும் அரசியலுக்கும் இதற்கும் வேறுபாடுகள் இல்லை. விளையாட்டு ஒரு கலை. அதில் அரசியல் இருப்பது பரவாயில்லை. ஆனால், ஊறிப்போய்க்கிடப்பது பெரிய அவலம். அவமானம்!