Published:Updated:

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நலம் தரும் நாட்டுக்காய்கள்
பிரீமியம் ஸ்டோரி
நலம் தரும் நாட்டுக்காய்கள்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

Published:Updated:
நலம் தரும் நாட்டுக்காய்கள்
பிரீமியம் ஸ்டோரி
நலம் தரும் நாட்டுக்காய்கள்
நலம் தரும் நாட்டுக்காய்கள்

வெளிநாட்டு மோகம் நமக்கு ரொம்பவே அதிகம். அது வாசனைத் திரவியமோ, மின்சாதனப் பொருட்களோ, ஃபாரின் தயாரிப்பு என்றால் பெஸ்ட் என்ற எண்ணம் நம் மனதில் இருக்கிறது. மொழி, வாகனம், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களை விட்டுவைக்காத வெளிநாட்டு மோகம் உணவுப் பொருட்களை மட்டும் விட்டுவிடுமா?

இன்று வெளிநாட்டுக் காய்கறிகள், பழங்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. எது வெளிநாட்டுக் காய்கறி என்றே தெரியாத அளவுக்கு, அவை நம் உணவுகளில் ஒன்றாகிவிட்டன.

நம் ஊரில் உள்ள காய்கறி, பழங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. மிகக் குறைந்த விலையில், ஃப்ரெஷ்ஷான, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தவிர்த்துவிட்டு, புரோகோலி, டிராகன் ஃப்ரூட், கிவி என்று வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நலம் தரும் நாட்டுக்காய்கள்

இயற்கை அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை, சூழலுக்கு ஏற்ப காய்கறி, பழங்களை அளிக்கிறது. தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில், வெயிலைச் சமாளிக்க, உடலில் நீர்ச்சத்து சமநிலையைக் காக்க, தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, முலாம் பழம், புடலங்காய், பீர்க்கங்காய் என விளைகின்றன. இவை தாகத்தைத் தீர்க்கும். வெயிலைச் சமாளிக்க, உடலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். அத்துடன், இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் முதல் தொற்றுநோய்கள் வரை வராமல் காக்கும்.

எங்கேயோ, எப்போதோ விளைந்த ஆப்பிள் மாதக் கணக்கில் கோல்ட் ஸ்டோரேஜ் ரூமில் பாதுகாக்கப்பட்டு, மெழுகு பூசப்பட்டு, கலர் துணிகளில் அழகாக பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பொதுவாக, காய்கறியோ, பழமோ பறித்த ஓரிரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். நாளாக ஆக, அதில் உள்ள சத்துக்கள் போய்விடும். இந்தக் காய்கறி, பழங்களோ வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பதப்படுத்தப்பட்டு வருகின்றன.

நம் ஊரில் கிடைப்பதைவிட இறக்குமதி செய்யும் காய்கனிகளில் சத்துக்கள் அதிகம் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல. தாய்லாந்தின் டிராகன் பழத்தைவிட, நம் ஊர் சீதாப்பழத்தில் புற்றுநோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கேரட்டில் உள்ள சத்துக்கள் அவரைக்காயிலேயே உள்ளன. நம் ஊர் முழு நெல்லிக்காயைச் சாப்பிட்டாலே, ஐந்து ஆப்பிள் பழங்களுக்குச் சமம். ஆப்பிள் பழத்தின் சத்துகளைப் பெற, நெல்லிக்காயும் கொய்யாவுமே போதும். இறக்குமதி காய்கனிகளைச் சுவைப்பது தவறு இல்லை. ஆனால், அதுவே நம் அன்றாடப் பழக்கத்தில் வந்துவிடக் கூடாது. ​

விலை, தோற்றம், அழகு, நிறம் போன்றவற்றை மனதில் வைத்து உணவை உண்ணாமல், ஆரோக்கியத்துக்காக உணவு உண்ணத் தயாராவதே புத்திசாலித்தனம்.​

நலம் தரும் நாட்டுக்காய்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய், ஞாபக மறதியைத் தீர்க்க, வெண்டைக்காய், ரத்தசோகை உள்ளவர்களுக்கு அவரைக்காய், அசைவம் சாப்பிடாதோருக்கு முருங்கைக்காய் என நம் நாட்டுக்காய்கறி, பழங்களுமே இயற்கை டாக்டர்தான். காலங்காலமாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட உணவுகள்தான் நம் உடலுக்குப் பொருந்தும். இவற்றைச் சாப்பிடும்போதுதான், இந்தச் சூழலில் வாழும் நமக்கான சத்துக்கள் கிடைக்கப் பெற்று, ஆரோக்கியமாக வாழ முடியும்.

இறக்குமதி காய்கறி, பழங்களைப் பற்றி அரச்சலூர் செல்வம் சொல்ல, அயல்நாட்டுக் காய், கனிகளைச் சாப்பிடலாமா என்று விளக்கமளிக்கிறார், சித்த மருத்துவர் வேலாயுதம். மேலும், நம் ஊர் காய்,கனிகளின் பலன்கள் பற்றி விளக்குகிறார், சித்த மருத்துவர் உலகநாதன்.

அயல்நாட்டுக் காய்கறி, பழங்கள் சாப்பிடலாமா?

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வெளி நாட்டுக் காய்கறிகளை சாப்பிடவே கூடாது என்று இல்லை. இதுவே, தொடர்ச்சியான உணவுப் பழக்கமாக மாறிவிடக் கூடாது.

பொதுவாக, மார்க்கெட்டில் புதிதாகப் பழமோ, காயோ வந்தால், உடனே வாங்கிவிடக் கூடாது. அவை எங்கிருந்து வருகின்றன... சாப்பிடலாமா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரிந்துகொண்ட பிறகு சாப்பிடலாம்.

வெளிநாட்டுக் காய்கறி, பழங்களை எப்போதாவது சுவைக்கலாமே தவிர, நம் உணவுத் தட்டில் நாள்தோறும் சாப்பிடுவதற்கான இடத்தைத் தந்துவிடக் கூடாது.

வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் விலை அதிகமானவை. உள்ளூர் காய்கறி, பழங்கள் விலை குறைவானவை; அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.

நம் பாரம்பரிய உணவில் கோதுமை இல்லை. அரிசியை எப்போதாவதுதான் சேர்த்துக்கொண்டனர். முக்கிய உணவுப் பொருளாக, சிறுதானியங்கள்தான் இருந்தன.

சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய அருந்தானியங்களையும், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் என ஊர் காய் மற்றும் கனிகளையும் சாப்பிட்டுவருவதே ஆரோக்கியமான வழிமுறை.

நம் வட்டாரத்தில் விளையும் உணவுகளைச் சாப்பிடும்போது, உடலுக்கு வரும் நோய்கள் தவிர்க்கப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருவகால காய்கறிகள், பழங்கள் என்னென்ன?

ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம், வாழைப்பழம். பூவன் பழம், மொந்தன், ரஸ்தாலி, தேன் வாழை, செவ்வாழை, நேந்திரம் போன்ற அனைத்தையும் சுவைக்கலாம்.

ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய்கள், கத்திரி, வெண்டை, தக்காளி. அதாவது இவை 8-9 மாதங்கள் வரை கிடைக்கும்.

எல்லா காலத்திலும் கொடிக் காய்கறிகளைத் சாப்பிடலாம். எந்த உபாதைகளையும் ஏற்படுத்தாது.

சித்திரை, வைகாசி போன்ற இளவேனில் காலத்தில் முள்ளங்கி, பட்டாணி, கீரைகள், பப்பாளி கிடைக்கும்.

கோடை காலத்தில், மாம்பழம், தர்பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், முலாம் பழம், வெள்ளரி, கிர்ணி, நுங்கு, பாகற்காய் கிடைக்கும்.

முன்பனி காலத்தில் பீட்ருட், முட்டைக்கோஸ், கத்திரி, காலிஃபிளவர், தக்காளி, கொய்யா, மாதுளை கிடைக்கும்.

பனிக் காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு, கேரட், கீரைகள் கிடைக்கும்.

நலம் தரும் நாட்டுக்காய்கள்

தவிர்க்க வேண்டியவை

கொட்டைகள், விதைகள் இல்லாத பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது.

விதைகள் இல்லாத பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, பப்பாளி, தர்பூசணி ஆகியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இவை, மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு உகந்தவை அல்ல.

திட்டுத் திட்டாக கறுப்பு நிறத்தில் பழத்தின் தோலில் புள்ளிகள் இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. சீஸன் இல்லாத நேரத்தில் விற்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

நாட்டுக்காய்கறிகள்

கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.

நாட்டுப்பழங்கள் எவை?

கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள்.
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வெளிநாட்டுக் காய்கறிகள், பழங்கள்

நம்முடைய அன்றாடச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை தக்காளி, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு. கடற்கரைக்கு பூங்காவுக்குச் சென்றால் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத்தீனி மக்காச்சோளம். இவை எல்லாம் நம் பாராம்பரிய உணவுகள் இல்லை என்றால் நம்புவீர்களா?

ஆம், இவை அனைத்தும் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இங்கே அறிமுகம் செய்யப்பட்டன.

தக்காளியை 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள்தான் அறிமுகம் செய்தனர். இன்று உலகில் அதிக அளவில் தக்காளியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது.
 மிளகாயும் அப்படித்தான் வந்தது. இதற்கு முன்பு நாம் புளிப்பு, காரம் சுவைக்கு எதைப் பயன்படுத்தினோம் என்ற சந்தேகம் எழலாம். புளிப்புக்குப் புளி, எலுமிச்சை. காரத்துக்கு மிளகு பயன்படுத்தினோம். ஆரோக்கியமான மிளகை ஏற்றுமதி செய்துவிட்டு, பச்சைமிளகாய்க்கு மாறிவிட்டோம்.

இந்த வெளிநாட்டுக் காய்கறி பழங்களில் ஊட்டச்சத்துக் குறை ஒன்றும் இல்லை. இறக்குமதி செய்து பயன்படுத்தும்போது, சீக்கிரம் கெட்டுப்போகக்கூடாது, அழுகக் கூடாது என்பதற்காக சில ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். கேரட், காலிஃபிளவர் போன்றவற்றைப் பூச்சி மருந்தில் முக்கியே அனுப்புகின்றனர். ஆப்பிளில் மெழுகு பூசப்படுகிறது. இவற்றின் விலையும் மிக அதிகம்

மஞ்சள் தர்பூசணி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

தர்பூசணி வந்தாலே கோடை வந்துவிட்டது என அர்த்தம். கோடைக்கான சிறந்த பழம் என்பதால், இதனைத் தண்ணீர் பழம் என்றும் சொல்வார்கள்.

இன்று, சிவப்புத் தர்பூசணி மஞ்சள் தர்பூசணி என இரண்டு வண்ணங்கள் சந்தையில் உள்ளன.

சிவப்புத் தர்பூசணியில் அதன் சிவப்பை அதிகரிக்க சிலர் சாயத்தைக் கலந்தனர். இப்போது, பழமே மஞ்சள் நிறத்தில் காய்க்க, கார்ப்பரேட் விதை கம்பெனிகள் புதுரக விதைகளை உற்பத்தி செய்கின்றனர்.

இயற்கையான, இயல்பானமுறையில் விளையக் கூடிய தர்பூசணிப் பழத்தைச் சாப்பிடுவதே நல்லது.

சாத்தியம்  உள்ள அத்தனை பேரும் வீட்டில் தர்பூசணி விதைகளைத் தூவி வளர்க்கலாம்.

மோரீஸ் வாழைப்பழம்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நம் ஊர் பச்சைப் பழம், தேன் வாழைக்கும், ரஸ்தாலிக்கும் இணையானது இல்லை இந்த கேவன்டீஷ் பழம்.

மரபணு மாற்ற பழத்துக்கு முக்கிய எடுத்துக்காட்டு இது.

சந்தையில் ஒரே அளவில், ஒரே நிறத்தல் சீரான மஞ்சள் நிறத்துடன் இருக்கவே இப்படி ரகங்களை மாற்றி அமைக்கின்றனர்.

டிராகன் ஃப்ரூட்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

தாய்லாந்துப் பழம் இது.

சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் கண்களைக் கவரும் டிராகன் ஃப்ரூட் தற்போது அதிகமாக விற்கப்படுகின்றன.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

புற ஊதாக் கதிர்வீச்சின் பாதிப்பைத் தடுக்கிறது.

முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவைக் குறைக்கிறது.

கொய்யா, மாதுளை, அன்னாசியைச் சாப்பிட்டுவந்தாலே, இதில் உள்ள சத்துக்கள் கிடைத்துவிடும்.

அவகேடோ (வெண்ணெய் பழம்)

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவகேடோ, தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

அதிக கலோரிகள் கொண்டுள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்போருக்குச் சிறந்தத் தேர்வு.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வாழையைவிட அதிக பொட்டாசியம் கொண்டது.

கொலஸ்ட்ரால், டிரைகிளைசரைட் அளவைக் குறைக்கும்.

கர்ப்பப்பையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

கிவி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

சீனாவிலிருந்து வருகிறது கிவி.

சற்று புளிப்புச் சுவைகொண்ட பழம் என்பதால், சாலட் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம், கூந்தலுக்கு நல்லது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

டி.என்ஏ சிதைவுகளில் இருந்து காக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.

தக்காளி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும்.

உடல் எடை குறைய உதவும்.

ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.

பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது.

சருமம் பொலிவு பெறும்.

வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

வெள்ளரி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வெள்ளரியில் ஹைபிரிட் வகைகள் வந்துவிட்டதால், வருடம் முழுக்க வெள்ளரிக்காய் கிடைக்கிறது.

கோடைக்கு உரிய காய்தான் வெள்ளரி.

பங்குனி, சித்திரை, வைகாசி அதாவது மார்ச் முதல் ஜூன் வரையில் விளையும் பயிர்தான் வெள்ளரி. இயல்பான நாட்டு வெள்ளரி என்பது இதுதான்.

இது உடலுக்கு உகந்தது. இதைச் சாப்பிட்டுவர, சத்துக்கள் போதிய அளவில் கிடைக்கும்.

சீசன் இல்லாத சமயங்களில் வரும் அடர்பச்சை வெள்ளரியைத் தவிர்த்து, நாட்டுவெள்ளரியைச் சாப்பிடலாம்.

முள்ளங்கி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

முள்+அங்கி - நோய்களில் இருந்து முள் அங்கி போல இருந்து காப்பதால்  முள்ளங்கி என்கிறோம்.

யாருக்கு ஒத்துக்கொள்கிறதோ அவர்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

முள்ளங்கி சாப்பிட்ட பின் மூக்கில் தண்ணீர் வருவது, சளி பிடிப்பது போன்ற உணர்வு இருந்தால், நுரையீரலில் உள்ள கழிவை வெளியேற்றுகிறது என்று அர்த்தம். இதை, முள்ளங்கி அலர்ஜி என எடுத்துக்கொள்ள கூடாது.

வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை உள்ளன.

சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

சிறுநீரகக் கற்கள் உருவாகாது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.

மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

ரத்தத்தில் உள்ள பிலுருபினை  சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

வெண்புள்ளிகள் நோயின் தீவிரத்தை குறைக்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

உருளைக்கிழங்கு

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

செரடோனின், டோபோமைன் உள்ளதால், மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

தீக்காயங்களைச் சரிசெய்யும்.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.

மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை கூடும்.

செரிமான சக்திக்கு உதவும்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

மூளை செல்களைத் தூண்டி, புத்துயிர் பெறச் செய்யும்.

அதிகமாக வியர்ப்பவர்கள் அவசியம் சாப்பிட நல்லது.

உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று, ஸ்கர்வி நோய்கள் சரியாகும்.

பீட்ரூட்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

பீட்டாசயனின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும்.

கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள நைட்ரிக் அமிலம்  ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மறதி நோயைத் தவிர்க்கும்.

கேரட்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.

பார்வைத்திறனை அதிகரிக்கும்; கொழுப்பைக் கரைக்கும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

எலும்பு, பற்களுக்கு நல்லது.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சருமப் பொலிவு மேம்படும்.

வயிற்றுப்புண்கள் குணமாகும்.

செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

நுரையீரல், ப்ராஸ்டேட், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.

காலிஃபிளவர்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.

ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

வயிற்று உபாதைகளைச் சரிசெய்யும்.

தசை வளர்ச்சிக்கு உதவும்.

நினைவுத்திறனை அதிகரிக்கும்.

எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்தும்.

சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.

பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், நாட்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.

புரோகோலி

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.

கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இளநரையைத் தடுக்கும்.

மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமரைத் தடுக்கும்.

ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

இதில் உள்ள சத்துக்கள், வெண்பூசணியில் உள்ளதால், புரோகோலியை விரும்பாதோர் வெண்பூசனியைச் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.

சரும நோய்கள் இருப்போர், முட்டைக்கோஸ் சூப் சாப்பிட நச்சுகள் வெளியேறும்.

கை, கால் நடுக்கம் சரியாகும்.

நரம்புத்தளர்ச்சி பிரச்னை சரியாகும்.

வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளன.

பர்பிள் முட்டைக்கோஸ்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

கிட்டத்தட்ட பீட்ரூட் நிறத்தில் இருக்கும் முட்டைக்கோஸ் இது. இதில் உள்ள ஊதா நிறம், பைடோநியூட்ரியன்ட்ஸ் சத்துக்களைத் தருகிறது.

ரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

முட்டைக்கோஸ் பிரியர்கள், நம்மூரில் விளையும் முட்டைக்கோஸைச் சாப்பிடுவதே நல்லது.

நாட்டுக்காய்கறிகள்

பாகற்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

வயிற்றில் உள்ள பூச்சிக்களை அழித்து வெளியேற்றும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சரும நோய்களைக் குணமாக்கும்.

மாரடைப்பைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கொழுப்பைப் படியவிடாது.

தொற்றுநோய்களைப் போக்கும்.

பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

பரங்கிக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நார்ச்சத்து நிறைந்தது. செரிமானத் திறனை மேம்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்.

தசைகள் வலுவாகும்.

குடல் புண்களைச் சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவடையும்.

இதய நோய்களைத் தடுக்கும்.

நல்ல உறக்கத்தைத் தரும்.

கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.

வெண்டைக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

ஃபோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்கும்.

வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறனை அதிகரிக்கும்.

ரத்தசோகையைத் தடுக்கும்.

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தும்.

ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

முருங்கைக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும்.

குறைந்தது, 300 நோய்களைத் தடுக்கக்கூடிய சக்தி முருங்கைக்கு உண்டு.

சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம்.

மீனில் உள்ள சத்துக்கள் முருங்கையிலும் உள்ளது.

கேரட்டைவிட 14 மடங்கு சத்துக்கள் முருங்கையில் உள்ளன.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கத்திரிக்காய

நலம் தரும் நாட்டுக்காய்கள்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும்.

பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும்.

புற்றுநோய் வராமல் காக்கும்.

இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தைச் சமன்படுத்தும்.

மூளைச் செல்களைப் பாதுகாக்கும்.

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

அவரைக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

கேரட்டில் இருப்பது போல பீட்டாகரோட்டின் அவரைக்காயிலும் உள்ளது. மேலும், வைட்டமின்கள் ஏ, சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன.

இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.

புதிய செல்கள் உருவாக உதவும்.

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும்; சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் தீரும்.

கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்கள் கிடைக்கின்றன.

வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் காக்கும்.

கொத்தவரங்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.

உடலில் ரத்த உற்பத்தி சீராகும்.

உடலுக்குத் தேவையான உயிர்சக்தி கிடைக்கும்.

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சீர்செய்யும்.

கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகள் உறுதியாகும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மனஅழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

பீர்க்கங்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

வைட்டமின் சி, தயமின், ரிபோஃபிளேவின், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

ஃபிளேவனாய்டு, ஃபீனாலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

இந்தக் காயில் உள்ள சத்துக்கள் மூளை செல்கள், திசுக்களைப் பாதுகாக்கும்.

இதன் சாறு இ-கோலி, பி சப்டிலிஸ் (B. Subtilis) போன்ற கிருமிகளை அழிக்கும்.

சீஸனல் அலர்ஜிக்கு, இந்தக் காயை 48 நாட்கள் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

குடியால் பாதித்த கல்லீரலைப் பலப்படுத்தும்.

மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காயைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள செல்லுலோஸ் சத்துக்கள், மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

சுரைக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்கும்.

கோடை காலத்தில் சாப்பிட்டால்,  சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்து, மலச்சிக்கல் சரியாகும்.

அசிடிட்டி, செரிமானப் பிரச்னை, அல்சர்  ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வு.

இதில், 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

தயமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

பற்சொத்தை, பற்கள் பாதிப்பைத் தடுக்க உதவும்.

கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் பாதிப்பைக் குறைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்தும்.

கோவைக்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

நார்ச்சத்து நிறைந்தது; செரிமானத்துக்கு ஏற்றது.

மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ, சி, பி1, பி2 நிறைந்துள்ளன.

சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கும்.

தொழுநோய், ஸ்கர்வி, சொரியாசிஸ் பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

இதன் சாறு, சருமத்தைப் பளபளப்பாக்கும். நீர்ச்சத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும்.

ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

இதயப் படபடப்பு, மன அழுத்தப் பாதிப்புகளைக் குணப்படுத்தும்.

வயிறு தொடர்பான புண்களை சரிசெய்யும்.

புடலங்காய்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடையைக் குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன

படபடப்பு உணர்வு குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும்.

வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.

சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும்.

அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு.

வெங்காயம்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

ஆன்டிசெப்டிக், ஆன்டிபயாடிக், ஆன்டி மைக்ரோபயல் தன்மை கொண்டிருப்பதால்,  தொற்றுக்கள் வராமல் காக்கும்.

பற்சிதைவைப் போக்கும்.

சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

வறண்ட தொண்டை, இருமலைச் சரிசெய்யும்.

எலும்பு மெலிதலைத் தடுக்கும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

மாதவிலக்கை சீராக்கும்.

வெங்காயத்தில் உள்ள குரோமியம், ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

கந்தகம், தோல் நோய்களைத் தடுக்கும்.

வாழைப்பூ

நலம் தரும் நாட்டுக்காய்கள்

இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைக் குணமாக்கும்.

அல்சர் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மக்னீசியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும்.

கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வாழைத்தண்டு

நலம் தரும் நாட்டுக்காய்கள்

சிறுநீரகக் கற்களை வெளியேற்றும். மீண்டும் கற்கள் சேராமல் தடுக்கும்.

சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். தேவையற்ற நீரை வெளியேற்றும்.

தொடர்ந்து சாப்பிடக் கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும். ஜுஸாகக் குடிப்பது நல்லது.

பித்தப்பையில் உள்ள கற்களை வெளியேற்றும்.

- ப்ரீத்தி

படங்கள்: ப.சரவணகுமார், மீ.நிவேதன்

நலம் தரும் நாட்டுக்காய்கள்

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.