Published:Updated:

“பாம்புப் பிடிக்க காசு கேட்கமாட்டேன்... ஆனா இப்ப என் பையனுக்குத் தேவைப்படுதே!” - கோவை ‘ஸ்னேக்’ அமீனின் சோகம்

“பாம்புப் பிடிக்க காசு கேட்கமாட்டேன்... ஆனா இப்ப என் பையனுக்குத் தேவைப்படுதே!” - கோவை ‘ஸ்னேக்’ அமீனின் சோகம்
“பாம்புப் பிடிக்க காசு கேட்கமாட்டேன்... ஆனா இப்ப என் பையனுக்குத் தேவைப்படுதே!” - கோவை ‘ஸ்னேக்’ அமீனின் சோகம்

“பாம்புப் பிடிக்க காசு கேட்கமாட்டேன்... ஆனா இப்ப என் பையனுக்குத் தேவைப்படுதே!” - கோவை ‘ஸ்னேக்’ அமீனின் சோகம்

பாம்பு என்றால் படையும் நடங்கும் என்பார்கள். ஆனால், இவர் எந்த வகை பாம்பைக் கண்டும் நடுங்க மாட்டார். சாரை முதல் ராஜநாகம் வரை அனைத்தும் இவரின் கைகளில் விளையாடும். பாம்புகள் மீது அதீத அன்பு காட்டக் கூடியவர். அதனால்தான், தங்கப்பட்டறையில் வேலையை விட்டு விட்டு பாம்புப் பிடிக்கும் பணிக்கு வந்தார். கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாம்பு பிடிக்க வேண்டும் என்றால், முதல் அழைப்பு அவருக்குத்தான் செல்லும். வனத்துறைக்கும் உற்ற நண்பன். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அமீன். ஆனால், ‘ஸ்னேக் அமீன்’ என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அமீன். 38 வயது. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். பாம்புப் பிடிப்பது, உடும்பு பிடிப்பது, வனத்துறைக்கு உதவுவது என்று சின்னச் சின்ன வேலைகள் பார்த்து பிழைப்பு நடத்தி வருபவர். பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. பெரிய அளவுக்குச் செலவும் இல்லை. இதனால், சற்றே சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தார் அமீன்.

இந்நிலையில், அவரின் வாழ்வில் பேரிடியாக நடந்து முடிந்துள்ளது அந்தச் சம்பவம். அமீனின் மகன் முஸ்தாக் அகமது. தந்தையைப் போலவே சுறுசுறுப்பான சிறுவன். மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது முஸ்தாக்குக்கு அடிபட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளின் படியை ஏறிவிட்டார். ஆனால், முஸ்தாக்குக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. முஸ்தாக்கின் இமைகள் மூடியபடியே இருக்கின்றன. அவரின் இமைகள் திறக்க வேண்டும் என்பதற்காக, இமைகள் மூடாமல் உழைத்து வருகிறார் அமீன்.

அமீனிடம் பேசினோம், "முதல்ல நான் தங்கப்பட்டறைல வேலை செஞ்சுட்டு இருந்தேன். அதுக்கப்பறம் சிட்டுக்குருவிகள் மீது ஆர்வம் வந்துச்சு. ஒரு கட்டத்துல பாம்புங்க மீது என் கவனம் திரும்பிச்சு. அவற்றை மீட்டு வனப்பகுதில விடுறதுல ஆர்வம் வந்துச்சு. காரணம், பாம்புகளை மீட்கறேன் என்ற பேரில், சிலர் மக்களை பயமுறுத்தி சம்பாதித்துக் கொண்டிருந்தனர். என் வீட்டுப் பக்கத்துலயே, ஒருத்தர் பாம்புப் பிடிக்க 2,000 ரூபாய் வரை கேட்பார். காசு கொடுக்காட்டி, பிடிச்ச பாம்ப திருப்பி உள்ள விட்டுட்டு போய்டுவார். சரி நமக்கும் பிடிச்ச வேலை. மக்களுக்கும் உதவியா இருக்கும்னு இந்த வேலைக்கு வந்தேன். 18 வருஷம் ஆச்சு. ஒரே ஒரு தடவை நாகப்பாம்புக் கிட்ட கடி வாங்கிருக்கேன்.

முஸ்தாக்

இவ்ளோ கொடுங்க... அவ்ளோ கொடுங்கனு கேட்கமாட்டேன். அவங்களா பார்த்து கொடுக்கறத வாங்கிப்பேன். விஷப்பாம்புகள, வனப்பகுதிக்குள்ள விடறதற்கு மட்டும் பெட்ரோல் சார்ஜ் கேட்பேன். இதைத்தவிர லவ் பேர்ட்ஸ் கூண்டு அடிக்கறது, வனத்துறைக்கு உதவறதுனு  கிடைக்கற வேலைங்கள செய்வேன்” என்றவரிடம் அவரின் குடும்பம் குறித்து பேச்சுக் கொடுத்தோம்.

“லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு. மூத்தவன் பெயர் முஸ்தாக் அகமது (அமீனின் குரல் உடைகிறது). 3-ம் வகுப்பு படிச்சுட்டு இருந்தான். கொஞ்ச நாளுக்கு முன்னாடி, ஸ்கூல்ல விளையாண்டுக்கிட்டு இருந்தப்ப கீழ விழுந்துருக்கான். இது எங்களுக்குத் தெரியாது. அதுக்கப்பறம், வீட்ல அவன் தம்பி கூட விளையாடறப்ப திருப்பியும் விழுந்துருக்கான். அன்னிக்கு நைட் அவனுக்கு ஃபிக்ஸ் வந்துச்சு. பதறியடிச்சு ஜி.ஹெச்சுக்குப் போய் ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம்.

மூளைக்குப் போற நரம்பு பாதிக்கப்பட்ருக்குனு சொன்னாங்க. ஆபரேஷன் பண்ணோம். சுயநினைவு வரல. ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல திருப்பி ஆபரேஷன் பண்ணோம். எப்ப வேணாலும் நினைவு திரும்பும்னு சொன்னாங்க. இன்னும் நினைவு வரல. அப்பப்ப கண் திறந்து பார்ப்பார். இனிப்புப் பதார்த்தங்கள் மட்டும் சாப்பிடுவார். வேற எதுவும் உள்ள போக மாட்டிங்குது. சமீபத்துல, லைட்டா சிரிச்சார்.

முஸ்தாக்கோட ட்ரீட்மென்ட்க்கே மாசம் 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. ஆனா, எனக்கு மொத்தமாவே, மாசம் 10 ஆயிரத்துக்குள்ளதான் வருமானம் வருது. இதைதவிர வீட்டு வாடகை, சாப்பாடு, பசங்க படிப்புனு இருக்கு. ரொம்ப இக்கட்டான சூழ்நிலைதான். இதே கோவைல எத்தனையோ வி.ஐ.பிங்க வீட்ல எல்லாப் பாம்பு பிடிச்சுக் கொடுத்துருக்கேன். அவங்களுக்கு, நான் இப்போ இருக்கற நிலைமை நல்லாவேதெரியும். சிலர்கிட்ட உதவியும் கேட்டுப் பார்த்தேன். பெருசா உதவிப் பண்ணல. ஆனா, சில நல்ல உள்ளங்கள், அவங்கனால முடிஞ்ச உதவிய செஞ்சுட்டு இருக்காங்க. எப்படியும் கொஞ்ச நாள்ல பையன் நார்மல் ஆகிடுவான்கற நம்பிக்கைல ஓடிட்டு இருக்கேன்” என்றார் நம்பிக்கையும் சோகமும் கலந்த குரலில்.

முஸ்தாக் மீண்டு வருவான் அமீன்!

அடுத்த கட்டுரைக்கு