Published:Updated:

"2019-க்குள்ள 100-வது மாரத்தானை ஓடி முடிச்சிடுவேன்...’’ - ஃபிட்னெஸ்ஸில் அசத்தும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ!

"2019-க்குள்ள 100-வது மாரத்தானை ஓடி முடிச்சிடுவேன்...’’ - ஃபிட்னெஸ்ஸில் அசத்தும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ!
"2019-க்குள்ள 100-வது மாரத்தானை ஓடி முடிச்சிடுவேன்...’’ - ஃபிட்னெஸ்ஸில் அசத்தும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ!

மா.சுப்பிரமணியன்! சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும்கூட. `எப்போதும் பம்பரம்போல் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்’ என்று கட்சிக்காரர்கள் மத்தியிலும், மற்றவர்களிடமும் பெயரெடுத்தவர். சென்னை மாநகராட்சி மேயராக இருந்த காலத்தில், இவருடைய செயல்பாடுகள் கவனம் பெற்றன. `இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே..!’ என்கிறீர்களா? இவருக்கு இன்னொரு முக்கியமான அடையாளமும் இருக்கிறது. 20 வருடங்கள் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்தும், மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பல கிலோமீட்டர்கள் ஓடி உலகளவில் சாதனைபுரிந்தவர்களில் இவரும் ஒருவர். சர்க்கரைநோய் பாதிப்பு மட்டுமல்ல... 2004-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், `இனி இவர் நடப்பதே சிரமம்’ என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்... அதையும் தகர்த்து, எத்தனையோ பதக்கங்களுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரராக வலம்வருகிறார் சுப்பிரமணியன்... தன்னுடைய 58 வயதில்!

`வயது அதிகமாக அதிகமாக, செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும்; சோர்வு ஏற்படும்’ என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவும் சர்க்கரை நோயாளி என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அவற்றுக்கெல்லாம் நேர் மாறாக இருக்கிறார் சுப்பிரமணியன். இந்திய அளவில், ஆசிய அளவில், உலகளவில் என இவரின் சாதனைப்பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. இதுவரை 75 மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். 2019-ம் ஆண்டு ஜனவரிக்குள் 100 போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது இவருடைய லட்சியம்.

இது போக, இருக்கவே இருக்கிறது பரபரப்பான அரசியல் வேலைகள். அவற்றுக்கு மத்தியில், அவரைச் சந்தித்துப் பேசினோம்...

"இத்தனை சாதனைகள் உங்களுக்கு எப்படிச் சாத்தியமாகின? உங்களுடைய விருதுகள் பயணம் எப்படி, எப்போது ஆரம்பித்தது?"

"எனக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருக்குறது 1995-ம் ஆண்டுதான் தெரியவந்துச்சு. அதுக்கப்புறம்தான் முறையா நடைப்பயிற்சி போக ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட பத்து வருஷம் நடைப்பயிற்சி மட்டும்தான் . 2004-ம் வருஷம் அக்டோபர் மாசம் ஒரு கட்சி விழாவுக்காக மதுரைக்குப் போயிருந்தோம். எங்க கார் மேல ஒரு கன்டெய்னர் லாரி மோதிடுச்சு. அது மிகப் பெரிய விபத்து. என்கூட வந்த என் நண்பர் ஜம்புலிங்கம் ஸ்பாட்லயே இறந்துட்டார். எனக்கு வலது கால் மூட்டு உடைஞ்சு ஆறு துண்டாகிடுச்சு. மருத்துவர்கள், கம்பி போட்டு, காலை ஒட்டவெச்சாங்க. `இனிமே வாழ்நாள் முழுக்க உங்களால சம்மணம் போட்டு உட்கார முடியாது, ஓட முடியாது’னு சொல்லிட்டாங்க.

என்னோட காலைச் சரிபண்றதுக்காக பிசியோதெரபி ட்ரீட்மென்ட் ஆறு மாசம் எடுத்துக்கிட்டேன். ஆனா, அதனால பெரிய மாற்றம் ஏதுவும் ஏற்படலை. அடுத்ததா, யோகா கத்துக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்லயே எல்லா வகை ஆசனங்களையும் செய்ய ஆரம்பிச்சுட்டேன். நான் பத்மாசனம் செய்யிறதைப் பார்த்த என் டாக்டர் ஷாக்காயிட்டார்.

கால் ஓரளவுக்குச் சரியாகிடுச்சு. அடுத்த ஏழெட்டு வருஷங்களுக்கு வாக்கிங், ஜாக்கிங் மட்டும்தான் போயிட்டிருந்தேன். 2013 -ம் வருஷத்துலதான் `சரி ஓடிப் பார்க்கலாம்’னு முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல கொஞ்ச தூரம் ஓடினேன். நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமா ஓடுற தூரத்தை அதிகப்படுத்திக்கிட்டேன்.

முதன்முறையா, 2014-ம் வருஷம் பிப்ரவரியில பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில நண்பர்களோட சேர்ந்து கலந்துக்கிட்டேன். மொத்த தூரம் 21 கி.மீட்டர். என்கூட வந்த நண்பர்கள் எல்லாரும் மூணு மணிநேரத்தைத் தாண்டியும் ஓடிட்டு இருந்தாங்க. நான் வெறும் 2:30 மணி நேரத்துல 21 கி.மீட்டர் தூரத்தை ஓடி முடிச்சுட்டேன்.

இத்தனைக்கும் என்கூட வந்த நண்பர்கள் என்னைவிட 20 வயசு குறைஞ்சவங்க. அப்பத்தான், என்னால முடியும்னு எனக்குள்ளயே ஒரு நம்பிக்கை வர ஆரம்பிச்சது. `இனி எந்த மாரத்தான் போட்டியையும்விடக் கூடாது’னு முடிவு பண்ணி, எங்க போட்டி நடந்தாலும் தேடித்தேடிப் போய் ஓட ஆரம்பிச்சேன்.

இந்திய அளவுல டெல்லி, மும்பை, புனே, சிம்லா, ஹைதராபாத், சென்னை, நெல்லை, கோவை போன்ற மாநகரங்கள்லயும், உலகளவுல லண்டன், கத்தார், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நார்வே போன்ற நாடுகள்லயும் மாரத்தான்ல ஓடியிருக்கேன். ஓட ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல (Feb-2016) 25 போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஓடி முடிச்சேன். இதனால, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல தேசிய அளவிலான சாதனையாளரா என் பேர் வந்துச்சு.

29 போட்டிகள்ல ஓடி முடிச்சதும், `ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல என் பேர் வந்தது. 2017-ம் வருஷம் பிப்ரவரியில 50 மாரத்தான் போட்டிகள்ல ஓடி முடிச்சேன். `வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டி’ (World records university) எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துச்சு. . அப்பவே, 2019-ம் வருஷம் பிப்ரவரிக்குள்ள அதாவது, என் அறுபது வயசுக்குள்ள 100 போட்டிகள்ல ஓடி முடிக்கணும்னு இலக்குவெச்சுக்கிட்டேன். இதுவரை, 75 மாரத்தான் போட்டிகள்ல ஓடிப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். 50 வயசுக்கு மேல இருக்குற ஒருத்தர், சர்க்கரைநோய் இருந்தும், இத்தனை மாரத்தான் போட்டிகள்ல கலந்துகிட்டு ஓடுறதை கௌரவிக்கத்தான் இந்த விருதுகள் எல்லாம்.

உடல் ஆரோக்கியம், அவார்ட்ஸ் இதையெல்லாம் தாண்டி, நான் மாரத்தான்ல ஓடுறதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு. ஒவ்வொரு மாரத்தான் போட்டியையும் ஏதாவது சமூக விழிப்புஉணர்வுக்காகத்தான் நடத்துவாங்க. உதாரணமாக, ரத்ததானம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, புற்றுநோய் விழிப்புஉணர்வு இந்த மாதிரி...

போட்டியின் மூலமா கிடைக்குற வருமானத்தையும் சமூக நோக்கங்களுக்காகத்தான் பயன்படுத்துவாங்க. அதுமட்டுமில்லை, என்னைப் பார்த்துட்டு பலர் மாரத்தான்ல ஓட ஆரம்பிச்சுருக்காங்க. `நீங்கதான் சார் இன்ஸ்பிரேஷன் எங்களுக்கு’ன்னு பல இளைஞர்கள் ஓட ஆரம்பிச்சுட்டாங்க. மாரத்தான்ல ஓடுறதால எனக்கு உடல்நலம் மட்டுமில்லை... மனசும் நிறைவா, தெளிவாயிருக்கு."

``மாரத்தான் போட்டிகள்ல கலந்துக்கிறதுக்காகச் சிறப்புப் பயிற்சிகள் ஏதாவது எடுத்துக்கொள்கிறீர்களா? உடலின் ஃபிட்னெஸ் ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்...’’

" இதுக்காக எந்தச் சிறப்புப் பயிற்சியும் எடுத்துக்கிறது இல்லை. போட்டிக்குப் போறதுக்கு முன்னாடி சாதாரண செக் -அப்கூட செஞ்சுக்க மாட்டேன். வழக்கமா தினமும் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும்தான் செஞ்சிட்டுப் போவேன். நைட் எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலை அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சுடுவேன். குறைஞ்சது பத்து கிலோமீட்டராவது தினமும் ஓடுவேன். காலையிலேயே எங்கேயாவது வெளியூர்ப் பயணம் போகவேண்டி இருந்துச்சுன்னா, புறநகர்ப் பகுதி வரைக்கும் கார்ல போவேன். அங்கேயிருந்து பத்து கிலோமீட்டர் ஓட ஆரம்பிச்சுடுவேன். கார் என் பின்னாலேயே வரும். ஏதாவது தண்ணி இருக்கிற இடமாப் பார்த்து குளிச்சுட்டு, அப்படியே கிளம்பிப் போயிடுவேன். நேரம் கிடைக்கும்போது தவறாம யோகாசனங்கள் செய்வேன். தினமும், வீட்டுலயே உடற்பயிற்சிகளும் செய்வேன்.

சாப்பாட்டு விஷயத்துல எந்தக் கட்டுப்பாடும்வெச்சுக்கறதில்லை. மீனையும் சிக்கனையும்தான் அதிகமா விரும்பிச் சாப்பிடுவேன். வாரத்துல ரெண்டு, மூணு நாள் பழையசோறுகூட சாப்பிடுவேன். பொதுவா சர்க்கரைநோயாளிகள் பழையசோறு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நான் அதைப் பத்திக் கவலைப்படுறது இல்லை. எல்லா வகை ஜூஸும் குடிப்பேன். ஸ்வீட் சாப்பிடுவேன். விருப்பப்படுறதையெல்லாம் சாப்பிடுறேன். ஆனாலும், என்னோட சர்க்கரை அளவு கன்ட்ரோல்லதான் இருக்கு."

"உங்கள் முயற்சிகளுக்கு கட்சியில் வரவேற்பு எப்படி இருக்கிறது? உங்களிடம் உடல்நலம் தொடர்பாக யாராவது ஆலோசனை கேட்கிறார்களா?"

"நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. தினமும் என்கூட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஓடுறதுக்கு வர்றாங்க. மாரத்தான் போட்டிகள்லயும் கலந்துக்குறாங்க."

"உங்கள் பூர்வீகம், குடும்ப உறுப்பினர்கள்..."

"நான் பிறந்தது வாணியம்பாடி பக்கத்துல இருக்குற ஒரு சின்ன கிராமம். ஆனா, சின்ன வயசுலயே சித்தூர் பக்கத்துலயிருக்குற புல்லூர் கிராமத்துல குடியேறிட்டோம். அங்கேதான் ஆரம்பக்கல்வி படிச்சேன். அப்புறமா சென்னைக்குக் குடிவந்தோம்.

அப்பாவுக்கு மீன்பிடிக்கறதுதான் தொழில். இப்போ அப்பா உயிரோட இல்லை. 1997-ம் வருஷம் இறந்துட்டாங்க. அம்மா, நான் மூணாவது படிக்கும்போதே இறந்துட்டாங்க.

என் மனைவி பெயர் காஞ்சனா. ரெண்டு மகன்கள். ஒருத்தர் பேரு இளஞ்செழியன், லண்டன்ல மருத்துவரா இருக்கார். மருகளும் மருத்துவர். ரெண்டு பேரக் குழந்தைங்க, பேரன் பெயர் இன்பன்; பேத்தி மகிழினி. என் இன்னொரு மகன் அன்பழகன். அவர் என்கூடதான் இருக்கார்."

``உங்களின் பொழுதுபோக்குகள்?’’

"மாசத்துல குறைஞ்சது ரெண்டு படமாவது தியேட்டர்ல போய் பார்த்துடுவேன். நான் சிவாஜி ரசிகன். சமூகக் கண்ணோட்டத்தோட வர்ற படங்களை யார் நடிச்சிருந்தாலும் பார்ப்பேன். கடைசியா `அறம்’, `அருவி’ ரெண்டு படமும் பார்த்தேன். ரெண்டுமே அருமையான படங்கள். நெறயா புத்தகங்களும் படிப்பேன்.

"ஃபிட்னெஸ் தொடர்பாக எதிர்காலத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?"

"பெரும்பாலானவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம், மன அழுத்தம்தான். நான் மேயராக இருந்த காலத்தில் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து எத்தனையோபேருக்கு ஏராளமான பயிற்சிகளை வழங்கியிருக்கிறோம். லாரி டிரைவர்கள், ரிப்பன் பில்டிங் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு... எனப் பலதரப்பட்ட மக்களுக்கு நானும், `ஆசனம்’ ஆண்டியப்பனும் இணைந்து ஆசன வகுப்புகள் எடுத்திருக்கிறோம். அப்போதிருந்து தொடர்ந்து பல விஷயங்களைப் பண்ணிட்டுவர்றேன்.

நெறயா இடங்கள்லருந்து இப்போவும் அழைப்பு வருது. அங்கேயெல்லாம் போய் ஓடுறதன் அவசியம், பலன்கள் குறித்தெல்லாம் பேசிட்டுவர்றேன். `ஓடலாம் வாங்க’ன்னு (Come let us run) தமிழ்லயும், ஆங்கிலத்துலயும் புத்தகம் ஒண்ணு எழுதிக்கிட்டு இருக்கேன். 100-வது போட்டி ஓடி முடிச்சதும் புத்தகத்தை வெளியிடலாம்னு இருக்கேன்.’’

சாதாரண குடும்பத்துல பிறந்த நான் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறதுக்குக் காரணம், ஆர்வமும் உழைப்பும்தான். எங்க குடும்பத்துலயே முதல் பட்டதாரி நான்தான். எங்க குடும்பத்துல இருந்து தி.மு.க-வின் முதல் உறுப்பினரும் நான்தான். எந்த வேலையா இருந்தாலும் கஷ்டப்பட்டு செய்ய மாட்டேன். ரொம்ப ஈசியா எடுத்துக்குவேன். இளைஞர்களுக்கும் நான் அதைத்தான் சொல்ல விரும்புறேன்.

`ஓடுறதுக்கும், உடற்பயிற்சி செய்றதுக்கும் நேரமில்லை’னு யாரும் காரணம் சொல்லாதீங்க. கிடைக்கிற நேரத்துல உடற்பயிற்சிக்காகவும் நேரத்தை ஒதுக்குங்க. உடல்நலனுக்கும் கொஞ்சம் அக்கறை காட்டுங்க.’’