Published:Updated:

``என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீா்கள்’’ - இயேசு கிறிஸ்து #LentDays

``என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீா்கள்’’ - இயேசு கிறிஸ்து #LentDays
``என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீா்கள்’’ - இயேசு கிறிஸ்து #LentDays

ன்று (மார்ச் 4) தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இயேசு கிறிஸ்து மக்களுக்காகத் துன்பங்களையும் பாடுகளையும் பட்டு அனுபவித்தார். அவர் சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்த 'பஸ்கா' விழாவின்போது யூதா்களும் ஜெருசலேமுக்குச் செல்வது வழக்கம். 
ஜெருசலேம் ஆலயம், அந்தக் காலத்தில் அதிகார மையமாகத் திகழ்ந்தது. எல்லாத் தரப்பு மக்களும் இறைவனை வழிபடுவதற்கான தலமாகவும் இருந்தது. ஆனால், அங்கிருந்த பிரதான ஆசார்யர்களால் அது ஒரு வணிகக்கூடமாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு இயேசு கடும் சினம் கொள்கிறார்.

இயேசுவின் கோபம், சாதாரணக் கோபம் அல்ல. அது அறம் சார்ந்த கோபம். கடவுள் வாழும் இடத்தில் எப்படி வியாபாரிகள், பணம் மாற்றுவோர், வரி வசூலிப்போர் ஆக்கிரமிப்புச் செய்தனா் என்ற கேள்வியை எழுப்புகிறார். 

அறம் மீறப்படும்போது எழக்கூடிய கோபம் கடுமையாகத்தான் இருக்கும். எனவேதான் சாட்டை ஒன்றை எடுத்து, அங்குள்ளவா்களை அடித்து விரட்டுகிறார். சகலரிடமும் கனிவையும் அன்பையும் மன்னிப்பையும் போதித்தவர் அல்லவா? இயேசுவின் இந்தத் துணிச்சலான, புரட்சிகரமான செயல் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

ஆலயம் அதிகாரமையமா?

யூத சமூகத்தில் பிறந்து வளா்ந்த இயேசு சிறுவயது முதல் ஆலயத்தில் நடைபெறும் சகல காரியங்களையும் உற்றுக் கவனித்துவந்தவர். அப்படிக் கவனித்தபோதுதான் கடவுள் வாழும் ஆலயம் எப்படி மனிதா்களின் அதிகாரமையமாக மாறிவிட்டது என்பதை உணா்ந்து பார்க்கிறார்.

பரிசேயா்கள், சதுசேயா்கள், சட்டம் படித்தோர், மத குருக்கள் என எல்லோரும் அங்கே அமா்ந்து மக்களின் மீது எப்படி அதிகாரத்தைச் செலுத்தலாம் எனத் திட்டமிடுவதில் நேரத்தைச் செலவிட்டனா். 
கடவுளுக்கு ஏற்புடைய அன்பு, இரக்கம், பகிர்வு, மன்னிப்பு ஆகிய மதிப்பீடுகளை நிராகரித்துவிட்டு உலகத்துக்குத் தேவையான பணம், பட்டம், புகழ், அந்தஸ்து, விதிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனா். எனவே, ஆலயம் அதிகாரமையமாக மாறுவதை இயேசு கடுமையாக எதிர்த்தார்.

கடவுள் குடியிருக்கும் ஆலயம் எப்படி லாபம் ஈட்டும் வியாபாரத்தலமாக மாற முடியும்? என்று இயேசு கடிந்துகொள்கிறார். 'என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீா்கள்', என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். ஆலயம் என்பது பரிசுத்தமானது, தூய்மையானது. எல்லாத் தரப்பு மக்களையும் வேறுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கான புனித இடம் அது. அந்த இடத்தை சந்தையாக மாற்றுவதை இயேசு எதிர்க்கிறார். 

ஏழைகளை ஏமாற்றும் தலம்!
ஜெருசலேம் ஆலயத்தில் அமா்ந்திருந்த பணக்காரா்கள், வியாபாரிகள், ஏழைகளை ஏமாற்றுகிற, நிராகரிக்கிற பணியில் ஈடுபட்டிருந்தனா். உதாரணமாகப் பலிபொருள்களைக் கொண்டு வரும் மக்களிடம் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி, மாற்றுப் பொருள்களைக் கொண்டு வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தினா். 

காணிக்கை போடக் கொண்டு வந்திருக்கும் நாணயத்தில் என்ன படம் அச்சிடப்பட்டிருக்கிறது என்று பார்த்து, அதை நிராகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனா். சமாரியா்கள், நோயாளிகள், பிற இனத்தார் வரும்போது அவா்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியில் நின்றுதான் ஜெபிக்க வேண்டும். `பாவிகள்’ என்று முத்திரை குத்தி, அதற்கு 'பரிகாரப் பலி' ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஏழைகளின் மீது சுமையை ஏற்றிவைத்தனா். இவையெல்லாம் இயேசுவிடம் இன்னும் அதிகமான கோபத்தை ஏற்படுத்தியது. 
ஏழைகளை நேசிக்கும் கடவுள் வாழும் இடத்தில், ஏழைகளுக்கு இடமில்லையா என்று வெகுண்டெழுந்த இயேசு சாட்டையை எடுத்து, அங்குள்ளவா்களை அடித்து விரட்டினார்.

இயேசு சாட்டையை எடுத்து வியாபாரிகளை விரட்டும் செயலில் உள்ள நீதியை, நோ்மையை, நியாயத்தைக் கவனிக்காமல் இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று கேள்வி கேட்டனா். உடனே இயேசு ''இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள். அதை மூன்றே நாள்களில் கட்டிவிடுவேன்'' என்று கூறினார். அவா் சொன்னது கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தை அல்ல. 

மாறாக தன்னுடைய ''உடல் என்னும் ஆலயத்தைக் கொன்று போடுங்கள். அதை மூன்று நாள்களில் மீண்டும் கட்டி எழுப்புவேன், உயிர்த்து வருவேன்'' என்று கூறினார். அதாவது உடலுக்கு வேண்டுமானால் சாவு இருக்கலாம். ஆனால், கடவுளின் இறையாட்சியை அமைப்பதற்கான லட்சிய வேட்கைக்கு ஒருபோதும் சாவு இல்லை. அந்த லட்சியம் உயிர்பெற்று மீண்டும் வரும் என்பதை இயேசு உணா்த்துகிறார். சட்டங்களைவிட மனித மாண்பை உயா்த்திப் பிடிப்பவராக இருக்கிறார் இயேசு கிறிஸ்து.