Published:Updated:

'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும்? - அதிர்ச்சித் தகவல் #Aircel

'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும்?  - அதிர்ச்சித் தகவல் #Aircel
'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும்? - அதிர்ச்சித் தகவல் #Aircel

'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும்? - அதிர்ச்சித் தகவல் #Aircel

செல்போன் நிறுவனங்களின் சேவை அறிவிப்புகள் தரும் மகிழ்ச்சியை விட, அவற்றின் திடீர் துண்டிப்பு அறிவிப்பு பல மடங்கு துயரத்தைத் தந்து விடுகிறது. ஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ, யுனினார், ஜியோ, ரிலையன்ஸ் போன்ற ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள்  நாட்டில்  இருக்கின்றன. அந்த வரிசையில், கோடிக்கணக்கான வாடிக்கையாளர் இணைப்பைக் கையில் வைத்திருந்த 'ஏர்செல்' நிறுவனம் மூடப்படுகிறது என்ற தகவல் கடந்த வாரங்களில், பரவியது. ஏர்செல் டவர் பல இடங்களில் கிடைக்காமல் போனதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. அதே வேகத்தில், அந்தத் தகவல், வதந்தி என்ற தகவலும் கூடவே பரவியது. "தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் அப்படியேதான் இருக்கும், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி"  என்று வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பியதால், மக்கள் மீண்டும் ஏர் செல்லுக்கு ரீ- சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். எல்லாம், சில நாள்கள்தான் நீடித்தது."ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் வாங்கிய 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க் கடனை எங்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. எங்கள் நிறுவனம் 'திவால்' ஆனதாக அறிவியுங்கள்" என்று தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், ஏர்செல் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுதான் மக்கள் சுதாரித்துக் கொள்ளக் காரணமாக இருந்தது. மக்கள், வேறு செல்போன் சேவையைத் தேட ஆரம்பித்தனர். தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டர் சர்வீஸாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பதினைந்து ஆண்டு காலமாக ஏர்செல் நெட்வொர்க் சேவையைப் பெற்ற பலர், அந்த எண்ணை திடீரென மாற்றிக்கொள்வது சாத்தியம் இல்லை. தொழில், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கு, அந்த எண்ணே, முகமும்- முகவரியுமாக இருந்துகொண்டிருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

இந்நிலையில் ஏர்செல் கொடுத்த அதிர்ச்சியால் மக்கள் வழக்கம்போல, ஏர்செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, அங்கிருந்து வரும் 'கோட்'  எண்ணைப் பெற காத்துக்கிடந்தனர். அப்படித்  தகவலை அனுப்ப ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் கிடைக்க வேண்டும், ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை. சிக்னலைத் தேடி, பக்கத்து மாவட்டம் வரையில் செல்போனுடன் மக்கள் நகர்கிற நிலைமைதான் ஏற்பட்டது. இதைப்பற்றி அறிய சென்னை அண்ணா சாலையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்தைத் தொலைபேசியில் முயற்சி செய்தேன், நடக்கவில்லை. நேரில் சென்று அங்கிருந்த சேவை (?) நிர்வாகிகளிடம், ஏர்செல் டூ வேறு நிறுவனம் மாறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னேன். "சார், வழக்கம் போல நீங்கள் எப்படி மெசேஜ் அனுப்புவீர்களோ, அப்படியே இப்போதும் அனுப்பினால் போதும். இல்லையென்றால்,  98410 12345 என்ற எண்ணுக்கு போன் செய்து 'ரிங்' கிடைத்து மறுமுனையில் பேசியதும் உங்கள் 'சிம்' கார்டில் உள்ள கடைசி ஐந்து எண்ணைச் சொன்னால், வேறு செல்போன்  சேவைக்கு நீங்கள் மாறிவிடலாம்" என்றனர். 'என்னுடைய பழைய ஏர்செல் எண்ணில், 300 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்து வைத்திருந்தேன், அந்தப் பணம், புதிய செல்போன் சேவைக் கணக்கிற்கு மாற்றப்பட்டு விடுமா?' என்று அப்பாவியாகக் கேட்டேன். "வேறு செல்போன் சேவைக்கு மாறுவது குறித்துப் பதில் சொல்ல மட்டுமே நாங்கள் இருக்கிறோம், மற்ற விவரங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது" என்றனர். 

தமிழ்நாடு அனைத்து செல்ஃபோன்மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர் சங்கத்தின்  தலைவர் எஸ்.விஸ்வநாதன், "ஏர்செல் நிறுவனத்தின் மிகப் பெரிய ஊழல் இது. நாளை, அடுத்த நிறுவனமும் இதே முடிவை எடுக்க இவர்கள் வழிகாட்டி விட்டிருக்கிறார்கள். அரசாங்கமும் மௌனம் சாதிக்கிறது. தமிழக அளவில் இருக்கும் ஒன்றரை லட்சம் வாடிக்கையாளர்களில் பாதி பேருக்கும் மேல் தங்களின் செல்போனில் பேலன்ஸ் தொகையைக் கையில் வைத்திருக்கிறார்கள். அதாவது கஸ்டமர் டாக் டைம் வேல்யூ என்று சொல்லக் கூடிய பேசாமல் விட்ட பேலன்ஸ் தொகை மட்டுமே 15 ஆயிரம் கோடி ரூபாய். மக்களுக்கு அந்தப் பணத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால், அந்தப் பணமெல்லாம் யார் கைக்குப் போகப் போகிறது? எந்தக் கேள்விக்கும், யாரிடமும் பதில் இல்லை. ஒழுங்குமுறை ஆணையமான 'ட்ராய்' இதை எப்படி அனுமதிக்கிறது? செல்போன் கோபுரங்கள் வைத்துக்கொள்ள இடம் கொடுத்தவர்களின் நிலைமை என்ன? எங்களைப் போன்ற வணிகர்களின் கையில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரீ-சார்ஜ் கூப்பனை வைத்திருக்கிறோமே, அதை யார் ஈடு கட்டுவது? 'டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் சாட்ஸ்' மட்டுமே, 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முடக்கப்பட்டு கிடக்கிறதே, இதற்கு வழி என்ன ? ரீ- சார்ஜ் கூப்பன்களைக் குப்பையில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லாமல் சொல்கிற துணிச்சலை, ஒரு தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்தது யார்? ஏர்செல் நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஊழியர்களின் நிலைமை என்ன ? இப்படிக் கேள்விகள் ஏராளம். அத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால், குறைந்த பட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஏர்செல் நிறுவனம் பொதுமேடைக்கு வரவேண்டும். எங்களைப் போன்ற வணிகர்களுக்கு உள்ள பெரிய வருத்தமே, எந்தப் போராளியும் இதற்குக் குரல் கொடுக்கவில்லையே என்பதுதான். வணிகர் சங்கங்களின் பாதுகாவலர் விக்ரமராஜா அவர்களுடன், இதுகுறித்துக் கலந்துபேசியுள்ளோம். அடுத்த இரண்டு நாள்களில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவுள்ளோம். ஏர்செல் நிறுவனத்தின் இந்த மோசடியை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளோம்" என்றார். 

ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய சி.இ.ஓ. பொறுப்பில் உள்ள கே.சங்கர நாராயணன், "அவ்வப்போது நிறுவனத்தின் சூழ்நிலையை மக்களுக்கு ஊடகங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போதைய சூழல் குறித்து எதுவும் சொல்ல முடியவில்லை. இதுபற்றி நாளை பேசுகிறேனே" என்று முடித்துக் கொண்டார்.
 

அடுத்த கட்டுரைக்கு