Published:Updated:

கானகத் தோழன் கண்ணையன் !

கானகத் தோழன் கண்ணையன் !

கானகத் தோழன் கண்ணையன் !

கானகத் தோழன் கண்ணையன் !

Published:Updated:
##~##
தமிழக - கேரள எல்லையில் கோவையை ஒட்டி இருக்கிறது எட்டிமடை சர்வம் மலைத்தொடர். சுமார் 2,000 ஏக்கரில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடரைத் தன் கால்களால் அங்குலம் அங்குலமாக அளந்தவர் கண்ணையன்!

கண்ணையனுக்குக் காடுதான் உலகம். காட்டை ஒட்டி இருக்கும் அறிவொளி நகரில் வசிக்கிறார். ''சின்ன வயசுல இருந்தே எனக்கு மரம் செடிகள்னா உசுரு. காத்து அடிக்கும்போது இலை தழை எல்லாம் அசையறதைப் பாத்தா, என்னை வா வான்னு கூப்பிடற மாதிரி இருக்கும். அப்படித்தான் எனக்கும் செடி கொடி களுக்கும் உறவு தொடங்குச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கானகத் தோழன் கண்ணையன் !

ஒரு முறை வனத் துறை அதிகாரிங்க வந்து, 'இந்தக் காட்டைப் பார்த்துக்குறியா?’னு கேட் டாங்க, உடனே சரின்னுட்டேன். சுதந்திரமா காட்டோட எல்லாப் பகுதிகளிலும் சுத்தத் தொடங்கினேன். காட்டுல அத்துமீறி நுழையுற கும்பலைக் கண்காணிச்சு, வனத் துறைக்குத் தகவல் சொல்றது, காட்டுத் தீ பத்தினா அணைக்குறது, விலங்குகள் அடிபட்டுக் கிடந்தா முதலுதவி கொடுக்குறதுனு பல வேலைகளைச் செஞ்சேன்.

ஆறு மாசம் கழிச்சு வந்த அதிகாரிங்க, 'உனக்கு எம்புட்டு சம்பளம் வேணும்?’னாங்க. சுள்ளி பொறுக்குறது. தேன் எடுக்குறது, கிழங்கு பிடுங்குறதுனு இந்தக் காடு எனக்குச் சோறு போடுது. அப்புறம் எனக்கு எதுக்குக் காசு? எதுவும் வேணாம்னுட்டேன். இங்க இருக்குற ஒவ்வொரு செடியும் மரமும் மிருகமும் என் குழந்தைங்க. மனசு சரி இல்லைன்னா, முதல்ல ஓடி வந்து என் உயிர்த் தோழனா நெனைக்குற பெரு நெல்லி மரத்துக்கிட்டதான் சொல்லுவேன். எனக்கு இன்னொரு தோழன் இருக்கான். அடிக்கடி என் வழியில அவனும் அவன் வழியில நானும் எதிர்ப்படுவோம்.

ஒன்றரைத் தந்தம் மட்டுமே இருக்குற யானை அவன். தூரத்துல என்னைப் பார்த்ததும் அவன் அசையாம நின்னுக்குவான். நானும் நின்னுக்குவேன். பத்து, இருபது அடி வரைக்கும் நேருக்கு நேர் நெருங்கி வருவோம். ஒருத்தர் கண்ணை ஒருத்தர் அசையாம உத்துப் பார்த்துப்போம். நான் சிரிப்பேன். உடனே அவன் தலையையும் காதையும் வேகமா ஆட்டி, காலையும் ஆட்டி சின்னதா ஒரு டான்ஸ் போடுவான். கொஞ்ச நேரத்துல தும்பிக்கையைத் தூக்கி டாட்டா காட்டிட்டுக் கிளம்பிடுவான். நானும் கிளம்பிடுவேன். ஏழு வருஷம் பழகினவன் ரெண்டு வருஷம் முன்னாடி காணலை. வலசை மாறிப் போயிட்டான்னு நெனைக்கிறேன்!

அதேபோல செந்நாய், கரடி, மலைப் பாம்பு, எறும்பு தின்னினு பல விலங்குகள் இங்க இருக்கு. சமயத்துல புலி, சிறுத்தைகள்கூட அம்பட்டு இருக்கு. அதனால எப்ப காட்டுக்குப் போனாலும் கையில கத்தி எடுத்துக்கிட்டுதான் போவேன். ஆனா, இது வரைக்கும் அதுக்கு வேலை வந்தது இல்லை. ஒருமுறை பெருநெல்லி மரத்துக்கூட பேசிக்கிட்டே அசந்து தூங்கிட்டேன். திடீர்னு காலை ஏதோ ஒண்ணு இறுக்குது. மூச்சுத் திணறுது. பதறிப்போய் விழிச்சுப் பார்த்தா, ஒரு மலைப் பாம்பு என் காலை இறுக்கிட்டு தொண்டையைக் கவ்வுது. காலை அசைக்க முடியாத அளவுக்கு இரும்புப்பிடி. உடனே இடுப்புல இருந்து கத்தியை எடுத்து, பாம்பு தலையில குத்தப் போனேன். மனசு வரலை. கத்தியைக் கீழே போட்டுட்டு அப்படியே தரையிலயும் புதர் முள்ளுலேயும் கண்டபடி உருண்டேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பாம்பு பிடியை விட்டுட்டு அதுபாட்டுக்குப் போயிடுச்சு!

கானகத் தோழன் கண்ணையன் !

இப்படி காட்டுக்குள் எத்தனையோ அனுபவங்கள் இருக்கு. எல்லாத்தையும் சொல்ல இந்த ஆயுசு போறாது தம்பி. ஆனா, 10 வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த காடு இல்லை இது. பசுமையா இருந்த இடங்கள்ல எல்லாம் கட்டடங்கள் முளைச்சுடுச்சு. எனக்கும் வயசாகிடுச்சு. காடுகளை அழிக்குற சின்னத் திருடன்களை எல்லாம் என்னால முடிஞ்ச அளவுக்கு விரட்டினேன். ஆனா, இப்போ பெரிய கம்பெனிகள் எல்லாம் அரசாங்கத்து ஆதரவோட காட்டை அழிக்கும்போது இந்தக் கிழவன் என்ன செய்ய முடியும்?'' கண்ணையனின் ஆதங்கக் குரலோடு கலக்கிறது காட்டின் குரலும்!                                                

கட்டுரை, படங்கள்: ம.முரளிதரன்