Published:Updated:

என் ஊர் !

நாலு குன்றுக்கு நடுவே ஒரு கிராமம் !

என் ஊர் !

நாலு குன்றுக்கு நடுவே ஒரு கிராமம் !

Published:Updated:

- என்.சுவாமிநாதன்
படங்கள்: ரா.ராம்குமார்

என் ஊர் !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தமிழக, கேரள எல்லை ஓரத்தில் இருக்குற படந்தாலு மூடு அருகே இருக்குற அம்சிகாகுழிதான் என் ஊர். ஊரைச் சுத்தி நாலு பக்கமும் பெரிய பெரிய குன்றுங்க அம்சமா எந்திருச்சு இருக்கும். நடுவுல குழியில் இருக்குறதால எங்க ஊருக்கு 'அம்சிகாகுழி’னு பேரு வந்துருச்சு'' பெயர்க் காரணம் சொல்லியபடி, தன் ஊர்பற்றி பேசத் தொடங்குகிறார் நடிகர் பாலாசிங்.  

''இன்னைக்கும் எங்க ஊருக்கு பஸ் வசதி கிடையாது. முழு விவசாயக் கிராமம். வீட்டுக்கு வீடு ஆடு, மாடு, கோழி இருக்கும். அதனால ஸ்கூலுக்குக் கிளம்பும்போதே மாட்டுக்குத் தண்ணி காட்டி, வைக்கோல் எடுத்துப் போடுவோம். அதை முடிச்சுட்டு, எல்லாம் ஒண்ணு கூடி கோதா குளத்துக்குக் குளிக்கப் போவோம். தொட்டு விளையாட்டு, கபடி, கிட்டிப்புள்ளுனு காலையிலேயே விளையாட்டுதான். அப்போ யார் கிட்டேயும் கடிகாரம் கிடையாது. வானத்தைப் பார்த்தே நேரத்தைக் கணிச்சு, புத்தகப் பையைத் தூக்கிட்டு ஸ்கூலுக்கு ஓடுவோம்.

என் ஊர் !

அப்போ ஊர் அவ்ளோ செழிப்பா இருந்துச்சு. விளையா டிட்டு வீட்டுக்குப் போனதும் செம்பு நிறையப் பாலை எடுத்துக் குடிப்போம். கோழி, முட்டை போட்ட சூடு ஆறுவதற்குள் உடைச்சுக் குடிச்சிருவோம். சாயங்காலம் ஆனதும் சுக்குக் காபி போட்டு, மரவள்ளிக் கிழங்கை அவிச்சு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிடுவோம். பனை மரங்கள் அதிகம். அதனால காலையில எந்திரிச்சதும் பதநீர்தான் குடிப்போம். ஆனால், இன்னிக்கு இதுல எதுவுமே எங்க ஊர்ல இல்லை. ஊரோட அடையாளமா இருந்த குன்றுகளையும் உடைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நான் எட்டாம் வகுப்பு வரை தையாலுமூட்டில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளியில் படிச்சேன். எங்க ஊர்ல இருந்து மூணு கி.மீ. நடந்தே போகணும்.

முதல்ல போறவன் குறிப்பிட்ட தூரம் போனதும் அதோட அடை யாளமா ஒரு கல்லைவெச்சுட்டுப் போவான். பின்னாடி வர்றவங்க அதைப் பார்த்துட்டு 'ஓகோ... நம்மாளு போயிட்டான்’னு யூகிச்சுக்குவாங்க. கல் இல்லைன்னா பிரச்னைனு அர்த்தம்.

என் ஊர் !

மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் ப்ளஸ் டூ படிச்சேன். அப்பவும் 12 கி.மீ. நடராஜா சர்வீஸ்தான். ஃபுட்பால், ஹாக்கினு புதுப்புது விளையாட்டுகளை மார்த்தாண்டம் ஸ்கூல்லதான் முதன்முதலா பார்த்தேன். 'ஆகாச வாணி’னு ஸ்கூல்ல ரேடியோ பேசுற தைக் கேட்டுட்டு அத்தனை ஆச்சர்யப்பட் டேன். அப்போ மார்த்தாண்டத்துல தேவி டாக்கீஸ்னு ஒரு தியேட்டர் இருந்துச்சு. எங்க ஊரில் இருந்து எவனாவது நாகர்கோவில் போய்ப் படத்தைப் பார்த்துட்டா, ஒரு வாரத்துக்கு அவன்தான் ஹீரோ. அவனைச் சுத்தி கூட்டமா உட்கார்ந்து கதை கேட்போம்.

ஒன்பதாம் கிளாஸ் படிக்குறப்ப, ஸ்கூலைக் கட் அடிச்சுட்டு 'பட்டணத்தில் பூதம்’ படம் பார்த்தேன். வாத்தியாருக்குத் தெரிஞ்சுபோச்சு. 'படத்துல என்னடே பிடிச்சுருந்தது?’னு கேட்டாரு. நான் படக்குனு 'கே.ஆர். விஜயா குளிக்குறது!’னு சொன்னேன். எனக்கும் கூட வந்த ஆறு பேருக்கும் பிரம்படி கிடைச்சுது. இன்னைக்கும் மார்த்தாண்டம் ஸ்கூலைத் தாண்டும் போது எல்லாம் இந்தச் சம்பவம் மனசுக்குள் வந்துபோகும்.

என் ஊர் !

பக்கத்து வாருதட்டுப் பகுதியில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருக்கு. அங்கே 10 நாள் பங்குனித் திருவிழா ரொம்பவே விசேஷம். நாடகம், வில்லுப் பாட்டுனு விடிய விடிய நடக்கும். நாடகத்தில் நடிக்க கேரளாவில் இருந்து டீம் வரும்.

நாடகம் பார்க்க ராத்திரியே பாய் எடுத்துக் கிளம்பிருவேன். ஒரு நாடகத்துல நடிக்க வேண்டிய ஆர்ட்டிஸ்ட் வரலை. அதுக்காக என்னை உப்புக் குச் சப்பாணியா நடிக்கவெச்சாங்க. நான் பின்னி எடுத்துட்டேன். ஊரே கை தட்டுச்சு. அப்புறம் நண்பர்களோட சேர்ந்து ஏழைப் பசங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் டியூஷன் எடுத்து அந்த வருமானத்தில் நாடகம் போட ஆரம்பிச்சோம். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த நடிப்பு உலக வாழ்க்கை. இன்னிக்கு திரை உலகில் எனக்குனு ஒரு இடம் இருக்குன்னா, அதுக்கு என் ஊர்தான் முக்கியமான காரணம்!''