Published:Updated:

சிறந்த அனிமேஷன் படம்தான்... ஆனால், அது பேசும் அரசியல்! #Coco #Oscar90

சிறந்த அனிமேஷன் படம்தான்... ஆனால், அது பேசும் அரசியல்! #Coco #Oscar90
சிறந்த அனிமேஷன் படம்தான்... ஆனால், அது பேசும் அரசியல்! #Coco #Oscar90

சிறந்த அனிமேஷன் படம்தான்... ஆனால், அது பேசும் அரசியல்! #Coco #Oscar90

அவர்களுக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது. டார்லா தன் பக்கத்திலிருந்த தன் மனைவியைக் கட்டியணைத்து விட்டு மேடைக்குப் போனார். "கோகோ" படத்தின் குழு மேடையேறியது. குழுவில் டார்லா மட்டுமே பெண். அவர்தான் குழுவின் தலைவியும் கூட. "கோகோ" படத்தின் தயாரிப்பாளர். மொத்த ஆஸ்கரில் "கோகோ" குழுவின் வெற்றி ஏன் முக்கியம் என்பதை அறிய இந்த மூவர் பேசுவதையும் கொஞ்சம் கவனியுங்கள்:

ஆஸ்கர் மேடையில் "கோகோ" படக்குழு.

டார்லா கே. ஆண்டர்சன் (Darla.K. Anderson) - தயாரிப்பாளர் - பிக்ஸார் ஸ்டூடியோஸ்:

"விருதுக்கு நன்றி. இது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உலகத்தை மாற்றவும், உலகத்தை இணைக்கவும் கலை மிக முக்கியமானது என்பதை கோகோ நிரூபித்துள்ளது. எல்லோரைப் போல் தங்களின் குரலும் இந்த பூமியில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கும் யாருக்கும், எவருக்கும் இங்கு இடம் உண்டு என்பதை உறுதி செய்தால் மட்டுமே இந்த உலகம் சமமாக இருக்கும். என் காதல் மனைவி கொர்ரி ரேவுக்கு இந்த விருதை நான் சம்ர்ப்பிக்கிறேன்." 

ஆட்ரியன் மொலினா (Adrian Molina) - திரைக்கதையாசிரியர்- பாடலாசிரியர்:

"என் குடும்பத்திற்கும் நான் சார்ந்திருக்கும் லத்தீன் சமூகத்துக்கும்...குறிப்பாக என் கணவன் ரியானுக்கும் அன்பும், நன்றிகளும். இவர்கள் தான், நான் நானாக இருப்பதையும், என் சொந்த மண்ணையும் பெருமையாக நினைக்க கற்றுக் கொடுத்தவர்கள். இந்தப் படத்தை நேசித்தவர்கள் அனைவருக்கும் இந்த உணர்வு நிச்சயம் புரியும் என்று நம்புகிறேன்."

லீ உன்க்ரிச் (Lee Unkrich) - இயக்குநர்:

" மெக்ஸிகோ மக்களுக்கு மிகப் பெரிய நன்றி. அவர்களின் அழகான, அன்பான கலாசாரமும், பாரம்பர்யமும் இல்லாமல் கோகோ உருவாகியிருக்காது. கோகோ மூலம் இந்த உலகை ஒரு படி முன் நகர்த்த முயன்றிருக்கிறோம். உலகில் உள்ள குழந்தைகள் தங்கள் வாழ்வில் யதார்த்தமாக பார்க்கும் , பேசும், பழகும் கதாபாத்திரங்களை இதில் பார்ப்பார்கள். விளிம்புநிலை மக்களுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அவர்களுக்கான பிரதிநிதித்துவம் மிக முக்கியம்." 

இந்த மூவரின் பேச்சிலும் இரண்டு முக்கிய அரசியல் இடம்பெற்றிருக்கிறது. ஒன்று,  அமெரிக்காவின் காலடியில் மிதிபட்டுக் கிடக்கும் லத்தின் அமெரிக்க நாட்டு மக்களின் உரிமைக் குரல் குறித்து, அவர்களின் நலன் குறித்து. 

லீ உன்க்ரிச் - டார்லா கே. ஆண்டர்சன்

அமெரிக்காவிற்கும், மெக்ஸிகோவிற்கும் இடையே இருக்கும் 3100 கிமீ எல்லையில், 1600கிமீ தூரத்திற்கு "எல்லைச் சுவர்" அமைக்கப்படும் என்று சொல்லி, அதற்கான வேலைகளை மிக சமீபத்தில் தொடங்கியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அவர் ஆட்சி செய்யும் அமெரிக்காவின் மிக முக்கிய மேடையிலிருந்து மெக்ஸிகோ மக்களுக்கான குரல் ஓங்கி ஒலித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பரப்புரையில் மிக முக்கியமாகவும், அதிகமாகவும், மோசமாகவும் முன்வைத்து பேசியது மெக்ஸிகோ அகதிகள் குறித்து தான். 

"கோகோ"வின் கதையை அல்ல நாம் பார்க்கப்போவது . கோகோவின் களமும், அந்தக் களத்தில் நடமாடிய மக்களும், அது எடுத்துரைத்த பிரதிநிதித்துவ அரசியலும் தான் மிக முக்கியமானது.  கோகோ மிக அழகான உணர்வைக் கொடுக்கக்கூடிய ஒரு அனிமேஷன் திரைப்படம். 

நேரடியாக கோகோவில் அரசியல் பேசப்படாவிட்டாலும் கூட...கோகோவின் களம் மெக்ஸிகோ என்பதும், அதன் கதை மாந்தர்கள் லத்தீன் அமெரிக்கர்கள் என்று பிரதிநிதித்துவம் செய்ததில் மிகப் பெரிய அரசியல் பேசப்பட்டிருப்பது உண்மை. 

மெக்ஸிகோ நாட்டின் கணக்குப்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானாவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் குடியேற முயல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்திய அமெரிக்க நாடுகளான கெளதமாலா, ஹண்டுராஸ், எல் சால்வேடார், நிக்காருகுவா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் கடக்கும் அந்தப் பாதையை ஸ்பானிய மொழியில், 'எல் கமினோ டெல் டியாப்லோ' என்று சொல்கிறார்கள். அதாவது, 'சாத்தான் நெடுஞ்சாலை' (Devils Highway).  பல நூறு ஆண்டுகளாகவே இந்தப் பாதைக்கு இந்தப் பெயர்தான் . ஒரு காலத்தில் சிவப்பிந்தியர்கள் இந்த வழியைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து, விரிந்திருக்கும் பாலைவனக் காடு. சாலை வழியாக அமெரிக்காவுக்குள் குடியேற நினைப்பவர்கள், இந்த வழியில்தான் சென்றாக வேண்டும். ஒவ்வொரு நாளும் பல நூறு அகதிகள் இதைக் கடக்க முயற்சித்து, அதில் எத்தனையோ பேர் இறந்த கதைகளும் உண்டு.

லத்தீன் அமெரிக்கர்கள் என்றாலே கொள்ளையர்கள், திருடர்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் என்று இருக்கும் சமூகத்தின் மத்தியில், அவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட கோகோவும் சரி... உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அந்த மேடையில் தங்களுக்குக் கிடைத்த சில நொடி வாய்ப்பில் லத்தீன் அமெரிக்கர்களுக்கான உரிமைக் குரலாக ஒலித்த கோகோ படக்குழுவினரும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள் தான்.

சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற "ஷே ஆஃப் வாட்டர்" (Shape of Water) படத்தின் இயக்குநர் கிய்லெர்மோ டெல் டொரோ ( Guillermo del Toro ) ஒரு மெக்ஸிகோ அகதி. அவர் அகதியாக தன் வலிகளைப் பகிர்ந்து கொண்டதும் மிக முக்கியமான நிகழ்வு. 

அடுத்ததாக கோகோவின் இந்த ஆஸ்கர் மேடைப் பேச்சு மற்றும் ஒரு அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. அது சமபால் ஈர்ப்பாளர்கள் குறித்த பார்வை. பிக்ஸார் நிறுவனத்தில் தயாரிபாளராக இருக்கும் டார்லா தன் மனைவிக்கு இந்த விருதை சமர்ப்பித்தார். அதே போல், கோகோவின் திரைக்கதை ஆசிரியர் ஆட்ரியன் மொலினோ தன் கணவருக்கு தன் விருதை சமர்ப்பித்தார். இருவருமே சமபால் ஈர்ப்பாளர்கள். அமெரிக்காவில் இதைப் பேசுவது பெரிய விஷயமில்லை தான். ஆனால், ஆஸ்கர் மேடை என்பது அமெரிக்காவைக் கடந்து பல நாடுகளும் உற்று நோக்கும் தளம். அதில் தங்களின் அடையாளத்தை மிக தைரியமாக அவர்கள் வெளிப்படுத்தியிருப்பது மிக முக்கியமான விஷயம். அதே போல், பிக்ஸார் ஸ்டூடியோஸில் சமபால் ஈர்ப்பாளர்களுக்கான இடம் மிகப் பெரியளவில் இருக்கிறது என்பதையும் இது உணர்த்தியிருக்கிறது. 

ஆட்ரியன் மொலினா

பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் மூன்று நிறுவனர்களில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 

கடந்த 2010ம் ஆண்டு பிக்ஸார் சார்பாக டார்லா ஒரு வீடியோவை வெளியிட்டார். "It Gets Better" என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் பிக்ஸார் நிறுவனத்தில் வேலை செய்யும் சமபால் ஈர்ப்பாளர்கள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்திருப்பார்கள். வளர்ந்த பல நாடுகளிலே கூட சமபால் ஈர்ப்பாளர்கள் குறித்த எதிர்ப்பு மனநிலை பலமாக இருந்த காலகட்டத்திலேயே பிக்ஸார் அந்த வீடியோவை வெளியிட்டது. 

தங்கள் படத்திற்கான விருது கிடைத்த அந்த நொடி, தங்களை முன்னிறுத்தி அந்தக் குழு எதை வேண்டுமானாலும் பேசியிருக்கலாம் தான். ஆனால், மிக முக்கிய சமூக அரசியல் குறித்துப் பேசியது, அவர்கள் ஆஸ்கர் வென்றதை விடவும் பெருமை வாய்ந்தது.
 


 ஒடுக்கப்பட்டவர்களின் பண்டிகை தான் புரட்சி -

ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெர்மாயின் க்ரீர் (Germaine Greer). 

அடுத்த கட்டுரைக்கு