Published:Updated:

என் ஊர் !

நைனார் என்றால் தலைவர் !படங்கள்: ஜெ.முருகன்

என் ஊர் !

நைனார் என்றால் தலைவர் !படங்கள்: ஜெ.முருகன்

Published:Updated:
என் ஊர் !
என் ஊர் !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நெற்றி வகிடை நேர்பட எடுத்ததுபோல் வடக்குத் தெற்காகப் புதுச்சேரியையும் கடலூரையும் இணைக்கும் சாலை, ஊருக்கு மேற்கே புளிய மரங்களும் பனை மரங்களும் வரிசைகட்டி நிற்க... வானம் பார்த்த ஏரி, அந்த ஏரி வரை விரிந்துகிடக்கும் முப்போகம் விளைவிக்கும் வயல்வெளி. கிழக்கே எல்லைக் கோடு போட்டதுபோல் உப்பனாறு. அந்த உப்பனாற்றங்கரையில் எல்லைச்சாமிபோல் நிற்கும் தென்னை மரங்கள். மேற்கே வயல்வெளி என்றால், கிழக்கே உப்பனாறு வரை தென்னந் தோப்புதான். ஒப்பித்தால் (ஆஸ்பிடல்), பூதரமாவு (பவுடர்), மாம்புரு (மெம்பர் முனிசிபாலிட்டி), அவுக்கா(அட்வகேட்), தண்ணிகான் (வாட்டர் டேப்), பொசியம் (சிரப் கலவை மருந்து), பொல்த்திக் காட்டாத (பாலிடிக்ஸ் பண்ணாத), எத்தாழ (கப்போர்டு) என்று இவற்றை பிரெஞ்சு மொழி என்று அறியாமலேயே பிரெஞ்சு சொற்களைச் சரளமாகப் பயன்படுத்தும் மக்கள்!''- தன் ஊரான நைனார்மண்டபம் குறித்து

என் ஊர் !

ரசனையாகப் பேசத் தொடங்குகிறார் 'வல்லினம்’ இதழின் ஆசிரியரும் சாகித்திய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினருமான மகரந்தன்.

''இன்று இந்த அடையாளங்களோடு நைனார் மண்டபத்தைத் தேடினால் கிடைக்காது. இரண்டு பக்கமும் அந்த ஏரியும் ஆறும் இருக்கின்றன. ஆனால், அந்த வயல்வெளியும் தென்னந் தோப்பும் மூகாம்பிகை நகர், நாகம்மா நகர், பிரியதர்ஷினி நகர், திவான் கந்தப்ப முதலியார் நகர் என்று பல நகர்களாக முளைத்து இருக்கின்றன.

முந்தைய காலத்தில், இந்தப் பகுதி சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. பின்னர் பிச்சாவரம் ஜமீனின் மேற்பார்வையில் இப் பகுதி வந்திருக்கிறது. சோழ வேந்தர்கள் பரம்பரையில் வந்த வன்னியப் பாளையக்காரர்களை 'தலைவர்’ என்னும் பொருளில் 'நைனார்’ எனும் பட்டப்பெயரால் வழங்கியிருக்கிறார்கள். அப்படி, சோழர் பரம்பரையைச் சார்ந்த சீலநாயக்கர் என்பவருக்குச் சொந்தமான 150 காணித் தென்னந் தோப்புதான் மேலே குறிப்பிட்ட கிழக்குப் பகுதித் தென்னந் தோப்பு. இந்தத் தென்னந் தோப்புக்கு நடுவே பெரிய 'கவலைக் கிணறு’ம் மண்டபம் ஒன்றும் இருந்திருக்கின்றன. இந்தக் கவலைக் கிணறு தென்னந் தோப்புக்கு மட்டுமல்ல; ஊருக்கும் அதுதான் குடிநீர் விநியோகித்து இருக்கிறது. மேற்குப் பகுதி வயலில் விளைந்த நெல்லில் ஒரு பகுதி, வில்லியனூர் வன்னியர் சத்திரத்தின் கல்விப் பணிக்காகவும் சத்திரச் சாப்பாட்டுக் காகவும் சென்றிருக்கிறது. சீல நாயக்கர் 'நைனார்’ எனும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டு இருக்கிறார். அந்த நைனார் பட்டத்தையும் அவரது மண்டபத்தையும் சேர்த்து அவரைப் பெருமைப்படுத்துகிற வகையில் அமைந்ததுதான் 'நைனார் மண்டபம்’.

நாகாத்தம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலும் ஊருக்குப் பெருமை சேர்க்கின்றன. ஆடி முதல் வெள்ளி அன்று நடைபெறும் திருவிழா, சுற்று வட்டார ஊர்களில் இன்றும் பிரபலம். திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் விடாமல் தெருக்கூத்தையும் 'ஸ்பெஷல்’ நாடகத்தையும் நடத்துகிறார்கள்.  

அறுவடை முடிந்த வயல்வெளியில் களம் அமைத்து நண்பர்கள் கபடி விளையாடும்போது  நான் தூக்கணாங்குருவிக் கூடுகள் தொங்கும் பனை மரத்தடியில் புத்தகங்களோடு உரை யாடல் நிகழ்த்துவேன். மாலை மங்க மங்க... பனை மரத்தின் நிழல் நீள்வதைப்போல், அந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் என் அறிவின் விசாலமும் நீண்டுபோனதாகக் கற்பனை செய்து கொள்வேன். மறுநாள் வேறு ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும் அந்தக் கற்பனை வற்றிப்போய்விடும்.  

என் ஊர் !

சொந்த ஊர் என்பது மண்ணும் மக்களுமா? அவர்களது குணாதிசயங்களும் சேர்ந்தது தான்.

தாலாட்டி வளர்த்த ஊர், நாம் உயர உயரப் பொறாமைப்படும்,  முசுமுசுவென  ரகசியமாகக் கிசுகிசு பேசும், முகம் பார்த்துப் பேசாமல் பொய்க் கோபம் காட்டும். ஆனால், தடுக்கி விழுந்தால் தள்ளிவிட்டுப் போகாது. காரணம், சொந்த ஊர் என்பது தாய்க்குப் பிறகும் தாங்குகிற பூமி. எனக்கும் அப்படித்தான்!''