Published:Updated:

மூன்றாம் உலக போர்

மூன்றாம் உலக போர்

மூன்றாம் உலக போர்

மூன்றாம் உலக போர்

Published:Updated:

கவிப்பேரரசு வைரமுத்து
ஓவியங்கள் : ஸ்யாம்

##~##

சுழியன் கதை இருக்கே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அது ஒரு வசத்துக்கு வராத கதை; யாருக்கும் வாய்க்காத கதை.

தண்ணி போற வழி ஓடம் போற மாதிரி, விதி போற வழி போகுதய்யா பொழப்புன்னு சொல்லுவாக. அதாவது பரவாயில்ல; தண்ணி எங்க போயிச் சேருதுன்னு தெரியும். ரெண்டு கரையில எதாவது ஒரு கரையில முட்டி மோதி ஒதுங்கிடலாம்கிற நம்பிக்கையும் இருக்கும்.

ஆனா காலம்கிற கால்ல உதைபடற பந்து மாதிரி ஆகிப்போச்சு சுழியன் பொழப்பு. எந்தக் கால் எப்ப உதைக்கும் - பந்து எப்ப எழும்பும் - எங்க விழுகும் - எதுவும் சொல்ல முடியல அவன் பொழச்ச பொழப்புல.

மூன்றாம் உலக போர்

கூட்டுத் தற்கொலை பண்ணிக்கிருச்சு குடும்பம்; கொல பண்ணிட்டு செயிலுக்குப் போயிட்டான் தம்பி. இனி ஒருத்தனா இருக்க முடியுமா அட்டணம்பட்டியில. கவட்டைக் காலன் ஆளுக வெட்டவெளியில ஓடவிட்டு வெரட்டி வெரட்டி வெட்டி எறிஞ்சிற மாட்டாகளா? ஊரவிட்டே ஓடி ஒளிஞ்சுட்டான் சுழியன்.

கானா விலக்கு போயிக் குவாரியில கல்லொடச்சான். விவசாயப் பண்ணையில வாரக் கூலிக்குப் புல்லு அறுத்துப் போட்டான். கொஞ்ச நாள் சக்கம்பட்டியில சீலைக்குச் சாயம் போட்டுக்கிட்டுருந்தான். எந்த வேலையிலயும் ஒரு வாரத்துக்கு மேல உடம்பு வளையல; மனசு தங்கல.

ஆத்தா ஊத்திவச்ச கும்பாக் கஞ்சியை எத்திவிட்டவன் சோத்துக்கு அலஞ்சிருக்கான் பாருங்க - நாய் பட்ட பாட்டுக்குக் கிட்ட வரும் அவன் பட்ட பாடு.

அவுக அப்பன் ஆத்தாவால அழிக்க முடியாத அழிச்சாட்டியத்தப் பத்தேநாள்ல அழிச்சுட்டுப் போயிருச்சு பசி.

கால் கடுக்க அலஞ்சு கடைசியில எந்த ஊர்னு தெரியாத ஒரு ஊர்ல, வண்டியில இருந்து உருவி விழுந்த தென்னைமட்டை மாதிரி ஒரு ஓரமா விழுந்துகெடந்தான் சுழியன்.

''மேமே... மேமே... மேமே... மே... மே...''

ஆட்டுச் சத்தம் கேட்டுக் கண்ணைத் தொறந்தவனுக்கு நேரம் போகப் போக ஒண்ணொண்ணா விளங்குது.

ஊரு மார்க்கயன்கோட்டை. அவனைக் காப்பாத்திக் கஞ்சி ஊத்துனவ கெழவி மாயக்கா. ஒத்த மக கனகராணி; ஆம்பளை இல்லாத வீடு. பதினேழு வெள்ளாடுகளுக்காக அந்த ரெண்டு சீவனும் இருக்கு; அந்த ரெண்டு சீவன்களுக்காகப் பதினேழு வெள்ளாடும் இருக்கு. அந்த வீட்டுல பதினெட்டாவது உருப்படி சுழியன்.

''யப்பா தம்பி! நீ யார் பெத்த பிள்ளையோ? நல்ல பிள்ளையாத் தெரியுது. முடிச்சு அவுக்கி மொள்ளமாரியா இருக்கிறவன் ஒன்ன மாதிரி பசியில விழுந்துகெடக்க மாட்டான். நீ யோக்கியன். எங்க வீட்டுலயே இருந்துரு. ஆடுக பின்னால ஓடி ஓடி நானும் குறுக்குச் செத்துப்போனேன். நாளைக்கிருந்து ஆடுகள நீ பாத்துக்க; உன் கஞ்சி - துணி மணி - எண்ணெய் - சீவக்காய்க்கு நான் பொறுப்பு.''

மாயக்கா சொல்லுக்குச் சுழியன் தலையாட்டல; ஆனா மறுக்கவுமில்ல.

''ஏ கனகராணி! தம்பிக்குத் தட்டுல அந்தச் சாமைச் சோத்தைவச்சுக் கருவாட்டுக் கொழம்பக் கொண்டாந்து கலகலன்னு ஊத்து ஆத்தா.''

ஒரு பரதேசிக்குச் சோறு போடற கஞ்சச் சிறுக்கி மாதிரி கடுப்பா நடந்து வந்த கனகராணிய அண்ணாந்து பாத்தான் சுழியன்.

செவக்கிச் சீல கட்டத் தெரியாமக் குலுக்கை ஒண்ணு குலுக்கி நடந்து வந்தா எப்படி இருக்கும்? அப்பிடியிருந்தா கனகராணி. உடம்புல மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் ஒரு ஒப்புரவு கெடையாது. பாவம்... பெரிய வாயி. அத மூட வசதி பத்தாத ஒதடுக. நடுப் பல்லுல ஒரு சந்து. அதுல எவ்வளவு பெரிய ஈயும் அலுங்காம உள்ள போயிட்டு வேலைய முடிச்சிட்டு வெளியேறிரலாம். அலங்கோலத்தையும் அகங்காரத்தையும் குழைச்சுக் குழைச்சுப் படைச்சிருக்கு சாமி அவ மூஞ்சிய.

என்ன பண்றது? பசி போட்ட போடும் மாயக்கா பேச்சுல இருந்த மரியாதையும் அங்கேயே தங்கி ஆடு மேய்க்கவச்சிருச்சு சுழியன.

ஆறே மாசம்தான்; மண்டையப் போட்டுட்டா மாயக்கா.

மண்டையப் போட்டவ அதோட போகல; சுழியன் மண்டையிலயும் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டா.

அவ கடைசியாச் சொன்ன சொல்லு இதுதான்: ''தம்பி... நான் பொழைக்க

மாட்டேன். எனக்கு வேற சொத்து சொகம் இல்ல; என் மகளுக்கு வேற ஆதரவும் இல்ல. நான் வளத்த வெள்ளாடுகளெல்லாம் கனகராணிக்குச் சொந்தம்; கனகராணி ஒனக்குச் சொந்தம்.''

கண்ணை மூடிட்டா.

வெல்லத்துல மொய்க்க வந்த ஈயி ஊறுகாப் பானையில விழுந்த கதையாப்போச்சு.

ஒருத்தருக்கொருத்தர் புடிக்கல. ஆனா ஆடு வேணும் அவனுக்கு; ஆதரவு வேணும் அவளுக்கு. கட்டிக்கிட்டாக.

தொன்னையவிட்டா எண்ணெய்க்கு வேற எடமும் இல்ல; எண்ணெயவிட்டாத் தொன்னைக்கு வேற பொருளும் இல்ல.

சேந்துருச்சுக.

ஆனா ஒண்ணுக்கொண்ணு ஒட்டல பாத்துக்குங்க.

ஒரு நாள் தென்னங்கன்னுக்கு ஆட்டு எருவு தேடி வந்தாரு சில்வார்பட்டி சொக்கரு.

இளந்தென்னைக்கு மாட்டெருவு ஆகாது;

புழுவு வந்தாலும் வந்துரும்.

ஆட்டு எருவு தாய்ப்பால் மாதிரி;

ஒரு சீக்கும் வராது.

''எங்க வீட்டுல இருக்கய்யா ஆட்டு எருவு''னு கூட்டிக்கிட்டுப் போனான் சுழியன்.

வண்டிக்கு முப்பது ரூவானு பேசி முடிக்க, ''வண்டிக் கணக்குல எரு விக்க முடியாது- சாக்குக் கணக்குதான். ஒரு சாக்கு எட்டு ரூவா. சம்மதம்னா கொடுங்க - இல்லாட்டி நடங்க''ன்னு வெளிய வந்தா கனகராணி.

''பேசி முடிச்சாச்சுடி. இனி பேசாத''ன்னான் சுழியன்.

''யோவ்! ஆடு மேய்க்கறது மட்டும்தான் உன் வேல; அதுக்கு மேல ஒனக்கு அதிகாரமில்ல. ஆடு எனக்குச் சொந்தம். ஆட்டுப் புழுக்கை மட்டும் உனக்குச் சொந்தமாயிருமா? வெட்டிப் பேச்சுப் பேசாத - வெலகிக்க.''

சொக்கரு முன்னால அவமானப்பட்டதுல கூனிக் குறுகிப்போனான் சுழியன்.

இருட்டுல கைகால் பட்டதுல பிள்ளை ஒண்ணு பெறந்துபோச்சு.

''இந்தாய்யா இதோட நிறுத்திக்க. இனிமே எனக்கு நீ புருசனா இருக்க வேணாம்; என் பிள்ளைக்கு அப்பனா மட்டும் இரு போதும்.''

பழைய சுழியனா இருந்தா சாட்டக் கம்பெடுத்து ஒரு வீசு வீசியிருப்பான். இப்பத்தான் உசுர்வத்திப் போயி, வகுத்துக் கஞ்சிக்கு வழியத்துக்கெடக்கானே...

ஒண்ணும் பேசல; ஒடுங்கிட்டான்.

அதுவரைக்கும் பாத்த அஞ்சாறு தொழில்கள்ல 'உனக்குப் புடிச்சது எதுரா?’ன்னு கேட்டா, 'ஆடு மேய்க்கறது’ன்னு கூசாமச் சொல்லுவான் சுழியன்.

அதுக்குக் காரணம் ரெண்டு.

பொண்டாட்டி கொடுத்த வலி ஒண்ணு;

ஆடுக மேயிற வெளி ஒண்ணு.

மேல ஆகாசம்; கீழ பூமி; எதுத்துப் பேசாத இருவத்திரெண்டு ஆடுக (புதுசாப் போட்ட குட்டிகளச் சேத்து).

அதுதான் அவன் உலகம்.

ஆடுகளக் கரட்டுல ஏத்திவிட்டுட்டு, ஆலமரத்து நெழல்ல ஒரு துண்டை விரிச்சு, ரெண்டு கையும் மடிச்சுத் தலைக்குவச்சு, மர்ம ஸ்தானத்துல லேசாக் காத்துப் படுற மாதிரி அகட்டிக்கிட்டுக் கண்ணை மூடிப் படுத்துட்டாப் போதும். வெளியூரு, வெளிநாடு போயிருந்த உறக்கமெல்லாம் 'வந்துட்டேன் வந்துட்டேன்’னு ஓடி வந்து கண்ணுக்குள்ள பாய்போட்டுப் படுத்திரும்.

''ஆடு மேய்க்கிற காடு புடிச்சிருக்கு எனக்கு.

எல்லாரும் இருக்கிற இடத்துல நான் மட்டும் இல்லேன்னு தோணுது; நான் மட்டும் இருக்கிற இடத்துல உலகமே இருக்கிறதாத் தோணுது.

என்னா கூத்துடா இது? இந்தப் பொட்டக்காட்டுல என்னா இருக்குன்னு கேக்கறாக? என்னா இல்ல? எல்லாமே இருக்கு.

எல்லா உசுருக்கும் அததுக்குன்னு உண்டான உலகம் ஒண்ணு இருக்கு.

முட்டைக்குள்ள குஞ்சுக்கு;

கூட்டுக்குள்ள பட்டாம்பூச்சிக்கு;

புத்துக்குள்ள எறும்புக்கு;

பூவுக்குள்ள வண்டுக்கு;

தண்ணிக்குள்ள தவளைக்கு;

பாறைக்குள்ள தேரைக்குன்னு தனித்தனி ஒலகமும் சுகமும் உண்டா இல்லையா?

இதுல சிறுசு பெருசுங்கிறதெல்லாம் சும்மா.

அததுக்கு உண்டான சௌரியம்தான் அததுக்கான உலகம்.

இங்க சங்கீதம் இருக்கு -

'கிரிச் கிரிச்’ - குருவிச் சத்தம்;

'ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’-வண்டுச் சத்தம்;

'ம்மே...ம்மே...ம்மே...மே’- ஆட்டுப் பாட்டு;

பத்தும் பத்தாததுக்கு 'என்னக் கேக்க எவன் இருக்கான்’ங்கிற தைரியத்துல எட்டுக்கட்டைக்கு நான் பாடுற எசப்பாட்டு.

மூன்றாம் உலக போர்

இங்க சாப்பாடு இருக்கு -

வாயில போட்டாக் கரையுது எலந்தம்பழம்;

விதையுள்ள அல்வா மாதிரி இனிக்குது கள்ளிப்பழம்;

தின்னு தீத்த பெறகும் அடி நாக்குல கெடக்கு தொரட்டியில புடுங்குன திருட்டு மாங்கா. ஆடு குடிச்ச தண்ணிய அள்ளிக் குடிக்கிற மாதிரி சொகமில்ல உலகத்துல.

என்னமோ 'பால்கோவா பால்கோவா’ன்னு சொல்லுறாகளே... என்ன மாதிரி பால்கோவா செய்யத் தெரியுமா எந்தக் கடைக்காரனுக்கும்?

ஒரு சிரட்டைய எடுத்துக்கிருவேன். பாலாஞ்செடிய ஒடிச்சாப் பாலு வரும். அந்தப் பாலை எடுத்துப் பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி உள்சிரட்டையில ஒரு பூச்சுப் பூசுவேன்; லேசாக் காய வைப்பேன்.

இப்ப வெள்ளாட்டம் பாலைப் பீச்சுவேன் அந்தச் சிரட்டையில.

'சர்சர் சர்சர் சர் சர்’

அந்தச் 'சர் சர்’ சத்தமும் பச்சைப் பால் வாசனையும் கெட்ட கழுதைக.

சும்மா கௌப்பிரும்.

ஆம்பளைக்குப் பொம்பளை தேடும்; பொம்பளைக்கு ஆம்பளை தேடும்.

இப்ப சிரட்டை நெறஞ்சு போச்சா... அதுல லேசா வெல்லம் நுணுக்கிப் போட்டு, அதைப் பச்சைக் குழையில மூடிப் பாறையில வச்சிருவேன். முக்கா மணி நேரம் கழிச்சுத் தொறந்து பாத்தா, மூடிவச்ச பாலு மஞ்சப் பூத்து ஆடை படிஞ்சு கெட்டிப்பட்டுக் கிடக்கும் தயிர்க்கண்டம் மாதிரி.

எடுத்துத் திம்பேன் பாருங்க.

ஏலேய்! உங்க தேவாமிர்தம் என்னத்துக்காகும்?

கண்காட்சி இருக்கய்யா காட்டுக்குள்ள; காணக் கிடைக்காது.

கெடாவுக்குத் திடீர்னு 'கிறுக்கு’ப் புடிச்சிருச்சுன்னு வச்சுக்குங்க புகுந்து கௌப்பிரும்; மந்தைக்குள்ள மருக்கைகள* விரட்ட ஆரம்பிக்கும். பின்னுறுப்பு மேல மூக்க ஒரசி ஒரசி மோந்து மோந்து பாக்கும். மருக்கையோட பின் வகுத்துல முன்னங்காலைத் தூக்கித் தூக்கிப் போட்டுத் தோது பாக்கும்.

மிரளும் மருக்கை; விடாது கெடா.

கடைசியில கிடுக்கிப் புடி போட்டு இடுக்கிப் புடிச்சுக்கிட்டு மிசுங்கவிடாது.

இனி பலிக்காது பாச்சாங்கிறபோது தலையத் தொங்கப்போட்டு நின்னுபோகும் மருக்கை.

சோலி நடக்கும்.

''யாத்தே! என்னா வீரியம்டா இந்தக் கெடாய்க்கு?''

கத முடிஞ்சதும் பின்னங்கால மடக்கித் தலைய ஒரு சிலுப்புச் சிலுப்பித் தவ்வி எறங்கும்.

'அமிர்தம்’ விழுந்த சொகத்துல கீழ போட்ட தலய நிமிர்த்தாம நாலு காலையும் விறைப்பாத் தரையில ஊனி ஆடாம அசையாமச் சொக்கி நிக்கும் பாருங்க மருக்கை.

'ஏன்டி பிள்ளா! நீயா வேணாம்னு ஓடுனவ?’ வளஞ்சு நிக்கிற மருக்கைய வையத் தோணும்.

கெடா அடுத்த மருக்கைய மோப்பம் புடிச்சு அலைஞ்சு திரியும்.

எல்லாருக்கும் காணக் கிடைக்காது இந்தக் களி கூத்து.

இதானய்யா அப்பப்ப நான் பாக்கிற நாடகம்.

வெள்ளாடு மாதிரி ஒரு விநோதப் பிராணி கெடையாது.

ஆடுதொடா இலையத் தவிர பூமியில முளைச்ச எதையும் தின்னும்.

வெள்ளாட்டுக்கு எந்தச் செடியும் கழிப்பு இல்ல.

சிவபெருமான் நஞ்சைக் குடிச்சாரு - அது வகுத்துக்குள்ள போனா சிவன் செத்துருவாருன்னு தெரிஞ்சு தொண்டையப் புடிச்சு நிறுத்திப்புட்டா பார்வதின்னு கதை இருக்கு ஊர்ல. கண்டத்துல வெசம் இன்னும் நீலமா ஒட்டிக்கிட்டிருக்காம்; அதான் நீலகண்டனாம்.

ஆனா பாருங்க... வெசத்தயும் தின்டுபுடும் வெள்ளாடு. எருக்க இலை, அரளி, குண்டுமணிய மனுசன் தின்னாக் கதை முடிஞ்சுபோகும். ஆனா இது எல்லாத்தையும் கடைவாய்ல பால் ஒழுகக் 'கதக் கதக்’னு தின்டுபுடும் வெள்ளாடு. வெசத்தத் தின்னு செமிச்சு அமுதம் கொடுக்குதய்யா வெள்ளாடு.

சொல்லப்போனா - சிவபெருமான் மாட்டு மேல உக்காந்ததவிடவும், ஆட்டு மேலதான் உக்காந்திருக்கணும் நியாயப்படி.

வரவர மேய்ச்சல் நிலம் குறைஞ்சு போயிருச்சு; ஆடு மாடுக அலைய எடம் இல்ல.

ஆடு மாடுகளும் கொறஞ்சுபோயிருச்சு; காடு கரைகளும் காணாமப்போயிருச்சு.

தரிசெல்லாம் தோப்பு; வெறும் பூமியெல்லாம் வீட்டடி; கரட்டுக்கு மேல போனா 'பாரஸ்ட்டு’. ஆறு ஓடையெல்லாம் ஆக்கிரமிப்பு.

எங்க போறது ஆடு மாடு மேய்க்க?

ஒரு காலத்துல ஆடு மாடு மேயவே செடி கொடிக ஏறிக்கெடக்கும் வேலிகள்ல. இன்னைக்கு முள்ளுக் கம்பி நட்டு முடுக்கி மூடிப்புட்டாக.

விவசாய நெலத்துல கண்டும் காணாமக் களவாணித்தனமா எத்தனை நாளைக்கு மேய்க்கறது?

ஆடி மாச வறட்சி ஆடு மாடுகள வாட்டி எடுக்குது. மருந்துக்கும் பச்சை இல்லை; பசை இல்ல.

எல்லா எடத்துலயும் ஓட்டி ஓட்டி ஓஞ்சுபோயிக் கடைசியா வத்திக்கெடக்கிற கம்மாக்குள்ள ஆடுகள ஏறக்கிட்டான் சுழியன்.

கல்யாண வீட்டுப் பந்தி முடிஞ்ச தும் கடைசியில அண்டாவுல கெடக்கும் பாருங்க அடிரசம்... அப்பிடிக் கம்மாக்குள்ள கொஞ்சூண்டு கெடந்துச்சு செந்தண்ணி.

''பிர் பிர் பிர் பிர்.''

கம்மாக்குள்ள ஒரு பன்னிய மல்லாக்கப் போட்டுக்கிட்டு என்னவோ பண்ணிக்கிட்டிருக்காக ரெண்டு ஆளுக. அதுல ஒரு ஆம்பள; ஒரு பொம்பள.

ஆடுகளக் கோரம்புல்லுல அமத்துன சுழியனப் பாத்து அந்தப் பொம்பள கத்துறா: ''யோவ் ஆட்டுக் காரே! ஒரு கை குடுய்யா. வாய்யா.''

ஆடுகள ஓரம்சாரம் ஒதுக்கி ஒழுங்கு பண்ணிட்டுக் கிட்டப் போனான் சுழியன்.

பன்னி எடை கூடி வரணும்னா அதைக் காயடிச்சுவிடணும் காயடிக்கக் கவுத்துப் போட்டுருக்காக பன்னிய. ஆள் பத்தல; அது அடங்க மாட்டேங்குது. பன்னி முன்னங்காலப் புடிச்சு நிக்கிறான் ஒரு இளந்தாரி. பின்னங்காலப் புடிச்சு அமுக்குனான் சுழியன்.

சீலையத் தொடை வரைக்கும் சுருட்டிக்கிட்டு 'மளார்’னு தவ்விப் பன்னி வகுத்துல உக்காந்த பன்னிக்காரி வெதை ரெண்டையும் ஒரு கையில் இறுக்கிப் புடிச்சுக்கிட்டு ஒரு பிளேடு கத்தி எடுத்து இங்கிட்டும் அங்கிட்டுமா ரெண்டு இழு இழுத்தா.

தெறந்திருச்சு வெதை; கொட்டுது ரத்தமா.

உள்சவ்வு அறுத்தா.

பலாச்சுளைய அறுத்துக் கொட்டை கொட்டைகள எடுத்து வெளிய எறியிற மாதிரி, ரெண்டு வெதைகளையும் வீசி எறிஞ்சா.

'காச் மூச்’ன்னு கத்திக் குமுச்ச காக்காக் கூட்டத்து மேல குபீர்னு பாஞ்சு, விழுந்த வெதைகளக் கொத்தி எடுத்துப் பறந்துருச்சு வட்டம் போட்டுக்கிட்டேயிருந்த ஒரு வல்லூறு.

பன்னிக்காரி அடுப்புச் சாம்பல எடுத்தா; வெதையெடுத்த காயத்துல வீசி அடிச்சா. பன்னி குமுறிக் குமுறிக் கத்துனதுல கம்மாயே கதறுது.

கீழ கிடந்த பன்னிய விட்டுட்டு அவ கெண்டைக் காலயே பாத்துக்கிட்டிருந்தான் சுழியன். வெயில் படாத பாகம் வெளேர்னு தெரியுது. அதுல பட்டு நூலு மாதிரி ரோமம் படந்து படந்து நிக்குது.

அந்தக் கெண்டைக்கால் ரோமத்துல கிறங்குன கெறக்கம்தான் அவன் பொழப்பையே திசை மாத்திப் போட்டுட்டுப் போயிருச்சு.

-  மூளும்