Published:Updated:

‘அப்போ அரணை அவ்ளோதானா?!’ - அழியும் உயிர்கள் பட்டியலில் அரணை

‘அப்போ அரணை அவ்ளோதானா?!’ - அழியும் உயிர்கள் பட்டியலில் அரணை
‘அப்போ அரணை அவ்ளோதானா?!’ - அழியும் உயிர்கள் பட்டியலில் அரணை

‘அப்போ அரணை அவ்ளோதானா?!’ - அழியும் உயிர்கள் பட்டியலில் அரணை

"நமக்கு எதுக்கு வம்பு... இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்!" இது 'அப்பா' திரைப்படத்தில் நடுநிலையான் கதாபாத்திரம் பேசும் வசனம். உண்மையில் பல மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். சில உயிரினங்களிலும் இப்படி நடுநிலையான உயிரினங்கள் உண்டு. எந்த வம்பு தும்புக்கும் போகாமல், கிடைத்ததை உண்டு, மாதக்கணக்கில் தூங்கி எழும் அந்த உயிர் அரணை. இதன் உருவம் கூட நடுநிலையானதுதான். பாம்பு மாதிரியும் இல்லாமல் பல்லி மாதிரியும் இல்லாமல் இரண்டும் சேர்ந்ததுப் போல இருக்கும். பாம்பரணை, பாம்பிராணி, பாப்பராணி என பல பெயர்களில் இதனை அழைக்கிறார்கள். உணவுச்சங்கிலியில் பூச்சி, புழுக்கள், சிலந்திகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அரணையின் பணி. ஆனால், சமீபகாலமாக அரணைகளின் எண்ணிக்கை குறைந்து, அழியும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஆங்கிலத்தில் 'Skink' என அழைக்கப்படும் அரணை 'Scincidac' குடும்பத்தைச் சேர்ந்தது. இது, வறண்ட இடங்களில் வசிக்கக்கூடியது. எத்தனை வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும். ஆனால் குளிர் என்றாலே அலர்ஜி! பூமி சூடாக இருக்கும் வெப்பமான நேரங்களில் வெளியே உலாவும். வெப்பம் குறைந்து கூதல் ஆரம்பித்தால் கல் இடுக்குகள், பொந்துகளில் நுழைந்துக் கொள்ளும். அதன் பிறகு வெப்பம் வரும் வரை வெளியே வராது. குளிர்காலங்களில் கும்பகர்ணனாக மாறிவிடும். தனது இருப்பிடத்தின் வாயிலை பாசி மூலம் அடைத்துக்கொண்டு, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடும். எதை பற்றியும் கவலையில்லாத உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அடுத்து பூமியில் வெப்பம் பட்டு, நிலம் சூடாகி, அந்த புழுக்கம் உள்ளே தாக்கும் வரை தூக்கம்... தூக்கம்... தூக்கம் மட்டும்தான்! 

இதன் தோல், செதில் செதிலாக அதே நேரத்தில் வழவழப்பானதாக இருக்கும். இந்தத் தோல், அரணையின் உடலில் உள்ள நீர் ஆவியாகாமல் காக்கும் கவசமாக இருக்கிறது. பாம்பு சட்டை உறிப்பதுபோல, அரணை கோடை காலங்களில் அடிக்கடி தோல் உரித்துக்கொள்ளும். ஆண் அரணை பச்சை நிறத்திலும், பெண் அரணை சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உடல் வண்ணம் காரணமாக, தரைப்பகுதிகள், புல்வெளிகளில் சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாது. அரணையின் இன்னொரு விசேஷ குணம் அதன் ஞாபக மறதி. தனது இரையை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னிக்கு செத்தேன் என இரையும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கையில், எதற்கு வந்தோம் என்பதையே மறந்து வேறு வழியில் சென்று கொண்டிருக்கும். "அவனுக்கு அரணைப் புத்தி" என கிராமங்களில் ஞாபக மறதியுள்ளவர்களை அழைப்பது இதனால்தான். 

எதிரிகள் தாக்க வந்தால் 23ம் புலிகேசியையும் விஞ்சிவிடும் அரணை. வேகமாக நகர்ந்து பொந்து, கல்லிடுக்குகளில் புகுந்துக்கொள்ளும். அப்போது வாலை உள்ளே இழுப்பதற்குள் எதிரி, வாலை பிடித்துவிட்டாலும் கவலையே படாது. வாலை முறித்துக்கொண்டு, உள்ளே சுருங்கிவிடும். எதிரி வாலோடு வந்த வழியே திரும்பி போவதை தவிர வேறு வழியில்லை. முறிந்துபோன வால் சில நாட்களில் வளர்ந்துவிடும். நமக்கு நகம் போல, அரணைக்கு வால் வெட்ட வெட்ட வளர்ந்துவிடும். 

"இயற்கை எதிரிகளிடம் இருந்துக்கூட தப்பித்துக்கொள்ளும் அரணைகள் ஏன் அழிந்து வருகின்றன?"

‘‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழிடம் தான் அடிப்படை. அரணை போன்ற சிற்றுயிர்கள் புதர்கள், கல் இடுக்குகளில் வாழ்பவை. நவீனமயமாக்கல், நகரமயமாக்கள், குடியிருப்புகள் உருவாகுதல் போன்ற பல்வேறு காரணங்களால் சிற்றுயிர்களின் வாழிடங்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம். மனிதர்களாக இருந்தால், வேறு இடம் நோக்கி நகரலாம். அகதிகள் என்ற பெயரில் அடுத்த நாட்டில் கூட குடியேறலாம். ஆனால், சிற்றுயிர்கள் பாவம் என்ன செய்யும்.? வாழிடம் அழிவதால்தான் அரணைப் போன்ற சிற்றுயிர்கள் அழிந்து வருகின்றன’’ என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.

வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் முன்னேறும் வேகத்தில் அழிந்து வருகின்றன எண்ணற்ற உயிரினங்கள். அதில் அப்பாவி அரணையும் ஒன்று. 

அடுத்த கட்டுரைக்கு