Published:Updated:

ஹெச்.ராஜா சாதனைகளைச் சொல்ல, ஒன்பது நாள்கள் போதாது! - விகடன் கொக்கிபீடியா

ஹெச்.ராஜா சாதனைகளைச் சொல்ல, ஒன்பது நாள்கள் போதாது! - விகடன் கொக்கிபீடியா
ஹெச்.ராஜா சாதனைகளைச் சொல்ல, ஒன்பது நாள்கள் போதாது! - விகடன் கொக்கிபீடியா

பெயர் : ஹெச்.ராஜா

வயது : 60

பிறப்பு : 29 செப்டம்பர், 1957.

பொறுப்பு : சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

இருப்பிடம் : சிவகங்கை

ஹெச்.ராஜா என்பவர், பா.ஜ.க-வின் தேசியச் செயலர். அந்தக் கட்சியினர், தமிழகத்தில் எந்தப் பிரச்னை நடந்தாலும் இவரைத்தான் முதலில் அனுப்பிவைத்து அடிவாங்க வைத்து பிரச்னையின் வீரியத்தைத் தெரிந்துகொள்வார்கள். 

சாதனைகள் :

ஹெச்.ராஜா என்பவர், இந்த வையகத்தில் வியத்தகு பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஒட்டுமொத்த சாதனைகளையும் சொல்ல, ஒன்பது நாள்கள் எடுக்கும் என்பதால், சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம்.

ஊரே சுற்றி நின்று எட்டுப் பாத்திர சோப்புகள் கரைய கழுவி ஊற்றினாலும், எதுவுமே நடக்காத மாதிரி அசால்ட்டாக அடுத்த அறிக்கைக்கு ரெடியாகிவிடுவது இவரது சிறப்பம்சம். இணையத்தில் எந்த டாபிக் ட்ரெண்டிங்காக இருந்தாலும், உடனே உள்ளே புகுந்து கருத்து கம்பு சுற்றுவதில் வல்லவர். ட்விட்டரில் ஹெச்.ராஜா எதைப் பேசினாலும் உதை கன்ஃபார்ம். முகநூலில் பேசினாலும், கமென்ட்டில் கலாய்த்து காமெடியாக்கிவிடுகிறார்கள். இப்படி எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இவர், `உண்மையிலேயே ரொம்ப நல்லவர்' என்ற பட்டத்துக்கு பத்துப் பொருத்தங்களும் பொருந்தியவராகத் திகழ்கிறார். பொருத்தம் என்றவுடன்தான் நினைவுக்குவருகிறது, ஒருமுறை ``வருமான வரித்துறை சோதனைகளால் ஏற்பட்ட பலன் என்ன?'' என்ற கேள்விக்கு, ``கல்யாணம் ஆன நாளே குழந்தை எங்கே என்று கேட்கலாமா?” என பதிலளித்திருந்தார். இப்படி, பழமொழிகளிலேயே விளக்கம் சொல்லும் பல்துறை வித்தகர் இவர்.

சும்மா விட்டிருந்தாலே அதிகபட்சம் 50 நாள்கள் ஓடியிருக்க வேண்டிய படத்தை, தமிழ் ராக்கர்ஸில் பார்த்துவிட்டு உலக ஃபேமஸாக்கியவர் ஹெச்.ராஜா. மேலும், சாரண-சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்கும் என்பதை இந்த உலகத்துக்குத் தெரியப்படுத்தியதும் இவரே. எவர் ஒருவரின் பெயரையும் நொடிப்பொழுதில் வேற்று மதத்தின் பெயராக மாற்றிவிடும் இவர் அறிவைக்கண்டு, வேற்றுகிரகவாசிகளே மிரண்டுபோயிருப்பது வேறு கதை. உண்மையில், தன்னந்தனி ஆளாக இருந்துகொண்டு தமிழகத்தில் தாமரையை மலரவிடாமல் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இவரது மகத்தான சாதனையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாட் எ மேன்! 

``காசிருந்தால், ரிசார்ட்டும் சிறைச்சாலை ஆகும்; சிறைச்சாலையும் ரிசார்ட் ஆகும்’’ - ஹெச்.ராஜா

வேதனைகள் :

சாதனைகளைச் சொல்ல ஒன்பது நாள்கள் என்றால், வேதனைகளைச் சொல்ல எண்பது நாள்கள் ஆகும். ஆக, அவற்றிலிருந்தும் சாம்பிளுக்கு சிலவற்றையே இங்கே எடுத்துப் போட்டிருக்கிறோம்.

இணைய உலகில் இவர் எதையாவது பேசிவைக்க, பதிலுக்கு நெட்டிசன்களும் உக்கிரமாகி உரித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கப்போகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார் என்றாலும், எப்படி இவ்வளவு அடிகளைத் தாங்குகிறார் என நினைத்துப்பார்க்கையில் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. அடிக்கடி ``ஊர்கூடி தேர் இழுப்போம்'' என ஆள் சேர்க்க ஆரம்பிப்பார். ஆனால், வருபவர்கள் எல்லோரும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுகிறார்கள் என்பதுதான் பெரும் வேதனை. 

சமீபத்தில் `பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும்!' என்ற ஒற்றை ட்வீட்டால், வைகோவில் ஆரம்பித்து தீபா, மாதவன் வரை இவரை வெச்சி செய்தனர். நெட்டிசன்களோ  `தட் கரடியே காரித்துப்பிடுச்சு' என மாதவனையும் கூடவே வேதனைப்படுத்தினார்கள். ஆக, இவரால் இவருக்கு மட்டும் வேதனையில்லை, மற்றவர்களுக்கும்தான் என்பது தெளிவாகிறது. 

``சாரண-சாரணியர் இயக்கத்தை காவி மயமாக்குவேன்" என ஆறு லிட்டர் காவி பெயின்ட்டோடு காத்திருந்தவர், மொத்தமே 52 வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். இவர் பேட்டிகளில் பேசுகையில் `ஷார்ட் மெமரிலாஸ்' அறிகுறிகளைக் காணலாம். ஒரு விஷயத்தை பேசிவிட்டு கொஞ்ச நேரத்திலேயே `நான் பேசவே இல்லைங்கிறேன்' என சூடத் தட்டில் அடித்து சத்தியம் செய்வார். 

``வேதா இல்லத்தில் வேதாளங்கள் குடியிருந்ததால்தான் ரெய்டு நடந்தது’’ - ஹெச்.ராஜா

குழப்பங்கள் :

உச்சந்தலையில் குட்டிச்சாத்தான் குப்புறப்படுத்திருந்தாலும் ஒரு மனிதனால் இவ்வளவு நெகட்டிவாக யோசிக்க முடியாது. இவரால் மட்டும் அது எப்படி முடிகிறது என்பதே பெரும் குழப்பம். 

புதருக்குள் நின்றுகொண்டு தொட்டியைக் குனிந்து பார்ப்பது போன்ற ஹெச்.ராஜாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி பிரபலமானது. அப்படி எதைத்தான் அவர் குனிந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இன்றுமே குழப்பமாயிருக்கிறது.

`கார்த்தி சிதம்பரத்துக்கு சீக்கிரமே `வளைகாப்பு' நடத்தப்படும்' என ஒருமுறை அறிக்கைவிட்டிருந்தார். கார்த்தி சிதம்பரம் என்பவர் ஓர் ஆண், அவருக்கு எப்படி வளைகாப்பு நடத்த முடியும் என்பதும் குழப்பமாகவே இருக்கிறது.


மேலும் படிக்க :

ஆன்டி இந்தியன்களை அடையாளம் காண்பது எப்படி?
அண்டாவில் ஹைதராபாத் பிரியாணி.
பா.ஜ.க பாறைகள்.
நான் ரியல் அண்ணாமலை!


மேலும் பார்க்க :

நானும் ரௌடிதான்.
மெர்சல்.
ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கம்.
கல்யாணமும் வளைகாப்பும்.