இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 11

ருத்துவக் காப்பீடு எடுப்பதன் அவசியத்தைப் பற்றி பேசிவருகிறோம். மருத்துவக் காப்பீடு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு, மற்ற காப்பீட்டு நிறுவனத்தில் கூடுதல் பயன்கள், குரூப் பாலிசியில் இருந்து விலக நேர்தல் உள்ளிட்ட பல காரணங்களால், எந்த ஒரு பயனையும் இழக்காமல் வேறு ஒரு காப்பீட்டு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. எப்படி, ஒரு நிறுவனத்தின் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியுமோ, அதேபோல நம் மருத்துவக் காப்பீடு பாலிசியையும் மாற்றிக்கொள்ள முடியும். இதை ‘மெடிக்ளெய்ம் போர்ட்டபிலிட்டி’ என்கிறோம்.

சரவணனின் அப்பாவை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் உள்ள தைரியத்தில் நிம்மதியாக இருந்தார். ஆனால், அறுவைசிகிச்சைக்கு முன்னர், அவரது க்ளெய்ம் அப்ளிகேஷனை நிராகரித்திருந்தது காப்பீட்டு நிறுவனம்.

சரவணின் அப்பா, இரண்டு லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்து, 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ப்ரீமியம் கட்டிவருபவர். சரவணன் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில், ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது. அதில், தன்னுடைய பெற்றோரையும் சேர்த்திருந்தார். இதனால், 10 ஆண்டுகளாகக் கட்டிவந்த காப்பீட்டைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். புதிய பாலிசியின் கீழ் க்ளைய்ம் கோரி விண்ணப்பித்தபோது நிராகரிக்கப்படவே, தன்னுடைய சேமிப்பில் இருந்து பணம் செலுத்தும் நிலைக்கு ஆளானார்.

‘ஏன் க்ளெய்மை நிராகரித்தனர்?’ என்ற கேள்விக்கு காப்பீட்டு நிறுவனம் சொன்ன காரணம், ‘ஏற்கெனவே உள்ள நோய்க்குக் காத்திருப்புக் காலம் இன்னும் முடியவில்லை’ என்பதுதான். 10 ஆண்டுகள் ஒழுங்காகக் காப்பீடு ப்ரீமியம் கட்டியும், விழிப்புஉணர்வு இன்மை காரணமாகக் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். இதுவே, சரவணனுக்கு அளிக்கப்பட்ட புதிய பாலிசியுடன், அவர்களது பழைய பாலிசியை இணைத்து போர்ட்டபிலிட்டி செய்திருந்தால், எந்தப் பிரச்னையும் இன்றி முழுப் பயனையும் பெற்றிருக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 11

காப்பீட்டு நிறுவனங்கள் காத்திருப்புக் காலம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதிப்பது வழக்கம்தான். பாலிசியை வாங்கும்போது அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏற்கெனவே எடுத்திருக்கும் பாலிசியை, புது பாலிசிக்கு மாற்றிக்கொள்ளும்போது, ஏற்கெனவே பெற்றுவந்த எந்தப் பலனையும் இழக்காமல், புதிய நிறுவனத்தின் சேவையைப் பெற முடியும்.

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் விதிமுறைப்படி, எந்த ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்தும் வேறு ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு பலனில் எந்த பாதிப்பும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும். முன்பு இப்படி இல்லை. ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என வேறு நிறுவனத்துக்கு மாறினால், புதிய பாலிசி எடுத்ததாகவே கருதப்படுவர். இதனால், க்ளெய்ம் செய்யாமல் இருந்தால் கிடைக்கக்கூடிய போனஸ், ஏற்கெனவே உள்ள நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. போர்ட்டபிலிட்டியில் இந்தப் பிரச்னைகள் இல்லை.

ஒரு நோய்க்கு நான்கு ஆண்டுகள் காத்திருப்புக் காலம் என வைத்துக்கொள்வோம். மூன்றாவது ஆண்டில் காப்பீட்டு நிறுவனத்தை மாற்றுகிறோம் என்றால், புதிய நிறுவனத்தில் மீதம் உள்ள ஓர் ஆண்டும் காத்திருப்புக் காலமாகக் கருதப்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.நினைத்தவுடன் போர்ட்டபிலிட்டியைச் செய்ய முடியாது. பாலிசி புதுப்பிக்கும் காலத்தில்தான் இதைச் செய்ய முடியும். ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், பாலிசியைப் புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்கு முன்னர் இந்த வசதியைப் பயன்படுத்தி, இன்னொரு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியை மாற்றிக்கொள்ள முடியும். தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசிகளில் மட்டும் இல்லாமல், குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 11

இதற்கு முதலில், தற்போது உள்ள நிறுவனத்துக்கு மாறுதல் தொடர்பான கோரிக்கையைக் கொடுக்க வேண்டும். எந்த நிறுவனத்துக்கு மாற விரும்புகிறோமோ அந்த நிறுவனத்தைக் குறிப்பிட வேண்டும். போர்ட்டபிலிட்டிக்கு விண்ணப்பம் செய்த ஏழு நாட்களுக்குள் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டாலும், விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. தகவல்கள் பகிர்ந்துகொண்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குகிறார்களா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அந்த நிறுவனம் விதிக்கும் தொகையை ப்ரீமியமாகச் செலுத்த வேண்டும். ஒருவேளை 15 நாட்களுக்குள் அவர்கள் இதைச் செய்யவில்லை எனில், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான உரிமையைக் காப்பீட்டு நிறுவனம் இழந்துவிடும். பலன்களில் பாதிப்பு இல்லை என்றாலும், ப்ரீமியத்தில் வேறுபாடு இருக்கலாம். ரிஸ்க் அடிப்படையில் இந்த ப்ரீமியம் சற்று அதிகமாகக்கூட இருக்கலாம். எனவே, பாலிசியை மாற்றுவதற்கு முன்பு ப்ரீமியம் எவ்வளவு என்பதை எல்லாம் தெரிந்துகொள்வது நல்லது.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism