Published:Updated:

ஜாலி ஜோலி!

ஜாலி ஜோலி!
ஜாலி ஜோலி!

ஜாலி ஜோலி!

லகத்துலேயே கஷ்டமான வேலை பத்திரிகையாளராக இருப்பதுதான் என்கிறது ஓர் ஆராய்ச்சி. எங்க கஷ்டம் எங்களோட இருக்கட்டும். இப்போ, உலகின் ஈஸியான, ஜாலியான வேலைகளைத் தெரிஞ்சுக்கலாமா?

ஜாலி ஜோலி!

சொகுசு மெத்தைப் பரிசோதனையாளர்: பெரும்பாலான நாடுகளில் பகுதி நேரமாகக் கிடைக்கும் வேலை. மாசத்துக்கு ஒருநாள் வேலை பார்த்தால் போதும். சம்பளம் 75,000 ரூபாய்னு சொன்னா, மயக்கம் போட்டு கீழே விழுவீங்க. சொகுசு மெத்தைகளைப் பரிசோதனை பண்ற வேலை இப்படித்தான். மாதத்தில் ஒருநாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மெத்தை நிறுவனங்கள் தயாரித்திருக்கும் புதிய வகை சொகுசு மெத்தையைப் பயன்படுத்திப் பார்த்து, நிறை குறைகளைச் சொல்ல வேண்டியது முக்கியமான வேலை (?!). எக்ஸ்ட்ரா வேலையாக ‘இந்த மெத்தையில் தூங்கும்போது தூக்கம் எப்படி இருக்கிறது?’ போன்ற சர்வே கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிளம்பலாம்!

ஜாலி ஜோலி!

நீர் சறுக்குப் பரிசோதனையாளர்: சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள், பெரிய பெரிய ரிசார்ட்களில் சறுக்கிக்கொண்டே தண்ணீரில் விழும் ‘வாட்டர் ஸ்லைட்’டைப் பரிசோதிப்பதுதான் வேலை. ஒருமுறை, இருமுறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் சறுக்கி விளையாடலாம். ஆட்டம் முடிந்ததும், ‘வாட்டர் ஸ்லைடின்’ உயரம் போதுமானதாக இருக்கிறதா, வேகம் எப்படி, செலுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்கலாமா, அதிகரிக்கலாமா? என ‘சாம்பார்ல உப்பு சரியா இருக்கா?’ கதைதான். ஆனால், சம்பளம் நம் ஊர் மதிப்பில் இருபது லட்சத்தைத் தாண்டும்!

ஜாலி ஜோலி!

ஒயின் டெஸ்டர்: காலையில் எழுந்திரிச்சதுமே, சில பேர் விதம்விதமான ஒயின் பாட்டில்களுடன் வந்து, ‘சார்.. இது எப்படி இருக்குனு குடிச்சுட்டுச் சொல்லுங்களேன்’னு எழுப்பினா எப்படி இருக்கும்? அதுதான், அதேதான் ஒயின் டெஸ்டரோட வேலை. தங்குவதற்கு இடம், இலவச வைஃபை வசதியும் உண்டு. ஏனெனில், ஒயினைக் குடித்துப் பார்த்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிந்துகொள்ள வேண்டும். சம்பளம் 7 லட்சங்களாம்!

ஜாலி ஜோலி!

கேண்டி டெஸ்டர்: மேலே சொன்னது சரக்கு, இது சாக்லேட். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், சிறுவர்களுக்குத்தான் இந்த வேலையில் முன்னுரிமை. பகுதி நேர வேலைக்கே பல்க்கான சம்பளம் கைக்கு வரும். சாக்லேட் நிறுவனங்கள் மட்டுமல்ல, நொறுக்குத் தீனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலைக்கு ஆட்களைத் தேர்வுசெய்வார்கள். புதிதாகத் தயாரித்த தீனியை அல்லது கொஞ்சம் மாற்றியமைத்த சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் வகைகளைத் தின்று வாசனை, சுவை எப்படி இருக்கிறது எனக் கமென்ட் கொடுக்க வேண்டியதுதான் வேலை. நினைத்தாலே இனிக்குதுல்ல?

ஜாலி ஜோலி!

பைக்-ரைடர் போட்டோகிராஃபர்: ‘கூகுள் மேப்’பில் பயன்படுத்துவதற்காகப் புகைப்படங்களை எடுப்பதுதான் இந்த வேலை. வரலாற்றுப் பிரசித்திபெற்ற இடங்கள், முக்கியமான கட்டடங்கள், லேண்ட் மார்க், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் எனக் கண்ணில் பட்டதை க்ளிக்கலாம். ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதியும் அறிமுகமாகிவிட்டதால், தெருத் தெருவாக அலைய வேண்டிய அவசியமும் இருக்கும். புகைப்படப் பிரியர்களுக்கு இது ஈஸியான வேலைனு சொல்லியாத் தெரியணும்?

இது மட்டுமல்ல, ஆணுறைகளைப் பயன்படுத்தி கருத்து சொல்வது, புதிய கம்ப்யூட்டர் கேம்களை விளையாடுவது, பாடி ஸ்பிரே, நெயில் பாலீஸுக்குக் கவர்ச்சியான பெயர் சூட்டுவது என ஜாலியான வேலைகள் எக்கச்சக்கம்!

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு