Published:Updated:

"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா ட்ராய்?" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்!

"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா  ட்ராய்?" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்!
"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா ட்ராய்?" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்!

"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா ட்ராய்?" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்!

Note: இந்தக் கடிதம் ஏர்செல் நெட்வொர்க் பயன்படுத்தும் ஒரு விகடன் வாசகரால் எழுதப்பட்டது. கருத்துகள் அனைத்தும் வாசகரின் சொந்தக் கருத்துகளே.

மெரினா பீச், கன்னியாகுமரி, முருகன் இட்லி, திருநெல்வேலி அல்வா, காவிரி, வைகை, மீனாட்சியம்மன் கோவில், கருணாநிதி, ரஜினி, கமல், ஸ்ரீதேவி, சென்னை சூப்பர் கிங்ஸ், தலப்பாகட்டி பிரியாணி போல தமிழகத்தின் நவீன அடையாளங்களுள் ஒன்றாக உருவானது ஏர்செல். சென்னைக்கு வெளியே செல்போன் சேவையை பரவலாக்கியதும், சிக்கனமாக்கியதும் ஏர்செல்லின் வரவால் நிகழ்ந்தது. அந்த நினைவுகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், சமீபத்தில் அந்நிறுவனம் திவாலானதன் பின்னணி பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகள், உலகப் பொருளாதார சிக்கல், செல்போன் சேவை தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் எனக்கு பெரிய விஷய ஞானம் கிடையாது. ஆனால், ஒரு சராசரி நேர்மையான குடிமகனாக, ஒரு ஏர்செல் வாடிக்கையாளனாக எனக்குத் தோன்றியதை நான் உங்களுடன் பகிர்கிறேன். 

    ஆறுமாதமாக கட்டவேண்டிய நிலுவைத்தொகையை டவர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏர்செல் கட்டவில்லை என்பது அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு. ஜியோ அறிமுகமாகும் வரை ஏர்செல்லில் 1ஜிபி இன்டர்நெட் பெற 248ரூபாய் வரை (298ரூபாய் கட்டுன காலமும் இருக்கு) கொள்ளை கட்டணம்... (அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே) அதற்கு மேல் தெரியாமல் உபயோகப்படுத்தினால் கூட மொத்தப்பணமும் மெயின் பேலன்ஸில் இருந்து கழிக்கப்படும், அப்படி கொள்ளை அடித்த பணமெல்லாம் எங்கதான் போச்சு என்பதே மக்களின் 15,500 கோடி கேள்வி. 

பிரீபெய்டு வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட்பேலன்ஸ் (பேசுவதற்காக டாப் அப் செய்த பணம்) பல கோடிக்கணக்கில் இருக்கும். சிலர் 1000, 2000 ரூபாய்க்கும் மேல் பேலன்ஸ் வைத்துள்ளனர். அதே வேளையில், போஸ்ட் பெய்ட் ஏர்செல்  வாடிக்கையாளர்கள் தனது நிலுவைத்தொகையுடன் கூடுதலாக பணத்தையும் கட்டினால் மட்டுமே வேறு நெட்வொர்க்கிற்க்கு மாறிக்கொள்ள முடியுமாம். இப்பிரச்சினைக்கு டிராயின் தீர்வுதான் என்ன? 

    இன்று அனைத்து சேவைகளுக்குமே செல்போன் அத்தியாவசியம். சிலிண்டர் புக்செய்ய, ஆதார் OTP பெற, அனைத்து வங்கி சேவைகளையும் பயன்படுத்த, டிக்கெட் புக் செய்ய என நீள்கிறது பட்டியல் எதையுமே செய்ய முடியாத கையறு நிலை ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு. சாதாரண கூலித்தொழிலாளியில் இருந்து பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்கள் வரை, அனைவருக்கும் இதனால் மன வேதனைதான். 2018 பிப்ரவரியிலிருந்தே இன்கமிங்க் அவுட்கோயிங்க் செயல்படாமல் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர் ஏர்செல் மக்கள். 

    ஏர்செல் திவால் ஆகப்போவது யாருக்கு தெரியுமோ இல்லையோ ஆளும் மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் 'டிராய்' க்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். டெலிகாம் துறையில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்பது ஜியோவை அனுமதிக்கும்போதே மோடி அரசின் டிராய்க்கு தெரியாதா? தன் இஷ்டம்போல ஆபர்களை அள்ளித்தர 'ஜியோ'விற்கான அனுமதியை வழங்கியது மோடி அரசின் டிராய்தானே ? 
    இந்தியாவில் இருக்கும் செல்போன் நிறுவனங்களோ பத்துக்கும் கீழ்தான். இந்த நிறுவனங்களை மேற்பார்வை செய்யவேண்டியது மோடி அரசின் டிராயின் கடமைதானே? இப்படி ஒரு நிறுவனம் திவால் ஆகப்போவது தெரிந்தும் வாயை மூடி மவுனியாக இருந்து, அந்நிறுவனத்தை நம்பி இருந்த நூற்றி ஐம்பது லட்சம் (தமிழகத்தில் மட்டும்) வாடிக்கையாளர்களையும், அதன் ஊழியர்களின் எதிர்காலத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டது டிராய். இதற்கு யார் தண்டனை கொடுப்பது? ஏப்ரல்-15ம் தேதி வரை சர்வீஸ் இருக்கும் என நம்பி இருந்த வாடிக்கையாளர்களை இப்போது நாயை விரட்டுவது போல விரட்டுகிறது ஏர்செல் நிறுவனம். 

   UPC எண் பெற எந்த ஏர்செல் சேவை மையத்திற்குப் போனாலும் ஊழியர்களின் பதில், "எங்களுக்குகே டவர் இல்லை!" என்பதே. வேறு செல்போன் நிறுவன எண்கள் வழியாக ஏர்செல்லின் UPC எண் பெற  98420 12345, 98410 12345 எண்களை அழைத்து "சரியான விபரங்களை தந்தாலும், நீங்கள் கொடுத்து இருக்கும் விபரங்கள் எங்கள் நிறுவன விபரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று வெறுப்பேற்றுகிறார்கள். நடுராத்திரி மூன்று மணிக்கு அழைத்தால் கூட சேவை மைய அதிகாரிகள் ரொம்பவே பிசியாம்.... பல வாடிக்கையாளர் சேவை மையங்களின்  பூட்டிய கதவுகளை பார்த்துவிட்டு கொதிநிலையில் உள்ளனர் மக்கள். ஒன்று ஜியோவை "தட்டி" வைத்து இருக்கவேண்டும். அதற்கு திராணி இல்லை மோடி அரசின் "டிராய்"க்கு. பலரும் ஏர்செல்லை இன்கமிங்க்கிற்கு மட்டுமே உபயோகப்படுத்துவதால் மூடுவிழா காணும் நிலை. ஜியோவை கட்டுப்படுத்த முடியாத "டிராய்" அனைத்து செல்போன் நிறுவனங்களிலும் இன்கமிங் மூன்று மாதம் மட்டுமே இலவசம், மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஒரு சட்டத்தை  இயற்றி இருக்கலாமே? இதையெல்லாம் பார்க்கும்போது ஜியோ தவிர மற்ற செல்போன் நிறுவனங்களை, ட்ராய் காவு வாங்கத்தயாராகிவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. நாளை பி.எஸ்.என்.எல் க்கும் இந்நிலை வரலாம்...  ஜியோவின் வருகைக்குப் பிறகு அனில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா டொகோமோ, ஏற்கெனவே மூட்டையை கட்டிவிட்டன. இன்று ஏர்செல் நாளை...? யாரை சந்தோசப்படுத்த டிராய் இவ்வாறு வாயை மூடிக்கிடக்கிறது? 

    செத்தும் கெடுத்தான் என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ "ஏர்செல்" நிறுவனத்திற்குப் பொருந்தும். வேறு செல்போன் நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள போதிய அவகாசமும் கொடுக்காமல் சேவையை முடித்துக்கொண்டது ஏர்செல். சுமார் 150 லட்சம் வாடிக்கையாளர்கள் சிதறுவதால் அவர்களை அரவணைத்துக்கொள்ள மற்ற எந்த செல்போன் நிறுவனத்திடமும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லையென்பது கண்கூடு. பிப்ரவரி 20-ம் தேதி முதலே எந்த நெட் ஒர்க்கிலும் அவுட்கோயிங்க் மற்றும் இன்கமிங்க் உடனடியாக இணைப்பு கிடைப்பதில்லை 6, 7 முறைக்கு மேல் முயன்றால் ஒருவேளை கிடைக்கலாம்,   ஜியோ உட்பட. இதனால் அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களிலுமே சுனாமியே வந்துவிட்டதாய் உணர்கிறார்கள். தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாக கொடுத்து தற்போதைக்கு அவர்களை திருப்தியடைய வைத்திருக்கிறது ஜியோ.

    இவ்வளவு பிரச்சினைகளில் மக்களை தவிக்கவிடாமல் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களையும் உடனடியாக அரசின் பி.எஸ்.என்.எல் மூலம் காப்பாற்றியிருக்கலாம். இதனால் அரசுக்கும் லாபம், பி.எஸ்.என்.எல்லும் பயனடையும். இதெல்லாம் இந்தத்துறையைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத எனக்கு வரும் யோசனைகள். இதுகூட அரசு அதிகாரிகளுக்கும், ட்ராய்க்கும் வராமல்போய் விட்டதா? 

இப்படி ஏர்செல் பிரச்னையை தேமேவெனக் கவனித்து, தற்போது 1.5 கோடி வாடிக்கையாளர்களையும் நட்டாற்றில் விட்டதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் சாதனை!

- மனதில் வலியுடன் ஜெ.ஜெகதீசன். 

அடுத்த கட்டுரைக்கு