Published:Updated:

ஒரிசா: கலெக்டரை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள்!

புவனேஸ்வர், பிப்.23,2011

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஒரிசாவில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஜூனியர் என்ஜினியர் ஆகியோரை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.##~~##

ஒரிசாவில் மல்கான்கிரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஆர்.வி.கிருஷ்ணாவையும், பபித்ரா மஜி என்ற இளநிலை பொறியாளர் ஒருவரையும் மாவோயிஸ்டுகள் புதன்கிழமை கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்தனர்.

இவ்விருவரையும் விடுவிக்க வேண்டுமெனில், மவோயிஸ்டுகளுக்கு எதிரான கூட்டுப்படை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

தங்கள் சார்பில் ஒரிசா மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமேஸ்வர் ராவ், ஹர்கோபால் ஆகியோரை மாவோயிஸ்டுகள் நியமித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தியில், 6 நிபந்தனைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. 5 மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசு ஒப்புக்கொண்டது. மாவோயிஸ்டுகள் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அரசு உறுதியளித்தது.

மேலும், மாவோயிஸ்டுகள் கோரிக்கைப்படி, சிறையில் இருந்த ஸ்ரீராமுலு சீனிவாசலு உள்ளிட்ட 12 மாவோயிஸ்டுகள் மல்காங்கிரியில் உள்ள விரைவு நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுதலை அடைந்தனர். அவர்களின் ஜாமீன் மனுவை மாநில அரசு எதிர்க்கவில்லை.

இதுபோல், மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கந்தி பிரசாதம் உள்பட 5 பிரமுகர்கள், ஜாமீன் கோரி ஒரிசா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இதனால் அவர்களும் விடுதலை ஆக வாய்ப்புள்ளது.

இத்தகைய மாற்றங்களால், கலெக்டரையும், ஜூனியர் என்ஜினீயரையும் விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் ஒப்புக்கொண்டனர். நேற்று இரவு இரு பிணைக்கைதிகளையும் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.

இருவரையும் மத்தியஸ்தர்கள் அழைத்து வந்ததுடன், பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், 7 நாட்கள் நீடித்து வந்த இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.