Published:Updated:

" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு!" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர்

" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு!" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர்
" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு!" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர்

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் சிலர் உயிரழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டிருக்கிறது. 'குரங்கணி' குறித்த நினைவுகளைப் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரிடம் கேட்டோம். 

"இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பத்திக் கேட்டவுடனே ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு. மலைக்காடுகள்ல அப்பப்போ வெப்பதினால் காட்டுத்தீ ஏற்படுவது இயற்கைதான். ஆனா, இந்தமாதிரி சம்பவம் எனக்குத் தெரிஞ்சு நடந்தது இல்லை. ஊருக்குப் போகும்போது காட்டுல சின்னதா தீ எரியிறதைப் பார்த்தாலே மனசு கஷ்டமா இருக்கும். 'அழகர்சாமியின் குதிரை', 'மேற்குத்தொடர்ச்சி மலை' படங்களுக்கு குரங்கணியில் ஷூட்டிங் பண்ணோம். அங்கே போகும்போது 25 பேருக்குத்தான் அனுமதி கொடுப்பாங்க. காரணம், நிறைய ஆபத்தான இடங்களும் அங்கே இருக்கு. தீ பற்றும் ஆபத்து இருப்பதால, அங்க போய் சமைக்க மாட்டோம். மலை அடிவாரத்துலேயே ஏதாவது சமைச்சுக் கொண்டு போயிடுவோம். நமக்குத் தேவைங்கிறதாலதான், இயற்கையைத்தேடி அந்த இடத்துக்குப் போறோம். அங்கேபோய் இயற்கைக்குப் புறம்பா எதுவும் பண்ணக்கூடாது. இப்போ, இந்த விபத்துனால இத்தனை பேர் இறந்திருக்காங்க,  பாதிக்கப்பட்டிருக்காங்க... நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஆனா, அங்கே காட்டு அணில், முயல், வரையாடு, மான், செந்நாய், காட்டு நாய்னு ஏகப்பட்ட உயிரினங்கள் இருக்கு. அந்த உயிரினங்களும் பல அழிஞ்சிருக்கும். இது எல்லாத்தையும்விட தீக்காயம் பட்டவங்களோட நிலைமை இன்னும் மோசமா இருக்கும். முறையான அனுமதி இல்லாம இவங்க அங்கே போயிருக்காங்கனு நினைக்கிறேன். ஏன்னா, வெயில் காலத்துல உள்ளேபோக அனுமதி கொடுக்கமாட்டாங்க. அவங்களுக்கு உள்ள போகுறதுக்கு முன்னாடியே, நெருப்பு எரியிற அறிகுறிகள் தெரிஞ்சிருக்கு. அதைக் கவனிச்சும் கடந்துபோயிட்டாங்கனு நினைக்கிறேன். வேதனையாதான் இருக்கு" என்றவர், அவருடைய குரங்கணி பயணங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார். 

"இப்போ பாதிச்ச இடங்கள்லதான், 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் பண்ணோம். அங்கே விலங்குகள் மட்டுமில்ல.. தேயிலை காபி, ஏலக்காய், மிளகு, நெல்லி, மூலிகைச் செடிகள்னு விளை நிலமாகவும் இருக்கு. அந்த மலைக்காட்டுல ஆங்காங்கே செங்குத்தான இடங்களும் இருக்கு. அதுல ஓடும்போது பிடிமானம் இருக்காது. அதுவும் இவங்க எல்லோரும் சிட்டி கலாசாரத்துல வாழ்ந்தவங்க. இதெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுனு நினைக்கிறேன். நான் போட்டோகிராஃபி பழகும்போது பலமுறை குரங்கணிக்குப் போயிருக்கேன். அங்கே இருக்கிற இயற்கைக் காட்சிகளைப் படம் எடுத்துப் பழகினேன். மலைக்குள்ளே போயிட்டு வெளியே வர்றது கடலுக்குள்ள நீச்சல் அடிச்சு வர்றது மாதிரிதான். எந்தளவுக்கு அழகா இருக்கோ, அதேஅளவுக்கு ஆபத்தான இடமும்கூட. முதல்ல ட்ரெக்கிங் போறவங்களுக்கு அந்த மலையோட வரலாறு நல்லாத் தெரிஞ்சிருக்கணும், எங்கே பள்ளம், மேடுனு தெரிஞ்சு வெச்சிருக்கணும். குறிப்பிட்ட எல்லைக்குமேல போகாம இருக்கிறது சரி. காட்டன் துணிகளைத்தான் போட்டுட்டுப் போகணும், பெர்ஃபியூம் பயன்படுத்தக்கூடாது. சிகரெட், தீப்பந்தம்... இதெல்லாம் எடுத்துட்டுப் போகக்கூடாது. காட்டுல கிடைக்கிறதை வெச்சு சமைச்சுக்கலாம்னு நினைக்கிறது தப்பு. நெருப்பு வாசனை வந்தாலே அலெர்ட் ஆயிடணும். 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் எடுக்கும்போது, காட்டுத்தீ வந்துபோய் ஒரு மாசம் ஆகியிருந்தது. ஆனாலும், காட்டுத்தீயோட தாக்கம் குறையாம இருந்துச்சு. குரங்கணி, கொழுக்குமலை பகுதிகள் எல்லாமே சோலை மாதிரி இருக்கும். ஆனா, முறையான பாதுகாப்போட, கவனத்தோட போனா பயணம் நல்லா இருக்கும். இயற்கை நமக்கான வரம். அதைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நமக்கும் நல்லது. இயற்கைக்கும் நல்லது" என்கிறார், தேனி ஈஸ்வர்.