Published:Updated:

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

இரா.கலைச்செல்வன்

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

இரா.கலைச்செல்வன்

Published:Updated:
ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!
ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

ட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இரோம் சர்மிளா குறித்து ஒரு நாளிதழில் முதன்முதலாக வாசித்தேன். அதைப் படித்த நேரத்தில் இருந்தே அவர் மீது அளவில்லா பற்று ஏற்பட்டுவிட்டது. தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். எனக்குள் அவர் உருவாக்கிய தாக்கம் அளவிட முடியாதது. அதனால்தான் இந்தியா முழுக்க நாடோடியாகப் பயணிப்பது என முடிவெடுத்தபோது, அதில் தவறவிடக் கூடாத இடமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரத்தைச் சேர்த்தேன். காரணம், அது இரோம் சர்மிளா வாழும் மண். தன் மக்களுக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்து, அரசை எதிர்த்து நிற்கும் இரும்பு மனுஷியின் நகரம்.

மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. `நாங்கள் இந்தியர்கள் இல்லை. எங்களுக்கு தனிநாடு வேண்டும்' என்பதை போராட்ட முழக்கமாகக் கொண்டு பல ஆயுதக் குழுக்கள் உருவாகின. இவற்றை ஒடுக்குவதற்காக மத்திய அரசால் 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்.  ஆனால், இது ஆயுதக் குழுக்களைவிட சாதாரண மக்களுக்குதான் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது/இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஒருவரது கையில் ஆயுதம் எனச் சந்தேகிக்கக்கூடிய பொருள் இருந்தாலே அவரை சுடலாம். யாரையும் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யலாம்.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அமலில் இருக்கும் இந்தச் சட்டத்தால் ஏராளமான அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவுகளுக்குக் கணக்கு இல்லை. இந்த நிலை கண்டு கொதித்து எழுந்த மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளா, 2000-ம் ஆண்டு, நவம்பர் 2-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில், இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26. இப்போது சர்மிளாவின் வயது 42. இடைப்பட்ட 16 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஒரு துளி உணவைக்கூட உண்ண வில்லை. ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தவில்லை. சர்மிளாவை கைது செய்து மூக்கில் பிளாஸ்டிக் டியூப் வழியாக திரவ உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி, உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது அரசு. உணவு இல்லாததால் சர்மிளாவின் மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. உடம்பின் பல உறுப்புகள் பலவீனம் அடைந்து தளர்ந்துவிட்டன.

இருப்பினும் தனது கோரிக்கையில் உறுதியுடன், போராட்டத்தை விடாமல் தொடர்கிறார் சர்மிளா.

அன்றைய தினம் ஹோலி. அந்த நாளில்தான் நான் கௌஹாத்தியில் இருந்து இம்பாலுக்கு பஸ் ஏறினேன். மதிய நேரம். அது ஒரு பழைய மாடல் பஸ். எனக்கு அடுத்து ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். பேருந்து தேடுதலால் அயர்ச்சியாக இருந்ததால், சில நிமிடங்களிலேயே உறங்கி விட்டேன். அவ்வப்போது கண் திறந்து பார்ப்பேன். காடுகள் அடர்ந்த அந்த இருட்டில் சலசலப்பது தெரியும்.

வழியில் உணவுக்காக ஒரு தாபாவில் வண்டி நின்றது. என் பக்கத்து இருக்கை முதியவர் மட்டும் வெளியே தனியாக நின்றிருந்தார். அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை முடித்து தன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நான் இம்பால் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னேன். ``ஊர் சுற்றிப் பார்க்கவா?'' என்று கேட்டார்.

‘`இல்லை, நான் இரோம் சர்மிளாவுக்காகச் செல்கிறேன்’’ என்றேன். அவர் முகம் மாறியது. மெல்லிய சோகம் அப்பிக்கொள்ள, என்னைக் கட்டி அணைத்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.
“இங்கு இருப்பவர்களுக்கே இரோமின் போராட்டம் குறித்த மதிப்பு தெரிவது இல்லை. ஆனால், நீ எங்கு இருந்தோ எங்களுக்காக வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?” என்றார். இருவருக்கும் இடையே மிக நீண்ட மௌனம். எங்களைச் சுற்றி இருந்த காடுகளின் பேரமைதி எங்களுடன் சேர்ந்துகொண்டது.

இருக்கையில் அமர்ந்தோம். பேருந்து புறப்பட்டது. எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்த பெரியவர், பேசத் தொடங்கியதும் நிறுத்தவே இல்லை. நிறைய அரசியல் பேசினார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டே இருந்தார். இரோம் சர்மிளாவை, தன் மகளைப் போல கருதுவதாகச் சொன்னார்.

நாங்கள் இம்பாலை நெருங்கிக்கொண்டு இருந்தோம். விடியற்காலை, “நான் தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா... என்னிடம் டென்ட் உள்ளது. அதைக்கொண்டு எங்காவது கூடாரம் அமைக்க முடியுமா?’’ - பெரியவரிடம் கேட்டேன்.

யோசித்தவர் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்தார்,  “நீ… இரோம் சர்மிளாவைத்தானே சந்திக்கப் போகிறாய்?”

“அவரைச் சந்திக்க வேண்டும் என ஆசைதான். ஆனால், மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அவரைச் சந்திப்பது சாத்தியமா என்பது தெரியவில்லை'' என்றேன்.

“முயற்சி செய். இவ்வளவு தூரம் வந்து முயற்சிக்காமல் செல்லாதே. நீ ஏதோ டென்ட் இருக்கிறது எனச் சொன்னாயே. அதை நகரின் மத்தியில் அமைத்துக்கொள். காகிதங்களில்
`I SUPPORT IROM' என எழுதி வைத்துக்கொண்டு அமர்ந்துவிடு. சில மணி நேரங்களிலேயே, ராணுவம், போலீஸ், மீடியா என எல்லாம் வந்துவிடும். மறுநாள் செய்திகளில்
நீ வருவாய். சர்மிளாவுக்காக நீ வந்திருப்பதை அவர் அறிந்தால், அளவில்லா மகிழ்ச்சி கொள்வார். அதுபோதும் அவளுக்கு” என்றார்.

இரோம் சர்மிளா என்னும் மகத்தான போராளி வாழும் மண்ணில், சுற்றித் திரிய வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. ஆனால், இந்த முதியவர் முன்வைக்கும் யோசனை எனக்கு முட்டாள்தனமாகப்பட்டது. கொஞ்சம் பிசகினாலும் என் பாதுகாப்புக்கே ஆபத்தை விளைவிக்கும். வருடக்கணக்கில் சிறையில் அடைப்படவும்கூடும். நான் நிச்சயமாக அதைச் செய்யப்போவது இல்லை.

ஆனால், இரோமைச் சந்தித்தால் என்ன?

காலை 7 மணி. இம்பால். அந்தப் பெரியவரை அழைத்துச் செல்ல அவரின் மகன் வந்திருந்தார். விடைபெறும்போது, “நிச்சயம் முயற்சி செய்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
300 ரூபாய்க்கு ஓர் அறை எடுத்தேன். குளித்து முடித்து, உடை மாற்றினேன். இரோம் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்கள் நினைவில் இருந்தன. ஜவஹர்லால் நேரு மருத்துவமனை. ஸ்பெஷல் வார்டு. அறை எண்: A4.

மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தேன். நிறையக் கட்டடங்கள். எதில் நுழைவது எனத் தெரியவில்லை. யாரிடமும் விசாரிக்கப் பயமாக இருந்தது. ஒருவழியாக, ஆங்கிலம் தெரியாத செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசி உள்ளே நுழைந்துவிட்டேன். வராண்டாவில் அங்கும் இங்கும் சுற்றி அலைவதைப் பார்த்து, செக்யூரிட்டி என்னைப் பிடித்து மிரட்டிக்கொண்டே ஓர் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அந்த மருத்துவமனையின் ஏதோ ஒரு துறைத் தலைவர் வந்தார்.

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்த இரா.கலைச்செல்வன், பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பயணங்கள் மீதுகொண்ட பேரார்வத்தால் வேலையைத் துறந்து இந்தியா முழுக்க 3,500 கி.மீ மோட்டார் சைக்கிளில் சுற்றிவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலை, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் எனச் சுற்றி வருகிறார்.

“என்ன?” என்றார்.

“இரோம் சர்மிளாவைப் பார்க்க வேண்டும்” என்றேன்.

“அனுமதிக் கடிதம் உள்ளதா?”

“இல்லை.”

“வெளியே போ.”

“நான் ஏன் வெளியே போக வேண்டும்? அவரைச் சந்திக்கும் அனுமதி முறையைச் சொல்லுங்கள். நான் பின்பற்றுகிறேன்” என்றேன். மையமாகச் சிரித்தார். அதில் நிச்சயம் திமிர் இருந்தது.

“மணிப்பூர் சிறை அதிகாரியிடம் அனுமதிக் கடிதத்தைப் பெற்று, அதை மணிப்பூர் காவல் துறையிடம் காட்டிக் கையெழுத்துப் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் இருந்து உனக்கு ஒரு சம்மதக் கடிதம் கொடுப்பார்கள். அதை என்னிடம் கொண்டுவர வேண்டும். நான் அதை சரி பார்ப்பேன். எனக்கு விருப்பம் இருந்தால், உன்னை அனுமதிப்பேன்” என்று சொன்னவரின் உதட்டில் அத்தனை ஆணவம்.

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை... என்ன செய்வது எனவும் தெரியவில்லை.

“சார் ப்ளீஸ்… அவர் எந்த வார்டில் உள்ளார் என்பதையாவது சொல்லுங்கள்.”

“செக்யூரிட்டி... இவரைத் தூக்கி வெளியே போடு.”

செக்யூரிட்டி, என்னை அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே அனுப்பினார். `மீண்டும் உள்ளே வரக் கூடாது' என்றும் எச்சரித்தார்.

ஆனால், நான் மீண்டும் அந்த வளாகத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தேன். இங்குதான் எங்கோ என்னுடைய ஆதர்சப் போராளி இரோம் இருக்கிறார். அவரை இன்று எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. முடியாவிட்டால், இதோ இங்கேயே அந்தப் பெரியவர் சொன்ன மாதிரி டென்ட் போட வேண்டியதுதான் என முடிவு செய்தேன்.
யோசனையோடு நடக்கையில், அந்தக் கட்டடத்துக்கு இன்னொரு வாயில் இருப்பதைக் கண்டேன். அங்கே ஒரு மருத்துவ மாணவியிடம், மெல்லிய குரலில் இரோம் சர்மிளா இருக்கும் இடம் குறித்துக் கேட்டு அறிந்தேன்.

அந்த மாணவி சொன்ன அடையாளங்களை வைத்து  ஸ்பெஷல் வார்டைக் கண்டுபிடித்துவிட்டேன். அந்த வார்டுக்குள் நுழைய ஒரு நுழைவாயில் இருந்தது. அதற்குப் பின்னால், உள்ளிருப்பது தெரியாத மாதிரி, பச்சை நிறத் திரை. அதற்கு முன்னால் எந்நேரமும் நோட்டமிட்டபடி துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள். எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என்பதைத் தவிர, எனக்குள் வேறு எந்த எண்ணமும் இல்லை.

நான் காவலர்கள் நகரும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அரை மணி நேரம், இரண்டு மணி நேரமானது. நிச்சயம் அவர்களில் ஒருவராவது நகருவார் என நம்பினேன். திடீரென வராண்டாவில் ஒரே பரபரப்பு. விபத்தில் சிக்கியிருந்த ஒருவரை அனுமதிப்பதில் பிரச்னை. அங்கு கூட்டம் கூடி சண்டையிட்டுக் கொண்டிருந்தது. காவலாளிகள் அந்தக் கூட்டத்துக்குள் நுழைய, நான் எலியைப்போல உள்ளே நுழைந்துவிட்டேன்.

அந்த ஸ்பெஷல் வார்டினுள் பேரமைதி. அறைகளைப் பார்க்கிறேன். A1, A2, A3, A5 என இருந்தன. எனக்குத் தேவையான A4 மட்டும் காணவில்லை. வெறும் A என எழுதியிருந்த ஓர் அறைதான் இருந்தது. இதுதான் சர்மிளா வுடையதாக இருக்க வேண்டும் என அனுமானித்தேன்.

புத்தகத்தினுள் ஒளித்துவைத்திருந்த என்னுடைய மொபைல் மூலம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். `உள்ளே நுழையலாமா... வேண்டாமா?' என எனக்குள் ஒரு தயக்கம். அமைதியாக இருந்த இடத்தில் காலடிச் சத்தம். `மாட்டிக்கொண்டேன்' எனப் பதற்றமாகி என்னுடைய இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது. எனக்குப் பின்னால் ஒரு நர்ஸ் வந்தார்.  என்னைப் பார்த்து மணிப்பூரியில் ஏதோ கேட்டார். எனக்குப் புரியவில்லை. நான் அந்த அறையைக் காட்டி ‘`அது சர்மிளாவுடையதா?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

“ஆம்” என்று சொன்னதோடு, “நீ யார்… அனுமதிக் கடிதம் உள்ளதா?” என்று கேட்டார்.

நான் என் இரு கைகளையும் கூப்பி, “தயவுசெய்து உதவிசெய்யுங்கள். ஒரு நொடி மட்டும் இந்தக் கதவைத் திறங்கள். ஒரே ஒரு நொடி… சர்மிளாவை ஒருமுறை பார்த்துவிட்டு உடனே சத்தம் இல்லாமல் இப்படியே போய்விடுகிறேன்” எனக் கெஞ்சினேன்.

காவலர்களை அழைத்து வந்துவிடுவதாக மிரட்டினார். நான் கைகள் கூப்பி, ``ப்ளீஸ்...'' என்றேன். அங்கே இருந்த வேறு மூன்று நர்ஸ்களை அழைத்துக் கொண்டு வந்து, என்னை வெளியேற்ற வந்தார். அவர்கள் நால்வரும் சேர்ந்து, என்னை மறுமுனையில் இருக்கும் கேட்டுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள். ஒரு பச்சை நிறத் துணிக்கு அந்தப் பக்கம் சர்மிளாவும் இந்தப் பக்கம் நானும் இருந்தோம். அந்த கேட்டை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டிருந்தனர் நர்ஸ்கள். அப்போது அங்கு இருந்த ஓர் அறையில் இருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் நான் புகைப்படங்களில் மட்டுமே பார்த்த அந்த உருவம்… வெள்ளை நிற சால்வை, சுருள் முடி முகத்தில் விழுந்திருக்க, மூக்கில் இருந்து அந்தக் குழாய் தொங்கிக்கொண்டிருக்க அந்த நொடியில் நான் அடைந்த ஆனந்தம், நான் கொண்ட பரவசம்… அது ஒரு மேஜிக் மொமன்ட். அது இரோம் சர்மிளா! 

என்னைப் பிடித்திருந்தவர்களைத் தள்ளிவிட்டு, அவரிடம் பாய்ந்தோடினேன்.

“உங்களைப் பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். எனக்காக சில நிமிடங்களை ஒதுக்க முடியுமா?’’ என்றேன்.

யோசித்தவர், அந்த நர்ஸ்களை அழைத்து மணிப்பூரியில் ஏதோ சொன்னார். பின்பு, என்னைப் பார்த்து “என்னோடு வாருங்கள்” என்றார்.

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

அந்த வராண்டாவின் ஓர் ஓரத்தில் நர்ஸ்கள் ஓய்வெடுக்கும் அறை ஒன்று இருந்தது. அங்கே சென்றோம். இரண்டு கேட்டிலும் நர்ஸ்கள் காவலுக்கு நின்றார்கள்.

புகைப்படம் எடுக்காமல்விட்டிருந்தால், அந்தச் சந்திப்பு என் அதீதக் கற்பனை என்றே நினைத்திருப்பேன். இருவருமே சில விநாடிகள் அமைதியாக இருந்தோம். என்ன சொல்வது, எங்கு இருந்து தொடங்குவது, எப்படிப் பேசுவது... நான் ஸ்தம்பித்திருந்தேன்.

அவரே ஆரம்பித்தார்...

“யார் நீ?”

இரண்டே நிமிடங்களை எடுத்துக்கொண்டு, நான் யார், எங்கு இருந்து, எதற்காக வந்தேன் என்ற முழுக்கதையையும் சொன்னேன். கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

“எனக்காக ஒரு உதவி செய்வாயா?”

“நிச்சயம் செய்வேன். சொல்லுங்கள்.”

“உன் பேனாவையும், துண்டு பேப்பரையும் கொடு”.

கொடுத்தேன். அதில் எதையோ எழுதினார்.

“இந்தச் செய்தியை எனக்காக ஒருவரிடம் சேர்ப்பாயா?”.

“நிச்சயம்”.

“காவல் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால், என் குடும்பத்தினரைச் சந்திப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. நீ என்னைச் சந்தித்ததை நான் பெரும் நிகழ்வாக எடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.

ஒரு சிறிய அறை, வெளியே கொஞ்சம் நீளமான 10 மீட்டர் வராண்டா, அவர் வளர்க்கும் சில பன்றிக்குட்டிகள், 16 ஆண்டுகளாக இரோம் சர்மிளாவுக்கு இதுதான் உலகம். தன்னுடன் பேச ஒரு துணை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை அவருடைய முகத்தில் பார்த்தேன். சில நிமிடங்களில், தன் ஒட்டுமொத்த வாழ்வின் அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள முயன்றார். முதலில் கொஞ்ச நேரம், அரசியல் பேசினார்.

“சட்டம் என்பது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, எதிரானதாக இருக்கக் கூடாது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) என்பது, மக்களுக்கு எதிரான, அவர்களுக்கு பெரும் இன்னல்களைத் தரக்கூடிய ஒரு கொடூரமான சட்டம். என் போராட்டம் நியாயத்தின் அடிப்படையில் ஆனது. மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, பாதுகாப்போடும் சுயமரியாதை யோடும் வாழவைப்பதே என் நோக்கம். ஆயுதப் போராட்டத்தில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.''

பிறகு, தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசத் தொடங்கினார். ஒரு குழந்தை கை, கால்களை ஆட்டி ரைம்ஸ் சொல்வதைப்போல, தன் கை, கால்களை அசைத்தபடி, தனக்கு வந்த கனவுகள், தான் எதிர்காலத்தில் வாழ நினைக்கும் வாழ்க்கை என நிறையப் பேசினார். ‘`இப்போது எல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகிவிட்டது’’ என்றார்.

இரோம் சர்மிளாவை Desmond Coutinho என்ற ஆங்கிலோ – இந்தியர் காதலிக்கிறார். சர்மிளாவும் அவரைக் காதலிக்கிறார். இருவரும் அதிகம் சந்தித்துக்கொண்டது இல்லை. கடிதங்கள் மட்டுமே இவர்கள் உரையாடுகிற ஒரே வழி. சில வருடங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை இரோம் வெளியில் சொல்ல, அது மணிப்பூரில் இரோமை ஆதரிப்பவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இரோமின் போராட்டத்துக்கு பெரும் ஆதரவாக இருந்த மணிப்பூரின் `மெய்ரா பெய்பீஸ்' என்ற பெண்கள் அமைப்புகூட, இந்த விவகாரத்தில் இரோமுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இதன் உச்சமாக, `வெளிநாட்டுக்காரனைக் காதலிக்கிறாயா...உன்னை கௌரவக்கொலை செய்துவிடுவோம்' என்ற மிரட்டல்களும் வந்தன.

“என்னை எதிர்ப்பவர்களைவிட… ஆதரிப்பவர்கள்தான் என்னை அதிகம் காயப்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் நான் அரசை எதிர்க்கும் ஓர் இயந்திரம். ஆனால், நான் ஒன்றும் கடவுள் அல்ல. சாதாரண பெண்மணி. எனக்கு என் வாழ்க்கையை வாழ எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், என்னை ஆதரிப்பவர்கள், எப்போதும் நான் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது என்னுடைய கடமை என நினைக்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருப்பதும், என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதும் துரோகம் என நினைக்கிறார்கள்'' என்றார்.

நீண்ட அமைதி... நர்ஸ்கள் தூரத்தில் பதற்றமாகிறார்கள். `சீக்கிரம்... சீக்கிரம்' என சைகை காட்டுகிறார்கள். எந்த நேரமும் காவலாளிகள் வந்துவிடலாம். ஆனால், சர்மிளா பொறுமையாகப் பேசுகிறார்.

“எனக்குத் தெரியும். நான் யாருக்காகப் போராடுகிறேனோ, அந்த மக்களுக்கே என்னைப் பிடிப்பது இல்லை. அவர்கள் என்னை எந்நேரமும் விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் சோர்ந்துவிட மாட்டேன். யார் என்னை அங்கீகரித்தாலும் மறுத்தாலும் என் போராட்டம் இறுதி வரை தொடரும்” மீண்டும் மௌனிக்கிறார்.

ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

“இப்போது எல்லாம் நீண்ட தனிமையில் நாள்கணக்கில் கிடக்கும் போது, `கிடைக்கவே கிடைக்காத ஒன்றுக்காகக் காத்திருக்கிறோமோ?' என யோசிக்கத் தொடங்குகிறேன். முன்னர் இருந்த பொறுமை இப்போது இல்லை. `சீக்கிரமே அரசாங்கம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும். என் போராட்டம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்' எனத் தோன்றுகிறது. என் எதிர்காலக் கணவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன். என் கைகளால் உணவை எடுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது. தண்ணீர் குடிக்க வேண்டும். 16 ஆண்டு காலமாகப் பார்க்காமல் இருக்கும் என் அம்மாவைப் பார்க்க வேண்டும்... என நிறைய ஆசைகள் இருக்கின்றன. அதற்கு என் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்'' - யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பில் கண்களில் ஒளிவீசப் பேசினார் சர்மிளா. ஒரு நர்ஸ் பதற்றமாக ஓடி வந்தார். மணிப்பூரியில் ஏதோ சொன்னார்.

சர்மிளா உடனே அவசரமாக எழுந்து நின்றார். என்னை நோக்கி, “உடனே இந்த இடத்தைவிட்டு எவ்வளவு தூரமாகப் போக முடியுமோ, போய்விடு... சீக்கிரம் கிளம்பு” என்று பதறுகிறார். நான் எழுந்து, என்னிடம் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“முட்டாள் இளைஞனே... என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. முதலில் நீ இங்கு இருந்து தயவுசெய்து கிளம்பு” என்று கடிந்துகொண்டார்.

“பரவாயில்லை. நான் கொடுத்த ஏதோ ஒன்று குப்பையாகவாவது உங்களிடம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று அவர் கையில் திணித்துவிட்டு, அவசரமாக வெளியேறினேன்.
இரவு, மணிப்பூரில் YAOSHANG என்ற உள்ளூர் திருவிழா நடந்துகொண்டிருந்தது. மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எதுவும் என் காதுகளில் விழவில்லை. நான் கணினி முன் அமர்ந்து, இரோம் சர்மிளா தன் காதலர் Desmond Coutinho-க்கு எழுதித் தந்த கடிதத்தை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். சில வரிகள்தான், ஆனால் அதில் இருந்தது, ஒரு போராளியின் பேரன்பு!