Published:Updated:

ஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக!
ஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக!

- அர்ச்சனா கபூரின் அசத்தல் பயணம்சமூக சேவை

பிரீமியம் ஸ்டோரி
ஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக!

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் எஃப்.எம் ரேடியோ சேனல்களின் மத்தியில், சமுதாய மறுமலர்ச்சிக்கென தன்னை அர்ப்பணித்து தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது, ‘ரேடியோ மேவாட்’ 90.4. எஃப்.எம்’. அதன் மூளை, இதயமாக இருப்பவர், ஒரு பெண்... அர்ச்சனா கபூர்!

ஹரியானாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் மேவாட். 1999-ம் ஆண்டு கடும் வறட்சியினால் 20 ஆயிரம் ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க முடி யாமல், இங்கு விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பத்திரிகையில் படித்தார் டெல்லியைச் சேர்ந்த அர்ச்சனா கபூர். ஹார்டுநியூஸ் மீடியா ஆங்கில மாத இதழின் பதிப்பாளர், குறும்படத் தயாரிப்பாளர், கதாசிரியர் என்று பன்முகம் கொண்ட அர்ச்சனா, மோவோட் மாவட்டத்தின் நிலையை மாற்ற களத்தில் இறங்கினார்... எஃப்.எம் என்ற கருவியுடன்! இன்று அவரின் எஃப்.எம் ரேடியோ தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றுள்ளது.

அர்ச்சனாவிடம் பேசினோம். ‘‘மேவாட் மாவட்டத்தில் கல்வி பயின்றவர்கள் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே. 5 சதவிகித மக்களே தொலைக்காட்சி வைத்திருந்தனர். ஆனால், இங்கு மொபைல் போன் பட்டிதொட்டியெல்லாம் ஊடுருவி இருந்தது. எனவே, மொபைலின் மூலம் எஃப்.எம் ரேடியோ வாயிலாக அவர்களைச் சென்றடைய முடிவெடுத்தேன். வானொலி நிலையம் அமைக்க விண்ணப்பித்து, 2010-ல் அனுமதி பெற்றேன்.

இங்குள்ள மக்களின் பாரம்பர்ய நாடோடிப் பாடல்களின் இசை வடிவத்துக்கு ‘மிராசி’ என்று பெயர். எனவே, அவர்களது மத நம்பிக்கை மற்றும் கலாசாரத்தை நன்கு அறிந்த உள்ளூர்க்கார மிராசி பாடகர்களையே வானொலி நிலையத்தில் பணிக்கு அமர்த்தினேன். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம், அந்தப் பாடகர்களைக் கொண்டு கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம், சுற்றுச்சூழல், தூய்மை, பெண் கல்வி குறித்துப் பாடல்களை எழுதி பாடச்செய்து நிகழ்ச்சிகளை வழங்கினோம்.

ஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக!

முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பாடமாகக் கேட்கும் ‘முதியோர் குரல்’ நிகழ்ச்சியில் அந்த ஊர்ப் பெரியவர்கள் பங்குபெற்றார்கள். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரச்னைகளைப் பேசும் ‘கிராமத்தின் குரல்’ நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர், காவல்துறை உயர் அதிகாரிகளைப் பங்குபெறச் செய்து உடனடியாக பிரச்னைகள் தீர உதவினோம். ‘ஹலோ போலீஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மாவட்ட காவல்துறை தனியாக தொலைபேசி உதவி மையம் அமைக்க உதவினோம். மக்கள் தங்கள் குறைகளை போனிலேயே தெரிவித்து, தீர்வும் பெற்றனர். ‘எனது உரிமை’ நிகழ்ச்சியில் பிரதமரின் ‘ஸ்வச் பாரத்' (தூய்மையான பாரதம்) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை அமைக்க உதவினோம்.

வங்கி சேமிப்புக் கணக்கு துவங்குதல், கல்வி மற்றும் விவசாயக் கடன், காப்பீடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரச்னைகளையும் தீர்க் கிறோம். சமீபத்தில் நல்ஹாட் மருத்துவக் கல்லூரியில் கருவிகள் இல்லாமல் மக்கள்

அவதிப்படுவதை அரசு அதிகாரிகளின் கவனத் துக்குக் கொண்டு சென்று, உடனடியாக உபகரணங்கள் வழங்கச்செய்தோம். இப்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் அடையாளமாகவே எங்கள் ரேடியோவைப் பார்க்கிறார்கள். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து, மக்களின் குரலாக, அவர்களின் மேடையாகவே எங்கள் ரேடியோ வளர்ந்திருக்கிறது’’ என்று பெருமிதப்படுகிறார் அர்ச்சனா.

இந்தப் பண்பலையின் சேவையைப் பாராட்டி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இரண்டு விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது. இந்த ஆண்டு உலக ரேடியோ தினத்தன்று, புதுமையான முறையில் மக்களைக் கவரும் வண்ணம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கான சிறப்புப் பரிசை, யுனெஸ்கோவிடம் பெற்றிருக்கிறது ‘ரேடியோ மேவாட்’.

‘‘இப்போது ஒரு நாளைக்கு 15 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறோம். மக்களின் அன்றாடப் பிரச்னைகளின் குறை தீர்க்கும் மையமாக மாறிவிட்ட எங்கள் பண்பலை வேலைகளில், தொடர்ந்து வாய்ப்புக்களைத் தேடி, காதுகளைத் தீட்டிக்கொண்டு, நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதுவே எங்கள் வெற்றியின் ரகசியம்!’’

- சமூக சேவை தந்த மனநிறைவுடன் சிரிக்கிறார், அர்ச்சனா கபூர்!

ஸ்ரீலோபாமுத்ரா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு