Published:Updated:

இதுவே கடைசியாக இருக்கட்டும்!

இதுவே கடைசியாக இருக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவே கடைசியாக இருக்கட்டும்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

இதுவே கடைசியாக இருக்கட்டும்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
இதுவே கடைசியாக இருக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவே கடைசியாக இருக்கட்டும்!
இதுவே கடைசியாக இருக்கட்டும்!

30-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன், உடல் உருக்குலைக்கப்பட்டு, குடல் உருவப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த கேரளப் பெண் விவகாரம் நாட்டையே பதற வைத்திருக்கிறது.

 கேரளாவின் பெரும்பாவூர் என்னும் பகுதியில் தன் குடும்பத்தினருடன் சிறிய அறை ஒன்றில் நெருக்கியடித்து வாழ்ந்துவந்த அந்தப் பெண்ணை உயிரற்றச் சடலமாக முதன்முதலில் பார்த்தவர், அவரின் அம்மா. அவரால் மகளின் மரணத்தை ஏற்கவே முடியவில்லை.

`அவள் குழந்தையாக இருந்த நாள் முதல் தினமும் அவளுடன்தான் சாப்பிடுவேன். இனி நான் மட்டும் எப்படித் தனியாகச் சாப்பிடுவது? அவள் எங்கு இருக்கிறாளோ... என்ன கஷ்டப் படுகிறாளோ, சாப்பிட்டாளோ இல்லையோ...’ என அவர் அழும்போது எப்படி பதில் அளிப்பது எனத் தெரியாமல் திகைத்துநிற்கிறார்கள் சுற்றத்தினர்.

எர்ணாக்குளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க ஆரம்பித்து, ஓர் ஆண்டுக்குமேல் தொடர முடியாமல் விலகிவந்துவிட்டார் அந்தப் பெண். மாவுமில் முதல் பல்வேறு இடங்களில் சின்னச்சின்ன வேலைகள் செய்து ஈட்டிய பணத்தைக்கொண்டு குடும்பம் நடத்துவதே சிரமமாக இருந்தது. இதனால் சட்டப்படிப்பும் ஓர் ஆண்டிலேயே கானல்நீராகிப்போனது.

இருந்தும், தேவாலயங்கள் முதல் மசூதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் ஏறி இறங்கினார் அந்தப் பெண்ணின் தாய். `என் மகளின் படிப்புச் செலவை, யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? அவள் படித்து முடித்துவிட்டால் வீடே பிரகாசமாக மாறிவிடுமே!, `அம்மா, இனி நீ வேலைக்குப் போக வேண்டாம்' என என்னை அதட்டி உட்காரவைத்துவிட மாட்டாளா? தவிரவும், அவள் தனக்காகவும் எனக்காகவும் மட்டுமா படிக்கிறாள்? `அம்மா, நான் நிறையப் படித்து முடித்த பிறகு, நம்மைப் போன்ற ஏழைகளையும் ஒதுக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற பாடுபடுவேன்' என்று அல்லவா வாக்கு கொடுத்திருந்தாள். எங்கே தவறு நடந்தது? யார் கலைத்தது இந்தப் பெருங்கனவை? என் மகள் ஏன் ரத்த வெள்ளத்தில் கிடக்க வேண்டும்?' - தன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த ஆதங்கங்களை ஒவ்வொன்றாக இறக்கிவைத்தார் அந்தப் பெண்ணின் தாய்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர்களின் குடும்பத்துக்கு ஒரு வீடு வழங்கப்பட்டது. மகிழ்ச்சியோடு குடியேறினார்கள். ஆனால், அக்கம் பக்கத்தினரின் கடுகடுத்த முகங்களையும், வெறுப்பை உமிழும் பார்வைகளையும் தரிசித்தபோதுதான் அவர்களுக்குப் புரிந்தது, நம் சாதியே இதற்கு காரணம் என்று. அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வரும் தண்ணீர்க் குழாய், அருகில் இருப்பவர்களால் உடைக்கப்பட்டது. `இந்த 40 ஆண்டுகளில் வசவுகளும் அவமரியாதைகளும் இல்லாத நாள் என ஒன்றுகூட இல்லை’ என்கிறார் அவரது சகோதரி .

கடந்த ஏப்ரல் 28-ம் தேதியே அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப் பட்டுவிட்டது என்றாலும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை. மாநில அரசு தலையிடவும் இல்லை. பிறகு, நமக்கு எல்லாம் இப்போது மிகவும் பழக்கப்பட்டுப்போன விஷயங்கள் அடுத்தடுத்து நடந்தன. இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு நீதி கேட்கும் குரல்கள் வலுவாகப் புறப்பட்டன. கேரளா அரசு ஏன் அமைதி காக்கிறது, கொலையாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையே ஏன், இது தேசியக் கவனத்தைப் பெறாததற்கான காரணம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான எளிய பதில், `பொருளாதாரரீதியில் மட்டும் இன்றி, சமூகரீதியிலும் அந்தப் பெண் பின்தங்கியவர்' என்பதுதான். இந்தியா முழுவதும் உள்ள 167 மில்லியன் தலித் மக்களில் அவரும் ஒருவர். இந்தப் பெரும் பிரிவின் மீது அன்றாடம் நிகழ்த்தப்பட்டுவரும் கொடுமைகளும் கொடூரங்களும் மிக மிக அரிதாகவே பதிவுசெய்யப்படுகின்றன; விசாரிக்கப் படுகின்றன. அவற்றில் வெகுசிலவே மக்களின் மனசாட்சியை உலுக்குகின்றன. கல்வியில் முன்னேறியுள்ள கேரளாவிலேயே இப்படி ஒரு நிலை என்னும்போது, பின்தங்கிய ஏனைய மாநிலங்களில் உள்ள பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி ஒரு சிறு முனகல் ஒலியைக்கூட நம்மால் கேட்க முடியாது என்பதே யதார்த்தம். அவர்களுக்கு எல்லாம் பெயர்சூட்ட மீடியாவோ, ஹேஷ்டேக் போட இணையமோ முன்வருவது இல்லை.

ஒரு தலித் பெண்ணாக இருப்பது என்பது, இரண்டு தோள்களிலும் இரு சிலுவைகளை எந்நேரமும் சுமந்துகொண்டிருப்பதற்கு ஒப்பானது. இவற்றோடு சேர்த்து அந்தப் பெண் தன் சட்டப்படிப்புக் கனவுகளையும் சமூகத்தை மாற்றியமைப்பது பற்றிய லட்சியக் கனவு களையும் சுமந்துகொண்டிருந்தார். தன் குடும்பத்தை மாற்றவேண்டுமானால் சமூகத்தையும் சேர்த்தே மாற்றியாக வேண்டும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

அந்தப் பெண்ணின் கனவுகளைவிட அவரின் உடல்தான் சுற்றிலும் வசித்த சில ஆண்களைக் கவர்ந்தது. பாலியல் சீண்டலுக்கு பல முறை ஆளான இவர், காவல் துறையை அணுகினார். அங்கு எந்தவித உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை. `அந்தப் பெண் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பல்வேறு பெண்ணிய அமைப்புகள் குரல்கொடுத்த பிறகே காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. அரசு எந்த அளவுக்கு இத்தகைய விஷயங்களில் அலட்சியமாக இருக்கிறது என்பதை இதில் இருந்தே உணர்ந்துகொள்ளலாம்’ என்கிறார் `தி டெலிகிராஃப்' இதழுக்கு பேட்டி அளித்துள்ள ரஞ்சனா குமாரி என்பவர். டெல்லியில் உள்ள ஒரு பெண்ணிய அமைப்புக்காகப் பணியாற்றிவரும் இவர், `நான் பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான சம்பவம் இது' என்கிறார்.

2012-ம் ஆண்டில் டெல்லி மருத்துவ மாணவிக்கும் இதுவேதான் நடந்தது. இந்தப் பெண்ணைப் போலவே, அவரும் மோசமாகச் சிதைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டார். அவருடைய உடலோடு சேர்த்து கனவுகளும் துண்டாடப்பட்டன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 93 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள். இவற்றில் 90 சதவிகித வன்முறைகள் பதிவுசெய்யப்படுவதே இல்லை.

அந்த கேரளப் பெண் இறந்து ஒரு வாரம் முடிந்து அலை அலையாக மக்கள் போராடத் தொடங்கிய பிறகு, அரசின் அலட்சியம் குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்த பிறகு, அவரது தாயாரை சென்று சந்தித்திருக்கிறார் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி. `குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். தண்டனை உறுதிசெய்யப்படும். மாணவியின் குடும்பத்தினருக்கு எல்லாவிதமான உதவிகளும் செய்யப்படும்' என்பன போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதற்கு இடையில், `அண்டை மாநிலங்களைச் சேர்ந்த கூலிகளால்தான் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்' என்னும் உறுதி செய்யப்படாத தகவல், இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு தேடி வரும் பிற மாநிலத்தவர்கள் மீது சிலர் பாய்ந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசாரங்களை சிலர் இணையத்திலும் வெளியிலும் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஆபத்தான போக்கு மட்டும் அல்ல... விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியும்கூட.

காரணம், சில தனிநபர்களைக் கண்டறிந்து தண்டிப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது. சமூகத்தில் படர்ந்து பரவி யிருக்கும் சாதிய மனோபாவத்தையும் ஆணாதிக்கச் சிந்தனைகளையும்தான் நாம் தண்டிக்க வேண்டும். இந்த இரண்டையும் எதிர்கொண்டு வீழ்த்துவதைப் பற்றித்தான் நாம் முதன்மையாகவும் தீவிரமாகவும் பேசியாக வேண்டும்.

அதற்கு, முதலில் அந்தப் பெண்ணின் கனவுகளை நம் கனவுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய லட்சியங்களை நம் லட்சியங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்!