Published:Updated:

சூரிய யுத்தம்!

சூரிய யுத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
சூரிய யுத்தம்!

பு.விவேக் ஆனந்த், படம்: க.தனசேகரன்

சூரிய யுத்தம்!

பு.விவேக் ஆனந்த், படம்: க.தனசேகரன்

Published:Updated:
சூரிய யுத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
சூரிய யுத்தம்!
சூரிய யுத்தம்!

டுங்கோடை தொடங்கிவிட்டது. தகிக்கும் வெப்பத்தின் சூடு, ஒவ்வொரு நாளும் உச்சம் தொடுகிறது. தாங்க முடியாத வெயிலுக்கு மனித உயிர்களும் பலியாகின்றன. இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெயிலுக்குப் பலியானோர் எண்ணிக்கை சுமார் 2,500. இந்த ஆண்டும் ஏராளமான மரணங்கள் நிகழத் தொடங்கியிருப்பதாக செய்திகள் அச்சமூட்டுகின்றன.

ஜெயலலிதாவின் விருத்தாசலம் மற்றும் சேலம் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, வெயில் தாங்காமல் ஹீட் ஸ்ட்ரோக் வந்து  நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் மயக்கம் அடைந்தனர். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால், `மதிய நேரத்தில் அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்' என அறிவுறுத்துகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

குழந்தைகளையும் முதியவர்களையும்  கடுமையாகத் தாக்கும் சன் ஸ்ட்ரோக்  குறித்து மருத்துவர் எழிலனிடம் பேசியபோது, ``மனிதர்களுக்கான உடல் வெப்பநிலை சராசரியாக 37 டிகிரி (98.6 ஃபாரன்ஹீட்) இருக்கும். தற்போது வெயில் பல இடங்களில் 40 டிகிரிக்கும் மேல் கொளுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் உடலில் அதிக வெயில் படும்படி நின்றால், வெளிப்புறத்தில் நிலவும் வெப்பம் நமது உடலுக்குள் கடத்தப்படும். உடலுக்கு அதிக வெப்பம் வருவதை மூளை  கவனித்து, உடனடியாக வியர்வையை வெளியேற்றி வெப்பத்தைத் தடுக்கும். வியர்வை மட்டும் இன்றி சிறுநீர், மலம் கழிப்பதன் வாயிலாகவும், மூச்சு விடுவதன் மூலமாகவும் உடலுக்குள் இருக்கும் வெப்பம் வெளியேற்றப்படுகிறது. உடலின் அதிக வெப்பத்தை அப்படி வெளியேற்ற முடியாத சமயங்களில்தான் `ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது.

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 55 - 60 வயதைத்   தாண்டிய முதியவர்களுக்கும்தான் ஹீட் ஸ்ட்ரோக்கால் அதிக அளவில் பிரச்னைகள் ஏற்படும். இவர்களுக்கு, வியர்வைச் சுரப்பிகள் குறைவாக  இருக்கும். சிலருக்கு  வியர்வைச் சுரப்பிகளின் செயல்திறன் சராசரியைவிட குறைவாக இருக்கும். சாதாரணமாக மனிதர்கள் அதிக வெயில் படும் பகுதிகளில் இருந்தால், உடலின் வெப்பநிலை மெள்ள மெள்ள உயரும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலோ அல்லது வியர்வைச் சுரப்பிகள் சரியாக வேலைசெய்யவில்லை என்றாலோ, உடலின் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்.  உடலின் உட்பகுதி வெப்பநிலை 40 டிகிரியைத் (104 ஃபாரன்ஹீட்) தாண்டினால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பாதிக்கப்படும். அதீத வெப்பத்தைத் தாங்க முடியாமல் உடல் உறுப்புகள்  ஒவ்வொன்றாகச் செயல் இழக்க ஆரம்பிக்கும். அதன் இறுதிக்கட்டம்தான் மூளையும் இதயமும் பாதிக்கப்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவது. உடனடியாக முதல் உதவி செய்யவில்லை என்றால், மரணம்கூட நிகழலாம்.

சூரிய யுத்தம்!

விவசாயிகள், மில், சுரங்கம் போன்றவற்றில் வேலைசெய்பவர்கள், அதிக பயிற்சிசெய்யும் தடகள வீரர்கள்... போன்றோர் வெயில் காலத்தில் போதிய அளவுக்குத் தண்ணீர் அருந்தவில்லை எனில், ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.'' 

ஹீட் ஸ்ட்ரோக் எப்படி வருகிறது?

``அதிக வெப்பநிலை நிலவும் இடத்தில் நாம் அதிக நேரம் இருக்கும்போது, வெவ்வேறு பாதிப்புகள்  ஒவ்வொன்றாக வரும். வெயிலில் வியர்வை வழியாக உடலில் உள்ள நீர் மட்டும் அல்ல பொட்டாசியம், சோடியம் போன்றவையும் வெளியேறுகின்றன. உடலில் இருந்து அதிக அளவிலான உப்புச்சத்துக்கள் வெளியேறினால், தசைகள் வலுவிழக்கும்; தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சூரிய யுத்தம்!

அதிக வெயிலால் மூளையில் ஹார்மோன்கள் சமச்சீரின்றி சுரக்கும். இதனால் கோபம், எரிச்சல், குழப்பமான மனநிலை உண்டாகும். கடுமையான வெயிலில் நடமாடினால், உடலுக்குள் 104 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்தச் சமயத்தில், மூளை குழம்பி உளறுவார்கள்; கல்லீரலில் என்சைம்கள் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தசைகள் பலம் இழப்பதால், சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதயம் தாறுமாறாகத் துடித்து, கடைசியில் மரணம் ஏற்படும். இவை எல்லாம் சிலருக்கு வெறும் 10-15 நிமிடங்களில் நிகழலாம். மதியம் 12-1 மணியளவில் நிலவும் வெப்பத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நடமாடலாம் என  நினைக்க வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் மாலை 4-5 மணி வரையிலும்கூட கடுமையான வெயில் நிலவுகிறது. வயது ஆக ஆக, நமது உடல் உறுப்புகள் தொய்வடையத் தொடங்கும். வியர்வைச் சுரப்பிகள் சரியாகச் செயல்படாது. இதனால் முதியவர்கள் குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்துக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலில் வெளியே சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது'' என்கிறார் டாக்டர் எழிலன்.

முதல் உதவி என்ன?

சூரிய யுத்தம்!

ஹீட் ஸ்ட்ரோக்கால் எவரேனும் பாதிக்கப்பட்டுப் புலம்புவதைக் கவனித்தால், அவரை வெப்பநிலை குறைவான பகுதிக்கு உடனே மாற்ற வேண்டும். தலையோடு சேர்த்து உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றலாம். நினைவு இருந்தால் நீர் மோர், தண்ணீர் போன்றவை கொடுக்கலாம். ஒருசிலர் கோமாவுக்குச் செல்லும் நிலையில் இருப்பர். அவர்களுக்கு, தண்ணீர் கொடுத்து பயன் இல்லை. அவர்களுக்கு ஊசி  மூலமாக உடலின் வெப்பநிலையைக் குறைக்கும்  ஐ.வி திரவத்தை ஏற்ற வேண்டும். அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

ஹீட் ஸ்ட்ரோக்கைத் தடுக்கும் எட்டு வழிகள்

• இதயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும், 3.5 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை தினமும் குடிக்க வேண்டும்.

• மோரில் உப்பு போட்டுக் குடிப்பது மிகவும் நல்லது. அதில் சோடியம் சத்து இருக்கிறது.

• வெயில் காலத்தில் சோடா குளிர்பானம் குடிப்பதால் எந்த நன்மையும் இல்லை. அஜீரணம்தான் ஏற்படும்.  இளநீரில், இயற்கையாகவே பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இதில் தண்ணீர் சத்துடன் உடலுக்கு அவசியம் தேவையான உப்புச்சத்துக்களும் கிடைக்கின்றன.

• வெயிலில் அதிக தூரம் செல்லவேண்டியிருந்தால், அவ்வப்போது தர்பூசணி, பதநீர் போன்றவை சாப்பிடலாம். தண்ணீர் அடிக்கடி பருக வேண்டும்.

சூரிய யுத்தம்!

• வெயில் காலத்தில் சுற்றுலா செல்வதாக இருந்தாலும், வேலைக்குப் போனாலும், விளையாடப் போனாலும் கையில் எப்போதுமே தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது. 

• மிகவும்  இறுக்கமான ஆடைகளை அணிந்தால், உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து, எளிதில் வியர்வை வெளியேறும் ஆடைகளான பருத்தி உடைகளை அணியலாம்.

• வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சி செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர், 750 மி.லி முதல் 1,500 மி.லி வரை தேவைக்கேற்ப  தண்ணீர் குடித்துவிட்டு பயிற்சி செய்யவும்.

•   நேரடியாக வெயில் படும் இடங்களில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்கவும். நெரிசல்மிக்க, நெருக்கடி நிலவும்  கூட்டங்களில் பங்கேற்பதை முடிந்த வரை தவிர்க்கவும்.