Published:Updated:

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

Published:Updated:
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி! #Transgender

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பெரம்பூர், பெரியார் நகரை அடுத்த ஜி.கே.எம். காலனியில் ஒளிந்துகொண்டு, பல குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றிய அந்த உள்ளத்தைக் காணச் சென்றோம். தெருவின் கடைசி கட்டடம் அதுதான். மாடிச் சுவர்கள் வண்ண வண்ண உடைகளைத் தாங்கி நிற்க, வாசல் திறந்தே இருந்தது. உள்ளே செல்ல முயன்றபோது, "யாரைப் பார்க்கணும்?" என்ற குரல் கேட்டது. "இந்த எஸ்.ஐ.பி இல்லத்தின் தோற்றுனரைப் பார்க்க வேண்டும்" என்றோம். "உள்ளே வாங்க, நான் போய் அம்மாகிட்ட சொல்றேன்" என்றபடி சென்றார். 

வாசலின் வலப்புறம் பாத்திரங்களைச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் ஒரு மாணவி. இடப்புறம் மூன்று மாணவர்கள், தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதையும் பணிகளைப் பகிர்ந்து செய்வதையும் பார்த்துக்கொண்டிருந்தோம். வீட்டின் உள்ளேயிருந்து வந்தவர், "அம்மா இப்போ வந்துடுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டுச் சென்றார். 

இரண்டு நிமிட இடைவேளையில் நூரி அம்மா வந்தார். அவருக்குத் தரையில் பாய் போடப்பட்டது. "உட்காருங்க பிள்ளைங்களா" என்றபடியே அமர்ந்துகொண்டார். 

"உங்களைப் பற்றி பூங்கோதை அம்மா சொன்னார்கள். அதுதான் உங்களைச் சந்திக்க வந்தோம்" என்றேன். 

"ரொம்ப நன்றி. அவள் என் மகள்" எனக் கம்பீரமாக அமர்ந்திருந்த நூரி அம்மாவின் வாழ்க்கை பற்றி, நாம் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். 

"நான் ஒரு திருநங்கை. 13 வயதில் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். பல வேலைகள், சோதனைகளைக் கடந்து, ஒரு பொதுநல அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அந்த அமைப்பிலிருந்து ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அப்படிப் போனபோதுதான் செல்வி, இந்திரா, பழனி என்ற ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட திருநங்கைகளைப் பார்த்தேன். அவர்கள் என்னை அன்போடு நடத்தினாங்க. பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க. அப்புறம், நோயின் கொடுமையால் இறந்துட்டாங்க. நம்மீது அவ்வளவு அன்பு செலுத்தினவங்களுக்கு நாம எதுவுமே செய்யலையேனு நினைச்சுத் துடிச்சேன். அவர்கள் பெயரின் முதல் எழுத்துக்களான, S, I, P-யையே என் தொண்டு நிறுவனத்துக்கு வெச்சேன். அதுதான் இந்த எஸ்.ஐ.பி இல்லம்" என்றார் நூரி. 

2003-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இந்தத் தொண்டு நிறுவனத்தில், 2005-ம் ஆண்டு ஒரு குழந்தை வந்து சேர்ந்துள்ளது. ''அந்த நாளை இப்போ நினைச்சாலும் கண்களில் கண்ணீர் தானாக வழியும். பிறந்து இரண்டே நாளான குழந்தை அது. தொப்புள்கொடி அறுபடாமல், எறும்புகள் மொய்ச்சுட்டு இருந்துச்சு. அந்தக் குழந்தையைத் தூக்கிட்டுப்போய் டாக்டர் மனோரமா என்பவரிடம் காண்பிச்சேன். அவங்க பரிசோதிச்சுட்டு, அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருக்கிறதா சொன்னாங்க. அந்தக் குழந்தையை வளர்க்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து பல குழந்தைகளைப் பாதுகாக்க, அரசாங்கமே வழிகளை அமைச்சுக் கொடுத்துச்சு. இப்போ 47 குழந்தைகள் இந்த இல்லத்தில் இருக்காங்க. இதுக்கு முன்னாடி 103 குழந்தைகளுக்கு சப்போர்ட் செஞ்சிருக்கோம்'' என்கிறார் தாய்மை ததும்ப. 

இதில் அரசு பங்கு என்ன? 

"அரசாங்கம் குழந்தைகளை எங்களுக்கு ஒதுக்கீடு செய்துகொடுக்கும். நாங்கள் குறிப்பிட்ட காலம் பராமரிச்சு குழந்தைகளின் சொந்தங்களிடமோ, வேறு அமைப்பிடமோ ஒப்படைப்போம். இங்குள்ள குழந்தைகளின் தாய், தந்தை ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டு இந்த உலகைவிட்டுச் சென்றவர்கள். அதனால் தாத்தா பாட்டியின் அரவணைப்பிலோ, வேறு அமைப்பிலோ தங்களின் எதிர்காலத்தை நகர்த்துவார்கள். இதில் அரசாங்கத்தின் பங்கு என்பது குழந்தைகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது மட்டும்தான். பணமோ, பொருள் உதவியோ கிடையாது'' என்கிறபோது நூரியின் குரலில் ஆதங்கம்.

 "நல்ல உள்ளங்களின் ஆதரவால்தான் இந்தக் குழந்தைகளின் நாள்கள் நகருது. மருத்துவச் செலவுக்கு அருகில் உள்ள ஸ்ரீராம் மெடிக்கலில், டோனர்கள் பணம் செலுத்திடுவாங்க. இந்தக் குழந்தைகளுக்கான மருந்து மற்றும் உணவுச் செலவு மாசத்துக்கு 60,000 ரூபாய் ஆகும். இது, வாடகை வீடு. சோழவரம் பக்கத்தில் நிலம் வாங்கி, 8,500 சதுர அடியில் புது இல்லத்தைக் கட்டிட்டிருக்கோம். இது 200 குழந்தைகளின் இல்லமாக மாறப்போகுது. இப்போ, ஜி.எஸ்டி பிரச்னையால் கட்டடப் பணிகள் தடையாகி நிற்குது. தமிழ்நாடு நடிகர் சங்கம் 10 லட்சம், அமைதி பவுண்டேஷன் மூலம் கார்னியா வில்லியம்ஸ் என்பவர் 28 லட்சம், எச்.சி.எல் நிறுவனம் 38 லட்சம் மற்றும் சிலர் என 90 லட்சம் வரை உதவி கிடைச்சிருக்கு. இவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இன்னும் 50 லட்சம் இருந்தால் இந்தப் பணி நிறைவாகும்'' என்றபடி மொபைல் போனில் கட்டடப் பணியின் புகைப்படங்களைக் காண்பித்தார் நூரி. 

"உங்களைப் பற்றி சொல்லவே இல்லையே...'' என்றதும் புன்னகைக்கிறார் நூரி. 

"நானும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவள். 30 வருடங்களாக எய்ட்ஸுடன் வாழ்கிறேன். இதோ இந்த பூங்கோதை ஐந்து வயசுல இங்கே வந்து சேர்ந்தாள். மூணு வருஷமா இந்த அமைப்பைப் பொறுப்போடு கவனிச்சுட்டு இருக்கா. நல்லா வாழ பணம் மட்டும் போதாது. மனிதர்களின் அன்பு, அரவணைப்பு, தோழமை வேணும். இங்கே சுற்றியிருக்கும் மக்கள் எங்களிடம் அன்பு செலுத்தறாங்க. அவங்க ஆதரவிலும் அன்பிலும்தான் பத்து வருஷமா இங்கே இருக்கோம்" என்று கூறினார். 

ஒரு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டதும், "இப்படியேவா..?" என மெள்ள வெட்கப்பட்டு, புடவையைச் சரிசெய்துகொண்டு நிமிர்ந்து அமர்ந்தார் திருநங்கை நூரி. அந்தப் புன்னகையும் தன்னம்பிக்கைக்கும் இந்தச் சமூகத்தை எதிர்கொள்வதை அழகாகக் காண்பித்தது. 

அங்குள்ள பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிக் கிளம்பியபோது ஒரு சிறுவன் ஓடிவந்து, "அக்கா, இந்த புக்ல உங்க பேர், அட்ரஸ் எல்லாம் எழுதுங்க" என்றான். 

அந்த அற்புதமான மணித்துளிகளை நினைத்தவாறு கையெழுத்திட்டோம்.