Published:Updated:

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit
"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit
"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

யணங்களிலும் தேடல்களிலும் உள்ள அழகியல் அது. நாம் முற்றிலும்  எதிர்ப்பார்க்காத ஒன்றிடம் நம்மை அழைத்துச் செல்லும்.கேரளத்தின் அட்டப்பாடி பகுதி பழங்குடியினர்களைச் சந்திக்கச் சென்ற பயணம் நம்மை கோவை பாலமலைப் பகுதி இருளர்களைச் சந்திக்க அழைத்துச் சென்றது. பாலமலை , கோவையின் மையப்பகுதியிலிருந்து சுமார் நாற்பது நிமிடத் தொலைவில் இருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல்களின் நீட்சி. காட்டு யானைகளும் நரிகளும் அதிகம் இருக்கும் அந்தப் பகுதியில் ஏழு மலைக்கிராமங்கள் இருப்பது செங்குத்தாகச் செல்லும் அந்த மலையில் பயணித்து அடர்ந்த காடுகளுக்குள்ளே சென்றால் மட்டுமே தெரியும். பெரும்பாலும் இருளர் பழங்குடிகளே இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்.  மலை உச்சியில் சாலை இருவேறு பகுதிகளாகப் பிரிகிறது. பிரியும் சாலைகளுக்கு மத்தியில் ஓர் அரசமரம் அடர்ந்து வளர்ந்து நிற்கிறது. அதன் அருகே ஒரு கோயில்.கோயிலைச் சுற்றி மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு மாடுகளுக்கு நடுவே எவ்வித பரபரப்பும் இல்லாமல் மக்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மிக இயல்பானதொரு புன்னகை இருக்கிறது. “இங்கே பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு எப்படிப் போகனும்?” என்று கோயில் அருகில் இருந்த கடைக்குச் சென்று விசாரித்தோம். அந்த ஊருக்கு அந்தக் கடைதான் சூப்பர் மார்க்கெட்டாக இருக்கக்கூடும். அந்தச் சதுரங்க வடிவக் கடைக்குள் இலந்தை வடை, புளி மிட்டாய், ராகி அடை, சுக்கு டீ, இன்னும் சில பிஸ்கட் மற்றும் மிட்டாய் இத்யாதிகள் நிரம்பி இருந்தன. ”பெருக்கப்பதிதான் கோயில்லேர்ந்து கிட்டத்துல இருக்கற கிராமம். ஆனா, இப்போ யாரும் ஊருக்குள்ள கிராமத்துல இருக்க மாட்டாங்களே.அவங்க எல்லாம் காலையிலேயே விவசாயம் ஆடு, மாடு மேய்க்கன்னு வேலைக்குக் கிளம்பியிருப்பாங்களே..பொழுது சாஞ்சு அஞ்சரை மணிக்கு ஊருக்கு முதல் பஸ் வரும்போதுதான் அவங்களும் வருவாங்க” என்றார் கடையின் சொந்தக்காரம்மா. பொழுது கடந்து வந்தால் அவர்களுடன் உரையாடுவதற்கான காலம் குறைவாகவே இருக்கும். அதனால் மனது சற்று ஏமாற்றம் அடைந்தது.  

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

கட்டுரையின் தொடக்க வரியில் சொன்னதை மீண்டும் ஒருமுறையாக இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.ஆம்,  பயணங்களும் தேடல்களும் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்றிடம் நம்மை அழைத்துச் செல்லும். யாரும் இருக்க மாட்டார்களே என்ன செய்வது என்கிற சிந்தனையோடு அந்த அரசமரத்தடியில் நின்றிருந்த சமயத்தில்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், “நீங்க மாங்குளி பகுதிக்குப் போங்க.. பெருக்கப்பதி கடந்துதான் போகணும். அங்கே மக்கள் கண்டிப்பாக இருப்பாங்க!” என்றதும் முகத்தில் பிரகாசத்துடன் விரைந்தோம். பெருக்கப்பதி, பெரும்பதி எனச் சின்னச் சின்ன குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து சென்று மாங்குளிக்கு வழி கேட்டதும் ''இங்கிருந்து 2கி.மீ தூரம் இருக்கும்...'' என்று வழியைச் சொன்னார்  ஒரு முதியவர். மிருகங்கள் நடமாடும் மலைக்காட்டுப் பகுதி என்பது அவர் சொன்ன வழியில் மெல்லப் பயணிக்கத் தொடங்கியதும் உணர முடிந்தது. மனிதப் போக்குவரத்துக்கான சாலைகளாக இல்லாமல் வெறும் கல்லும் மண்ணும் நிரம்பி, மேடும் பள்ளமும், குறுகலும் சறுக்கலுமாக வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தன. வழியெங்கும் ஒற்றை வேம்பு, ஒற்றை ஆலமரம் எனக் கட்டுக்கடங்காமல் பரந்து வளர்ந்து கிடந்த மரங்களும் தென்பட்டன. 

பாதையில் நீண்ட தூரம் பயணித்தும் குடியிருப்புகள் இருப்பதற்கான எவ்வித தடயங்களும் தெரியாமல் போகவே காட்டில் ஒருவேளை பாதைமாறி விட்டோமோ என்கிற சந்தேகம் ஒருபுறம் எழுந்தது. அதற்குள் , தலைக்குமேலே சென்றுகொண்டிருந்த மின்கம்பம் வழிகாட்ட அதன் தடத்திலேயே பயணித்து மாங்குளியை அடைந்தோம். படிமனான அந்த ஒற்றை மண்பாதையில் இருபக்கமும் சிறிது சிறிதாக வீடுகள் இருந்தன. இருளர் குடியிருப்புகள். பெண்கள் சிலர் தண்ணீர் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். பள்ளி முடித்துவிட்டு வந்த சிறுவர்கள் சீருடையுடனே விளையாடிக்கொண்டிருந்தார்கள். கேமரா சகிதமாக தங்கள் பகுதிக்கு யாரோ வருவது தெரிந்ததும் அனைவரது கவனமும் நம்மீது திரும்புகிறது. ஊருக்கு நடுவே பிள்ளையார் சிலை ஒன்று இருக்கவே, 'மலைவாழ் மக்களுக்கு இப்படியான உருவச்சிலை வழிபாடு கிடையாதே?' என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

அதற்கு பதிலாக அவர்களிடம் வழிவழியாகச் சொல்லப்பட்டதொரு கதை இருந்தது. ”கண்ணப்பர் தெரியுமுங்களா?. சிவபெருமானுக்கு கண்ணு கொடுத்தாருங்களே ஒரு வேடர்...நாங்களெல்லாம் அவருடைய வாரிசுதான்.அதனால் நாங்க எங்கே போனாலும் அவருடைய மகன் பிள்ளையாருடைய சிலையும் எங்கள் பகுதியில் இருக்கும்” என்று பதில் வருகிறது. “இல்லைங்க..எனக்கு நினைவு தெரிஞ்சு கொஞ்சகாலத்துக்குப் பிறகுதான் இங்க இந்த சிலையே வந்துச்சு!” என்று அவர்களுக்குள்ளேயே ஒரு சின்ன விவாதம் தொடங்குகிறது. அவர்களின் பேச்சு சலசலப்புக்கிடையே எங்கிருந்தோ எழுந்த ஒரு வாத்தியச் சத்தத்தின் பக்கம் கவனம் திரும்பியது. சிலையின் கீழே அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் ஃபைபரால் ஆன சட்டிமேளம் ஒன்றை வைத்து இசைத்துக்கொண்டிருந்தார்கள். இசையை முறையாகக் கற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆனால், தன்னுள்ளான ஓர் ஆர்வத்தில் அவர்களிடமிருந்து தாளம் வருகிறது என்பது அவர்கள் இசைத்ததிலிருந்தே தெரிந்தது. ”இந்த ஊரில் யாராவது வாசிக்கற குழு இருக்காங்களா?” என்று பேச்சினூடே கேட்டதும். ஆம் என்று தலையசைத்துவிட்டு தங்களது கருவிகள் இருக்கும் இடத்திற்கு ஆர்வமாக அழைத்துச் சென்றான் ஒரு சிறுவன். 

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

குறுகலான ஒருவீடு, அதன் கூரையில் சற்றே வித்தியாசமான இரண்டு தோல்கருவிகள் மாட்டப்பட்டிருந்தன. நீள் உருளை வடிவிலான மரத்தில் இரண்டு பக்கமும் தோல் பொருத்தப்பட்டு ஒரு கருவி இருந்தது. அதனை மத்தளம் என்கிறார்கள்.  மண்பானையின் இரண்டு பக்கமும் பெரிய துளையிடப்பட்டு அதில் தோல் போர்த்தப்பட்டதுபோல ஒரு கருவி இருந்தது. அதனைத் தவில் என்கிறார்கள். ’முறையான இசை’. சாஸ்திரிய சங்கீதம், சுருதி, லயம், தாளம் என இசையைப் பாடத்திட்டமாகவே அணுகிவரும் நமக்கு, அவர்களின் இயல்பான இசை எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் எழவே “எங்களுக்கு இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுக் காண்பிக்கிறீங்களா?” என்று கோரிக்கை வைத்தோம். நாம் கேட்டது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “அதுக்கு ஜால்ரா, கொகலு எல்லாம் வேணும். இதோ எடுத்துட்டு வரோம்!” என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்கள் இசைக்குழுவினர். 

அவர்கள் கருவிகளை எடுத்துவரச் சென்ற இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் விவாதம் தொடங்கியது..

“இங்க இருக்கற நீங்க எல்லோருமே இருளர் பழங்குடிங்களா?”

“இல்லைங்க, சிலர் ஊட்டியில இருக்கிற பழங்குடிகளிலேர்ந்து எல்லாம் பொண்ணு எடுத்திருக்கோம். பக்கத்து ஊரில் சில கவுண்டர் சமூகத்தினர் இருக்காங்க. அந்தச் சமூகத்திலேர்ந்தும் இங்கே பொண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுத்திருக்காங்க”.

அவர்களின் பதில் ஆச்சர்யம் கொள்ளவைத்தது.

“மலைக்குக் கீழ் நிலைமை வேற..அங்க சாதி மாறித் திருமணம் செஞ்சா, கொன்னுடறாங்க.நீங்க இப்படியான கலப்புத் திருமணங்களை அனுமதிப்பது ஆச்சர்யமா இருக்கு!”.

”சாதியெல்லாம் மனுசங்களா உருவாக்கிக்கிட்டதானுங்களே!”என்றார் அவர்களில் ஒருவர்.

அவரது அந்த ஒற்றைப் பதில் நெற்றிப்பொட்டில் அறைந்ததுபோல அமைந்தது. இதைவிட வேறு என்ன பெரிய விளக்கம் கிடைத்துவிடப்போகிறது. 

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

மீண்டும் அவரே தொடர்கிறார்,”அது மட்டுமில்லைங்க, ஓர் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டா சுத்துப்பட்டில் இருக்கும் ஏழு கிராமங்களோட தலைவர்கள் முன்னிலையில்தான் அவங்களுக்குத் திருமணம் நடைபெறும். அதற்கெனத் தனியாக கோயில் சடங்கு என்று எவ்வித சம்பிரதாயங்களும் கிடையாது. ஊர்கூடிப் பொதுவில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே ஏழு கிராமத்துத் தலைவர்களும் தாலியை எடுத்துக் கொடுப்பார்கள். அதை ஆண் பெண்ணுக்குக் கட்டவேண்டும். தாலிகூட அவர்கள் விருப்பப்படும் சமயத்தில் கட்டிக்கொள்ளலாம்” என்றார்.

சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கு வந்தார், அந்த ஊரின் மூப்பர் என்று சொல்லப்படுபவர் அவர். அருகில் அவரின் மனைவி. “என் பொஞ்சாதிக்கு நான் 60 வயசுலதான் தாலி கட்டினேன். எங்களோட பிள்ளைக்குட்டிங்க, பேரப்பசங்க முன்னிலையில் கட்டிக்கிட்டோம். அப்போதான் எங்களுக்கு கட்டிக்கத் தோனுச்சு” என்கிறார். அது சரி, அன்பிருக்க,அந்த அன்பில் நம்பிக்கை இருக்க.. வேறு என்ன பெரிதாக பிணைத்துவைக்கத் தேவைப்படப்போகிறது. 

“இந்தம்மா நல்லா கும்மியடிச்சு ஆடும். இப்போ வாசிக்கும்போது ஆடும் பாருங்க!” என்று தனது மனைவியை பகடி செய்து அந்த மூப்பர் வம்புக்கிழுக்க,

 ”ஆமா,நான் ஆடி நீ பார்த்த பாரு!” என்று அவரின் மனைவியும் பதிலுக்கு வாதம் செய்ய அந்த இணையின் ஊடலை அங்கிருந்த மொத்த பேரும் சிரிப்பும் மகிழ்வுடனும் நோக்கிக்கொண்டிருந்தோம்.

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

அதற்குள் அங்கே ஜால்ராவும், கொகல் எனப்படும் கையளவிலான பீப்பீ வாத்தியமும் வந்து சேர்ந்தது. ‘குழல்’ என்பதுதான் மருவி அங்கே ‘கொகல்’ எனப்படுகிறது. கையின் நீளத்திற்கு இருக்கும் அந்தக் கருவி சிறிய நாயணம் வடிவில் இருக்கிறது, ஆச்சமரத்தால் செய்யப்பட்டது என்கிறார்கள். கொகலின் வாய் ஊதும் பகுதியில் கோழி இறகின் தண்டிலிருந்து செய்யப்பட்ட சிறிய நகத்தின் அளவிலான குழாய் ஒன்று பொருத்தப்படுகிறது. மூச்சை உள்ளிழுத்து அதன் வழியாகதான் அந்தக் கொகலை வாசிக்க முடியும். நீண்ட நேரம் மூச்சை இழுத்து வாசிக்க வேண்டும் என்பதால் அந்தக் கருவியை வாசிப்பது மட்டும் சற்று கடினம் என்கிறார். 

ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். மத்தளத்தை கையில் வைத்திருந்தவர் மெள்ள அதன் ஒரு பக்கத்தில் வாசிக்கத் தொடங்குகிறார். அது  ஓசை எழுப்ப அதற்கேற்றவாறு அருகில் இருந்தவர் தவிலின் இரு பக்கமும் கொட்டத் தொடங்குகிறார். இதற்கு நடுவே எங்கிருந்தோ கொகலின் மயக்கும் இசையும் தன்னை தாளத்துடன் பொருத்திக்கொண்டு ஓசை எழுப்பத் தொடங்குகிறது. ஜால்ராவின் சலசலப்பும் இந்த இசைக் கோர்வையோடு சேர்ந்துகொள்கிறது. அத்தனையும் கேட்டுக்கொண்டு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தவர் தனது நாவையே இசைக்கருவியாக்கி நரிகள் ஓநாய்களுடனான உரையாடல்போல் குலவைச்சத்தத்தை எழுப்பத் தொடங்குகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்  குழந்தை நடனத்தை  ஏற்படுத்த அதை கவனித்துக்கொண்டிருந்த பெண்களும் அந்தப் பிள்ளையுடன் இணைந்து கும்மி கொட்டத் தொடங்குகிறார்கள். கும்மி பெண்களுக்கானது மட்டும் என்கிற   மனப்போக்கை தவிடுபொடியாக்கும் வகையில் குலவைச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த ஆணும் அவர்களுடன் இணைந்து கும்மிகொட்டத் தொடங்குகிறார். கலை பாலின சாதிய அடையாளங்கள் கடந்து மக்களுக்கானது. மக்களின் கொண்டாட்டத்துக்கானது. இசை உணர்வும் கொண்டாட்ட மனநிலையும் தாண்டி அதற்குப் பெரிதாக ஒன்றும் தேவைப்படப் போவதில்லை. பெருமழைக்குப் பிறகு மண்ணிலிருந்து எழும் முதல் இலையில் குடிகொண்டிருக்கும் அமைதியும் ஆனந்தமும்போல அவர்களின் வாசிப்பு ஓய்ந்ததும் ஒரு பேரமைதி நிலவியது. 

"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு!"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit

இவர்களைப்போன்ற கலைஞர்களைத் தேடிச்சென்று வெளிக்கொண்டுவருவது மண்ணின் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது மட்டும் இல்லாமல், அவர்களை  உலகுக்கு அடையாளப்படுத்துவதன் வழியாக ஆதி தமிழ்க் குடியின் உண்மை பண்பாட்டை தற்கால மக்களிடம் கொண்டு சேர்க்க இயலும். 

அந்த மக்களிடம் விடைபெற்றுத் திரும்பும்போது சூரியன் மலைகளிடையே மறையத் தொடங்கியிருந்தது. ஆனால், எண்ணங்கள் புதிதாக உதிக்கத் தொடங்கியிருந்தது.

இசைதான் மாற்றம்! இசைதான் மாற்றும்!.