Published:Updated:

``எனது ஆன்மிகம்... ஜீவனே சிவன்தான்’’ - நடிகர் சிங்கமுத்து #WhatSpiritualityMeansToMe

``எனது ஆன்மிகம்... ஜீவனே சிவன்தான்’’ - நடிகர் சிங்கமுத்து #WhatSpiritualityMeansToMe
``எனது ஆன்மிகம்... ஜீவனே சிவன்தான்’’ - நடிகர் சிங்கமுத்து #WhatSpiritualityMeansToMe

கோயில், தெய்வம், கடவுள் மற்றும் வழிபாடு, இவை எல்லாமே ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம். இது நபருக்கு நபர் நிச்சயம் மாறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆன்மிக வாழ்வியல் முறை இருக்கும். மனிதருக்கு மனிதர் ஆன்மிகம் என்பதன் பொருளும், வழிபாட்டு முறையும்கூட மாறுபடும். நடிகர் சிங்கமுத்து தனது ஆன்மிகம் எது என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே...

``ஆன்மிகம்ங்கிறது கடல் மாதிரி. சிலர் கப்பல்ல பயணம் பண்ணுவாங்க. சில பேர் படகுல பயணம் பண்ணுவாங்க. சிலர் நீந்திக்கூடப் போவாங்க. ஆனா, யார் எப்படிப் பயணம் பண்ணினாலும் ஏறுற கரை ஒண்ணுதான். இதை அவரவரோட கற்பனைனு சொல்ல முடியாது. அவரவர் அறிவாற்றலைப் பொறுத்து, அந்த ஆன்மிகத்தைப் பெற்றுக்கொண்டு வாழ்வார்கள். பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள். ஆனாலும் எல்லோரும் சென்று சேர்கிற இடம் ஒன்றுதான். 

உலகத்துல உள்ள எல்லா மதங்களும் அன்பே கடவுள்னுதான் சொல்லுது. எல்லா கடவுளும் உயிர்வதை செய்யாதே, அன்பு செய், சக மனிதனை நேசிங்கிறதைத்தான் சொல்லுறார்களே ஒழிய, வேற எதையும் சொல்லுறது கிடையாது. 

மொழிகள் வேறாக இருக்கும்; எண்ணங்கள் வேறாக இருக்கும்; கலாசாரம் வேறாக இருக்கும். ஆனால், ஆன்மிகம்ங்கிறது எல்லா இடங்கள்லயும் நாடுகள்லயும் ஒண்ணாத்தான் இருக்கு. பூமி முழுவதும் இருக்கிற எல்லா மனுஷனையும் ஒரே மாதிரிதான் படைக்கிறார் கடவுள். 

மனிதன் வளர வளர, வளர்கிற சூழ்நிலைக்கேற்ப அவனது குணங்கள் மாறும். குணங்களுக்குத் தகுந்த மாதிரி பழக்கவழக்கங்கள் மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறை அமையும்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் நல்ல அணுக்கள், கெட்ட அணுக்கள் இரண்டுமே இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையே எப்போதும், உடம்புக்குள் போராட்டம் நடந்துக்கிட்டே இருக்கும். ஒன்றை ஒன்று ஜெயிக்கப் போராடும். எது ஜெயிக்குதோ, அதுதான் எண்ணங்களாக உருவாகும்.

கெட்ட அணுக்கள் அதிகமானால், அவனது மனசாட்சியை அவனே கொன்றுவிடுவான். அவன் மனம்போன போக்கில் செயல்பட ஆரம்பித்துவிடுவான். அதை வைத்துதான் ஒரு மனிதன் மகானாவதும், மதிகெட்டவனாகி அடுத்தவர்களுக்கு துன்பம் விளைவிப்பதும் நடக்கும்.  

பழக்கவழக்கம் நல்லவிதமாக இல்லாத திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், இவங்ககூட பழகினால் அவங்க அப்படியே நம்மை மூளைச்சலவை பண்ணிடுவாங்க. உலக ஆசைகளான பண ஆசை, பொன்னாசை மண்ணாசை, பெண்ணாசை இதெல்லாம் அதிகமானா அதை எப்படியாவது அடையணும்னு புத்திக்குத் தோணும். இதெல்லாம் கெட்ட அணுக்களின் வேலை. 

நல்ல அணுக்கள் அதிகமானால், கெட்ட அணுக்கள் உடலின் ஒன்பது துவாரங்கள் வழியாக வெளியேறிவிடும். உடம்பிலுள்ள எல்லா அணுக்களுமே நல்ல அணுக்களாக மாறிடுச்சுன்னா அவன் ஞானியாகிடுவான். அதன் பிறகு, அவன் மனசுல சுயநலம், பொறாமை, கோபம், வன்மம் இதெல்லாம் இல்லாமப் போயிடும். பரிசுத்தமானவனா ஆகிடுவான்.  
 இதனால்தான் திருமூலர், 
 

''உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே"

எனப் பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடினார்.
அப்படி தெய்வநிலையை அடைந்தவர்கள்தான் சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர், நாயன்மார்கள், ஆழ்வார்கள். இவர்களோடு புத்தர், காந்தி உள்ளிட்டவர்களும் தங்கள் உடலிலும் உள்ளத்திலும் இருந்த கழிவுகளை, கெட்ட அணுக்களை விரட்டி ஞானமடைந்தார்கள். 


ராமலிங்க அடிகளார் சமீபகாலங்களில் அப்படி மனிதனாகப் பிறந்து தெய்வநிலையை அடைந்த மகான். எனக்கு வள்ளலாரை மிகவும் பிடிக்கும். அவரின் வாழ்க்கையில் 9-வது வயசுல நடந்த சம்பவம் ஒன்றைப் பாருங்கள். குருகுலத்தில், 
'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், 
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்’னு 
உலகநாதர் இயற்றிய உலகநீதியைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார் வாத்தியார். வள்ளலார் அதுல கவனம் இல்லாம எங்கேயோ பார்த்துக்கிட்டு இருந்தார். அவருடைய குரு விசாரிக்கவே, 'பாட்டெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா, `வேண்டாம்’னு எதிர்மறையா சொல்றது எனக்குப் பிடிக்கலை' என்றார். இதை மனதில் வைத்து பிற்காலத்தில் 
 

''ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும் 
        உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் 
        உறவு கலவாமை வேண்டும் 
    பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை 
        பேசா திருக்க வேண்டும் 
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் 
        பிடியா திருக்க வேண்டும்''

எனப் பாடினார். 

இப்படிப்பட்ட நிலை வரவேண்டுமானால், தெய்வநிலை அடைந்தவர்கள் எழுதிய நூல்களை வாசிக்க வேண்டும். அவை வெறும் நூல்கள் அல்ல... அவர்களின் வாழ்க்கை. கடவுளைக் கண்ணாறக் கண்டவர்,  ''தோடுடையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்'' எனப் பாடுகிறார் என்றால், கண்ணில் காணாமல் எப்படிப் பாட முடியும்?'' என்றவரிடம், விரதம், வழிபாட்டுமுறை, இஷ்டதெய்வம், பிடித்த கோயில் பற்றிக் கேட்டோம். 

''விரதம்னுல்லாம் பெருசா எதுவும் இருக்கிறது கிடையாது. வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் உண்ணாநோன்பு இருப்பேன். அதுக்குக் காரணம், உடலின் உள்ளுறுப்புகளான வயிறு, பெருங்குடல் சிறுகுடலுக்கெல்லாம் ஓய்வு தரணும்ங்கிறதுதான். இஷ்டமான தெய்வம் சிவன்தான் . வழிபாட்டு முறை காலை நாலரை அஞ்சு மணிக்குச் சின்னதா உடற்பயிற்சி செய்து முடிச்சதும் குளிப்பேன். குளிச்சு முடிச்சிட்டு சிவனைத் துதிக்கக்கூடிய பாடல்களைப் பாடுவேன். பிடித்த கோயில்னு எதுவும் கிடையாது. சிவலிங்கம் எங்கே இருக்கோ அங்கெல்லாம் ஈசனை நினைச்சு வணங்க ஆரம்பிச்சிடுவேன். நாம் விடும் மூச்சுக்காற்றுதான் கடவுள். ஜீவனே சிவன்தான்'' என்று சொல்லி கண்ணை மூடி அந்தப் பரம்பொருளை தியானிக்கிறார்.