Published:Updated:

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

அதிஷா

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

அதிஷா

Published:Updated:
“அன்பை சுமந்து நடக்கிறேன்!”
“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

மே 11, 2014-ம் ஆண்டு, மீகோ மார்க் தன் வீட்டைவிட்டுக் கிளம்பினார். அன்பான அம்மா, பாசக்கார அப்பா, தோழமையுள்ள சகோதரிகள் என அத்தனை பேரும் கூடிநின்று டாட்டா பைபை சொல்ல... மீகோவின் பயணம் தொடங்கியது. மீகோவின் கையில் மொத்தமாக 10 யூரோ இருந்தது. இந்திய மதிப்பில் தோராயமாக 1,000 ரூபாய். இந்தப் பணத்தில்தான் அடுத்த 10 ஆண்டுகளை மீகோ வாழவேண்டும். 2024-ம் ஆண்டில்தான் அவர் தன் வீட்டுக்குத் திரும்புவார். பூமியின் சுற்றளவான 40,075 கிலோ மீட்டரையும் நடந்துதான் கடக்க வேண்டும். எந்தவித அச்சமும் இல்லாமல் நடக்கத்தொடங்கினார் மீகோ. இதுவரை 14 நாடுகளை நடந்தே கடந்துவிட்டார். ஆயிரக்கணக்கான நண்பர்கள், லட்சக்கணக்கான புன்னகைகள், கோடிக்கணக்கான பூக்கள் என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகத் தொடர்கிறது மீகோவின் பயணம்.

அவர் வீட்டைவிட்டுக் கிளம்பி, கடந்த மே 11-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைகின்றன. அன்றுதான் அவரை ஃபேஸ்புக் சாட்டில் தொடர்புகொண்டேன். தமிழ்நாடு பற்றி சொன்னதும், `உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று ஆசை வருகிறது' என்றார். `இன்னைக்கு அசாமில் ஒரு பள்ளியில் பேசினேன். மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. சின்னப் பேச்சுதான்' என்று பேச ஆரம்பித்தார்.

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

13 லட்சம் பேர் மட்டுமே வாழ்கிற புதுச்சேரி சைஸ் குட்டி நாடுதான், ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியா. 26 வயதாகும் மீகோ, அங்கே ட்ரம்பெட்டும் பியானோவும் வாசிக்கும் ஓர் இசைக்கலைஞர். எளிய குடும்பம், நிறைய நண்பர்கள், சின்ன சம்பாத்தியம் என சிறப்பான வாழ்வு. அவருக்கு ஒரே நாளில் இப்படி ஒரு யோசனை வந்துவிடவில்லை.

``எங்களுடைய நாட்டில் இதுபோல அடிக்கடி யாராவது `உலகத்தை நடந்தே சுற்றுகிறேன்; சைக்கிளில் சுற்றுகிறேன்' எனக் கிளம்பிவிடுவார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் தவறாமல் கடிதம் போட்டுப் பாராட்டுவேன். அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவேன். அந்த அனுபவம் அற்புதமாக இருக்கும். கேட்கும்போதே `கிளம்பிடணும்'கிற எண்ணத்தை உண்டாக்கும். அந்தப் பாதிப்புதான்.''

``இப்படிக் கிளம்பிட்டீங்களே, வீட்டில் எதுவும் சொல்லலையா... பத்து ஆண்டு பயணம்கிறது ரொம்பவே நீளமாச்சே?'' என்று கேட்டேன்.

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

``வீட்டில்தான் முதலில் சொன்னேன். அவர்கள் யாருமே மறுக்கவில்லை. எல்லோருமே எக்ஸைட் ஆகி `உடனே கிளம்பு' என என்னை உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், என்னிடம் போதிய பணம் இல்லை. இருந்த பணத்தில் பயணத்துக்குத் தேவையான சில பொருட்களை வாங்கினேன். மிச்சம் பத்து யூரோதான் இருந்தது. அதை வீட்டில் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அவ்ளோதான்'' என ஸ்மைலி போடுகிறார்.

``ஆமா, அந்தப் பத்து யூரோவை என்னதான் பண்ணீங்க?''

``வீட்டைவிட்டு இறங்கியதும் முதல் வேலையாக அந்தப் பத்து யூரோவுக்கும் ரொட்டி வாங்கிவைத்துக்கொண்டேன். அது ஒருவாரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. அதற்குப் பிறகு, பல நாட்கள் எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் சாலையோரம் வளர்ந்திருந்த பசலைக் கீரைகளையும் கிணற்றுத் தண்ணீரையும் குடித்துச் சமாளித்தேன். என் நாட்டைக் கடந்த பிறகு, எனக்கான உணவும் இருப்பிடமும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது'' என்றார்.

எப்படி?

வீட்டில் இருந்து கிளம்பும்போதே ஃபேஸ்புக்கில் ஒரு பேஜ் ஒன்றையும், வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கிவிட்டார் மீகோ. அதில் தனக்கு உதவிசெய்ய விரும்புபவர்கள் ஒரு யூரோகூடத் தரலாம் எனக் கோரிக்கை வைத்திருந்தார். `ஒரு யூரோ கொடுத்தால் உதவியாக இருக்கும்... இரண்டு யூரோ கொடுத்தால் பேருதவியாக இருக்கும்' எனச் சொல்லியிருந்தார். ஆரம்ப நாட்களில் அவருக்கு யாரும் உதவவில்லை. இவருடைய பயணம் குறித்து எஸ்டோனியாவின் உள்ளூர் செய்தித்தாளில் ஒரு செய்தியை யாரோ வெளியிட, அதற்குப் பிறகுதான் உதவிகள் வரத்தொடங்கியது.

``ஒரு யூரோ அனுப்ப ஆரம்பித்து, ஆயிரம் யூரோகூட அனுப்புறாங்க. குறிப்பா ஆப்பிரிக்காவில் இருந்துதான் எனக்கு அதிகமான உதவிகள் வருது'' என ஆச்சர்யப்படுகிறார் மீகோ. இந்தப் பணத்தை சிக்கனமாகச் செலவழிக்கிறார். பெரும்பாலான பணம் விசாவுக்கே போய்விடுமாம். மிச்சப் பணத்தில்தான் டென்ட் வாழ்க்கை.

மீகோ, தன்னோடு 16 கிலோ எடையுள்ள லக்கேஜையும் சுமந்துகொண்டு நடக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் நடக்கும் சராசரி தூரம் 25-35 கிலோமீட்டர்கள். அதிகபட்சமாக ஒரே நாளில் 56 கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார்.

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

``இவ்ளோ ஸ்லோவா போனா எப்போ ப்ரோ 40 ஆயிரம் கிலோமீட்டர் முடிப்பீங்க?'' - பொறுமையாகப் பதில் அளிக்கிறார்.

``இவ்வளவு நீண்ட பயணம் போகணும்னா உங்களுக்கு ரொம்ப அவசியமானது உடல் வலிமை அல்ல; பொறுமையான மனநிலைதான். விசாவுக்காக ஒருவாரம்கூட காத்திருக்க வேண்டியிருக்கும். காலில் நாய் கடித்துவிட்டால் அதற்காக பதினைந்து நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். பொறுமையாக முடிக்கலாம், என்ன அவசரம், பத்து ஆண்டுகள் இருக்கே'' என்கிறார்.

``என்னது, நாய் கடித்துவிட்டதா?''

``நிஜமாகவே கடித்துவிட்டது நண்பா. உத்தரப்பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு தெருநாய் என் கால்களைக் கடித்துவிட்டது. பெரிய காயம் இல்லை என்றாலும், மருத்துவர்
15 நாட்கள் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார். குணமாகும் வரை காத்திருந்தேன். எனக்கு எப்போதும் நாய்களோடு நல்ல நட்பு உண்டு. ஹங்கேரியைக் கடக்கும்போது ஒரு குட்டிநாயைக் கண்டெடுத்தேன். யாருமற்ற அந்த ஜீவன் பசியோடு இருந்தது. அதைத் தூக்கி உணவளித்து, என்னோடு வைத்துக்கொண்டேன். அது என்னோடு 300 கிலோமீட்டர் வரை நடந்தது. அதற்கு `ஹேப்பி' எனப் பெயரிட்டேன். அதை ரோமானியாவில் ஒரு நல்ல மனிதரிடம் ஒப்படைத்தேன். இப்போது ஹேப்பி மகிழ்ச்சியாக இருக்கிறது.''

மீகோவின் சாப்பாடு என்பது பெரும்பாலும் பழங்கள்தான். மீகோ சுத்த சைவமாம். பல நாட்கள் வழியில் கிடைத்த பழங்கள், கீரைகளை அப்படியே பறித்துச் சாப்பிட்டுக்கொண்டே சென்றுவிடுவாராம்.

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

`ஈரானில் என்னை அவ்வளவு அக்கறையாக அந்த மக்கள் பார்த்துக்கொண்டனர். எனக்கு இஸ்லாமிய நாடுகள் என்றாலே `அங்கே எல்லோருமே தீவிரவாதிகளாக இருப்பார்கள். கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்' என்ற ஐரோப்பிய எண்ணம்தான் இருந்தது. ஆனால், அந்த மக்கள் அப்படி இல்லை. அத்தனை அன்பானவர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் 5-15 டீ வரை குடிக்கிறார்கள். எனக்கும் கொடுத்து உபசரித்தனர். யாருமே என்னிடம் இருந்து பணம் வாங்கவில்லை.''

ஈரானைத் தாண்டி பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அடைவதுதான் மீகோவின் திட்டம். ஆனால், பாகிஸ்தான் வழியே தனியாக நடப்பது ஆபத்தானது என அவரை அவருடைய தூதரகத்தில் அனுமதிக்கவில்லை. அதனால் அவர் நேரடியாக இந்தியா வந்துவிட்டார்.

``இந்திய மக்களைப்போல அன்பானவர்களை நான் எங்குமே கண்டது இல்லை. அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று குடும்பத்தில் ஒருவனாக நடத்துகிறார்கள். அன்பாக உணவு அளிக்கிறார்கள். என்னோடு 100 கிலோமீட்டர்கள்கூட நடக்கிறார்கள். எனக்கு தேவையான பொருட்களை நான் கேட்காமலேயே அளிக்கிறார்கள். இந்தக் குணத்தை வேறு எந்த நாட்டிலும் நான் கண்டது இல்லை. இங்கேயும் எனக்கு மோசமான அனுபவங்கள் சில இருக்கவே செய்தன. ஆனால், அது மிகக் குறைவுதான். இங்கே அன்பு கொட்டிக்கிடக்கிறது'' என்று இந்தியாவைப் பற்றி கேட்டதும் கொட்ட ஆரம்பிக்கிறார்.

கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவில் மட்டுமே 1,820 கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார் மீகோ. ஜன்னல்களோ கதவுகளோ இல்லாத வீடுகளில் தங்கியதை ஆச்சர்யமாகக் குறிப்பிடுகிறார். சேரிகளில் தங்கியிருக்கிறார். 42 டிகிரி வெப்பத்தில் ராஜஸ்தானின் பாலைவனத்தில் தன்னந்தனியாக நடந்திருக்கிறார். நேபாளத்தில் கௌதமபுத்தர் பிறந்த லும்பினியில் பல நாட்கள் தங்கியிருக்கிறார்.

மீகோவின் பயணம் மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், சீனா, தென்கொரியா, ஜப்பான் வழியாக அமெரிக்க கண்டத்தை அடைந்து, அங்கு வட மற்றும் தென் அமெரிக்காவை முழுமையாகச் சுற்றி, அங்கு இருந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து அங்கும் ஒரு ரவுண்டு அடித்து ஐரோப்பாவில் முடிவடையும். இதை முடிக்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும்.

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

``என்ன கிடைத்திருக்கிறது இந்த ஒன்றரை ஆண்டு பாத யாத்திரையில்?'' - கேள்விக்கு, சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு நீண்ட பதில் தருகிறார்.

``ஒவ்வொரு நாளும் எனக்கு புதிதாக விடிகிறது. நேற்றைய தினத்தைவிட சிறப்பாகவோ இன்னும் மோசமாகவோ எப்படி வேண்டுமானாலும் அடுத்த நாள் இருக்கும். ஆனால், முந்தைய தினம்போல நிச்சயமாக இருக்காது. அதுதான் இதில் இருக்கும் த்ரில். என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் என்னுடைய 16 கிலோ பையுடன் என்னை நடக்கவைக்கிறது.

இந்த நாட்களில் நான் உணர்ந்தது, நாம் விடும் இந்த மூச்சுக்காற்று மிகமிக அற்புதமானது. அது மதிப்பிட முடியாத பரிசு. நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதை மரியாதையுடனும் கருணையுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கண்களைச் சந்தித்துள்ளேன். போராட்டங்கள், வலிகள், கேள்விகள் எனப் பல விஷயங்களைச் சந்திக்கிறேன். நான் தெரிந்துகொண்டது ஒன்றுதான். இந்த பூமியில் எந்த மனிதனும் சக உயிரைக் காயப்படுத்த விரும்புவது இல்லை. எல்லோருமே யாருக்காவது எப்படியாவது உதவ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். எல்லோருமே புன்னகையைப் பகிர்ந்துகொள்ளத்தான் விரும்புகிறார்கள். இங்கே மனிதம் எங்கும் நிறைந்திருக்கிறது.''

“அன்பை சுமந்து நடக்கிறேன்!”

40 ஆயிரம் கிலோமீட்டரில் 8,520 கிலோமீட்டர் முடித்துவிட்டார் மீகோ. செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது... மீகோவின் பயணம் தொடர்கிறது!